Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
எம். காசிநாதன் / 2019 செப்டெம்பர் 02 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்துக்கு முதலீடுகள் திரட்டுவதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இலண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு, 14 நாள்கள் பயணமாகப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். முதன் முதல் 2016இல் அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், “அதிமுக ஆட்சி எத்தனை நாளைக்கு நீடிக்கும்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றவுடன், “எத்தனை மாதங்களுக்கு இந்த ஆட்சி நீடிக்கும்?” என்ற கேள்வியோடு பட்டிமன்றமே நடத்தப்பட்டது. இப்போது வெளிநாட்டுக்குச் சென்று முதலீடு திரட்டி வருவோம் என்று அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் பழனிச்சாமியின் தைரியத்தை, அரசியல்வாதிகள் பலர் பாரட்டத்தான் செய்கிறார்கள்.
மக்களிடம் வாக்குகளைப் பெற்றுவந்த முதலமைச்சர், இப்படி வெளிநாடு போவது வழக்கம். ஆனால், அதிமுகவுக்குள் பல போட்டியும் பொறமையும் நிலவி வருகின்ற நேரத்தில், பிரதான எதிர்க் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம், 100 சட்டமன்ற உறுப்பினர்களுடன் வலுவான கட்சியாக இருக்கின்ற நேரத்தில், வெளிநாடு செல்வது என்பது சற்று வித்தியாசமானது.
“என் ஆட்சியை 2021 வரை யாரும் கவிழ்க்க முடியாது” என்று அடிக்கடி எடப்பாடி பழனிச்சாமி பேசிவந்தார். அதை இந்த வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் நிரூபித்தும் உள்ளார் என்பது, தமிழக அரசியலில் புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது.
வெளிநாடு போகின்ற இந்த நேரத்தில், முதலமைச்சருக்கான பொறுப்புகளை வேறு யாரிடமும் கொடுக்கவில்லை. வழக்கமாக, சீனியர் அமைச்சர் ஒருவரிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்துவிட்டே, தமிழகத்தைப் பொறுத்தமட்டில், கடந்தகால முதலமைச்சர்கள் வெளிநாடு சென்றிருக்கிறார்கள். அப்படி இந்தமுறை கொடுக்க வேண்டும் என்றால், துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆகவே, எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டுக்குச் சென்றபோது, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டுப் போகத் தயாராக இல்லை. முதலமைச்சர் புறப்பட்டுச் செல்லும்போது, துணை முதலமைச்சரே வந்து வாழ்த்தி அனுப்பி வைத்தாலும், இருவருக்கும் இடையில் பரஸ்பர அவநம்பிக்கை தொடர்கிறது என்பதைத்தான் இந்த வெளிநாட்டுப் பயணத்தின் தொடர் நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.
அதிமுகவுக்குள் இந்தப் பனிப்போர் கொடி கட்டிப் பறந்தாலும், இருவருமே ஒருவருக்கு ஒருவர் ஓர் உண்மையைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அது, அதிமுக ஆட்சி 2021 வரை நீடிக்கும் என்பதுதான். ஆட்சி கையிலிருக்கும் போது, நாம் ஏன் பிரச்சினைகளைப் பூதகரமாக்கிக் கொள்ள வேண்டும் என்று, “போருக்குப் போக” எடுத்த வாளைப் பின்னால் வைத்துக்கொண்டு அமைதி காக்கிறார்கள் என்பதுதான் உண்மை. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும், ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று சொல்வதை விட, அவர்களின் ஒற்றுமைக்குப் பிராதன எதிர்கட்சியாக இருக்கும் திமுக தான் காரணம் என்றால் மிகையாகாது.
