Thipaan / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு வாரங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட எழுக தமிழ் நிகழ்வைத் தொடர்ந்து, அதற்குத் தலைமை தாங்கிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இனவாதியாகச் சித்திரிக்கும் போக்கு, தென்னிலங்கையில் அதிகரித்திருக்கிறது.
இனவாதம் பேசுவதாகவும் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முனைவதாகவும், மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு உயிர்கொடுக்க முனைவதாகவும், அவர் மீது பரவலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
இனவாதம் பேசும் வடக்கு மாகாண முதலமைச்சரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விடுக்கப்படுகின்றன. அவரைக் கைது செய்யக் கோரி, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
அதுபோலவே, விக்னேஸ்வரன் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டாரா என்று, நாடாளுமன்றத்தில் கூட காரசாரமான விவாதங்கள் நடந்திருக்கின்றன.
எனினும், தாம் இனவாதக் கருத்துக்களை ஒருபோதும் வெளியிடவில்லை என்றும் தமது பேச்சு தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும், தனது பக்க நியாயத்தையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.
விக்னேஸ்வரனின் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறி அவரைக் காப்பாற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறிவிட்டதான குற்றச்சாட்டுகளும், ஒரு தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
எழுக தமிழ் நிகழ்வில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பலவும், தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகள் தான் என்பதை, கூட்டமைப்பு மாத்திரமல்ல, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷம் கூட ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
ஆனாலும், விக்னேஸ்வரனின் கருத்துக்களை வலுப்படுத்த வேண்டிய அவசியம், கூட்டமைப்புக்கு இருக்கவில்லை என்பதே அவர்கள் தரப்பு வாதம்.
தாம், இந்த நிகழ்வு தற்போதைக்கு ஏற்புடையதல்ல என்ற கருத்தைக் கொண்டிருக்கும் போது, கூட்டமைப்பின் தலைமையுடன் முதலமைச்சர் நேரடியாக கலந்துரையாடாமல் முடிவெடுத்து, சுயமாக பங்கேற்ற ஒரு நிகழ்வில் வெளியிட்ட கருத்துக்கு கூட்டமைப்பை பொறுப்புக்கூற வைக்க வேண்டும், அந்தக் கருத்தை நியாயப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது தான்.
ஆனாலும், நாடாளுமன்ற விவாதத்தின் போது, முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்ட மறுப்பை முன்வைத்து. அவரது கருத்துக்காக வாதிட்டிருந்தார் இரா.சம்பந்தன்.
எவ்வாறாயினும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவது இனவாதமா? அதனை வெளிப்படுத்துபவர் இனவாதியா? என்ற கேள்விகள், இப்போது வலுவாக எழுந்திருக்கின்றன.
தான் அறிந்த வகையில், விக்னேஸ்வரன் இனவாதி அல்ல, அரசியல் தேவைக்காகவே அவர் அவ்வாறு கூறியிருக்கிறார் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே கூறியிருக்கிறார்.
அதேவேளை, சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான உள் முரண்பாடுகளின் விளைவே, எழுக தமிழ் நிகழ்வு என்றும் அதில் விக்னேஸ்வரன் இனவாதக் கருத்துக்களையே வெளியிட்டிருப்பதாகவும், விக்னேஸ்வரனின் சம்பந்தியான வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருக்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷவும் வாசுதேவ நாணயக்காரவும், ஒரே அணியில் இருப்பவர்கள். வாசுதேவ நாணயக்காரவும் விக்னேஸ்வரனும், ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள். ஆனாலும், இவர்களின் கருத்துக்களுக்கிடையில் மாறுபாடுகள் உள்ளன.
விக்னேஸ்வரன், இனவாதம் பேசுவதற்கு அரசியலே காரணம் என்றும் அவரது இயலாமையே அவ்வாறு பேசவைப்பதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பது, இங்கு முக்கியமானது.
எழுக தமிழ் நிகழ்வில் பங்கேற்ற மக்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் என்பதையும், அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
அதாவது, மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளின் வெளிப்பாடு தான் இது என்பதே அவரது கருத்து.
வடமாகாண முதலமைச்சரால் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை. அதனால் தான், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்களை அவர் வீதிக்குக் கொண்டு வந்து, தனது இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது மஹிந்தவின் கருத்தாக உள்ளது.
விக்னேஸ்வரனால், வடக்கிலுள்ள மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை தான். அதற்குக் காரணம், விக்னேஸ்வரனின் இயலாமை அல்ல. மாகாணசபை முறையில் உள்ள குறைபாடு மற்றும் மத்திய அரசாங்கத்தின் பிடிவாதப் போக்கு என்பனவேயாகும்.
வடக்கு மாகாணசபையின் அதிகாரங்களின் மூலம் தீர்க்கப்பட முடியாத விடயங்களை, முதலமைச்சர் விக்னேஸ்வரனால் எப்படித் தீர்த்து வைக்க முடியும்?
எழுக தமிழ் நிகழ்வில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளில் பெரும்பாலானவற்றை, மத்திய அரசாங்கத்தினால் இலகுவாகவே தீர்த்திருக்க முடியும். அதனைச் செய்வதற்கு அரசாங்கம் தயங்குகிறது.
இன்று, தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஏற்றுக்கொள்கின்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது ஆட்சிக்காலத்தில், இந்தப் பிரச்சினைகளை இதைவிட மோசமாகவே கையாண்டிருந்தார். எனவே, வடக்கிலுள்ள மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்று பேசும் அருகதை அவருக்கு இல்லை.
