Thipaan / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
முதன்மையான ஆங்கில அகராதியான ஒக்ஸ்போர்ட், காலணித்துவம்/குடியேற்றவாதம் என்பதை, 'இன்னொரு நாட்டின் அரசியல்ரீதியான கட்டுப்பாட்டை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ கைப்பற்றும், குடியேற்றவாசிகள் மூலம் ஆக்கிரமித்தல், பொருளாதார ரீதியாக அதைச் சுரண்டும் கொள்கை அல்லது செயற்பாடு' என வரைவிலக்கணப்படுத்துகிறது.
இலங்கையானது 1948ஆம் ஆண்டில் காலணித்துவத்திலிருந்து விடுதலைபெற்றதாகத் தெரிவித்து, ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 4ஆம் திகதி, சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகின்றோம். இதில், இலங்கையை இறுதியாக ஆக்கிரமித்து ஆட்சிபுரிந்த இங்கிலாந்தின் ஆட்சியை நினைவுபடுத்தும், போற்றும் அமைப்பான பொதுநலவாயக் கூட்டமைப்பில் (கொமன்வெல்த்) அங்கம் வகிப்பதோடு, அவ்வமைப்பின் நடப்புத் தலைமைப் பொறுப்பையும் இலங்கை வகிக்கின்றது.
வன்புணர்வொன்றை மேற்கொண்ட நபரை எவ்வாறு கொண்டாடுவதில் அர்த்தமில்லையோ, அவ்வாறான நிலைமையையே பொதுநலவாயக் கூட்டமைப்பின் அங்கத்துவமும் கொண்டிருக்கின்றது.
இது இவ்வாறிருக்க, எங்களுடைய நாடுகள் இறையாண்மை கொண்டவை எனவும், அவற்றைச் சிதைக்க முனைந்த வெளிநாட்டுச் சக்திகளை வென்றுவிட்டதாகவும் அவற்றிலிருந்து நாட்டைக் கைப்பற்றிவிட்டதாகவும், தங்களுடைய அரசியல் இருப்புக்காக அரசியல் கொண்டாடுவதுண்டு.
ஆனால், நாம் விரும்புகின்றோமோ இல்லையோ, வெளிநாட்டு வல்லரசுகளால் தான் இலங்கை போன்ற சிறிய நாடுகளின் பெரும்பாலான தலையெழுத்துக்கள் தீர்மானிக்கப்படுகின்றன என்பதோடு, அவ்வாறானதொரு மனநிலையை மக்களும் தங்களையறியாமல் கொண்டிருப்பது தான் உச்சக்கட்டமான சவாலாகக் காணப்படுகின்றது.
பொதுவாக, சாதியமென்பது தெளிவானதாக, பகிரங்கமானதாகக் காணப்படும் போது, அதை எதிர்த்துப் போராடுவதென்பது இலகுவானது எனக் கூறுவர். ஆனால், மறைமுகமானதாக, மக்களுடைய எண்ணங்களில் மறைந்து காணப்படும் போது, அதை எதிர்கொண்டு போராடுவது கடினமானது. அவ்வாறான நிலைமை தான் காலணித்துவ விடயத்திலும் காணப்படுகின்றது.
இன்றைய சமூகத்திலும் கூட, தோலின் கறுப்பு நிறத்தை விட வெள்ளை நிறம் உயர்வானது என்ற கருத்துக் காணப்படுகின்றது. மறுபுறத்தில் சொல்வதனால், முன்பை விட இன்றைய கால சமூகத்தில் தான் இது மிகவும் அதிகளவிலான மட்டத்தில் காணப்படுகின்றது. உச்ச அளவில் காணப்படும் 'தோலை வெள்ளையாக்கும்' கிறீம்களின் விற்பனையென்பது எமது மனநிலையையே வெளிப்படுத்தி நிற்கின்றது.
இந்தியாவின் பிரபல திரை நட்சத்திரமான ஷேகர் கபூர் ஒரு முறை இதற்கான சரியான பதிலை வழங்கியிருந்தார். ';அழகுசாதன நிறுவனங்கள், இந்தியாவை அல்பினோக்களின் தேசமாக மாற்ற முயல்கின்றன. உடலின் எந்தப் பகுதியிலும் கறுப்புப் பகுதியில்லை, எங்கள் இதயங்களைத் தவிர. அதற்கு கிறீமேதும் உள்ளதா?'. இவ்வாறாக, உலகின் கிழக்குப் பகுதி மக்களின் சுதேச நிறத்தையே வெறுக்கச் செய்யும் ஒன்றாக, இந்தக் காலணித்துவ எண்ணங்கள் எம்மை ஆட்சி செய்கின்றன.
