Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Administrator / 2017 பெப்ரவரி 27 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கருணாகரன்
இவளுக்கு இரண்டு கால்களுமில்லை. வயது 29. இன்னும் திருமணமும் ஆகவில்லை. முன்பு போராளியாக இருந்தாள். யுத்தம் அவளுடைய கால்களைத் தின்றுவிட்டது. புனர்வாழ்வு முகாம்வரை சென்று மீண்டவளின் முன்னே, புதிய வாழ்க்கைச் சவால்கள் நிற்கின்றன. அவற்றையெல்லாம் எப்படி எதிர்கொள்வதென்று அவளுக்குப் புரியவில்லை. கால்களும் கைகளும் உருப்படியாக இருப்பவர்களாலேயே வாழ்க்கையை எதிர்கொள்ளக் கடினமாக இருக்கும்போது கால்களில்லாதவளால் ஓரடி நகர முடியுமா?
அப்படியென்றால், அவளின் கதி என்ன?
இதுதான் பெரிய கேள்வியே. இப்படிப் பலர் இந்த மாதிரியான நிலைமையில், இந்த மாதிரியான கேள்விகளின் முன்னே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
யுத்தம் முடிந்து விட்டது. ஆனால், யுத்தம் உண்டாக்கிய பாதிப்பும் அது உருவாக்கிய கேள்விகளும் முடியவில்லை. அவையெல்லாம் பெரிய துயர்க்காடாக, அவலக்காடாக வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அவற்றுக்கான தீர்வைக் காணவில்லை என்றால், அது இலட்சக்கணக்கானவர்களின் உயிரைச் சப்பித்தின்று கொண்டேயிருக்கும். இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான்.
வன்னியிலும் கிழக்கிலும், இன்னும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள், நிர்க்கதியான வாழ்க்கைக்குள் சிக்குண்டிருக்கின்றன என்றால், அதற்குக் காரணம் யுத்தத்துக்குப் பிறகான மீள் நிர்மாணப்பணிகள் சரியாக நடக்கவில்லை என்றே அர்த்தமாகும். யுத்தத்துக்குப் பிறகான மீள் நிலைப்படுத்தல், மீள் நிர்மாணம், மீளமைத்தல் என்பதையெல்லாம், அரசாங்கம் தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறது.
அரசாங்கம் மட்டுமல்ல, இந்த நாட்டின் பெரும்பாலான புத்திஜீவிகளும் சமூகச் செயற்பாட்டாளர்களில் பலரும் கூட, அப்படித்தான் வியாக்கியானப்படுத்தி வருகின்றனர். அதாவது அழிந்து போனவையை மீளக் கட்டியெழுப்புதல் என்று சொல்லிக் கொண்டே, உட்கட்டுமானங்களை மட்டும் கட்டினால் சரி என்பது போன்று.
ஆனால், மீள்நிலைப்படுத்தல் என்பது அதுவல்ல. தனியே கட்டடங்களைக் கட்டுவதாலோ, வீதிகளை நிர்மாணிப்பதாலோ, மின்சாரத்தை வழங்குவதனாலோ மட்டும் நிறைவடைந்து விடாது.
இவையெல்லாம் தேவையானவையே. ஆனால், இதற்கும் அப்பால், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை, அவர்களுடைய பாதிப்புகளைப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு மீளமைப்பதற்கும் கட்டியெழுப்புவதற்கும் வழங்கப்படும் ஆதரவும் உதவியுமே மெய்யான மீள்நிலைப்படுத்தலும் மெய்யான மீள் நிர்மாணமுமாகும்.
இதைச் சரியாகச் செய்யாதபடியால்தான் ஏராளமான சிறுவர்கள் இன்று, யுத்தப் பாதிப்புப் பிரதேசங்களிலிருந்து சிறார் இல்லங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்; பாலியல் தொழிலில் பெண்கள் ஈடுபடுகிறார்கள் அல்லது பிறழ்வுச் செயற்பாடுகளில் இறங்குகிறார்கள். சமூக அவலமும் குற்றச்செயல்களும் சீரழிவு நடத்தைகளும் பெருகிச் செல்கின்றன.
