Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Johnsan Bastiampillai / 2021 ஜனவரி 21 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஐயூப்
இலங்கை அரசாங்கம், சிறுபான்மை மக்களைச் சீண்டிக் கொண்டே இருக்கும் நிலையில், இந்த நாட்டில் நிலையான சமாதானம் எப்போதும் உருவாகாது என்ற நிலைப்பாட்டுக்கு ஒருவர் வந்தாலும், அது நியாயமற்ற முடிவு எனக் கூற முடியாது.
பதவிக்கு வந்தவுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு மாறாக, எதையும் செய்ய முடியாது என்று கூறினார். அதற்கு அடுத்து, அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கல் முறையொன்று வேண்டும் எனத் தமிழ்த் தலைவர்கள் கோரிக்கை விடுக்கும் நிலையில், மாகாண சபைகளை இரத்துச் செய்ய வேண்டும் என, மாகாண சபைகளுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் கூறித் திரிந்தார்.
பின்னர், கொவிட்- 19 நோயால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என, முழு உலகமுமே கூறும் போது, இந்நாட்டு முஸ்லிம்களைச் சீண்டுவதற்காக, ஜனாஸாக்களைத் தகனம் செய்வதற்கு மட்டுமே அனுமதிப்போம் என, அரசாங்கம் விடாப்பிடியாக இருக்கிறது.
அதையடுத்து, போரில் இறந்தோரை நினைவு கூர்வதற்காக, யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த நினைவுத் தூபியை, கடந்த எட்டாம் திகதி இடித்துத் தள்ளினர்.
இந்தத் தூபியை, யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணராஜாவே அகற்றினார் என்றும் வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான சமாதானத்துக்கு அத்தூபி இடையூறாக இருந்ததாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியிருந்தார்.
இது உண்மையா? எவரினதும் தூண்டுதலின்றியே, உப வேந்தர் தூபியை இடித்துத் தள்ள உத்தரவிட்டார் என்பதைப் போலவும் தாம் அதற்குப் பொறுப்பல்ல என்பதைப் போலவும், அவரது கூற்று அமைந்துள்ளது.
தூபியை இடித்தமை நியாயமானது, சரியானது எனப் பேராசிரியர் அமரதுங்க கருதுவதாக இருந்தால், நாம் அதற்குப் பொறுப்பல்ல என்பதைப் போல் ஏன் கருத்து வெளியிட வேண்டும்? ஏன், அச்செயலை உபவேந்தரின் தலையில் போட வேண்டும்? இது மாணவர்களையும் உபவேந்தரையும் மோதவிடும் செயலாகும்.
அதேவேளை, தமது தேவைக்காக இந்த நினைவுச் சின்னத்தை இடிக்க உத்தரவிடவில்லை என்றும், தமக்கு மேலிடத்திலிருந்து கிடைத்த உத்தரவின் பேரிலேயே நாம் செயற்பட்டதாகவும் உபவேந்தர், ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கூறியிருந்தார்.
ஆனால், அந்த உத்தரவை விடுத்தவர் யார் என்பதை வெளியிடத் தாம் தயாராக இல்லை என்றும் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா தெரிவித்திருந்தார். அந்த உத்தரவை, பல்கலைக்கழக ஆணைக்குழுவின் தலைவர் அறிந்திருக்கவில்லைப் போலும்.
இப்போது, அந்த நினைவுத் தூபி, அதே இடத்தில் மீண்டும் கட்டப்படும் என, உபவேந்தரே மாணவர்களிடம் தெரிவித்துள்ளார். அவ்வாறு கட்டுவதற்காக, அவரே கடந்த 11 ஆம் திகதி அடிக்கல்லை நாட்டினார். அதற்காகத் தமக்கு, மேலிடத்திலிருந்து அனுமதி கிடைத்திருப்பதாகவும் அதைத் தாம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிடம் தெரிவித்ததாகவும் அவர், மேற்படி ஆங்கிலப் பத்திரிகைக்குத் தெரிவித்து இருந்தார்.
தூபி புதிதாகக் கட்டப்பட்டாலும், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியாகவே இருக்கும். அவ்வாறாயின், அது பேராசிரியர் சம்பத் அமரதுங்கவின் கருத்துப்படி, வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான சமாதானத்துக்கு இடையூறாக அமையாதா?
நடைமுறையைப் பார்த்தால், தூபி நிலைத்து இருந்தமையா, உடைக்கப்பட்டமையா சமாதானத்துக்குக் குந்தகமாகியது என்பது விளங்கும். நினைவுத் துபி இடிக்கப்படாமல் இருந்தால், அது அதன் பாட்டில் இருந்திருக்கும். மக்களும் அவர்களது பாட்டில் இருந்திருப்பார்கள். ஆனால், அதை இடித்ததன் மூலம், இன முறுகலையும் இன வெறுப்பையும் தாம் புதிதாகத் தூண்டிவிட்டதை, அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சியில் இருக்கும் போது, வடக்கில் நினைவுச் சின்னங்கள், நினைவேந்தல்களை எதிர்க்கின்றன. எதிர்க்கட்சியில் இருக்கும் போது, அவற்றையும் அரசியல் இலாபத்துக்காகப் பாவித்தனர். 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார். அதன் பின்னர், தமிழ்ப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில், தமது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ, 2015 ஆம் ஆண்டு தோல்வி அடையாதிருந்தால், தமது அரசாங்கமும் திலீபன் நினைவேந்தலுக்கு அனுமதி வழங்கியிருக்கும் என்றும் தாம் படிப்படியாகவே அவற்றுக்கு இடமளித்து வந்ததாகவும் கூறியிருந்தார்.
நினைவுக் கூட்டங்களும் நினைவுத் தூபிகளும் ஒன்றல்ல; நினைவுக் கூட்டங்களின் போது, அரசியல்வாதிகள் இளைஞர்களை வன்செயலுக்கும் பிரிவினைவாதத்துக்கும் தள்ளும் வகையில் உரையாற்றலாம்; உரையாற்றுகிறார்கள். ஆனால், நினைவுத் தூபிகள் போன்ற சின்னங்கள் அவ்வாறான ஆபத்தை ஒரு போதும் ஏற்படுத்துவதில்லை. மக்களுக்காகத் தாம் சரி என ஏற்றுக் கொண்ட வழியில், பல அளப்பரிய தியாகங்களைச் செய்து, உயிர் நீத்தவர்களை, அதே மக்கள் நினைவு கூரவும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவுமே அவை அமைக்கப்படுகின்றன.
போருக்கு முன்னர், வடக்கு, கிழக்கு மக்களும் ஏனைய பகுதி மக்களும் ஓர் ஆயுத போராட்டத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மானசீகமாகப் பிளவுபட்டு இருந்தார்களா என்பது கேள்விக்குறியே.
ஆனால், 30 ஆண்டு காலமாகப் போரில் கொல்லப்படும் ஒவ்வோர் இராணுவ வீரனும் ஒவ்வொரு புலிப் போராளியும் வடக்கிலும் தெற்கிலும் வெவ்வேறு மனத் தாக்கங்களையே ஏற்படுத்தினர். 30 ஆண்டுகள் இவ்வாறு சென்றடைந்ததன் பின்னர், வடக்குக்கும் தெற்குக்கும் இடையே மானசீகமாக அதள பாதாளமொன்றே உருவாகிவிட்டது என்பதே உண்மை.
இந்த நிலையில், ஒரு சாரார் போரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களுக்காக அழுதனர்; ஒப்பாரி வைத்தனர்; நினைவுச் சின்னங்களை உருவாக்கினர்; நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தினர்.
அதேவேளை, மற்றொரு சாரார், புலிப் போராளிகளுக்காக அழுதனர்; ஒப்பாரி வைத்தனர்; நினைவுச் சின்னங்களை உருவாக்கினர்; நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தினர்.
போரில் இறந்த எல்லோருக்காகவும் கூட்டாக அழவோ, குறைந்த பட்சம் ‘மற்றையவரின்’ அழுகையைப் புரிந்து கொள்ளவோ, மனப்பக்குவம் எங்கும் காண்பதற்கு இல்லை.
இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் ஆற்றல், ஆட்சியாளர்களுக்கு இருக்க வேண்டும். நினைவுத் தூபிகள் போன்றவற்றால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நினைவுச் சின்னங்களை அமைத்து, போரில் இறந்தவர்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்துவதன் மூலம், அடுத்த தலைமுறையினரும் அதே போராட்ட வழிமுறைகளைக் கடைப்பிடிப்பார்கள் என்று வாதிட முடியாது. அதற்கு மக்கள் விடுதலை முன்னணி சிறந்த உதாரணமாகும்.
அம்முன்னணி ஒரு முறையல்ல, இரு முறை அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் தாங்கி, கிளர்ச்சி நடத்திய அமைப்பு. ஆனால், அவ்வமைப்பு தமது போராட்ட இலட்சியத்தைக் கைவிடாது, போராட்ட வடிவத்தை மாற்றிக் கொண்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள், பல முறை தாம் இனி ஒருபோதும் ஆயுதப் போரில் ஈடுபடுவதில்லை எனக் கூறியுள்ளனர். அவர்களது இரண்டாவது கிளர்ச்சி முடிவடைந்த 1989 ஆம் ஆண்டிலிருந்து, கடந்த 30 ஆண்டுகளாக, அதை நடைமுறையிலும் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடைந்து வந்த போதிலும், எப்போது தமது கட்சி ஆட்சிக்கு வரும் என்பதை நினைத்தும் பார்க்க முடியாத நிலையில் இருந்தும், அவர்கள் வன்முறை அரசியலுக்காக இளைஞர்களைத் தூண்டுவதில்லை.
ஆனால், அவர்களும் ஏப்ரல் மாதத்திலும் நவம்பர் மாதத்திலும் ஆயுதக் கிளர்ச்சிகளில் உயிர் நீத்த தமது சகாக்களைத் தான் நினைவு கூருகிறார்கள். அந்தக் கிளர்ச்சிகளில் தமது சகாக்கள் செய்த தியாகங்களையும் வீர தீரச் செயல்களையும் தான் புகழ்கிறார்கள்.
ஆயினும், வடக்கில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை அரசாங்கமோ, தென்பகுதி மக்களோ இதே கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை. புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மூலம், இன்னமும் அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற தென் பகுதி அரசியல்வாதிகளின் எண்ணம் அதற்கு ஒரு காரணமாகும்.
மற்றொரு பிரிவினைவாதப் போராட்டத்துக்குத் தாம் இளைய தலைமுறையினரை இட்டுச் செல்வதில்லை என்ற உத்தரவாதத்தைத் தமிழ்த் தலைவர்கள் வழங்கத் தவறியமை மற்றொரு காரணமாகும்.
அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியைப் போல், போராட்ட இலட்சியத்தை மாற்றாமல், போராட்ட வழிமுறையை மட்டுமே நாம் மாற்றினோம் என்றோ, நாம் இரண்டையும் மாற்றினோம் என்றோ கூற முடியாத இக்கட்டான நிலையில், தமிழ் அரசியலும் அமைந்துள்ளது.
35 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago