2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தடுப்பூசி: ஆயிரம் தடுமாற்றங்கள்

Editorial   / 2021 செப்டெம்பர் 04 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

கொரோனா, இந்த உலகை முழுமையாக ஆட்கொண்டு ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை இந்தக் கொடிய தொற்றை முழுமையாக இல்லாதொழிக்க எவ்வித மருந்துகளும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறுவதை விட,  அதற்காக எடுக்கபட்ட முயற்சிகள் அனைத்தும்  கொரோனா வைரஸூக்கு முன்னால் தோற்றுவிடுகின்றன என்பதே உண்மை.

இந்தத் தோல்விகள் அனைத்தும்   21ஆம் நூற்றாண்டின்  தொழில்நுட்பம், அறிவியல்சார் சூழ் உலகில் வாழ்ந்து  கொண்டிருக்கும் எம்மை, முழுமையாக முடக்காமால்,  கடந்த வாரம் கூட பாம்பின் விஷத்தைப் பயன்படுத்தி கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்ப டுகின்றமையானது,  இன்று இல்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் கண்டிப்பாக இந்தக் கொரோனாவை ஒழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையைத் துளிர வைத்துள்ளன.

எனவே, இவ்வாறான மருந்துகளை கண்டுபிடிக்கும் வரை இந்தக் கொரோனாவை தற்காலிகமாகவேனும் மனிதன்  ஓரளவுக்காகவாவது மிரட்டி வைக்க வேண்டும் என்பதற்காக, பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, இன்று முழு உலகமே கொரோனா தடுப்பூசியை நாடி ஓடத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் தான் இலங்கையிலும் கொரோனா தடுப்பூசியின் அவசியம் உணரப்பட்டு, சிறிது காலம் தாமதித்தேனும், கடந்தாண்டு ஜனவரி மாதம் இந்தியாவிடம் தடுப்பூசிக்கான உதவியை கோரிய போது, சிறிதும் தாமதிக்காமல் பக்கத்து வீடு தானே என்ற நினைப்பில்  இந்தியாவின் தயாரிப்பான  அஸ்ட்ரா செனிகா ஒன்பதரை இலட்சம் தடுப்பூசிகளை முதன் முதல்  இலங்கைக்கு வழங்கி இந்தியா உதவிக்கரம் நீட்டியது.

தமக்கு தொடர்ச்சியாக இந்தியா உதவிக்கரம் நீட்டும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த எமக்கு, திடீரென  இந்தியாவில் தொற்றின் நிலை அதிகரித்ததால், ஏனைய நாடுகளுக்கு எஸ்ட்ரா செனிகா அனுப்புவதை இந்தியா இடைநிறுத்தியதையடுத்து, இலங்கை பாரிய சிக்கலுக்கு முகம்கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதனால் முதற்கட்டமாக முதலாவது டோஸை செலுத்திக்கொண்ட 3இலட்சத்துக்கு அதிகமானவர்களுக்கு இரண்டாவது டோஸ்க்காக  6 மாதங்கள் காத்திருந்து மிக அண்மையிலேயே ஜப்பானின் உதவியுடன்  இரண்டாவது டோஸை செலுத்திக்கொண்டனர்.

ஜப்பானைத்  தொடர்ந்து இலங்கையின் உற்ற நண்பனான சீனா, தடுப்பூசி விடயத்தில் பாரிய ஒத்துழைப்பை வழங்கி வருவதுடன், இதுவரை 22 மில்லியன் சினோஃபாம் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்கியுள்ளது. சீனா மாத்திரமின்றி அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளும் அந்தந்த நாடுகளின் தயாரிப்பிலான தடுப்பூசிகளை இலங்கை வாரி வழங்கி வருவதால் தான் இந்த தடுப்பூசி செலுத்தும் செயற்பாட்டில் சர்வதேச அளவில் இலங்கை முன்னணியில் இருப்பது இலங்கையர்களான எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.

மேலும் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் இராணுவத்தினரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், விரைவாக இப்பணிகள் நிறைவடைந்து வருவதற்கான மற்றுமொரு காரணமாகும்.