நீதிமன்றம், பொலிஸ் போன்றவற்றைக் கொண்டு இவற்றைக் கட்டுப்படுத்தி விடலாம் என்று அரசாங்கம் சிந்திக்கிறது.
ஆனால், நீதிமன்றங்களையும் பொலிஸையும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இந்த மக்களின் வாழ்நிலையை உயர்த்துவதன் மூலமாக ஏராளமான பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டு விடமுடியும், அவலத்தையும் நீக்கிவிடலாம்.
யுத்தம் முடிந்த பிறகு இதைச் செய்திருக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருந்தது. இன்னும் இருக்கிறது. ஆனால், யுத்தத்துக்குப் பிறகான வரவு - செலவுத் திட்டத்தில் இதைக் கருத்திற்கொண்டு அரசாங்கங்கள் செயற்படவில்லை.
இதை, பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவம் செய்த மக்கள் பிரதிநிதிகள் கூடக் கவனத்திற்கொண்டதில்லை. மீள்குடியேற்ற அமைச்சு, புனர்வாழ்வு அமைச்சு என்ற இரண்டு அமைச்சுகளை அரசாங்கம் உருவாக்கியிருந்தாலும், இவை உரிய முறையில் செயற்படவில்லை.
இதற்கு நல்ல உதாரணம், யுத்தப் பாதிப்புகளைச் சீர்படுத்துவதற்காகவும் நிவாரணமளித்தலுக்காகவும் உருவாக்கப்பட்ட இந்த அமைச்சுகள் இயங்கியிருக்க வேண்டிய இடம், யுத்தப்பிரதேசங்களாகவே இருந்திருக்க வேண்டும்.
அந்த மக்களுக்கான ஆறுதல் மையங்களாக, இந்த இரண்டு அமைச்சுகளும் மாறியிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. ஆகவே இதிலிருந்தே அரசாங்கம், பாதிக்கப்பட்ட மக்களைக் குறித்து எவ்வளவுக்கு அக்கறையாக இருக்கின்றது என்பது புரியும்.
ஆகவேதான் அரசாங்கத்துக்கு அப்பாலான உதவிகளையும் உதவி அமைப்புகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. முதலாம், இரண்டாம் உலகப்போர்கள் உண்டாக்கிய பேரழிவுகளே, இன்று உலகம் முழுவதிலும் உள்ள தொண்டு நிறுவனங்களையும் மனிதாபிமானப் பணியாளர்களையும் பணி முறைமைகளையும் உருவாக்கின.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாகவும் துணையாகவும் உதவியாகவும் வழிகாட்டுதலாக இருப்பதுமே, தொண்டு மற்றும் மனிதாபிமானப் பணிகளாகும். மீள் கட்டுமானங்களை அரசாங்கம் செய்யும் என்றால், தொண்டு நிறுவனங்களும் மனிதாபிமானப் பணியாளர்களும், மக்களின் வாழ்நிலைப்பணியைச் செய்யும்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் இது மிகப் பலவீனமாகவே உள்ளது. முப்பது ஆண்டுகால யுத்தம் ஏற்படுத்திய பாதிப்பு மிகப் பெரியது, மிகப்பயங்கரமானது.
ஆனால் அதை மீள்நிலைப்படுத்தும் அக்கறையே ஒரு சிறிய புள்ளியளவு கூட இல்லை. இது, மிகத் துயரமான ஒரு நிலை. சுனாமிப் பேரழிவு ஏற்பட்டபோது நாடே திரண்டு, அந்தப் பேரழிவிலிருந்து மீள்நிலைப்படுவதற்கு உதவியது; செயற்பட்டது.
அந்த அளவுக்கு சுனாமிப் பேரழிவையும் விடப் பெரும் பேரழிவைச் சந்தித்த மக்களுக்கு உதவ, யாரும் முன்வரவில்லை. குறிப்பாக பெரும்பான்மைச் சமூகத்திலிருந்து ஓர் அமைப்புக்கூட யுத்தப் பாதிப்பைச் சந்தித்த மக்களுக்கு எனச் செயற்படவில்லை. அப்படித் தொண்டாற்றினார் என்று கூறப்படக்கூடிய அளவுக்கு ஒருவர்கூட நடந்து கொள்ளவும் இல்லை. இது எதைக்காட்டுகிறது? இன்னும் இந்த நாடு, இன ரீதியாகப் பிளவுண்டிருக்கிறது என்பதைத்தானே.
இதைவிடக் கொடுமையானது, தமிழ்ச்சமூகத்துக்குள்ளிருந்து கூட, பெரிய அளவில் மக்களுக்கான மறுவாழ்வை உருவாக்கக்கூடிய அளவுக்கு எந்த அமைப்பும், குறிப்பிடத்தக்க அளவில் செயற்படவில்லை.
அங்காங்கே சில அமைப்புகள் செயற்பட்டாலும், அவை ஒர் அடையாளத்தைப் பெற்றதாக இல்லை. புலம்பெயர் நாடுகளில் இருந்து சில அமைப்புகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றுக்கு இலங்கையில் கட்டமைப்புகள் விரிவாக்கம் பெற்றதாக இல்லை.
இதனால் அவை ஓர் எல்லைக்கு மேல் தம்மை நிலைப்படுத்திக்கொள்ளவோ, விரிவாக்கம் பெறவோ முடியாதிருக்கின்றன. சட்டரீதியான சிக்கல்களும் அரசியல் நடைமுறைப் பிரச்சினைகளும், இதற்குத் தடையாக உள்ளன என்று சொல்லப்படுகிறது.
அதாவது, புலம்பெயர் நாடுகளில் உள்ளோரால் உருவாக்கப்பட்ட அமைப்புகளை இங்கே உள்நாட்டில் இயக்குவதற்குப் பதிவுகளைச் செய்வதாக இருந்தால், அதற்கான வரி மற்றும் அனுமதி போன்றவற்றில் உள்ள விதிமுறைகளும் நடைமுறைகளும் தடைகளை உருவாக்குகின்றன என்கின்றனர் பலர். இதனால் மனமிருந்தாலும் இடமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
ஆனால், சரியாகச் சிந்தித்தால், முறையாக இயங்க முடியும். முறையாக இயங்கினால், திட்டங்களைச் சரியாக நடைமுறைப்படுத்த முடியும். திட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்தினால், முறையாகப் பயன்பாடுகள் நடக்கும். முறையாகப் பயன்பாடுகள் அமைந்தால், சரியான வளர்ச்சி ஏற்படும் என்கின்றார் பளை - பச்சிலைப்பள்ளி அபிவிருத்திச் சங்கத்தின் ஸ்தாபகரான தம்பாப்பிள்ளை லோகநாதன்.
யுத்தப் பாதிப்புகளைச் சந்தித்த மக்களுக்கு உதவவும், யுத்தத்தினால் அழிவடைந்த பிரதேசத்தை மீளமைப்புச் செய்யவும் என, இலண்டனில் 2009 ஆம் ஆண்டு ஓர் அமைப்பை உருவாக்கவேண்டும் என்று சிந்தித்திருக்கிறார் லோகநாதன்.
இறுதி யுத்த உணர்வலைகளால் உந்தப்பட்ட பலரை இணைத்து, பச்சிலைப்பள்ளி அபிவிருத்திச் சங்கம் என்ற அமைப்பை 2009இல் இலண்டனில் உருவாக்கினார். ஆரம்பகட்ட நிதியைத் திரட்டிக் கொண்டு, அவசர உதவிகளைச் செய்யத் தொடங்கிய அந்த அமைப்பு, அடுத்த ஆறு மாதத்தில் பளையில் அதற்கான செயற்பாட்டுப் பணிமனையைத் திறந்தது. ஆனால், அன்றிருந்த அரசியற்சூழல், அந்த அமைப்பின் செயற்பாடுகளைக் குறித்து, கேள்விகளை எழுப்பியது.
இருந்தபோதும் உரிய முறையில் அதற்கான விளக்கத்தை அளித்து, உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தன் மூலமாக, தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை நீக்கி, உரிய வகையில் அமைப்பைப் பதிவு செய்து பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது, பச்சிலைப்பள்ளி அபிவிருத்திச் சங்கம். இப்போது மக்களுக்கான உதவிப்பணிகளைச் செய்வதோடு மட்டுமல்லாமல் கல்வி, சத்துணவுத்திட்டம், சுயதொழில் ஊக்குவிப்பு, இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கலை, பண்பாட்டுப்பேணுகை எனப்பல தளங்களில், தன்னுடைய செயற்பாடுகளையும் விரிவாக்கம் செய்திருக்கிறது.
இந்த அமைப்பின் செயற்திறனை அவதானித்த ஐக்கிய நாடுகளுக்கான அபிவிருத்திச் செயற்றிட்டம், மாவட்டச் செயலக நிர்வாகம் போன்றவையும், இந்த அமைப்புடன் இணைந்து பணியாற்ற முன்வந்திருக்கின்றன. இதனால் இப்போது அமைப்பின் செயற்பாடுகள் மேலும் வலுப்பெற்றுள்ளன.
இதுதான் இங்கே கவனிக்க வேண்டியது.
ஒரு காரியத்தைச் செய்ய முற்படும்போது, நமக்கு முன்னே தடைகளும் பிற நெருக்கடிகளும் சவால்களாக எழக்கூடும். அவற்றை எப்படிக் கடப்பது என்பதில்தான் அந்தச் செயலைச் செய்ய முனைவோரின் வெற்றி தங்கியிருக்கிறது.
இன்று, புலம்பெயர் நாடுகளில் நல்ல மனப்பாங்கோடும் நிதி வளத்தோடும் பலர் உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்நிலையை மேம்படுத்துவதற்கு அவர்கள் தயாராகவும் உள்ளனர். பலர், இதற்காக உதவிகளைச் செய்தும் வருகின்றனர்.
ஆனால் அவை அமைப்பாக்கம் பெற முடியவில்லை. தாய்மண்ணில் வேர்விட்டு இயங்கவில்லை. இதனால், அவற்றில் செயற்பாட்டு எல்லைப்பரப்பு, மிகக்குறுகியதாகவே உள்ளது. மட்டுமல்ல அந்தச் செயற்பாடுகளிலும் ஒழுங்கின்மைகள் அதிகமாக உள்ளன.
இதனால் அவர்களுக்கு மனச்சோர்வுகள் அதிகரிக்கின்றன. இந்த மனச்சோர்வு, அந்தப் பணிகளிலிருந்து அவர்களை விலக வைக்கிறது.
ஆனால், தம்பாப்பிள்ளை லோகநாதன் குறிப்பிடுவதைப்போல, ஓர் உரிய முறையில் செயற்பாட்டு முறைகளை முன்வைத்துப் பதிவுகளைச் செய்து விட்டால், சட்டரீதியான பாதுகாப்பும் செயற்பாட்டுக்கான அங்கிகாரமும் கிடைத்து விடும். அதன்பிறகு, செயற்பாடுகளைத் தாராளமாகப் புதிய முறைகளில் முன்னெடுக்க முடியும்.
இந்தப் பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு கால்களும் இல்லாத அந்த முன்னாள் பெண் போராளி, பச்சிலைப்பள்ளி அபிவிருத்திச் சங்கத்தில் இப்போது செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.
சங்கம், அவருக்கான உதவியையும் பாதுகாப்பையும் வழங்குகிறது. அந்தப் பெண், சங்கத்தில் இணைந்து செயற்படுவதன் மூலமாக தானும் வாழ்ந்து கொண்டு, பிறருக்கும் உதவிகளைச் செய்யக்கூடியதாக உள்ளது.
எனவே, சரியாகச் சிந்திக்கும்போது, வாசல்களை இலகுவாகத் திறக்கக்கூடியதாக இருக்கும். இதுவே இன்றைய சூழலில் மிக அவசியமாக இருக்கிறது. யுத்தப் பாதிப்புகள் இன்னும் நீண்டு கொண்டிருக்கின்றன.
அவை பேரவலமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன என்று சொல்லிக் கொண்டிருப்பதும், யாரையும் அதற்குக் குறை கூறிக் கொண்டிருப்பதுமல்ல, இவற்றுக்கான தீர்வு.
பதிலாக, அவற்றை நிவர்த்திக்கும் வகையில் செயற்பட முனைவதும் உரிய வழிகளைக் காண்பதுமே இன்றைய தேவையாகும். மனமிருந்தால் இடமிருக்கும் என்பதையும் மனம் வைத்தால் அது நடக்கும் என்பதையும், இங்கே நினைவில் இருத்துவது அவசியம்.
இன்று அத்தகைய ஒரு நிலை இருந்திருக்குமானால், இந்த நாட்டிலே ஏராளமான அமைப்புகள் தோன்றியிருக்கும். பச்சிலைப்பள்ளி அபிவிருத்திச் சங்கத்தைப்போல ஒவ்வொரு பிரதேசத்துக்கும் உரிய அமைப்புகள் தோற்றம் பெற்றிருக்கும்.
அப்படித் தோற்றம் பெற்ற அமைப்புகள் தங்களுக்குள் ஒரு கூட்டிணைவைக் கண்டிருக்கும். அந்தக் கூட்டிணைவு, புதிய பலம் மிக்க செயற்பாட்டுத்திட்டங்களை உருவாக்கியிருக்கும். அந்தச் செயற்பாட்டுத் திட்டங்கள், பெரிய மாற்றங்களை இந்த மண்ணிலே உண்டாக்கியிருக்கும்.
அது யுத்த முடிவுக்குப் பின்னான இந்த ஏழு ஆண்டுகளையும் வேறு விதமாகவே மக்களை உணர வைத்திருக்கும். ஏழு ஆண்டுகளையும் அரசியல் சொல்லாடல்களால் நிரப்பியதை விட, அர்ப்பணிப்பான மனித நேயப்பணிகளால் நிரப்ப வைத்திருக்கும். இந்தக் காலகட்டத்துக்குரியன அரசியல் சொல்லாடல்களல்ல; பதிலாக மனிதாபிமானப்பணிகளேயாகும். அவை நாட்டையே உணர வைத்திருக்கும்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, புலம்பெயர்ந்த நாட்டிலும் இலங்கையிலும் உள்ள சிலருடைய தவறான அரசியல் புரிதல்களும் பிழையான கருத்துருவாக்கங்களும் சமூக மட்டத்தில் உருவாகி விட்டன. இதனால் செயற்பட முனைவோரும், மனிதாபிமானச் செயற்பாட்டில் ஆர்வமுடையவர்களும் பின்னிற்கவும் தயங்கவும் வேண்டிய நிலை உருவானது.
இது, தேவையற்ற ஒரு நிலை. இதைக் கடந்து வரவேண்டும் என்பதே, சமூக நிர்ப்பந்தமும் சமூக யதார்த்தமும் ஆகும். மக்களைக் குறித்துச் சிந்திப்பதாக இருந்தால், சரியான வழிகளைக் கண்டறிய முடியும். மக்களுக்கு அப்பால் சிந்தித்தால், தவறான வழிகளையே, தேர்வு செய்ய முடியும். இதுவே உண்மை.
ஆகவே, செய்யத் துணிக கருமம் என்பதற்கிணங்க, துணிவோடு புதிய வழிகளைத் திறப்பதற்குப் புதிய விதிகளைச் செய்யும் வகையில் சிந்திக்க முனைவோர் திரள வேண்டும். அதையே காலம் எதிர்பார்த்திருக்கிறது. காலத்துக்குப்பிந்திய செயல்களால் யாருக்கும் பயனில்லை. சரியான வழிகளிருந்தால், கால்கள் இல்லாதவர்களாலும் பயணிக்க முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
8 hours ago