2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சாண் ஏற முழம் சறுக்கல்

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

இலங்கையின் வடகடல் பகுதிகளில் தொடரும் இந்திய இழுவைப் படகுகளின் எல்லை தாண்டிய மீன் பிடிகளால், வடபகுதி கடல் தொழிலாளர்கள் தினமும் பெரும் இழப்புகளையும் அழிவுகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், இரண்டு கோடியே 13 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் நட்டத்தை நெடுந்தீவு கடற்றொழிலாளர்களுக்கு, இந்தியக் கடற்றொழிலாளர்கள் ஏற்படுத்தி உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

“நிம்மதியாக  வாழவேண்டும்; எங்களுக்காக உழைக்க வேண்டும் என, பல இலட்சம் ரூபாய்க்குக் கடன்பட்டு, கடற்றொழில்களை ஆரம்பித்து, இன்று நாங்கள் கடனாளிகளாகவே இருக்கின்றோம். வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. பரம்பரை பரம்பரையாகக் கடற்றொழிலையே செய்து, அதன் மூலம் வருமானமீட்டி வாழ்ந்த நாங்கள், இன்று இந்தத் தொழில்களை கைவிட்டு, அரபு நாடுகளுக்கும் கொழும்புக்கும் வேலை தேடிச்செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது” எனக் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டுக்கு முன்னைய காலத்தில்,   எவரிடமும் கையேந்தாதும் எவரது வருமானத்தையும் எதிர்பார்க்காதும் செல்வந்தர்களாக வாழ்ந்த கடற்றொழிலாளர்களின் வாழ்வு,  இன்று கேள்விக்குறியான நிலையில் காணப்படுகின்றது.

 ஆழிப்பேரலை அனர்த்தத்தால், யுத்தத்தால் எனத் தொடர்ச்சியாக  அழிவுகளையும் இழப்புகளையும் எதிர்கொண்டு, மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையை  நோக்கிப் பயணிக்கத் தொடங்கிய மீனவர்கள், இன்று தங்களுடைய வாழ்வாதாரத்தொழிலை சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் செய்யமுடியாத நிலையில் தத்தளிக்கிறார்கள்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் ஒருபுறம்; வெளிமாவட்ட மீனவர்களின் தடைசெய்யப்பட்ட தொழில்முறைகள் மறுபுறம் என, இவர்களுடைய தொழில்கள் கேள்விக்குறியாக்கியுள்ளன.

இது தொடர்பில், மீனவ அமைப்புகள் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் வாழ்க்கை வேகமாக அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்து வரும் சுமார் 4,600க்கும் மேற்பட்ட கடற்றொழில் குடும்பங்கள், மாவட்டத்தின் 73 கிலோமீற்றர் நீளமான கடற்பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட  படகுகளை வைத்தே கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றன.  இவர்களது தொழில் நடவடிக்கைகள், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்கள், தடைசெய்யப்பட்ட தொழில் நடவடிக்கைகள், வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறிய தொழில்கள் என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அதிக கடல்வளத்தைக் கொண்ட கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, நாயாறு, சாலை ஆகிய பகுதிகளில், வெளிமாவட்ட மீனவர்களின் தொழில்களால், தமது தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அரசு தமது வாழ்வாதாரத் தொழில்களுக்கு வழிவகைகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என, இப்பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1991களிலும்  அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் அதாவது 2000ஆம் ஆண்டு வரைக்கும், தொடர்ச்சியான யுத்தப் பாதிப்புகளைக்கொண்டு தங்களுடைய தொழில்களைச் செய்யமுடியாத நிலையில் இருந்ததோடு 2002ஆம் ஆண்டுக்குப்பின்னர் ஏற்பட்ட ஓர் இடைவெளியில் தங்களுடைய தொழிலை மேற்கொண்டிருந்தனர்.

இதன் பின்னர், 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை  அனர்த்தத்தின் காரணமாக, சகல தொழில் வளங்களையும் இழந்து, தங்களுடைய உறவுகளையும் இழந்து நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டனர். தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

 மீள்குடியேறிய இந்தக்கடற்றொழில் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்காக அவ்வப்போது அரசும் அரச சார்பற்ற நிறுவனங்களும் வளங்கிய ஓரிரு வாழ்வாதார உதவிகளோடு வங்கிகளிலும் உறவினர் நண்பர்களிடமும்  கடன்களைப் பெற்று, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தொழில் உபகரணங்களை கொள்வனவு செய்து, தங்களுடைய தொழில்களை மேற்கொண்டனர்.

முல்லைத்தீவு கரையோரப்பகுதிகளில் தடைசெய்யப்பட்ட தொழில்முறைகள் அதாவது, நிபந்தனைகளை மீறிய அட்டைத் தொழில், வெளிச்சம் பாச்சுதல், சுருக்கு வலை பயன்படுத்தல், உழவு இயந்திரங்களைக் கொண்டு கரைவலை வளைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேறகொள்ளப்படுவதால் ஏராளமான கடற்றொழிலாளர்கள் தொழில் செய்யமுடியாதுள்ளனர்.

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கடன்களைப் பெற்று, கடற்றொழில் உபகரணங்களைக் கொள்வனவு செய்திருக்கின்றபோதும் உரிய முறையில் தொழில்களைச் செய்ய முடியாத சூழல் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், கடன்களை செலுத்தவும் குடும்பங்களினது வாழ்வாதாரத்துக்காகவும் வேறு தொழில்களை நாடிச்செல்கின்ற கட்டாயம் உருவாக்கப்படுகின்றது. 

 தங்களது வாழ்வாதாரத் தொழிலான கடற்றொழிலை நிம்மதியாகச் செய்வதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தித்தருமாறு, தொடர்ந்து  மத்திய, மாகாண அரசுகளிடம் கோரிக்கையை விடுத்துவருகின்றபோதும் இதுவரை அதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், நெடுந்தீவில் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதற்கு அப்பால், இதற்கு முன்னரும் பலகோடி ரூபாய் பெறுமதியான தொழில் உபகரணங்கள் அழிக்கப்பட்டதுடன் படகுகளும் சேதமாக்கப்பட்டன; மீனவர்களும் தாக்கப்பபட்டனர்.

அத்துமீறி எல்லை தாண்டி, சட்ட விரோத தொழிலில் ஈடுபட்ட நிலையில், இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 200க்கும் மேற்பட்ட படகுகள் புநகரி, இலவங்குடா, காரைநகர்  ஆகிய இடங்களில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

காரைநகர் கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள  இந்திய மீன்பிடிப் படகுகளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாகப் பாரவையிட்ட போது, இந்தியக் கடற்றொழிலாளர்களால்  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தமக்கு, குறித்த படகுகளை விற்பனை செய்து கிடைக்கின்ற பணத்தை வழங்குமாறு, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கோரிக்கை முன்வைத்திருந்தார்கள்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாக விடுவிக்கப்பட்ட போதிலும், இந்தியக் கடற்றொழிலாளர்களால் எடுத்துச் செல்லாது, கைவிடப்பட்ட நிலையில் சுமார் 138 படகுகளும் 2018ஆம் ஆண்டு இலங்கையில் புதிய சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட சுமார் 70 படகுகளும் இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய இழுவைப்படகுகளால், வடக்கில் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு மேற்படி பறிமுதல் செய்யப்பட்ட படகுகளைக் கொண்டோ, அரசின் உதவிகள் மூலமோ இழப்பீடுகளைப் பெற்றுக் கொடுக்க, விரைவாக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

 முப்பது வருடகாலப் போரால் வீழ்ச்சி கண்டபோதும், தற்போது அவற்றில் முன்னேற்றத்துக்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டு, மீனவக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுவே சகல தரப்பினரதும் எதிர்பார்ப்பாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X