இன்றைய சூழ்நிலையில், தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்ற, திமுகவுக்கு வெறும் 17 சட்டமன்ற உறுப்பினர்கள்தான் தேவை. அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எடியூரப்பா, இது போன்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி வெளிநாடு சென்றிருந்த நேரத்தில்தான், அங்கிருந்த ஆட்சியையே கவிழ்த்தார். ஆனால், தமிழகத்தில் ஏன் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்ற கேள்வியை திமுக எதிர்ப்பாளர்களும் திமுகவால் ஆட்சிக்கு வரமுடியாது என்று பிரசாரம் செய்வோரும் கேட்காமல் இல்லை.
ஆனால், திமுக தலைவராக ஓராண்டை நிறைவு செய்திருக்கும் ஸ்டாலினைப் பொறுத்தமட்டில், ஆரம்பத்திலிருந்து ஒரு கொள்கையில் உறுதியாக இருக்கிறார். “கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டேன். ஜனநாயக முறைப்படி தேர்தலைச் சந்தித்தே ஆட்சிக்கு வருவேன்” என்று கூறி வருகிறார். ஜெயலலிதா இறந்த போதும் அதைக் கூறினார். ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சரான போதும் அதைக் கூறினார். இப்போது, முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் நேரத்திலும் அதை கூறிவருகிறார்.
திமுக இப்படியொரு முடிவை எடுத்ததற்கு பல காரணங்கள் உண்டு. ஜெயலலிதா இறந்தபோது, “அதிமுகவுக்குள் நாம் குழப்பத்தை ஏற்படுத்தினால், ஜெயலலிதா மறைவின் அனுதாபத்தில் நம் மீது பழி விழுந்துவிடும்” என்று திமுக நினைத்தது. ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது, “எப்படியும் அவர் தலைமையிலான ஆட்சி விரைவில் கவிழ்ந்துவிடும்” என்று கருதியது. இந்த இரு எதிர்பார்ப்புகளும் திமுக நினைத்தது போலவே நடைபெற்றது.
ஓ.பன்னீர்செல்வம், “ஓவர் நைட்டில்” தனது முதலமைச்சர் பதவியை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடுத்ததாக, எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதும் “இந்த ஆட்சியும் நீடிக்காது” என்றே திமுக கருதியது. ஆனால், பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுக மறுத்ததால், திமுகவின் எதிர்பார்ப்புக்கு மாறாக, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி நீடிப்பதை, மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு உறுதிசெய்தது. அதன் பிறகு நிலைமை தலைகீழாக மாறி விட்டது. இன்றைக்குள்ள அரச நிர்வாகம், நிதி நிலைமை உள்ளிட்ட பல குழப்பங்கள் இருப்பதாகக் கருதும் ஸ்டாலின், இனி இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, மற்றொரு ஆட்சியமைக்க முயற்சிக்க வேண்டாம் என்ற இறுதி முடிவை எடுத்து விட்டதாகவே தெரிகிறது.
சமீப காலங்களில், ஸ்டாலினின் பொதுக்கூட்டப் பேச்சுகளில், “சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும், திமுக வெற்றி பெறும்; ஆட்சி அமைக்கும்” என்று கூறி வருகிறார். ஆகவே, ஜெயலலிதா மறைந்தபோது எடுத்த கொள்கை முடிவின்படி, “ஜனநாயக முறையில் தேர்தலைச் சந்தித்து ஆட்சிக்கு வருவோம்” என்று எடுத்த முடிவில், ஸ்டாலின் உறுதியாகவே இருக்கிறார்.
ஸ்டாலினின் இந்த நிலைப்பாடு, அதிமுக ஆட்சி தொடர்வதற்குப் பாதகமாக இருந்த காரணங்களை முற்றிலும் விலக்கிவிட்டது. ஸ்டாலினின் இந்த முடிவுக்கு மத்தியில், மீண்டும் பாரதீய ஜனதாக் கட்சியே ஆட்சிக்கு வந்ததும் காரணம். இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த பாஜக, அதிமுகவுக்குக் கூடுதல் பலமாகக் கிடைத்திருக்கிறது. இந்த ரவுண்டில், “அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் மிக நெருக்கமான உறவு இல்லை” என்றாலும், “பாஜகவை எதிர்க்கும் திமுகவுக்கு நாம் ஏன் உதவ வேண்டும்” என்ற எண்ணம், பாஜக தலைவர்களுக்கு இருப்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு சாதகமான அம்சமாக இருக்கிறது. அதை ஸ்டாலினும் உணர்ந்திருக்கிறார்.
“ஆட்சி அமைக்க திமுக முயற்சி எடுத்தால், அதற்கு ஆளுநரோ மத்திய அரசோ ஒத்துழைக்காமல் போகலாம். அப்படி மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் செய்யமுடியாது” என்பதும் ஸ்டாலினுக்குத் தெரியும். “ஒருவேளை ஆட்சிக் கவிழ்ப்பு நிறைவேறி விட்டாலும், உடனே தேர்தல் வராமல் போகலாம். ஒரு வருடத்துக்கு மேல் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி என்றால், அது பாஜகவின் ஆட்சியாகவே இருக்கும்” என்பது அவருக்கு மட்டுமல்ல, திமுகவில் உள்ள முன்னணித் தலைவர்களுக்கு எல்லாம் நன்றாகவே தெரிகிறது. ஆகவே, “ஆட்சி அமைப்பது” அல்லது “ஆட்சிக் கவிழ்ப்பு” என்ற இரு ஆயுதங்களையும், திமுக கீழே போட்டுவிட்டது.
ஆகவே, இன்றைக்கு அதிமுக ஆட்சி தமிழகத்தில் தொடர்கிறது என்றால், முதலில் திமுகவும் பிறகு பாஜகவும் எடுத்துள்ள கொள்கை முடிவே தவிர, எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையில் உள்ள ஒற்றுமை அல்ல. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாரும், இந்த இரு தலைவர்களுக்கும் மிகவும் விஸ்வாசமாக இருக்கிறார்கள் என்றும் அர்த்தம் அல்ல.
திமுக ஆட்சிக்கு வர, எந்த “அரசியல் விளையாட்டுகளிலும் ஈடுபடாது” “பாஜகவோ திமுகவின் அந்த விளையாட்டுகளுக்கு உதவி செய்யாது” என்பதை, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார்கள். அதேபோல், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் துள்ளியமாக கணித்து வைத்திருக்கிறார். துணை முதலமைச்சரும் இந்த சூழ்நிலைகளை புரிந்து கொண்டார். ஆகவேதான், வெளிநாடுகளில் முதலீடு தேடிச் செல்லும் நேரத்தில், தன்னிடம் முதலமைச்சர் பொறுப்புகளைக் கொடுக்காமல், 14 நாள்கள் அரசப் பயணமாகச் சென்ற எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்தி அனுப்பி வைத்துள்ளார் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.
இன்றைய சூழ்நிலையில், தமிழகத்தைப் பொறுத்தவரை ஸ்டாலின் தலைமையில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும், “சட்டமன்றத் தேர்தலை” நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. 2021 சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்கான அரச திட்டங்கள் ஒவ்வொன்றாக அறிவித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணிச்சலான முடிவுகளை எடுக்கிறார். தன் அமைச்சரவையில் முதன் முறையாக ஓர் அமைச்சரை டிஸ்மிஸ் செய்தார். யாரும் எதிர்பாராத வகையில், ராஜ்ய சபைக்கு முக்கிய அதிமுக தலைவர்களைப் புறக்கணித்து, அவரது விருப்பத்துக்கு ராஜ்ய சபை உறுப்பினர் பதவியை வழங்கினார். இப்போது யாரிடமும் முதலமைச்சர் பொறுப்புகளைத் தற்காலிகமாக ஒப்படைக்காமல் வெளிநாடு சென்றிருக்கிறார். தமிழக அரசியில் “ஸ்டாலினுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்குமான” களமாக முற்றுப் பெற்றுவிட்டது. இந்தக் களம், “ரஜினி அரசியல் பிரவேசத்தால்” மாறுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago
4 hours ago