மறுபுறத்தில், நுனிநாக்கில் புரளும் ஆங்கிலமும், சுதேச மொழியை இழிவாக எண்ணும் மேட்டுக் குடிச் சிந்தனைகளும் தான் எம்மிடையே காணப்படுகின்றன. ஒருவரால் ஆங்கிலம் ஓரளவு தெளிவாகப் பேச முடியுமெனில், அவர் தான் அறிஞர், உலகம் தெரிந்தவர். ஆங்கிலம் தெரியாது நாட்டுப்புறத்தான்‚ ஆங்கிலமென்பது வெறுமனே மொழி, அதுவோர் அறிவல்ல என எவ்வளவு தான் கூச்சலிட்டாலும், நான்கு பேர் கூடியிருக்கும் ஒன்றுகூடலில் ஆங்கிலம் தெரிந்த ஒருவருக்கு வழங்கப்படும் மரியாதையென்பது, மொழியறிவுக்கு வழங்கப்படும் மரியாதையை விட அதிகமானது தெட்டத்தெளிவானது.
இவையெல்லாம் இவ்வாறிருக்க, அரசியல்வாதிகளையும் ஒப்பிடுவதிலும் விமர்சிப்பதிலும் கூட, பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேலைத்தேய நாடுகளினது அரசியல்வாதிகளுக்கும் இலங்கை, இந்தியா போன்ற கீழைத்தேய நாடுகளினது அரசியல்வாதிக்குமான விமர்சனங்களின் அளவும் அவற்றின் மையக் கருத்துகளும் வேறானதாகவே இருக்கும்.
அண்மைக்காலமாக, இந்தியாவில் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகளும், அதில் பிரதமர் நரேந்திர மோடியினதும் அவரது பரிவாரங்களினதும் பங்குகளாகக் கூறப்படுகின்றவை பற்றியும் விசேட கவனம் அவசியமானது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதன் பின்பு, நாட்டிலுள்ள இந்துத்துவவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் அதற்கான காரணமாக மோடி உள்ளாரெனவும் அவர் இவற்றை ஊக்குவிக்கிறார் எனவும் பல்வேறான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன.
தரவுகளும் கிட்டத்தட்ட அவ்வாறானதொரு நிலையையே காண்பிக்கின்றன. இந்தியாவின் உள்விவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 2014ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுடன் ஒப்பிடும் போது 2015ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் சமூகங்களுக்கிடையிலான வன்முறை உயர்வடைந்திருப்பதையும் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வாகக் காணப்படுவதையும் அத்தரவுகள் காண்பித்தன.
ஆகவே, இதற்காக மோடியை உடனடியாகக் குற்றஞ்சாட்ட முடியும். ஆனால், அந்தத் தரவுகளின் அடிப்படையில் அதிகமான சம்பவங்களைப் பதிவுசெய்த மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும் பீஹார் இரண்டாமிடத்திலும் குஜராத் மூன்றாமிடத்திலும் காணப்படுகின்றன. இதில், உத்தரப் பிரதேசமானது சமஜ்வாதிக் கட்சியின் கீழும் பீஹாரானது இதுவரை காலமும் காங்கிரஸ் அடங்கிய ஐக்கிய ஜனதாத் தளத்திடமும் குரஜாத் ஆனது பாரதிய ஜனதாகக் கட்சியிடமும் காணப்படுகின்றன.
மாநிலமொன்றினது பொலிஸ் உள்ளிட்ட சட்டம், ஒழுங்கில் மத்திய அரசாங்கத்தால் தலையிட முடியுமென்ற போதிலும், சாதாரண நிலைமைகளில் அந்தந்த மாநிலங்களின் அரசாங்கங்களினாலேயே அவை கட்டுப்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், ஏனைய கட்சிகளின் கீழுள்ள மாநிலங்களினதும் நடவடிக்கைகளுக்கு மோடியைக் குற்றஞ்சாட்ட முடியுமா என்ற வினா எழாமலில்லை.
மோடிக்கும் காலணித்துவத்துக்குமிடையிலான சம்பந்தமென்ன என்ற வினா எழலாம். மோடியின் எதிரணியான காங்கிரஸ் கட்சி, இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சியைப் போன்று வெளிநாடுகளுடன் சிறப்பான உறவுகளைப் பேணும் ஒரு வகையான மேல்வர்க்கக் கட்சி. அதன் காரணமாக, ஊழல்களுக்கு மத்தியிலும் அக்கட்சிக்கான ஆதரவு, வெளிநாடுகளில், குறிப்பாக வல்லரசு நாடுகள் பலவற்றில், உண்டு.
இதற்காக மோடி மீது தவறுகளே இல்லையென்றுவிட்டுப் போக முடியாது. அவரின் தலைமையின் கீழுள்ள அமைச்சர்களாகட்டும், அவருடைய முக்கிய கூட்டாளிகளான ஆர்.எஸ்.எஸ் போன்றன இந்துத்துவ தீவிரப் போக்கான கருத்துக்களைத் தொடர்ந்தும் வெளிப்படுத்திவரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு மோடிக்கு உண்டு. அதேபோல், இந்துத்துவப் போக்கான தரப்புகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பும் அவருக்குண்டு.
ஆனால், மாட்டிறைச்சி உண்டதாகக் கருதப்பட்டுக் கொல்லப்பட்ட முஸ்லிமின் கொலைக்கெல்லாம் மோடியைப் பொறுப்புக் கூறச் சொல்வது அல்லது அவரைக் காரணமாக்குவது சிக்கலானது.
அமெரிக்காவில் இடம்பெறும் ஒவ்வொரு கறுப்பின இளைஞனின் கொலைக்கும் பராக் ஒபாமா குற்றஞ்சாட்டப்படுகின்றாரா? அண்மையில் இடம்பெற்ற எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பின் வைத்தியசாலை மீதான விமானத் தாக்குதலுக்கான தனிப்பட்ட பொறுப்பு மிக்கவராக பராக் ஒபாமா கூறப்பட்டாரா? இவற்றுக்கெல்லாம் ஒபாமா பொறுப்பாக அமைய மாட்டார், ஆனால் இந்தியாவிலும் இலங்கையிலும் இடம்பெறும் ஒவ்வொரு குற்றத்துக்குமான பொறுப்பாக, பிரதமர்களோ ஜனாதிபதிகளோ காணப்பட வேண்டுமென்பது, ஒரு வகையான காலணித்துவ அடிமைச் சிந்தனையே.
இல்லாவிடில், இலங்கை ஜனாதிபதிகளும் இந்தியப் பிரதமர்களும் ஒவ்வொரு குற்றத்துக்கும் பொறுப்பானவர்களாக இருக்கும் போது, பராக் ஒபாமாக்களையும் டேவிட் கமரோன்களையும் நேரடியாகக் குற்றஞ்சாட்டாது இருப்பது அவ்வகையான சிந்தனையே.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் காரணமாக, முன்னைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவை, 'போர்க் குற்றவாளியாகச் சந்தேகிக்கப்படும் நபர்' என, மேலைத்தேய நாடுகளின் பெரும்பாலான ஊடகங்களில் அடிக்கொருமுறை விளிக்கும் போது, அது உறுத்தலானதாகவோ அல்லது வித்தியாசமானதாகவோ தெரிவதில்லை. ஆனால், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் இடம்பெற்ற உயிரிழப்புகளுக்கும் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்கும் பொறுப்பாக, டேவிட் கமரோனையோ அல்லது ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷையோ அவ்வூடகங்கள், 'போர்க் குற்றவாளியாகச் சந்தேகிக்கப்படும் நபர்' என அழைப்பதில்லை. ஒபாமாவின் கீழ் இடம்பெற்ற தாக்குதல்களுக்கும் அவர் அவ்வாறு அழைக்கப்படுவதில்லை.
குஜராத்தில் இடம்பெற்ற இனக்கலவரத்தில் நரேந்திர மோடி தனது பணியை ஒழுங்காகச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டிலிருந்து, அந்நாட்டின் நீதிமன்றங்கள் அவரை விடுவித்துள்ள போதிலும் (அந்தத் தீர்ப்புகளின் நேர்மைத் தன்மை, நம்பகத்தன்மை என்பன வேறான விடயங்கள். அவை தனியாக ஆராயப்பட வேண்டும்.
அவை இதில் சம்பந்தமற்றவை), இன்னமும் கூட 'குஜராத்தில் இடம்பெற்ற கலவரங்களில் அவரின் பங்கு குறித்தான சந்தேகங்கள் காணப்படுகின்றன என்ற மேலைத்தேய ஊடகங்கள் அல்லது மேலைத்தேயத்துக்கு ஆதரவான தரப்புகளின் கருத்துக்கள், எமக்கு உறுத்தலாகத் தெரிவதில்லை.
ஏனென்றால், மேலைத்தேயம் எம்மீது கொண்டிருக்கும் காலணித்துவ மனநிலையை ஏற்றுக் கொண்டுள்ள நாம், அவர்கள் விதிக்கும் நற்பண்புக் கோவைகளை அவ்வாறே ஏற்றுக் கொண்டு, அவற்றை அவ்வாறே நுகர்ந்து கொண்டிருக்கின்றோம், எம்மையறியாமலேயே.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago