Editorial / 2026 மார்ச் 04 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்
kanga.raj132@gmail.com
எமது குழுவில் அடங்கியிருந்த 30 பேரையும் ஏனைய பயணிகளையும் தாங்கிய indigo flight கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஹைதராபாத் விமான நிலையத்தில் இரண்டு மணிநேரத்தில் தரையிறங்கியது. பல விமானங்களில் பயணம் செய்திருந்தாலும், மீண்டும், மீண்டும் விமானங்களில் பறக்கும் போது, புதுவகையான அனுபவங்கள் கிடைக்கும் அவ்வாறான அனுபவமே indigo flight இல் கிடைத்தது.
ஒவ்வொரு விமான நிலையங்களிலும் குடிவரவுக்கான விண்ணப்பங்கள் வைக்கப்பட்டிருக்கும் எனினும், தகவல் தொழில்நுட்பத்தில் கடுமையான முன்னேற்றத்தை இந்தியா கொண்டிருக்கின்றது என்பதை ஹைதராபாத் விமான நிலையத்திலேயே அறிந்துகொள்ள முடிந்தது.
விமான நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்கு சுமார் இரண்டு மணி நேரத்தைச் செலவழிக்கவேண்டிய நிலைமையையே எமது குழுவைச்சேர்ந்த இரண்டொருவரை தவிர, ஏனையோருக்கு ஏற்பட்டிருந்தது. தங்களுடைய கையடக்க தொலைபேசியில் QR ஸ்கேன் செய்ததன் பின்னர், அதில், விண்ணப்பத்தை பூரணப்படுத்தி, தரவிறக்கம் செய்ததன் பின்னரே, சுங்க அதிகாரியின் கருமபீடத்தில் இருந்து வெளியேறமுடியும், பலரும் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கொண்டாலும் தரவிறக்கம் செய்வதில் சில சிக்கல்களுக்கு முகங்கொடுத்தனர்.

MCR HRD நிறுவனத்தின் துணைவேந்தரான தலைமைச் செயலாளர் கலாநிதி சாந்தி குமாரி, கலாநிதி டி.மாதவி குமாரி ஆகியோர் பாடநெறிக்கான திட்டத்தை வெளியிட்டனர்.
எனினும், விமான நிலையத்தில் இருந்த ஊழியர்கள் எங்களுடைய குழுவினருக்கு முழுமையான உதவிகளைச் செய்தனர். விண்ணப்பத்தை நிரப்பி கையடக்க தொலைபேசியில் தரவிறக்கம் செய்துகொண்டதன் பின்னர், கருமபீடத்துக்கு சென்றவுடன், அங்குள்ள QRயில் ஸ்கேன் செய்துகொண்டதன் பின்னரே, விமான நிலையத்தில் இருந்து வெளியே அனுமதி வழங்குகின்றனர். அதற்கிடையில் எங்களுடைய பயணப்பொதிகள் ஓர் இடத்தில் மிகக் கவனமாக சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.
அங்கிருந்து Dr. MCRHRD (Dr. Marri Channa Reddy Human Resource Development Institute) (MCRHRD) நிறுவனத்துக்கு அழைத்துச் செல்வதற்குப் பொதிகளை ஏற்றிச்செல்ல சிறிய ரக லொறியும், 30 பேர் அமர்ந்திருந்து பயணிக்கக்கூடிய பஸ் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயணம் அதிவேக நெடுஞ்சாலையில் ஊடாக இருந்தாலும் ஒருசில மணிநேரம் எடுத்தமையால் மாட மாளிகைகள், வானுயர்ந்த கட்டிடங்களைப் பார்த்துக்கொண்டு பயணித்தோம்.
இலங்கை ஊடகவியலாளர் 30 அடங்கிய குழுவினருடன் பயணித்த பஸ் MCRHRD நிறுவனத்தை அடையும் முன்னரே, மிகப் பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாசலில் கோலமிட்டு, குத்துவிளக்கேற்றப்பட்டிருந்தது. சென்று இறங்கியதும் அனைவருக்கும் தனித்தனியாக மலர்மாலை அணிவிக்கப்பட்டு, குங்குமம், திலகமிட்டு அழைத்துச் சென்றனர். அன்றையதினம் இராப்போசனமும் பிரமாண்டமாக இருந்தது.
