2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

இலங்கையின் தலைவிதி யார் கையில்?

Johnsan Bastiampillai   / 2022 மே 22 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

 

வெல்லப்போவது போராட்ட க்காரர்களா, அரசியல்வாதி களா என்பதே, இன்று எம்முன்னால் உள்ள கேள்வியாகும். இந்தக் கேள்விக்கான பதில், இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

அரசியல்வாதிகள், ரணிலைப் பிரதமர் ஆக்கி, தங்கள் ஆட்டத்தின் முதலாவது காயை நகர்த்தி உள்ளார்கள். ‘கோட்டா கோ கம’வின் திசைவழிகளே, இலங்கையின் ஜனநாயகத்தின் உரிமைகளின் பாதையையும் சாத்தியக்கூறுகளையும் தீர்மானிக்கவல்லன என்பதை போராட்டக்காரர்கள் மட்டுமன்றி, இலங்கையின் மீது அன்பு கொண்ட அனைவரும் மனங்கொள்ள வேண்டும்.

இலங்கையின் நெருக்கடி, வெறுமனே ஒரு பொருளாதார நெருக்கடியல்ல! இது அரசியல், பொருளாதாரம், சமூகம், ஆட்சி-நிர்வாகம் ஆகியவற்றைக் கொண்டதொரு நாற்பரிமாண நெருக்கடி ஆகும். இதை அண்மைய நிகழ்வுகள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளன.

இலங்கையின் நெருக்கடியை வெறுமனே பொருளாதார நெருக்கடியாக நோக்கினால், இந்நெருக்கடியில் இருந்து என்றென்றைக்கும் மீளவியலாது. எந்தவோர் ஒற்றைப் பரிமாணத்திலும் தனித்து நோக்கவியலாதபடி, இந்நான்கும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. இதை உணர்ந்துகொள்வது முக்கியமானது. இது தனிநபர்கள் பற்றியதல்ல. இது, நமது நாட்டின் அரசியல் கட்டமைப்பு, அரசியல் பண்பாடு ஆகியவற்றின் விளைவாக உருவாகியது. எனவே, இக்கட்டமைப்பையும் இதன் பண்பாட்டையும் மாற்றாமல், நின்று நிலைக்கக்கூடிய தீர்வு சாத்தியமல்ல.

ரணில் விக்கிரமசிங்க, பிரதமராகப் பதவியேற்றவுடன் பலர் மத்தியில் நம்பிக்கையும் உற்சாகமும் பிறந்தது. அது, இப்போது கொஞ்சம் குறைந்தாலும், பொருளாதாரத்தை சீர்செய்வார் என்று ஓர் ஓரமாக நம்பிக்கை இருப்பதாக, பலர் சொல்கிறார்கள்.

இந்த நம்பிக்கைகளின் அடிப்படை, ரணிலின் அயலுறவுத் தொடர்புகள் எனில், நமது நாடு இன்னும் கூறுபோடப்படுகிறது என்று பொருள். அவரது நிர்வாகத் திறமையெனில், நல்லாட்சியின் கொடுமைகளை நினைவுகூராமல் இருக்கவியலாது. பொருளாதார அறிவு எனில், 2015ஆம் ஆண்டு முதலான காலப்பகுதியில், இலங்கை பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. ஏனெனில், யுத்தம் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, பொருளாதார வளர்ச்சியை ஆண்டுதோறும் அடைந்த நாடு இலங்கை.

ரணிலின் தாராண்மைவாத-ஜனநாயக முகத்தை முன்மொழிவோரும் மெச்சுவோரும், ‘படலந்த’ ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக வாசிப்பது நல்லது.
சந்திரிகா பண்டாரநாயக்கவால் அமைக்கப்பட்ட இவ்வாணைக்குழு, ரணிலை குற்றவாளியாகக் கண்டதோடு, அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும்படியும் அவரது குடியுரிமையைப் பறிக்கும்படியும் பரிந்துரை செய்தது. சந்திரிகா, இறுதிவரை இதுதொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

2015ஆம் ஆண்டு, ராஜபக்‌ஷ குடும்பத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் வாக்களித்தார்கள். அதைத் தொடர்ந்த மைத்திரி-ரணில் ஆட்சி ஒரு பேரிடர். இந்தப் பேரிடரே மீண்டும் ராஜபக்‌ஷ குடும்பத்தை ஆட்சிபீடத்துக்குக் கொண்டு வந்து சேர்ந்தது.

