2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சமாதானத்துக்கான நொபெல் பரிசு: நொபெலுக்கான இரங்கல்

Thipaan   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ

பரிசுகளையோ பட்டங்களையோ பொறுத்தவரை, அவை பெருமளவும் அவற்றைப் பெறுகிறவர்களைப் பற்றிச் சொல்லுவதை விடக் கொஞ்சம் அதிகமாக அவற்றை வழங்குபவர்களைப் பற்றியும் வழங்கும் நோக்கங்கள் பற்றியும் சொல்லுகின்றன. நொபெல் பரிசு நிச்சயமாக ஒரு விலக்கல்ல.

இவ்வாண்டு சமாதானத்துக்கான நொபெல் பரிசு, துனிசியாவின் 'தேசிய உரையாடலுக்கான நால்வர் குழு' என்ற சிவில் அமைப்புகளின் கூட்டமைவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இக் கூட்டமைவில் துனிசியாவின் பொதுத் தொழிலாளர் சங்கம், தொழில், வர்த்தகம், கைவினைப் பொருட்கள் கூட்டமைப்பு, மனித உரிமைகள் கழகம், சட்ட வல்லுனர்கள் குழு என்பன அங்கம் வகிக்கின்றன. நொபெல் பரிசைத் தீர்மானிக்கும் குழுவானது அரபு வசந்தத்தின் பின்னர் துனிசியாவில் ஜனநாயகம் மலர வழிவகுத்தமைக்கான இந் நால்வர் குழுவுக்கு இப் பரிசை வழங்குவதாக அறிவித்துள்ளது.

நொபெல் பரிசு உலகில் வழங்கப்படும் பரிசுகளில் அதி பிரபலமானதும் முக்கியமானதுமான விருதாகும். இப் பரிசுகளின் உருவாக்குனர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த அல்‡பிரெட் நொபெல் ஆவார். இவர் பல அறிவியல் கண்டுபிடிப்புக்களைச் செய்தவராவார். இவர், டைனமைற்றைக் கண்டுபிடித்ததன் மூலம் பெரும் பணக்காரரானார். வெடிபொருட்களதும்  அவற்றுக்குரிய ஆயுதங்களினதும் உற்பத்தியும் செய்த இவரது பிரதான தொழிலாகப் போர்க்கருவி விற்பனை இருந்தது.

1888ஆம் ஆண்டு அவர் இறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன், தனது சொந்த மரண இரங்கற் செய்தியை அவர் பத்திரிகையில் வாசிக்கக் நேர்ந்தது. அவரது சகோதரரின் மரணத்தைத் தவறுதலாக இவருடையது எனக் கருதிய பிரெஞ்சுப் பத்திரிகையொன்று 'மரண வியாபாரியின் மரணம்' என்ற தலைப்பில் இரங்கலொன்றை எழுதியிருந்தது.

'இவ்வாறு தானா உலகம் என்னை நினைவுகூரும்?' என்ற கேள்வியை அந்த இரங்கற் செய்தி அவர் மனதில் எழுப்பியது. அதன் விளைவாக அவர் உருவாக்கியனவே நொபெல் பரிசுகள். அவர் தனது உயிலில், மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம் ஆகிய துறைகளிற் பரிசுக்குரியோரை சுவீடன் தெரிவுசெய்ய வேண்டும் என்றும் சமாதானப் பரிசுக்குரியவரை நோர்வே நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் தெரிவுசெய்ய வேண்டும் என்றுங் கூறியிருந்தார்;.

சுவீடன் ஆதிக்க நோக்குடைய நாடாக இருந்ததாலும் நோர்வே அணிசாரா நடுநிலை வெளியுறவுக் கொள்கையைக்; கொண்டிருந்ததாலும் அரசியல் நெருக்குவாரங்களையும் சொந்த நலன்களையுங் கடந்து இச் சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும் என நொபெல் விரும்பினார். 1901ஆம் ஆண்டிலிருந்து நொபெல் பரிசு இந்த அடிப்படையில் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது.

குறிப்பாக, நொபெல் சமாதானப் பரிசையும் இலக்கியப் பரிசையும் ஏகாதிபத்திய அரசியல் நோக்கங்கள் தீர்மானிக்கின்றன. பரிசுபெற்ற பெரும்பாலானோருக்குத் தகுதி காண்பித்தற்காக முற்றிலும் தகுதி வாய்ந்தோராய்த் தெரியும் சிலருக்கும் அப் பரிசு இடையிடை வழங்கப்படும். ஏவ்வாறாயினும், குறிப்பிடத்தக்க உலக முக்கியம் பெற்றோரே இப் பரிசுகளைப் பெறுகின்றனர்.

நொபெல் பரிசுகள் நடுநிலையாக முடிவாவதில்லை என்பதையும் இங்கு வலியுறுத்த வேண்டுகிறேன். பொருளியலுக்குரிய பரிசுகள் பெரும்பாலும் ஏகாதிபத்திய, முதலாளியப் பொருளியலின் நியாயங்களை ஏற்போருக்கே கிடைத்துள்ளன.

அமர்த்யா சேனுக்குப் பரிசு கிடைத்தபோது மூன்றாமுலகிலும் முக்கியமாக இந்தியாவிலும் அதுபற்றிப் பெருமகிழ்ச்சி காணப்பட்டது. பொருளியல் விருத்திக்கு ஒரு மனித மேம்பாட்டு வளர்ச்சிப் பரிமாணத்தை வழங்கியமைக்காக அவர் மெச்சப்பட்டார். எனினும், முற்றிலும் முதலாளிய மறுப்பான மாற்றுப் பொருளியற் சிந்தனையாளர் எவரும் இதுவரை நொபெல் பரிசு பெறவில்லை.

பராக் ஒபாமா, ஹென்றி கிசிஞ்சர், பல்வேறு இஸ்ரேலியப் பிரதமர்கள் எனப் பாரிய மனித குல விரோதக் குற்றங்களை இழைத்தோரையும் ஆபிரிக்கர்களை மனிதராகவே மதிக்காத அல்பேர்ட்

ஷுவைற்ஸர் போன்றோரையும் இவ் விருது அலங்கரித்திருக்கிறது.

இம்முறை விருதுக்குத் தகுதியுடையோராகச் சொல்லப்படுவோர் துனிசியாவில் ஜனநாயகம் தழைப்பதற்குப் பாடுபட்டவர்கள் என்பது எவ்வளவு பொருந்தும் என இப்போதைய துனிசிய நிலவரங்கள் விளக்கும்.

துனிசியாவில் 'அவசரகாலச் சட்டம்' இன்னமும் நடைமுறையில் இருக்கிறது. கூட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் பங்குபற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்போதைய ஜனாதிபதியானவர் 'அரபு வசந்த' எழுச்சியாற் பதவியிழந்த பென் அலியின் அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராகவும் வெளியுறவு அமைச்சராகவும் இருந்தவர்.

துனிசியாவில் இன்றும் பாரிய கட்டுப்பாட்டுகளுடன் கூடிய ஆட்சியே உள்ளது. 2011இல் சர்வாதிகாரி பென் அலியைத் தூக்கி எறிந்த பின்னரும், ஆட்சியாளர்களும் நிர்வாகிகளும் மாறவில்லை. இப்போதும் மோசமான சித்திரவதைகள் அரங்கேறும் நாடாகத் துனிசியா இருப்பதை மனித உரிமை ஆர்வலர்கள் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார்கள்.

2011க்குப் பின் துனிசியாவில் வறுமை 30சதவீதம் அதிகரித்துள்ளது, 40 சதவீதம்  இளைஞர்களுக்கு வேலை இல்லை. உழைப்பாற்றலுடையோரில் 20சதவீதமானோர் வேலையின்றித் திண்டாடுகிறார்கள். வேலை உள்ளவர்களும் வறுமையைச் சமாளிக்கப் போதுமான மிகக் குறைந்த ஊதியங்களையே பெறுகிறார்கள்.

 

'மல்லிகைப் புரட்சி' நடந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் மக்களுக்கான அடிப்படை உரிமைகளோ அத்தியாவசிய வாழ்வாதார உதவிகளோ வழங்கப்படவில்லை.

சில மாதங்களுக்கு முன், மல்லிகைப் புரட்சியில் முக்கிய பங்களித்தவரும் செயற்பாட்டளருமான யசீர் அயாரி என்பவருக்குத் துனிசிய நீதிமன்றம் ஆறு மாதச் சிறை விதித்துள்ளது. அவருடைய குற்றம்: இராணுவத்திலும் பாதுகாப்பு அமைச்சிலும் நடந்த ஊழல்களையும் பெருந்தொகைப் பணக் கையாடல்களையும் அம்பலப்படுத்தியமையாகும்.

அவ்வாறே துனிசியாவின் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் மிகாலோ, ஜனாதிபதியை ஏளனஞ் செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பென் அலியின் ஆட்சியின் போது நிதி மோசடிகளிலும் ஊழலிலும் ஈடுபட்டவர்களை மன்னித்தற்கான சட்ட ஆணையை நாடாளுமன்றம் நிறைவேற்றியிருக்கிறது. மக்கள் அதற்கெதிராக வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். அவ்வாறான போராட்டங்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் குற்றமாக்கப்பட்டு மோசமாக அடக்கப்படுகின்றன. 

இந் நிலைவரத்தையே துனிசியாவின் ஜனநாயக மிளிர்வு என்று நொபெல் பரிசுக் குழு சொல்கிறது. அவர்களது ஜனநாயகத்தின் யோக்கியம் அவ்வளவே.

பென் அலியைத் துரத்தி 'ஜனநாயகத்தை துளிர்ப்பித்தவர்கட்கு' நொபெல் பரிசு வழங்கும் இவ்வேளை, அப் புரட்சிக்கு முக்கிய தூண்டுதலாயிருந்ததான பென் அலிக்கும் அமெரிக்க அரசுக்குமிருந்த இரகசிய உறவை வெளிப்படுத்த விக்கிலீக்ஸ் தகவல்களை வழங்கிய செல்சியா மனிங் இன்னமும் அமெரிக்கச் சிறையொன்றில் வாடுகிறார்.

வட ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் அரபு வசந்தம் நிகழ்ந்த நாடுகளில் மேற்குலகு சார்பான ஆட்சியைக் கொண்டிருக்கும் நாடு துனிசியா. இன்று மத்திய கிழக்கில் அமெரிக்கத் தலைமையிலான மேற்குலகு சந்திக்கும் தோல்வி வெளிப்படையானது.

2011இன் தொடக்கத்தில் அரபு வசந்தம் தன்னெழுச்சியாக நிகழ்ந்த நாடுகளில் அமெரிக்காவின் அதி முக்கிய 'கூட்டாளிகள்'; மூவர் நெருக்கடிக்குட்பட்டனர்;;;. முதலாமவர் துனிசியாவின் பென் அலி: அவர் துனிசிய மக்கள் எழுச்சியால் நாட்டை விட்டு ஓட நேர்ந்தது. துனிசிய எழுச்சி அலை எகிப்துக்கு தொற்றியதால் முபாரக் பதவிவிலக நேர்ந்தது. தனது கூட்டாளியைக் காப்பதை விட எகிப்தில் தனது நலன்களை தொடர்ந்து நிலை நிறுத்துவது அமெரிக்காவுக்கு மட்டுமன்றி இஸ்ரேலுக்கும் தேவையாயிருந்தது. எனவே அமெரிக்கா, முபாரக்கைக் கைகழுவியது. மூன்றாவதாக, லெபனானின் சாட் ஹரீரியைப் நாடாளுமன்றம் பதவி விலக்கியது.

இவ்வாறான மக்கள் போராட்ட வெற்றிகள், வட ஆபிரிக்காவினதும் மத்திய கிழக்கினதும் ஏனைய நாடுகளதும் மக்களுக்குத் தமது உரிமைகட்காகவும் விடுதலைக்காகவும் போராடும் ஊக்கத்தைக் கொடுத்தது. அதனால், யெமென், பாஹ்ரேன், ஜோர்டன், சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலும் மக்கள் போராட்டங்கள் நிகழ்ந்தன. அவை, ஈரான், சிரியா, ஹிஸ்புல்லா, ஹமாஸ் என்பவற்றைக் கொண்ட ஓர் அமெரிக்க எதிர்ப்பு இணைவுக்குப் (axis of resistance)  வலுவான ஓர் அரசியற் தளத்தை வழங்கின. வலுச்சண்டை இணைவாக (axis of aggression) உள்ள அமெரிக்காவும் மேற்குலகும் அதைப் பெரும் ஆபத்தாக உணர்ந்து மக்கள் எழுச்சிகட்கெதிரான எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளைத் தொடங்கின.

எகிப்திலும் துனிசியாவிலும் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மக்கள் எழுச்சிகளால் நிலைகுலைந்த அமெரிக்கா, அவற்றைத் தனது தேவைகட்கு ஏற்பத் திசைமாற்ற விரும்பியது. அதேவேளை, அவற்றையொத்த மக்கள் எழுச்சிகளைத் தனக்கு உவப்பில்லாத ஆட்சிகளின் மீது ஏவியது. அவை, அரபுலக எழுச்சியின் ஒரு பகுதியாகக் காட்டப்பட்டன. முதலில் அதற்குப் பலியான நாடு லிபியா. இப்போது பலியாகும் நாடு சிரியா. எனினும் இன்றைய சிரிய நிலைவரம் மேற்குலகுக்குச் சார்பாக இல்லை.

இம்முறை வழங்கப்பட்ட சமாதானத்துக்கான நொபெல் பரிசை இப் பின்புலத்தில் நோக்க வேண்டும். இன்று மேற்குலகுக்கு ஒரு வெற்றிக் கதை வேண்டும். அந்த வெற்றிக் கதை தங்களுக்குச் சார்பான வெற்றிக் கதையாகவும் ஜனநாயகத்தின் அடிப்படையாகவும் வேண்டும். எனவேதான் துனிசியாவின் இந் நால்வர் குழு தெரிவாகியுள்ளது.

நொபெல் பரிசுக் குழு சொல்லும் ஜனநாயகம் துனிசியாவில் மலரவில்லை. துனிசிய மக்கள் தங்கள் உரிமைகளுக்காக இன்னமும் வீதிகளிற் போராடுகிறார்கள். கடந்த பல ஆண்டுகளைப் போலவே அல்பிரெட் நொபெலின் விருப்பங்கட்கு முரணாக இம் முறையும் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அது பரிசின் நம்பகத்தன்மையையும் செயற்றிறனையும் பற்றிய ஆழமான கேள்விகளை எழுப்புகிறது. கடந்தாண்டு இப் பரிசை வென்ற மலாலாவும் சத்தியாத்திரியும் சமாதானத்துக்காக எதையும் செய்யவில்லை. தனது அறக்கட்டளையில் இருந்த பெருந்தொகையான பணத்தை மோசடி செய்ததாகச் சத்தியாத்திரி நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் விருது பெற்ற முகமட் யூனிஸும் நிதிக்கையாடல் செய்ததாக நிரூபிக்கப்பட்டது. இவை நொபெல் பரிசின் நம்பகத்தன்மையை மேலுஞ் சிதைத்துள்ளன.  

அல்பிரெட் நொபெலுக்கு இரண்டாவது இரங்கலை எழுதுவற்கான நேரமிது. 

துனீசிய மக்களால் 'மக்கள் எழுச்சியின் தீச்சுவாலை' என்று அறியப்பட்ட புகழ்பெற்ற கவிதை இப்போது மீண்டும் துனிசிய வீதிகளிற் பாடப்படுகிறது. இக் கவிதை இருபத்தைந்து வயதில் இறந்த அபு அல்-கஸிம் அல்-ஷமி என்ற ஒரு துனிசியக் கவிஞன் எழுதியது. அது அல்பிரெட் நொபெலுக்கு எழுதப்படவுள்ள இரங்கலுக்குப் பொருத்தமான முன்னுரையாயிருக்கும்.

அக் கவிதை இதுதான்:

மக்கள் வாழ்வதற்கு உறுதி பூண்டால்
ஊழ் சாதகமாக எதிர்வினையாற்ற விதிக்கப்பட்டதாகும்,
இரவு கலைவதற்கு விதிக்கப்பட்டதாகும்,
விலங்குகள் உடைக்கப்படுவது திண்ணம்.
வாழ்வின் மீதான நேசத்தைப் பற்றிக்கொள்ளாதவன்,
அதன் வளிமண்டலத்தில் ஆவியாகி இல்லாது போவான்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X