மறுநாள் காலையில் முதல் வேளையாக யோகா பயிற்சிக்குச் சென்றிருந்தோம். முதல் நாளில் 30 பேரும் பங்கேற்றிருந்தோம். தலைகளைக் கணக்கிட்ட யோகா பயிற்றுவிப்பாளர் கிருஷ்ணா பிரசாத், இறுதி நாள் வரையிலும் அத்தனை தலைகளும் இருக்க வேண்டுமென்றார். எனினும், இறுதி நாளில் மிகவும் குறைந்த எண்ணிக்கையானோரே பங்கேற்றனர்.
அந்த பயிற்சி மிகவும் எளிமையாக இருந்தது. உடலை தயார்ப்படுத்தும் வகையில் இரண்டு கைகளைத் தேய்த்து முகத்தில் முதலில் வைக்கச் சொன்னவர், சின்ன, சின்ன உடற்பயிற்சிகளுடன் ஆரம்பித்தார்.
யோகாவை நாங்கள் ஏன்? பயில வேண்டும் என்ற விளக்கத்தை இடையிடையே கொடுத்தார். அதில், முதலில் நீங்கள் உங்களை விரும்ப வேண்டும். உங்களுடைய இதயத்தை விரும்ப வேண்டும். I love my heart, உங்களுடைய ஈரலை விரும்ப வேண்டும், உங்களுடைய ஒவ்வொரு உறுப்புகளையும் விரும்ப வேண்டும். அப்போதுதான் மற்றவர்களை நீங்கள் விரும்புவீர்கள், மற்றவர்களை நீங்கள் விரும்பினால், சமூகத்தை விரும்புவீர்கள், நாட்டை விரும்புவீர்கள் மற்றும் உலகை விரும்புவீர்கள், அமைதியான வாழ்க்கையில் பயணிக்கமுடியும் என்றெல்லாம், வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப் போல விளக்கம் கொடுத்தார். காலையில், 6.30 மணிக்கு ஆரம்பமாகும் யோகா பயிற்சி, காலை 7.45க்கு நிறைவடையும். அதன்பின்னர், உடைகளை மாற்றிக்கொண்டு காலை உணவுக்குச் செல்லவேண்டும்.
யோகாவுக்குப் பின்னர், எப்போது காலை உணவு கிடைக்குமென ஏக்கத்துடன் இருப்போம். அந்தளவுக்குச் சுவையானது மட்டுமன்றி, நல்ல சத்தான உணவாகும் என்பதைப் பெருமையுடன் கூறவேண்டும், காலை உணவு மட்டுமன்றி, தேநீர் இடைவேளைக்கு வைக்கப்படும் சிற்றுண்டிகள், பகலுணவு, இராப்போசனம் அனைத்தும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகைகளில்
இருக்கும், சுவையாகவும் இருக்கும், உறைப்பு அதிகமாக உண்ணுபவர்கள் பச்சை மிளகாய்களைப் பெற்றுக்கொண்டனர்.
அதற்குப்பின்னர், விடுதிக்குத் திரும்பி, உடைகளை மாற்றிக்கொண்டு, வகுப்புக்குச் செல்லவேண்டும், ஒவ்வொருநாளும் இரண்டு வகுப்புகள் இடம்பெற்றன. அதில் செயன்முறை பயிற்சிகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன. அவைப் பற்றி, அடுத்தடுத்து பார்ப்போம்.
அதற்கு முன்னதாக முதல் நாளன்று இடம்பெற்ற பதிவு செய்தலைக் கூறவே வேண்டும். காலை 9.30 மணிமுதல் 10.30 வரை பதிவுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. 30 பேரைப் பதிவு செய்ய 1 மணிநேரம் எதற்கு என்ற கேள்வி எனக்கு எழும்பியது. ஒரு மணிநேரத்துக்குப் பின்னரே அதற்கான பதில் கிடைத்தது.
இங்கெல்லாம் ஓர் அழைப்பிதழுடன் ஒரு நிகழ்வுக்கு அல்லது பயிற்சிக்கு இன்றேல் மாநாட்டுக்குச் சென்றால், வரவேற்பு அறையில் பெயரைக்கேட்டு, அடையாள அட்டையைப் பரிசோதித்த பின்னர், அடையாளத்துக்கு ஏதாவது அட்டையை கழுத்தில்கொழுவி இன்றேல் ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பிவிடுவார்கள். எனினும், MCRHRD இல் பதிவு வித்தியாசமாக இருந்தது.
