Thipaan / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையுடனான உறவுகளை மீளவும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, சீன அரசாங்கம், சிறப்புத் தூதுவர் ஒருவரை கொழும்புக்கு அனுப்ப வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருக்கிறது.
இது சீனாவுக்கு ஒரு சோதனை தான். முன்னர், இலங்கையில் இருந்து அரச தலைவர்களும் சிறப்புத் தூதுவர்களும் சீனாவுக்கு ஓடிய காலம் போய், இப்போது அங்கிருந்து இங்கு சிறப்புத் தூதுவர் ஓடி வரும் காலம் வந்திருக்கிறது.
கடந்த 7ஆம் திகதி தொடக்கம், 9ஆம் திகதி வரை, சீன அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவராக கொழும்பு வந்திருந்தார், அந்த நாட்டின் உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ சென்மின்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானுக்கான ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய அதே நாளில் தான் அவரது இலங்கைப் பயணம் இடம்பெற்றது.
புதுடெல்லிக்கான பயணத்தை முதலாவதாக மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது அடுத்த பயணத்தை, ஜப்பானுக்கு மேற்கொண்டிருந்தார்.
இலங்கையைப் பொறுத்தவரையில், இந்தியாவை அடுத்து, முக்கியத்துவம் பெற்ற நாடாக இருக்கின்ற சீனாவைப் புறக்கணித்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானுக்குச் சென்றமை, சீன அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஏற்கெனவே, மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தை இழந்த பின்னர், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.
இந்தச் சூழலில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானுக்கு மேற்கொண்ட பயணம், இலங்கையின் போக்குத் தொடர்பாக சீனாவுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது.
ஜப்பானுடன் இலங்கை உறவுகளை வலுப்படுத்த நடத்திய பேச்சுக்கள் சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
அதேவேளை, புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இடைநிறுத்தி வைக்கப்பட்ட, கொழும்புத் துறைமுக நகரத் திட்டமும் கேள்விக் குறியாகவே இருந்து வந்தது.
இந்தநிலையில் தான், சிறப்புத் தூதுவரை கொழும்புக்கு அனுப்பும் முடிவை சீனா எடுத்திருந்தது.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் கைவிட்டுப் போவதையோ அல்லது அதன் ஆரம்பக் கட்டுமானங்கள் கடலோடு அடிபட்டுப் போவதையோ சீனா விரும்பவில்லை. ஏனெனில், அது சீனாவின் கனவுத் திட்டங்களில் ஒன்று.
இதனால் தான், ஜப்பானில் இருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு வந்திறங்கிய கையுடன், சீனாவின் சிறப்புத் தூதுவரும் கொழும்பு வந்தார்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சீனாவின் சிறப்புத் தூதுவர் ஒருவர் இலங்கைக்கு வந்திருந்தது இதுவே முதல்முறை.
அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்டோருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இந்தப் பேச்சுக்களின் பின்னர், கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போது, இலங்கையில் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுக்கள் வெற்றியளித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
அதாவது, இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு, விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தையே, சீனாவின் சிறப்புத் தூதுவர் லியூ பெற்றுச் சென்றிருக்கிறார்.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான உத்தரவாதத்தை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்வது மட்டும் தான், அவரது பயணத்தின் நோக்கமல்ல.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதுபற்றிய வாக்குறுதிகளை ஏற்கெனவே சீனாவுக்கு வழங்கியிருந்தார்.
கடந்த மார்ச் 6ஆம் திகதி கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு, சுமார் ஆறு வாரங்கள் கழித்து, ஏப்ரல் 25ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீனாவுக்கான தனது முதல் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
அப்போது, கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தற்காலிகமாகவே இடைநிறுத்தியுள்ளதாகவும் உரிய விசாரணைகளுக்குப் பின்னர் அது மீளத் தொடங்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார்.
ஆறு மாதங்களுக்கு முன்னர் அளித்திருந்த வாக்குறுதியை, அரசாங்கம் செயற்படுத்தாமலிருந்த நிலையில் தான், சீனா சிறப்புத் தூதுவரை கொழும்புக்கு அனுப்ப வேண்டியிருந்தது.
அரசதரப்புடனான சந்திப்புகளின் போது, ஆட்சி மாற்றத்துக்கு எட்டு மாதங்கள் எடுத்தது போன்று, துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கும் எட்டு மாதங்களை எடுக்க வேண்டாம் என்று தாம் நகைச்சுவையுடன் குறிப்பிட்டதாக, லியூ சென்மின் செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிட்டிருந்தார்.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தாமதிக்கப்படுவது, சீனாவுக்குப் பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற போதிலும் அந்த நட்டம் பொருளாதார ரீதியானது மட்டுமல்ல.
சீனாவைப் பொறுத்தவரையில், இலங்கையுடனான உறவையும் நெருக்கத்தையும் ஒத்துழைப்பையும் அதிகம் எதிர்பார்க்கிறது.
இந்தியப் பெருங்கடலில், சீனா தனது செல்வாக்கைக் கட்டியெழுப்பவும் கடல்சார் பட்டுப்பாதைத் திட்டத்தைச் செயற்படுத்தவும் இலங்கையை தமது முக்கிய பங்காளி நாடாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த வரைக்கும், இலங்கை பற்றிய கவலை சீனாவுக்கு இருக்கவில்லை. காரணம், இந்தியாவை விடவும், சீனாவையே அதிகம் நம்பினார் அவர். சீனாவுக்காக எதையும் செய்யவும் தயாராக இருந்தார்.