இதற்கமைய, தடுப்பூசி வழங்கும் முன்னுரிமைப் பட்டியலில் சுகாதாரப்பிரிவு, முப்படையினரை அடுத்து 60 வயதினரே காணப்படும் நிலையில், இதுவரை 60 வயதுக்கு மேற்பட்ட  55 சதவீதமானவர்களுக்கு இரண்டு டோஸ்களும் ஏற்றப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  அத்துடன், 60 வயதுக்கு மேற்பட்டு தடுப்பூசி நிலையத்துக்கு செல்வதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளவர்கள், நீண்ட நாள் நோய்வாய்பட்டவர்களுக்கு அவர்களது இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் மகத்தான பணியை இணுவத்தினரின் உதவியுடன் சுகாதார பிரிவு முன்னெடுத்துள்ளமை வரவேற்கத் தக்க விடயமாகும். குறிப்பாக இத்திட்டம் பெருந்தோட்ட பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவது அதிலும் சிறப்பான விடயமாகும்.

மேலும்  20-30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது மிக மிக அத்தியாவசிமானதென உணரப்பட்டு, குறித்த வயதினருக்கு பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஹம்பாந்தோட்டையில் நேற்று முன்தினம் (2) ஆரம்பித்து வைக்கப்பட்டதுள்ளதுடன், எதிர்வரும் நாள்களில் இது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 இதுவரை நேற்று முன்தினம் (2) வரையான தரவுகளுக்கு அமைய, ஏதாவதொரு தடுப்பூசியின் முதலாவது டோஸ் 1,25,64,206 பேருக்கும்  இரண்டாவது டோஸ் 85,82,094 பேருக்கும் செலுத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3 இலட்சம் பேர் இதுவரை எவ்வித தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொள்ளவில்லை என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது..

இவ்வாறான நிலையில்,  பல நாடுகள் தடுப்பூசியை வழங்கி இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டினாலும் எப்போதும் எதிர்கட்சி குற்றஞ்சுமத்துவது போல் தடுப்பூசி விடயத்தில் உரிய முகாமைத்துவம் இல்லை என்பது அடிக்கடி அரசாங்கம் மற்றும் சுகாதார தரப்பினரின் செயற்பாடுகளும் ஆங்காங்கே பதிவாகும் பல சம்பவங்களும்  உணர்த்தி வருகின்றன.

  “கிடைக்கும் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது உங்கள் உயிர்களைப் பாதுகாக்கும் எனவே, இன்றைய காலத்தில் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதை உங்கள் கடமைகளில் பிரதான ஒன்றாக மாற்றிக்கொள்ளுங்கள்”  என அனைத்து ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் செய்யப்பட்டு  வரும் விழிப்புணர்வு மற்றும் உயிர்வாழ வேண்டும் என்ற ஆசையில் இலங்கையர்கள் ஒவ்வொருவரும் இன்று தடுப்பூசியின் முக்கியதுவத்தை உணர்ந்து தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளச் சென்றாலும் முதலில் கூறிய முகாமைத்துமில்லாத பிரச்சினை காரணமாக பல துரதிஸ்ட சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.

குறிப்பாக ஒரு பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல்,  வேறு பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு முன்னரிமையளித்து தடுப்பூசி ஏற்றும் செயற்பாடும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்குச் சிறந்த உதாரணம் சில மாதங்களுக்கு முன்னர், அஸ்ட்ராசெனிகா இரண்டாம் டோஸை செலுத்திக்கொள்ள மேல் மாகாணத்திலுள்ள பலர் காலிக்கு சென்று ஊடகங்களிடம் அகப்பட்டுக்கொண்ட நிலையில், குறித்த சுகாதாரப் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி இடமாற்றப்பட்டிருந்தார்.

அதேபோல் நாட்டின் பல இடங்களிலும் அப்பிரதேசத்தைச் சாராதவர்கள் தடுப்பூசி ஏற்றிச் செல்லப்படும் காட்சிகள் தினமும் காணக் கூடியதாகவுள்ளதுடன், பல இடங்களில் கைகலப்புகளும் ஏற்பட்டுள்ளன.

அத்துடன், மலையத்திலும் ஆரம்பத்தில் தடுப்பூசி தொடர்பான எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல் இருந்த அம்மக்கள், முதலாவது அலை, இரண்டாவது அலையின் பின்னர்,  இதன் முக்கியதுவத்தை தாமாகவே உணர்ந்து, தம்மை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தச் செல்வதில் பெரும் ஈடுபாடு காட்டுகின்றனர்.

இவர்களின் ஈடுபாட்டை அடை மழையிலும் குடைகளைப் பிடித்துக்கொண்டு பல மைல் தூரம் கடந்துச் சென்று பல மணி நேரமாக கால்கடுக்க தடுப்பூசிக்காக காத்திருக்கின்றமையை பார்க்கும் போது புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், அங்கு பல குளறுபடிகள் ஏற்படுகின்றன. ஏதாவது ஒரு சுகாதார வைத்திய அதிகார பிரிவை மையபடுத்தும் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ளவர்களும் ஒரே நாளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

இதனால் வீண் சிரமத்தை சுகாதாரப் பிரிவினரும் எதிர்கொள்ளும் அதேநேரம், அதிக சனக்கூட்டத்தால் தடுப்பூசி ஏற்றச்சென்றவர்கள், தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்தும் அதிகரித்துள்ளது.

அத்துடன், இரண்டாவது தடுப்பூசிக்கான திகதி அறிவிக்கப்பட்டவர்கள் குறித்த தினத்தில் சென்றால், அந்த தடுப்பூசி மத்திய நிலையத்துக்கு போதுமான தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என திருப்பி அனுப்பப்படும் அவலங்களும் கடந்த வாரங்களில் மலையகத்தின் பல இடங்களில் பதிவாகியிருந்தன.

இது மாத்திரமா? இன்று கொரோனாவிலிருந்து பாதுகாக்க வேண்டிய முக்கிய தரப்பினரான கர்ப்பிணிகள் காணப்படும் அதேவேளை, அவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில், கடும் குளிர் , மழைக்கு மத்தியிலும் சுமார் 400க்கும் மேற்பட்ட கரப்பிணிகள் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளும் ஆர்வத்தில் சென்ற வேளை, கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி வைத்தியசாலைக்கு குறிப்பிட்ட தினத்தில் கிடைக்கவில்லை என, வைத்தியசாலை தரப்பால் அறிவிக்கப்பட்டதால் அங்கு பதற்ற நிலையொன்று ஏற்பட்டது.

அத்துடன் மலையகத்தில் சில பிரதேசங்களிலுள்ளவர்களுக்கு இதுவரை முதலாவது தடுப்பூசி கூட ஏற்றப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

மலையகத்தில் மாத்திரமல்ல நாட்டின் பல இடங்களிலும் இந்த தடுப்பூசி குளறுபடிகள் ஆங்காங்கே பதிவாகி வருகின்றன. இலங்கையில் இதுவரை 12 வயது தொடக்கம் 18 வரையான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு சுகாதார தரப்பினர் பரிந்துரைக்காத நிலையில், அண்மையில் புத்தளம் பிரதேசத்தில் வைத்தியர் ஒருவரின் 12 வயது மகளுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டமை பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தக் குளறுபடிகளுக்கு எல்லாம் மேலாக இந்த வாரம் வெலிகம பிரதேசத்தில் தடுப்பூசி பெற்றுக்கொள்ள சென்ற மக்களை பொலிஸ் அதிகாரியொருவர் தடியால் அடித்து துரத்திய சம்பவம் அனைவரையும் ஆத்திரமூட்டச் செய்துள்ளது.

எனவே, உலக நாடுகளின் உதவியுடன் இலங்கைக்குக் கிடைத்து வரும் தடுப்பூசியின் முழுப் பயனை இலங்கையர்கள் பெற வேண்டுமாயின் இதற்கான முழுமையான உரிய திட்டமிடல்கள், முகாமைத்துவம்  அவசியமென்பது வலியுறுத்தப்படுகின்றது.

இதேவேளை, தடுப்பூசி செலுத்திக்கொண்ட எவருக்கும் தொற்று ஏற்படாது என எந்தவொரு வைத்திய நிபுணரோ, உலக சுகாதார ஸ்தாபனமோ இதுவரை உறுதியளிக்கவில்லை. மாறாக, கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் தடுப்பூசிகள் பெரும் பங்காற்றுவதுடன், தொற்று ஏற்பட்டாலும் உயிர் அச்சுறுத்தல் ஏற்படாதென தெரிவித்துள்ளனர்.

எனவே,  வகைகளைத் தேடி அலையாமல், அவை கிடைக்கும் வரை காத்திருக்காமல், எந்தத் தடுப்பூசி எமக்கு கிடைக்கின்றதோ, அது சிறந்த தடுப்பூசி என நினைத்து, விரைவாக தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது அவசியமாகும். ஏனெனில்ஈ இன்றைய நிலையில், தடுப்பூசி தான் ஆகக் குறைந்த பாதுகாப்பு கவசம் என்பதை உணர்ந்து, எம்மையும் எம்மைச் சார்ந்த உறவுகளையும் பாதுகாப்போமாக!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X