ரணிலின் ஆட்சிக்காலத்தில், ராஜபக்‌ஷர்கள் மீதான எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல், ரணில் பார்த்துக் கொண்டார். அதன் இன்னோர் இடைக்கால அத்தியாயமே, இப்போது அரங்கேறுகிறது. இந்த அரசியல் தரகர்களின் கைகளில் நாடு சிக்கி சின்னாபின்னமாகிறது.

ரணில் மக்களின் தெரிவல்ல; அவர் மேற்குலகின் தெரிவு என்பது வெளிப்படை. மக்களால் அங்கிகரிக்கப்படாத ஒருவர் மக்களின் நலன்களுக்காகக் கடமையாற்றப் போவதில்லை. தவறிச் சகதிக்குள் விழுந்த மிருகத்தை வேட்டையாடும் நரியின் செயலை, ‘இராஜதந்திரம்’ என்று போற்றிப் புகழப் பலர் இருக்கிறார்கள். இன்று நாடு மட்டுமல்ல, நாட்டு அரசியலும் வங்குரோத்து நிலையில் தான் உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் அண்மைக்கால நடத்தைகள், பாராளுமன்றம் சாக்கடை என்பதை மீள உறுதிப்படுத்தியுள்ளன.

மக்கள் பிரதிநிதிகள் என்போர், மக்களின் மனோநிலையில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறார்கள். பாராளுமன்றம் வயதானவர்கள் பொழுதுபோக்குக்கும் பேச்சுத்துணைக்கும் சேரும் ஒரு கட்டடமாக மாறிவிட்டது. “நான் பொருளாதாரத்தை சீர்படுத்தவே வந்துள்ளேன்” என்ற வாக்குமூலத்தின் மூலம், தன்னிடம் வேறெதையும் எதிர்பாராதீர்கள் என்று ரணில் தீர்க்கமாகச் சொல்லியிருக்கிறார்.

எந்த அரசாங்கத்தை மக்கள் வீட்டுக்குப் போகச் சொன்னார்களோ, அதே அரசாங்கம் மஹிந்தவுக்கு பதிலாக, ரணில் என்ற முகமூடியைச் சூடியபடி, அதே ஆட்களுடன் வலம் வருகிறது. இது மக்கள் கோரிய மாற்றமல்ல.

மக்கள் பிரதிநிதிகளின் அண்மைய நடத்தைகள், அவர்களின் வங்குரோத்து நிலையை விளக்கப் போதுமானவை. முதலாவது, பிரதமரது அண்மைய உரை; அவர் வெளிப்படையாக உண்மையைச் சொல்லிவிட்டார் என்பதற்காக மெச்சப்பட்டது. மக்களால் தெரிவானவர் மக்களுக்கு உண்மையைச் சொல்வதுதானே நியாயம்.

அதுதான் மக்கள் பிரதிநிதிகளின் பணி. வெளிப்படையாக உண்மை சொன்னவரை மெச்சுகிற அளவுக்கே, இவர்கள் இருக்கிறார்கள் என்பதும், இவர்களின் பொய்களை அறிந்தும், தொடர்ந்தும் இவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளோம் என்பதும், அரசியல் வங்குரோத்து மட்டுமல்ல, அறஞ்சார்ந்த வறுமையுமாகும்.

இரண்டாவது, ரணில் பிரதமரானவுடன் அவர் நல்ல நிர்வாகி, இலங்கைக்கு அவரே தேவை என்று பலரும் எழுதியிருந்தார்கள். பிரதமராகத் தவறிழைத்தவரை, மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் நாட்டுக்குப் பலகோடி நட்டத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்தவரை, நல்ல நிர்வாகி என்பது என்ன மாதிரியான மனநிலை? கெட்டிக்காரத்தனமாகத் திருடுபவனை ‘வல்லவன்’ என்று கொண்டாடுவதை என்னவென்பது?

மூன்றாவது, சர்வதேச நாணய நிதியத்திடம் எப்படியாவது கடன் வாங்கிவிட வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். கடன் வாங்குவது தவறு என்றுதான் எமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. பிறகு, நாட்டைக் கடன்வாங்கி இன்னும் கடனாளியாக்கு என்று வாதிடுவது, எவ்வகைப்பட்ட அறம்?

‘கோட்டா கோ கம’ போராட்டாமானது தொடரவேண்டியதன் அவசியத்தை மேற்சொன்ன விடயங்கள் காட்டி நிற்கின்றன. ரணில் வந்தால், அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கும் என்று பலரும் சொல்கிறார்கள். பானையில் எதுவும் இல்லாதபோது, அகப்பையில் கிள்ளுவதற்கு என்ன இருக்கிறது? ரணில், பொதுஜன பெரமுனவின் தயவில் இருக்கிறார்.