ஆனால், கடந்த ஜனவரி மாதம், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்னர், இலங்கையின் சீனாவின் ஆதிக்கம் வெகுவாகக் குறைந்து போனது.
சீன நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்ட பல திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டன. அவற்றுள் பல தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும், கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் ஏழு மாதங்களுக்கு மேலாக இழுபறிப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தபோது, புதுடெல்லியில் வைத்து, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருந்தார் என்று முன்னைய பாதுகாப்புச் செயலரான கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
தம்முடன் சீரான உறவைக் கொண்டிராத மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கே, இந்தியா அந்தளவுக்கு அழுத்தம் கொடுக்க முற்பட்டது என்றால், தன்னுடன் நெருக்கமாக இருக்கும் தற்போதைய அரசாங்கத்துக்கு இந்த விடயத்தில் எந்தளவுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் என்பதைப் புரிந்து கொள்வது கடினமானதல்ல.
இத்தகைய கட்டத்தில் இந்தியாவின் விருப்பத்தை நிராகரித்து, இலங்கை அரசாங்கம் எவ்வாறு சீனாவின் துறைமுக நகரத் திட்டத்துக்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
எவ்வாறாயினும், இந்தத் திட்டத்தை இலங்கை அரசாங்கத்தினால் நீண்டகாலத்துக்கு தள்ளிவைக்க முடியாது என்பதையே, சீனாவின் சிறப்புத் தூதுவரின் பயணம் எடுத்துக் கூறியிருக்கிறது.
இன்னொரு பக்கத்தில், துறைமுக நகரத் திட்ட விடயத்தில் சீனா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முனைந்திருந்தாலும் மறுபக்கத்தில் சீனாவின் பிடிதளரத் தொடங்கியிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தியப் பெருங்கடலில் சீனாவுக்கு எதிராக உருவாகி வரும் இந்திய, அமெரிக்கா, ஜப்பானிய, அவுஸ்ரேலிய கூட்டணியில் இலங்கையும் இணைகின்ற ஒரு நிலையே தென்படுகிறது.
இந்த நாடுகள் இணைந்து அமைக்கின்ற கூட்டணி இந்தியப் பெருங்கடலில் சீனாவின் நகர்வுகளுக்கு அச்சுறுத்தலானது. இந்த விடயத்தில் சீனா இப்போது வலுவிழந்து வருகிறது.
இந்தச் சூழலில், இலங்கையில் தனது கேந்திர நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், கொழும்புடன் முரண்பட முடியாத நிலையும் உள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் பொருளாதார அபிவிருத்தி தேவைகளுக்கும் சரி, சர்வதேச ஆதரவை பெறுவதற்கும் சரி சீனாவை நம்பியிருக்க வேண்டிய நிலை இலங்கைக்கு இருந்தது.
அதனால், சீனா சொல்லும் எல்லா விடயங்களுக்கும் கொழும்பு தலையாட்டியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், இப்போது அப்படியில்லை.
இலங்கைக்குப் பொருளாதார உதவிகளை வழங்க ஜப்பான் போன்ற நாடுகள் முன்வருகின்றன.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி என்பனவும், நிபந்தனையின்றி, நிதியுதவிகளை வழங்க முன்வந்திருக்கின்றன.
எனவே, பொருளாதாரத் தேவைகளுக்கு சீனாவை மட்டுமே கதி என்று இருக்க வேண்டிய நிலை இல்லை.
சர்வதேச அரங்கிலும் சீனாவை நம்பியிருக்க வேண்டிய நிலை இலங்கைக்கு இல்லை. முன்னர் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானங்களை ஜெனீவாவில் தோற்கடிக்க, சீனாவின் தயவு தேவைப்பட்டது.
இப்போது, அமெரிக்காவின் பக்கம் நகர்ந்து விட்டதால், ஜெனீவாவிலும் சீனாவின் தயவு இலங்கைக்குத் தேவைப்படவில்லை. இப்போதைய நிலையில், எந்த விடயத்திலும் சீனாவின் தயவை மட்டும் நம்பியிருக்க வேண்டிய நிலை இலங்கைக்கு இல்லை.
இப்படியான நிலையில், தான், இலங்கை விடயத்தில் சீனா இறங்கிப் போக முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பக்கத்து நாடான இந்தியாவுக்கு முதலில் சென்றதையிட்டு சீனா கவலை கொள்ளவில்லை. ஆனால், தன்னைக் கடந்து அவர், ஜப்பான் சென்றது தான் சீனாவுக்கு அதிர்ச்சி. அதன் விளைவு தான் சீனாவின் சிறப்புத் தூதுவரின் கொழும்பு வருகை. என்றாலும், சீனா பொறுமையாகவே இருக்க வேண்டியிருக்கிறது.
அதனால் தான் தன்னைக் கடந்து ஜப்பான் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கோபித்துக் கொள்ளாமல், பீஜிங் வருமாறு பவ்வியமான அழைப்பு விடுத்து விட்டுச் சென்றிருக்கிறார் சீனாவின் சிறப்புத் தூதுவர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago