2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்?

Johnsan Bastiampillai   / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

என்.கே. அஷோக்பரன்

 

 

இன்றைய அரசியல்வாதிகள், தமக்குத்தாமே சூட்டிக்கொள்கின்ற பட்டங்களில், ‘செயல் வீரன்’ என்பது முதன்மையானதாக இருக்கிறது. “நாம் பேசுபவர்கள் அல்ல; செயல் வீரர்கள்” என்று, தமது பிரசாரங்களை அவர்கள் முன்னெடுக்கப் பிரயத்தனப்படுகிறார்கள். 

இதற்கான காரணம், ‘வாழையடி வாழை’யாக அரசியல் என்பது, பேச்சுக்கலையில் மையம் கொண்டதாக அமைந்திருப்பதும், அந்த அரசியலில், அந்த அரசியலால் மக்கள் சலிப்படைந்து உள்ளதுமாகும். ஆகவே, தம்மைச் ‘செயல் வீரர்’கள் என்று, அதே பேச்சுக்லையின் ஊடாக நிறுவுவதில், சமகால அரசியல் தலைமைகள் அக்கறை கொண்டு செயற்படுகின்றன. 

தாம் வெறும் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல; தாம் சாதித்துக்காட்டுபவர்கள் என்று வீரவசனம் பேசி, மக்களுக்குப் புது நம்பிக்கையை அளிக்க எத்தனிக்கிறார்கள். காலம் காலமாகக் கேட்டவற்றால், பார்த்தவற்றால் சலிப்படைந்த மக்களும், வித்தியாசமாக இருக்கிறதே என்று ஒரு மாற்றைத் தெரிவு செய்கிறார்கள். ஆனால், ஏமாற்றம் என்பதே எப்போதும் விடையாகிறது. அதுவே ஜனநாயக அரசியலின் துரதிர்ஷ்டமாகிக் கொண்டிருக்கிறது.

‘தெரிந்த பிசாசும் தெரியாத தேவதையும்’ என்ற விடயம், சிலருக்கு ஞாபகம் வரலாம். அரசியலில், இந்தத் ‘தெரிந்த பிசாசும் தெரியாத தேவதையும்’ மிக முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றன. 

மக்கள், கேட்டும் பார்த்தும் அனுபவித்தும், அவற்றால் சலித்தும் வெறுத்தும் போன அரசியல்வாதிகள் தெரிந்த பிசாசுகள். அத்தகைய ‘பிசாசு’ அரசியல்வாதிகள், நாம் அல்ல என்று, நம்பிக்கை வார்த்தைகளை வாரி வீசி, மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறவர்கள் தெரியாத தேவதைகள். 

இவர்கள், ஏன் தெரியாத தேவதைகள் என்றால், இவர்கள் மக்கள் முன்னிலையில் தம்மை, தேவதைகளாகவும் மக்களின் இரட்சகர்களாகவும் முன்னிறுத்துகிறார்கள். மக்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்குமான சகலரோக நிவாரணி, தாமே எனப் பிரசாரம் செய்கிறார்கள். இவர்கள் யாரென மக்களுக்குத் தெரியாது. ஆகவே தெரியாத தேவதைகள் இவர்கள். ஆனால், கசப்பான உண்மை யாதெனில், தெரியாத வரையில்தான் இவர்கள் தேவதைகள். இந்தத் தெரியாத தேவதைக் கதையை, இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம். பிசாசுக்கும் தேவதைக்கும் என்ன வித்தியாசம்? அவற்றின் தன்மைகள் என்ன? 

 பிசாசுகள் மக்கள் விரும்பாத தன்மை கொண்டவை.  தேவதைகள், மக்கள் நேசிக்கும் தன்மையைக் கொண்டவை. பிசாசும் தேவதையும் ஒன்றுக்கொன்று எதிர்முரணான கற்பனை உருவகங்கள். புதிதாக ஒன்று வரும்போது, அதன் தன்மை யாதென எவரும் அறியார். ஆனால், எல்லா அரசியல்வாதிகளும் தன்னை தேவதையாகவே மக்கள் முன்னிலையில் முன்னிறுத்தவும் பிரசாரம் செய்யவும் தலைப்படுகின்றனர். 

எவரும் தம்மைப் பிசாசுகளாக முன்னிறுத்துவதில்லை. அப்படி முன்னிறுத்துவது எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும். ஆகவே, எல்லோரும் தம்மைத் தேவதைகளாக முன்னிறுத்தும்போது, மக்கள் முன்னிலையில் இருக்கும் கேள்வி, அவர்கள் தேவதைகளா இல்லையா என்பதுதான். 

இதில் முன்னனுபவத்தைக் கொண்டு, ஒருவர் தேவதையா இல்லையா என்பதை, மக்கள் தீர்மானிப்பதற்கான தரவுகள் அவர்களிடம் இருக்கும். ஆனால், புதியவர்கள் வரும்போது, அந்தத் தீர்மானத்தை எடுப்பதில், மக்களுக்கு சிக்கல் நிலை ஏற்படுகிறது. தர்க்க ரீதியாக ஒருவரை ஏற்பதற்கோ மறுப்பதற்கோ, அவரை மதிப்பிடுவதற்கான தரவுகள் தேவை. அந்தத் தரவு பற்றாக்குறையாக உள்ள போது, மனம் முன்னெடுகோள்களில் சிக்கிக்கொள்கிறது. 

சமூக முன்னெடுகோள்களைக் கடந்து சிந்திக்கும் போது, தெரிந்த பிசாசைவிட, தெரியாத தேவதை அதிக புள்ளிகளைகளைப் பெற்றுக்கொள்கிறது. தெரிந்த பிசாசு, பிசாசு என்று தெரியும். தெரியாத தேவதை, தேவதையா இல்லையா என்று தெரியாது. இந்த இடத்தில், இந்தத் தெரியாத தேவதைக்கு பலமாக அமையும் விடயம்தான் நம்பிக்கை (Hope).

மனித வாழ்வின் முக்கிய உந்துசக்தி நம்பிக்கை. நம்பிக்கை இல்லாத வாழ்வு, எரிபொருள் இல்லாத இயந்திரத்தைப் போல, இயங்காது தரித்துவிடும். வாழ்வில் மனிதன் சந்திக்கும் அத்தனை இன்னல்களையும் தடைகளையும் பின்னடைவுகளையும் கடந்து, மனிதன் முன்னோக்கிப் பயணிக்கிறான் என்றால், அந்தப் பயணத்துக்கான ‘எரிபொருள்’ நம்பிக்கைதான். இந்த நம்பிக்கைதான் மனிதனின் பலம். 

அரசியலைப் பொறுத்தவரையில், வாக்காளர்கள் மத்தியில், பலவீனமாகிக் கொண்டிருப்பதும் இந்த நம்பிக்கைதான். அதற்கு, வாக்காளர்கள் காரணம் என்பதைவிட, அரசியல்வாதிகளின் தந்திரோபாயம் காரணம் என்பதுதான் பொருத்தமானது. 

நம்பிக்கைதான் மனிதனின் பலம் என்பது, யாருக்குத் தெரியுமோ இல்லையோ, அரசியல்வாதிகளுக்கு மிக நன்றாகவே தெரியும். அதனை அவர்கள் முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மக்களின் நம்பிக்கையைத் தமக்குச் சாதகமாகத் திருப்பி, அதிகாரக் கனியை கவர்ந்துகொள்ள விளைகிறார்கள். 

பிரசாரம் அவர்களின் ஆயுதமாகிறது. மக்கள் நம்பிக்கை அவர்களது இலக்காகிறது. தெரிந்த பிசாசுகள் மீது, மக்கள் கொண்டுள்ள அதிருப்தியும் வெறுப்பும், அவர்களுக்கு உரமாகிறது. இப்படித்தான் ‘தெரியாத தேவதை’கள் உருவாக்கப்படுகிறார்கள். 

இந்தத் ‘தெரியாத தேவதை’கள் பற்றிக் கட்டியெழுப்பப்படும் பிரசார விம்பம், அவர்களைத் தேவதைகளாகவே காணும் நிலையை, மக்களிடத்தில் தோற்றுவிக்கிறது. மக்களும் தம் நம்பிக்கை முழுவதையும் இந்தத் தெரியாத தேவதைகள் மீது முதலிட்டு, தமது நம்பிக்கை மெய்யாகும் என்று காத்திருக்கிறார்கள். 

பெரும்பாலும் இந்த நம்பிக்கை பொய்த்துப் போய்விடுகிறது. தெரியாத தேவதைகளைப் பற்றி, மக்கள் தெரிந்து கொள்ளும் போது, அவர்களும் பிசாசுகளே என்பதை மக்கள் உணர்ந்துகொள்கிறார்கள்.

இந்த இடத்தில் மக்களுக்கு, இன்னொரு பேரதிர்ச்சி பெரும்பாலும் ஏற்படுகிறது. எந்தத் தெரிந்த பிசாசை ஒதுக்கிவிட்டு, இந்தத் தெரியாத தேவதையைத் தேர்ந்தெடுத்தார்களோ, இந்தத் தெரியாத தேவதை, அந்தத் தெரிந்த பிசாசைவிட, மோசமான பிசாசு என்பதை உணரும் வேளையில், நம்பிக்கை என்பது, அந்தத் தெரிந்த மோசமான பிசாசில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்தமான அரசியலிலும் ஏற்பட்டுவிடுகிறது. 

ஆனால், வாழ்க்கை ஒரு வட்டம். நம்பிக்கை இல்லாமல், வாழ்க்கை இயங்காது. மீண்டும் இந்தச் சுழலுக்குள், மக்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அப்படியானால், இந்தச் சுழலிருந்து விடுபட என்ன வழி?

அது, அத்தனை சுலபமாகச் சொல்லிவிடக் கூடியதொன்றல்ல. ‘சாத்திரம் உரைப்பது போல’, எது உண்மையான தேவதை, எது உண்மையான பிசாசு என்று, எவராலும் ஆணித்தரமாகக் கூறிவிட முடியாது. 

ஆனால், சில அரசியல் அடிப்படைகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஜனநாயகம் என்பது, ஒருவகையான விழுமியம். வல்லாட்சிச் சிந்தனைகள், அதிகார மோகம் கொண்டவர்களால், ஒருபோதும் மிகச் சிறந்த ஜனநாயகத் தலைவர்கள் ஆக முடியாது. 

அச்சத்தைத் தனது ஆயுதமாகக் கொள்பவன், ஒருபோதும் மிகச் சிறந்த ஜனநாயக ஆட்சியாளனாக இருக்க மாட்டான். தன்னுடைய சித்தாந்தத்தை, வாழ்க்கை முறையை, நம்பிக்கைகளை மற்றவர் மீது திணிப்பவன், ஒருபோதும் நல்ல ஜனநாயக ஆட்சியாளனாக இருக்க மாட்டான். 

“என்னால் ஒரேயடியாக, நாட்டின் கட்டமைப்பை மாற்றிவிட முடியும்” என்பவன், நிச்சயமாகப் பொய்தான் சொல்கிறான். ஒரு ஜனநாயக நாட்டில், ஜனநாயக ரீதியிலான கட்டமைப்பு மாற்றத்தை, ஒரேயடியாகச் செய்துவிட முடியாது. ஆனால், பொது மனம் இதைப்பற்றி எல்லாம் சிந்திக்காது. 

விளைவுகள் கிடைக்காத விரக்தியில் இருக்கும் வாக்காளனின் மனம், அதிரடியாகவேனும் ஒரு மாற்றம் நிகழ்ந்துவிட வேண்டும் என்று அவாக்கொள்கிறது. ஆகவே, அப்படி அதிரடி காட்டுகிறவனை, அந்த மனம் மோகிக்கிறது; விளைவு, ஏமாற்றம்!

 ஏமாற்றம், மீண்டும் மீண்டும் ஏற்பட ஏற்பட, வாக்காளனின் மனம், அதிரடியான மாற்றத்தை இன்னும் வலுவாக மோகிக்கிறது. ஆனால், பகுத்தறிவின்படி சிந்தித்தால், எந்தவொரு ஜனநாயகக் கட்டமைப்பிலும் மாற்றம் என்பது அதிரடியாக நடக்காது. மாறாக, படிப்படியாகத்தான் இடம்பெறும் என்ற தௌிவு கிடைக்கும். 

ஆனால், தொடர்ந்து ஏமாந்த மனத்துக்கு, இந்தப் பகுத்தறிவின் கருத்து உவப்பானதாக இருக்காது. எப்படி, சத்துணவு நாவுக்குச் சுவை குறைவானதாக இருக்கிறதோ, அதுபோல அரசியல் மீதான ஈர்ப்பும், வாக்காளனுக்கு குறைந்துவிடுகிறது. ஆரோக்கியமற்ற, நாவுக்குச் சுவையான உணவுக்குப் பலரும் எப்படி அடிமையாகிறார்களோ, அதுபோல வாக்காளனின் மனம் அதிரடி அரசியலை விரும்புகிறது. 

உடனடி உணவைப்போல, உடனடி மாற்றத்தை மனம் கேட்கிறது. அதன் விளைவு, ஏமாற்றம். ஒரு போதைவஸ்து பாவனையாளனைப் போல, தன்னை அழிக்கும் போதையை, வாக்காளன் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறான். அது அவன் தவறா, போதை மருந்து விற்பவனின் தவறா? அவன் கேட்பதால் அல்லவா அவன் விற்கிறான். அவன் விற்பதால் அல்லவா, அவன் கேட்கிறான். ஒரு விசச் சுழல் இது.

இறுதியாக, தலைப்பின் கேள்விக்கு, பதில் சொல்ல ஒரு சிந்தனை. இன்னும், எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் என்று கேட்பது கிடக்கட்டும். இன்னும், எத்தனை காலம் தான் ஏமாறுவார் என்றும் கேட்பதுதான் பொருத்தமாகும். சிந்திக்கவும்!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X