பொதுஜன பெரமுன, போராட்டக்காரர்களுக்கு எதிராக இருக்கிறது. இவ்வளவுதான்!
போராட்டக்காரர்களைக் கவனிக்க குழு அமைத்ததன் மூலம், இதன்மீதான தனது முழுமையான கவனத்தை ரணில் வைத்திருக்க விரும்புகிறார். ஒருபுறம், இப்போராட்டம் விரிவடையாமல் காலிமுகத் திடலுக்குள்ளேயே வைத்திருக்கவும் அதன் இயங்கியலைக் கண்காணிக்கவும் அவர் அரச வளங்களைப் பயன்படுத்துகிறார்.

மறுபுறம், இப்போராட்டத்தை ஜனாதிபதிக்கு ஓர் அழுத்தமாகப் பிரயோகிப்பதனூடு தனது இருப்பைத் தக்கவைக்க முனைகிறார். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தங்கள் வழமையான அரசியலைத் தொடர்ந்தும் முன்னெடுக்க முனைகிறார்கள்.

இதற்கு மாற்றாக, புதிய அரசியல் பண்பாடு நோக்கி மக்களைப் பயணிக்க வைக்கும் காரியத்தில், இப்போராட்டக்காரர்கள் இறங்கியிருக்கிறார்கள். இது ஓர் எதிர்ப்பியக்கமாக வளர்ந்துள்ளது. இது மக்களிடம் ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான புதிய அரசியல் ஆற்றலையும்  புதிய அரசியல் பண்பாடு, பொறுப்புக்கூறல், முடிவெடுப்பதில் குடிமக்களின் பங்கேற்பு, அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை போன்றவற்றைக் கோரி நிற்கின்றது.

இந்தக் கோரிக்கைகள் இரண்டு விடயங்களைக் காட்டி நிற்கின்றன. முதலாவது, பாராளுமன்ற ஜனநாயகம் எவ்வாறு ஆதிக்க அரசியல் வர்க்கத்தின் அனைத்துத் தரப்பாலும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளது என்பதை, மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள்.

இரண்டாவது, வெறும் வாக்காளராக இல்லாமல் பங்கேற்பாளராக அரசியலில் இணைந்திருப்பதற்கான புதிய ஜனநாயக விருப்பைக் கோடிடுகின்றன. இவை வரவேற்கத்தக்க மாற்றங்கள். 

இந்த மாற்றங்கள் இன்றைய அரசியல் வர்க்கத்தின் விருப்புகளுக்கு நேரெதிரானது. வாக்களிப்பதற்கு அப்பால் பார்வையாளர்களாகக் குடிமக்களை வைத்திருந்த விரும்புகிற ஓர் அரசியல் கட்டமைப்பு ஆட்டக் கண்டுள்ளது. இந்தக் கட்டமைப்பைத் தக்கவைக்க கட்சி பேதமின்றி அனைவரும் உழைக்கிறார்கள்.

ஏனெனில், இந்தக் கட்டமைப்பு தகர்வதன் ஆபத்துகளை அவர்கள் நன்கறிவார்கள். எனவே, இந்த எதிர்ப்பியக்கத்தை சிதைப்பதே  அவர்களின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. அதற்கு ஜனநாயகத் தாரளவாத முகமூடியுடன் ஒருவர் வந்திருக்கிறார்.
இனிவரும் காலங்கள் இந்த எதிர்ப்பு இயக்கத்துக்கு நெருக்கடியான காலமாக இருக்கும்.

“இந்நெருக்கடியான காலத்தில், அரசாங்கம் செயற்படக் காலஅவகாசம் கொடுக்க வேண்டும்”, “அரசியல் ஸ்திரத்தன்மைக்கு போராட்டக்காரர்கள் உதவவேண்டும்” என்ற குரல்கள் கொஞ்சம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இவை அரசியல்வாதிகளினதும் அவர்தம் பிரதிநிதிகளின் குரல்களாகும். இப்போது பிரிகோடுகள் மிகத் தெளிவாகியுள்ளன. பாராளுமன்ற அரசியல்வாதிகள் ஒருபுறம், போராட்டக்காரர்கள் மறுபுறமுமாகக் களத்திலே நிற்கிறார்கள். இலங்கையின் தலைவிதி யார் கையில்?    

 
   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X