2025 மே 14, புதன்கிழமை

கறிவேப்பிலை அரசியல்

Administrator   / 2017 பெப்ரவரி 17 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மொஹமட் பாதுஷா  

முஸ்லிம் அரசியலில் சாண் ஏற முழம் சறுக்குகின்ற சம்பவங்களே தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.   
முன்னேறுவதற்கான மூலோபாயங்கள் வகுக்கப்படுவதைக் காட்டிலும், பின்னடைவதற்கான இராஜதந்திரங்களே தீட்டப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.  

இலங்கை முஸ்லிம்களின் அடையாள அரசியலில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த மர்ஹூம் 
எம்.எச்.எம். அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிந்திய போக்குகள் இதுபோன்ற களச் சூழல்களை நோக்கியே இழுத்துச் செல்கின்றது.   

அஷ்ரபின் மரணத்துக்குப் பிறகான கடந்த 17 வருடங்களில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் பெரிதாக எதையும் சாதித்துக் காட்டவில்லை என்ற குறைபாடு பரவலாக இருக்கின்றது.   

உரிமைக்கான கட்சி என்று சொல்லிச் சொல்லியே கடைசியில் உரிமைசார்ந்த அரசியலிலும் அபிவிருத்தி அரசியலிலும் மிளிரவில்லை என்பது கட்சியின் ஆதரவாளர்களால் முன்வைக்கப்படும் விமர்சனமாகும்.   

ஹக்கீமை மு.காவின் தலைவராகக் கொண்டு வந்தவர்களே, பிற்காலத்தில் கட்டம் கட்டமாக கட்சியில் இருந்து வெளியேறினர் அல்லது வெளியேற்றப்பட்டனர்.   

இவ்வாறு ஏ.எல்.எம். அதாவுல்லா, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன், நஜீப் ஏ.மஜீத் என ஒரு நீண்டபட்டியலில் உள்ளடங்குவோர் மு.காவில் இருந்துவெளியேறியவர்களே. மு.காவின் தலைமைத்துவம் குறித்து விமர்சனங்களை முன்வைத்து, தமக்கான இடத்தையும் வாக்குகளையும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டனர்.  

இதனால் மு.காவின் கிளைகளையும் விழுதுகளையும் அசைக்க முடிந்ததே தவிர ஆணிவேர்களை ஆட்டம் காணச் செய்வது சிரமமாகவே இருந்துவந்தது. ஆனால், மக்கள் மத்தியில் தமக்கிருந்த இடத்தையும் மு.கா என்ற கட்சிக்கு இருக்கின்ற பொறுப்புகள், கடமைகளையும் கட்சி உணர்ந்து செயற்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.   

இதுவரைகாலமும் ஏற்படாத ஓர் அரசியல் சுழிக்குள் இன்று மு.கா கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கின்றது. இந்தப் பெரும் சுழி, ஆணிவேர்களை ஆட்டங்காணச் செய்து விடுமோ என்ற அச்ச உணர்வு உண்மையாக கட்சியை நேசிப்போரிடையே ஏற்பட்டிருக்கின்றது.  

கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கும் மு.காவின் 27ஆவது பேராளர் மாநாட்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் எல்லாவற்றையும் நாமறிவோம்.   

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன்அலி மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோருக்கும் இடையிலான கருத்து வேற்றுமைகள் உக்கிரநிலையை அடைந்திருந்தன.   

பஷீர், கட்சியை தூய்மைப்படுத்தப் போவதாகக் கூறி, இரகசியங்கள் பலவற்றை சாடைமாடையாக வெளியிடத் தொடங்கியிருந்தார். ஆகவே, தலைவருக்கும் அவருக்கும் இடையிலான உறவு இனி ஒட்டவே முடியாது என்கின்ற அளவுக்கு உடைந்திருக்கின்றது.   

இருப்பினும், ஹசன்அலி அவ்வாறான தீவிரபோக்கை வெளிக்காட்டவில்லை. அவருக்கு நெருக்கமானவர்கள் பலர் தலைவரது வாக்குறுதியை நம்புவது குறித்து அவருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்திருந்த போதிலும் கூட, ஹசன்அலி தலைவரை நம்பினார்.   

“இரண்டு ரக்அத் சுன்னத்து தொழுகை தொழுதுவிட்டு வந்து கட்டிப்பிடித்து, இனி நம்மை மரணந்தான் பிரிக்கவேண்டும் எனக் கூறி, வாக்குறுதி வழங்கிய தலைவரை எவ்வாறு நம்பாமல் விடுவது” என்று அவர், எச்சரிக்கை செய்வோரிடம் பதிலுக்கு கேட்டார். ஆனால், ஹசன்அலி இப்போது மனமுடைந்து போயிருக்கின்றார்.  

முன்னதாக கட்சியின் தவிசாளராக இருந்த பஷீர் சேகுதாவூத் அப்பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இத்தீர்மானத்துக்கு ஹசன்அலி உட்பட எல்லோரும் ஏகமனதாகக் கையுயர்த்தினாலும் பலர் கையுயர்த்த வைக்கப்பட்டார்கள் என்றே உயர்பீட உறுப்பினர்கள் கூறுகின்றனர்.   

தலைமைத்துவம் பல்வேறு சிக்கல்களுக்குள் மாட்டிக் கொண்ட போது, அவரது பக்கம் நின்று அவரை மிகவும் தந்திரமான முறையில் அதிலிருந்து விடுவித்தவர்களுள் பஷீர் முதன்மையானவர் என்று சொல்லப்படுவதுண்டு. இச்சந்தர்ப்பங்களிலும் வேறு பலசந்தர்ப்பங்களிலும் பஷீர் மீது மக்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.  

ஆனால் இவ்வாறு, தான் செயற்படக் காரணம் தலைவரைப் பாதுகாக்கும் நோக்கமே என்று பஷீர் இப்போது பகிரங்கமாகக் கருத்து வெளியிடுகின்றார். இவ்வாறான நிலையிலேயே தவிசாளர் பதவியில் இருந்து, அவர் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றார்.   

அவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டதும் மக்களின் கவனம் அதை நோக்கித் திரும்பியது. அது அவர் மீதான அனுதாபமாக இருந்தது என்பதைக் காட்டிலும், பஷீர் என்ன பதில் தாக்குதல் மேற்கொள்வாரோ என்ற எதிர்பார்ப்பாக இருந்தது என்றே கூற வேண்டும்.   

ஆனால், ஹசன்அலியின் பதவி பறிக்கப்பட்டமை, சமூகமட்டத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் வேறுமாதிரியானது. இது பெரும்பாலும் அவர் மீதான அனுதாபம் சார்ந்ததாக, கிழக்குக்கு நடந்த ஓர் அநியாயமாகப் பலராலும் நோக்கப்படுகின்றது.   

இந்த நிலைமைகளைத் தொடர்ச்சியாக ஒரு கோர்வையாக நோக்குங்கள். வடக்கிலும் கிழக்கிலும் மு.காவுக்கு எதிரான, அதன் தலைவருக்கு எதிரான அரசியல் சக்திகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.  

 அத்தோடு, ஹக்கீம் தலைமையிலான கட்சி அஷ்ரப் காலத்தைப் போன்று பாரிய சேவைகளை செய்யவில்லை என்ற ஒரு மனக்குறை பல வருடங்களாக மக்களுக்கு இருக்கின்றது.  

இந்தப் பின்னணியில் மு.காவின் தலைமைத்துவத்தை மாற்ற வேண்டும் என்ற கோஷமும் கிழக்கைச் சேர்ந்த ஒருவர் தலைவராக வரவேண்டுமென்ற பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.   

கிழக்கை மையமாகக் கொண்ட ஒருகட்சி, தனது மையப்புள்ளியை மறந்து செயற்படுகின்றது என்ற விமர்சனங்களும் எழாமலில்லை. இந்நிலையில்தான் ரவூப் ஹக்கீம் - ஹசன்அலி - பஷீர் முரண்பாடு வெடித்திருக்கின்றது.   

இங்கு பிழையான ஓர் அணுகுமுறை கையாளப்பட்டுள்ளது. உண்மையிலேயே, பழிதீர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், களநிலைமைகளை கருத்திற்கொண்டு, பஷீரையும் ஹசன்அலியையும் தலைவர் தனது பிடிக்குள் எடுத்திருக்க வேண்டும்.

அதுதான் சாணக்கியமான நகர்வாகவும் இருந்திருக்கும். ஆனால், அவ்விடயத்தில்,தலைவர் ஹக்கீம், உசுப்பேற்றிவிடும் சிலரால் பிழையாக வழிநடாத்தப்பட்டிருக்கின்றார் என்றே கருத வேண்டியுள்ளது.  

ஏற்கெனவே, மேற்சொன்ன எத்தனையோ தரப்பினர் மு.காவுக்கு சவாலாக இருந்து கொண்டிருக்கின்றனர். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற முரண்பாடும் பிளவும் ஒவ்வொரு ஊரிலும் வட்டாரத்திலும் பிரதிபலிக்கின்றது.  

இந்த எதிரிகளையும் சவால்களையும் அதிகரித்துக் கொள்ளாமல் கொஞ்சம் நின்று நிதானித்துத் தீர்மானங்களை எடுத்திருக்க வேண்டும். மிக முக்கியமாக, பஷீர் வெளியே காத்துக் கொண்டிருக்கின்ற நிலைமையில் ஹசன்அலியையாவது உள்ளே வைத்திருந்திருக்க வேண்டும்.   

ஆனால், இன்று இரண்டுபேரும் வெளியேவிடப்பட்டுள்ளமை பாரதூரமானது. கிழக்கில் மக்களிடையே மு.கா பற்றி ஏற்பட்டிருக்கும் மனக் குறையை தீர்த்துவைக்காமல், மாற்று அரசியல் கட்சிக்காரர்களும் எழுச்சிகளும் கோஷங்களும் சூடுபிடித்திருக்கின்ற ஒரு களத்தில், இன்று ஹசன்அலியையும் பஷீரையும் இறக்கிவிட்டிருப்பது, பல்வேறு எதிர்விளைவுகளைக் கொண்டுவரும் என்று அரசியல் அனுபவசாலிகள் கூறுகின்றனர்.   

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கில் உருவாகி வளர்ச்சியடைந்த கட்சி. இது எல்லா முஸ்லிம்களுக்குமான கட்சி என்றாலும், அது கிழக்கு மக்களுக்கே தார்மீகமாக உரிமையான ஓர் அரசியல் இயக்கமாகும். கட்சியில் சிரேஷ்டமானவர்கள் பலர் இருக்கத் தக்கதாக, கிழக்கில் பிறக்காத ரவூப் ஹக்கீமை அந்த மக்களே தலைவராக நியமித்தார்கள்.   

இந்த இடத்தில் ஓர் எழுதப்படாத விதி உருவானது. அதாவது, தலைமைத்துவம் கிழக்குக்கு வெளியே இருந்தால், அதிகாரமுள்ள செயலாளர் நாயகம் பதவி கிழக்கில் இருக்க வேண்டும் என்பதே அதுவாகும்.   

இந்த விதி பலவருடங்களாக நடைமுறையில் இருந்தது. இப்போது வழக்கிழந்திருக்கின்றது எனலாம். ஏனென்றால், முழுமையான அதிகாரங்கள் புதிதாக நியமிக்கப்பட்ட செயலாளருக்கும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.   
இவ்விடத்தில் இரண்டு விடயங்கள் முக்கியமாகின்றன.

ஒன்று, ஹசன்அலிக்குப் பேராளர் மாநாட்டில் யாப்பைத் திருத்தி, அதிகாரமுள்ள செயலாளர் நாயகம் பதவியை வழங்குவதாக வழங்கப்பட்ட வாக்குறுதி தனியே அவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல் மட்டுமல்ல; தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், நாட்டிலுள்ள ஏனைய அரசியல்வாதிகள், மக்கள் என எல்லோரும் பாத்திருக்க கொடுக்கப்பட்டதாகும்.  

எனவே, பஷீரை நீக்கியதுபோல, ஹசன்அலியை வெளியேற்றியதை தேசியஅரசியலில் மு.கா தலைவரால் நியாயப்படுத்த முடியாதநிலை ஏற்படுமிடத்து, அது பெரியசிக்கலாக அமையும்.  

அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மு.காவின் செயற்பாடுகள் மீது பரவலான விமர்சனப் பார்வை ஏற்பட்டிருக்கின்ற பின்னணியில் கிழக்கைச் சேர்ந்தவர்களும் மு.காவின் அடையாளங்களுள் இருவராக இருந்தவர்களுமான ஹசன்அலி மற்றும் பஷீர் ஆகியோரிடமிருந்து பதவிகள் பறிக்கப்பட்டுள்ளமையானது, ஹக்கீம் கிழக்கை புறக்கணிக்கின்றார் என்ற, பழைய கோஷங்களுக்கு வலுச் சேர்ப்பதாக அமைந்துள்ளது.   

இப்போதும் கிழக்கைச் சேர்ந்த ஒருவரையே செயலாளராக நியமித்தாலும் அதிகாரம் இல்லாதஅல்லது குறைவான இப்பதவிக்கு அவரை நியமிப்பது ஹசன்அலியையும் பஷீரையும் பதவி நீக்கியதற்கு ஈடாகாது என்பதை மக்கள் நன்கறிவர்.   

இப்படியாக, 30 வருடங்களுக்கும் மேலாகக் கட்சிக்காகப் பாடுபட்ட ஹசன்அலிக்கும், 20 வருடங்களுக்கும் அதிககாலம் தலைமைத்துவங்களோடு தேனிலவு கொண்டாடிய பஷீருக்கும் இந்த நிலைமை என்றால்... நமது நிலைமை என்ன என்று பலர் சிந்திக்கத் தொடங்கியுள்ளதாகக் கட்சிமுக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.  

அத்தோடு, ஏற்கெனவே மு.காவுக்கு எதிரான அரசியலை செய்து வருகின்ற மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் கட்சிகள் மெல்வதற்கு வாய்க்கு அவலை மு.கா தலைவரே கொடுத்திருக்கின்றார். அவர்கள் இதனைப் பயன்படுத்தித் தமது பிரசாரத்தை முன்னெடுப்பார்கள்.  

இந்தப் பின்னணியில், கிழக்கில் இருந்து ஒருபுதிய அரசியல் சக்தி அல்லது கூட்டணி உருவாவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருவதாக அனுமானிக்க முடிகின்றது.   

கிழக்கில் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஹசன்அலி, பஷீருடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுவதற்கு பல அரசியல்வாதிகள் விரும்புகின்றனர். இவ்விருவரும் மக்கள் காங்கிரஸோடு அல்லது தேசிய காங்கிரஸோடு சேரலாம் என்று சிலர் கூறுகின்றனர்.   

ஆனால், மு.காவின் முன்னாள் செயலாளர் நாயகமான ஹசன்அலியும் முன்னாள் தவிசாளராக பதவிவகித்த பஷீரும் வேறு ஒரு கட்சியுடன் சேர்ந்து செயற்படும் மனநிலையில் இல்லை என்பது, அவர்கள் பற்றி அறிந்தவர்கள் கூறும் கருத்தாகும்.   

ஆனால், மு.காவின் தலைமைத்துவம் கிழக்கில் இல்லாத நிலையில் அனைத்து அதிகாரங்களோடும் இருந்த செயலாளர் நாயகம் என்ற பதவியும் கைமாற்றப்பட்டு, அதிகாரம் குறைந்ததாக ஆக்கப்பட்டுள்ளமையின் எதிர்கால விளைவு பற்றி அவர்கள் அச்சம் கொள்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை. 

முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பிழையான கொள்கையுடன் பயணிக்கின்றது என்றும் அதை மீட்க வேண்டும் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர். அதேநேரத்தில் அடிப்படையில், அஷ்ரப் எதற்காக மு.காவை உருவாக்கினாரோ அதேபோன்றதொரு வெற்றிடம் இப்போது உருவாகி வருவதைக் கிழக்கிலுள்ள கணிசமான மக்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் உணர்ந்திருக்கின்றனர்.   

பஷீரும் ஹசன் அலியும் புனிதர்களல்லர். ஆனால், அவர்கள் இருவரும் கறிவேப்பிலையாக தூக்கி எறியப்பட்டுள்ளமை, கிழக்கில் ஒரு புதிய அரசியல் சக்தி உருவாவதற்கான அழுத்தத்தை அதிகரித்திருக்கின்றது எனலாம்.

அந்த அடிப்படையில், இந்த அரசியல் சக்தி என்பதும் பெரும்பாலும் புதிய அரசியல் கட்சியாகவோ அல்லது ஹசன் அலி, பசீர் ஆகியோர் ஏனைய காங்கிரஸ்களுடன் நேரடியாக இணைவதாகவோ இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அரிதாகும்.   

இதற்கு மாறாக, புதிய அரசியல் கூட்டு ஒன்று கிழக்கை மையமாகக் கொண்டு உருவாவதற்கான நிகழ்தகவுகளே அதிகரித்துள்ளன. மேற்குறிப்பிட்ட இருவருடனும், மு.காவில் முரண்பட்டுள்ளவர்களும் ஒரு பொது நோக்கின் அடிப்படையில் இணைந்து ஒரு கூட்டமைப்பாக செயற்படுவதற்கு ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துள்ள பெயர் குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகளும் இந்த அணியில் இணைந்து கொள்ளலாம்.   

இப்போது, இதுபற்றிய கருத்தாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது புனித மக்கா நகருக்கு உம்ராவுக்காகச் செல்லும் ஹசன்அலியும் அடுத்த நகர்வுக்காக பார்த்திருக்கும் பஷீரும் களத்தில் இறங்கி பேசத் தொடங்குவார்களாயின், ஏதோ ஓர் அடிப்படையிலான ஒரு புதிய அரசியல் சக்தியின் உருவாக்கத்தை அது விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கலாம். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X