அதேவேளை, விக்னேஸ்வரனை இனவாதியாகவும், அவர் எழுக தமிழ் நிகழ்வில் பேசியதை இனவாதமாகவும் பிரசாரம் செய்வதில், சிங்கள, ஆங்கில ஊடகங்கள் கணிசமாகவே பங்காற்றியுள்ளன என்பதில் சந்தேகமில்லை.
இந்த ஊடகங்கள், நேரடியாக இல்லாவிட்டாலும் அத்தகைய கண்ணோட்டத்துடன் வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு முன்னுரிமை அளித்ததன் மூலம், அந்தப் பங்கை வலுவாகவே ஆற்றின.
எழுக தமிழ் நிகழ்வு நடந்து சுமார் ஒரு வாரம் கழித்து, யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழா நிறைவு நாள் நிகழ்வில், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றியிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோர் அமர்ந்திருந்த மேடையில் தான், முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றியிருந்தார்.
அவர் தனது உரையில், எழுக தமிழ் நிகழ்வில், தான் நிகழ்த்திய உரை தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு, தன்னை தெற்கில் பேயாகவும் பூதமாகவும் தகாத மனிதப்பிறவியாகவும், பிரசாரப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
தான் சொல்ல வந்த கருத்து திரிபுபடுத்தப்பட்டது என்ற வாதத்தை அவர் முன்வைத்திருந்தார். அது சரியானதும் தான்.
உணர்வுபூர்வமான விடயங்களைக் கையாளும் போது, கூடுதலான அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியம்.
அதுவும், அரசாங்கத்துக்கு எதிராகவோ சிங்கள மக்களுக்கு எதிராகவோ, பௌத்த மதத்துக்கு எதிராகவோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவோ இந்த நிகழ்வை நடத்தவில்லை என்று கூறிக்கொண்டு நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில், மிகவும் அவதானமாகச் செயற்பட்டிருக்க வேண்டும்.
எழுக தமிழ் நிகழ்வின் கோரிக்கைகள் அல்லது மக்களின் பிரச்சினைகள் இங்கு கூறப்பட்ட யாரையும் நோக்கி முன்வைக்கப்பட்டவில்லை என்று கூற முடியாது.
அதேவேளை, யாரை நோக்கி கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறதோ அந்த தரப்பிடம் வெளிப்படையாகவும் வலுவாகவும், நியாயத்தை முன்வைப்பதிலும் தவறில்லை.
அந்த வகையில், வடக்கை சிங்கள பௌத்த மயமாக்கும் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோரியிருப்பதில் தவறில்லை.
அந்தக் கோரிக்கையானது, வடக்கில் சிங்களவர்களுக்கும் பௌத்தத்துக்கும் இடமில்லை என்று தென்னிலங்கையில் அர்த்தப்படுத்தப்பட்டதற்கு வெறும் மொழிபெயர்ப்புத் தவறுகளை மாத்திரம் சுட்டிக்காட்ட முடியாது.
எந்த இலக்கையும் நோக்கி ஒரு ஆயுதத்தைப் பிரயோகிக்கும் போதும், அது அந்த இடத்துக்கு அல்லது தருணத்துக்குப் பொருத்தமானதா என்று ஆராய வேண்டும்.
சிங்கள மக்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் எமது பிரச்சினைகளைச் சொல்ல முற்படும் போது, அவர்களின் மொழியிலேயே அந்தப் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்திருக்க வேண்டும்.
தமிழர்களின் பிரச்சினைகளை, பத்தாயிரம் மேடைகளைப் போட்டு தமிழ்மொழியில் பிரசாரம் செய்தாலும் தீர்க்க முடியாது. ஏனென்றால், இந்தப் பிரச்சினைக்கான தீர்வு, தமிழர்களிடம் மாத்திரம் இல்லை. சிங்களவர்களின் கைகளில் உள்ளது. வெளிநாடுகளின் கைகளிலும் உள்ளது. எனவே, சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் முதலமைச்சர் தனது செய்திகளை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அது தவறான புரிதல்களைத் தடுத்திருக்கும். இனவாதி என்ற பிரசாரங்களுக்கு தொடக்கப்புள்ளியே வைக்கப்பட்டிருக்காது.
எழுக தமிழ் நிகழ்வின் ஊடாக தமிழ் மக்களை அணிதிரட்டுவது மட்டும் தான் இலக்காக இருந்திருக்குமேயானால், அது காலப்போக்கில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி விடும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை, ஜனநாயக அரசியல் வழிமுறையில் தீர்க்கப்பட வேண்டும் என்ற உறுதி எவரிடத்திலாவது இருக்குமேயானால், அதனை சிங்கள மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். சிங்கள மக்களுக்கு, தமிழ் மக்களின் பிரச்சினைகள் எடுத்துக் கூறப்பட்டு, அதற்கான தீர்வு குறித்தும் பேசப்பட வேண்டும். இதனை அரசாங்கமும் செய்யாது. அதுபோலவே, கூட்டு எதிரணியும் செய்யாது. அவர்கள், இந்தப் பிரச்சினையை அரசியலாக்கி வயிறு வளர்ப்பவர்கள்.
எனவே, தமிழர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்துக்கான அழுத்தமாக கொண்டு செல்ல எவரேனும் விரும்பினால், அதற்கு தமிழ் மக்களை அணிதிரட்டுவதுடன் மாத்திரம் நின்று விடாமல், தெற்கிலுள்ள மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.
அதற்கு மாறாக வேறு எங்கிருந்து இந்த விவகாரம் தொடங்கப்பட்டாலும், ஒன்றில் இனவாதமாக பார்க்கப்படும். அல்லது, பயங்கரவாதமாக திரிபுபடுத்தப்படும்.
32 minute ago
45 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
45 minute ago
54 minute ago
1 hours ago