எங்களுக்கென ஒரு கடவுச்சொல்லையும் உள்ளே நுழைய வேண்டிய லிங்கையும் தந்தார்கள், ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கமளித்து இறுதியில் புகைப்படத்தைத் தரவேற்றவேண்டும். அதில் பலரும் கோட்டையை விட்டு விட்டனர். அவ்வாறு பதிவேற்றம் செய்ததன் பின்னர்தான், MCR HRD இல், நாங்கள் பயின்ற துறைக்கான அடையாள அட்டை கிடைத்தது. அதற்கு பின்னர், எங்குச் சென்றாலும் அந்த அடையாள அட்டையை அணிந்திருத்தல் அவசியமாக இருந்தது.

கலாநிதி டி.மாதவி குமாரி
ஹைதராபாத் விமான நிலையத்தில் QRயில் இரண்டு மணிநேரம் செலவழித்த எம்மில் பலர், பதிவு செய்யும் நடைமுறையில் ஒரு மணிநேரத்தை விஞ்சு விட்டனர். உரிய அளவில் இல்லாத படங்களைச் சிலரின் கையடக்க தொலைபேசிகளின் ஊடாக தரவேற்றம் செய்யமுடியவில்லை. அவ்வாறானவர்கள் படங்களை மட்டும் தனித்தனியாக அனுப்பிவைத்து அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொண்டனர்.
MCR HRD நிறுவனத்தின் துணைவேந்தரான தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி டாக்டர் தலைமையில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. அதற்கு முன்னதாக கலாநிதி டி.மாதவி குமாரி பாடநெறிக்கான திட்டத்தை உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டு வைத்தார். அவருடன் இணைந்து குழு புகைப்படம் எடுக்கப்பட்டது. அன்றையதினம் மாலை 4.30 மணிவரைக்கும் இரண்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. மாலை 6 மணிக்குப் பின்னர், வரலாற்றுச் சிறப்பு மிக்க Old City இல் உள்ள சர்மினாருக்கு விஜயம் செய்தோம்.
போகும் வழியில் ஆங்காங்கே ஹைதராபாத் பிரியாணி என பெயரைக் கண்டபோதெல்லாம். எட்டே எட்டு நிமிடங்களில் அரிசியைத் தின்ற சுவாரஸ்யக் கதையே ஞாபகத்துக்கு வந்தது. எனினும், MCR HRD இல் இராபோசனத்தின் போது, இரண்டு நாட்கள், ஹைதராபாத் பிரியாணி வழங்கப்பட்டதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
அந்தளவுக்கு இல்லாது விட்டாலும், indigo flight, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில், விமானத்தில் ஹைதராபாத் பிரியாணி வழங்கப்பட்டது. அதனை வழங்கிய விமான பெண் பணியாளர்கள் எட்டு நிமிடங்களுக்குப் பின்னர் உண்ணுமாறே அறிவுறுத்தினார். எனினும், பசி கொடுமையால் இருந்த எமது குழுவைச் சேர்ந்த ஒருவர், அந்தப் பணிப்பெண் திரும்பும் முன்னரே, மூடியைத் திறந்து லபக் லப்க்கென சாப்பிட்டு விட்டார்.
அந்த கதை யாருக்குமே தெரியாது, ஹைதராபாத் பிரியாணியைச் சாப்பிட்ட மகிழ்ச்சியில் பலரும் திருப்தி கொண்டனர். எனினும், இந்தியாவின் உயர்வான பாரம்பரியம், புத்தாக்க சூழலுக்குச் சென்று திரும்ப சுமார் 6 மணிநேரம் எடுத்து. அதில், சுவாரஸ்யங்களைப் பகிர்ந்து கொண்டபோதே, “அண்ணே! அப்படியா சாப்பிடவேண்டும். நான் கொடுத்தவுடன் மூடியைத் திறந்து லபக்கென சாப்பிட்டு விட்டேன்.

அதுதான், அரிசி போல இருந்ததோ” என சிரித்து விட்டார். (உண்மையில் அந்தப் பிரியாணிப்
பொதிகள் சூடாகித் தயாராக 8 நிமிடங்கள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
அப்போது, அங்கிருந்தவர்கள் அனைவரும் கொக்கெனச் சிரித்து விட்டனர். பின்னர் தான் ஒவ்வொருவரும் தங்களுடைய வித்தியாசமான அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். அதில் QR அனுபவம் வித்தியாசமானது. அத்துடன், பலுனை உடைக்கப்பட்டபாடு இருக்கே...
ஹைதராபாத் பயண அனுபவம் தொடரும்...

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .