2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தொடர்பாடல் திறன், தீர்மானமெடுத்தல் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

S.Sekar   / 2021 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச.சேகர்

கொவிட்-19 தொற்றுப் பரவலினால் இலங்கையில் நாளாந்தம் சராசரியாக 150க்கும் மேலான மரணங்கள் பதிவாகும் நிலையில், ஒரு புறத்தில் நாட்டை முடக்குமாறு கோரிக்கைகள் சுகாதாரத் தரப்பிடமிருந்து வலுக்கும் நிலையில், மறு புறத்தில் பொருளாதாரத்தையும், நாட்கூலியை பெறும் தொழிலாளர்களின் வருமானத்தையும் கவனத்தில் கொண்டு, பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுத்துள்ள அரசாங்கத்தினால் அவ்வாறானதொரு பொது முடக்கத்துக்கு செல்லாமல், படிப்படியாக கட்டுப்பாடுகளை விதித்து, இயலுமானவரை நாட்டை திறந்த நிலையில் நடத்திச் செல்ல முற்படுவதை காண முடிகின்றது. இதில் இரவு நேர தனிமைப்படுத்தல் ஊரடங்கும் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்கையில், இந்த நாட்டை முடக்குவது மற்றும் திறந்து வைத்திருப்பது தொடர்பில் அரச தரப்பினுள்ளேயும் முரணான கருத்துகள் வெளிவந்த வண்ணமுள்ளன. குறிப்பாக அரசாங்கத்தின் பின்வரிசை எம்பிக்கள் கூட தெரிவிப்பது யாதெனில் நாட்டை முடக்கி அப்பாவி பொது மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டிய தருணம் இது என.

இந்த தீர்மானத்தை மேற்கொள்வது நாட்டின் ஜனாதிபதி. நாட்டை முடக்குவதா, திறந்திருப்பதா எனும் தீர்மானத்தை மேற்கொண்டு, நாட்டு மக்களுக்கு தாம் அவ்வாறானதொரு தீர்மானத்தை ஏன் மேற்கொண்டேன் எனத் தெரிவிக்க வேண்டியது அவரின் கடமையாகும்.

மாறாக, அரசாங்கத்திலிருந்து கொண்டு கொவிட் கட்டுப்பாட்டு செயலணியினர் காலையில் ஒரு அறிவித்தலையும், மாலையில் அரசாங்கத்தின் பின்வரிசை மந்திரிகள் மற்றுமொரு அறிவித்தலையும் வெளியிடுவது என்பது சிறந்த தொடர்பாடல் திறனை வெளிப்படுத்துவதாக அமைந்துவிடவில்லை.

உலகில் கொவிட் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடு எனும் பாராட்டுதலைப் பெற்ற நாடாக நியுசிலாந்து திகழ்கின்றது. அண்மையில் அந்நாட்டின் பிரதமர் ஜசிந்தா ஆர்டன் சுமார் இரண்டரை நிமிடங்களினுள் நாம் இரண்டு ஆண்டுகளாக நாட்டில் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஒரே மூச்சில் முழு நாட்டுக்கும் வெளிப்படுத்தியிருந்த ஒரு காணொளியை சமூக வலைத்தளங்களில் பரவலாக காண முடிந்ததுடன், நம் நாட்டின் தலைவர் அறுபத்தொன்பது நிமிடங்களாக நாமே சிறப்பாகச் செய்தோம் என்பதை மறைமுகமாக இரவு 8 மணிக்கு நேரலையாக வந்து, பகல் போன்று காட்சியளித்த பகுதியொன்றிலிருந்து தெரிவித்ததும் இதே காலப்பகுதியிலாகும்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தமக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தாம் மேற்கொள்ளும் தீர்மானங்களை நாட்டிக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதியைச் சேரும். இவருக்கு தொடர்பாடல் ஆலோசகர்களாக, ஊடக ஆலோசகர்களாக, ஊடக பேச்சாளர்களாக நியமனங்கள் பல அண்மையில் வழங்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாறானதொரு ஆலோசனையை இவருக்கு வழங்காமல் இருப்பார்களா என்பதும் ஆச்சரியமூட்டுவதாக அமைந்துள்ளது.

தமக்கு அதிகாரமளித்தவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் தீர்மானங்களை அறிவிக்கும் பொறுப்பு என்பது ஜனாதிபதியின் கடமையாகும். இதுவரையில் நாட்டில் 6500க்கும் அதிகமான உயிர்கள் கொவிட் தொற்றின் காரணமாக காவு கொள்ளப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் இந்த எண்ணிக்கை விரைவில் 10,000 ஐத் தொடக்கூடும். 

அண்மைய நாடான இந்தியாவில் இந்த டெல்டா புறள்வு ஏற்படுத்திய தாக்கத்தை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் எம்மால் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. அவ்வாறானதொரு சூழ்நிலையே இன்று நம் நாட்டில் எழுந்துள்ளது. எனவே கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பெருமளவில் உள்ளன.

சில வாரங்களுக்கு முன்னதாக நம் நாட்டிலும் ஜனாதிபதி மக்களுக்கு உரையாற்றுவதற்காக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலுள்ள ஜனாதிபதி உரையாற்றும் பகுதிக்கு ஒப்பான ஒரு விசேட பகுதி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பொது மக்களின் வரிப் பணமே பயன்படுத்தப்பட்டிருக்கும். அவ்வாறானதொரு உரையாற்றும் பகுதி நிறுவப்பட்டால், இது போன்ற நாட்டுக்கே முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களைப் பற்றி பொது மக்களுக்கு அறிவிப்பதற்கு அந்தப் பகுதியை பயன்படுத்தலாமே.

அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியதில்லை, நாட்டை முடக்க வேண்டியதில்லை, அநாவசிய தேவைகளுக்காக, அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் நடமாடாமல் தம்மையும், தமது அன்புக்குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு எம் ஒவ்வொருவரிலும் உள்ளது.

இந்த நெருக்கடியான சூழலில், அரசாங்கம் முடக்கத்தை அறிவிக்காவிட்டால், தாம் முடக்கத்தை மேற்கொள்வோம் எனத் தெரிவிக்கும் சில தொழிற்சங்கவாதிகளின் வார்த்தைகளில், உண்மையில் நாட்டு மக்கள் மீதான பற்று காணப்படவில்லை, மாறாக, ஒரு சில அரசியல்வாதிகளின் தூண்டுதல்களும், அரசியல் உள்நோக்கங்களுமே தென்படுகின்றன.

திறந்திருக்கும் நிலைமையின் போதே, நம்மில் பலர் எரிவாயுவுக்காகவும், பால் மாவுக்காகவும், மண்ணெண்ணை வாங்கவும் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. நாட்டை மூடிவிட்டால் வெளியில் வர முடியாது. அவ்வாறு நாடு மூடியிருக்கும் போது நீண்ட வரிசைகளில் நிற்பதற்கு தான் அனுமதி வழங்கப்படுமா?

இந்தக் கொரோனா வைரஸ் நம்மை விட்டு விரைவில் மறைந்து விடப் போவதில்லை. இதனுடன் இனி வாழப் பழகிக் கொள்ளத் தான் வேண்டும். பாதுகாப்புக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும். தம் வீட்டில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டு அதன் பாதிப்பு உணரப்படும் வரை இந்த வாக்கியங்கள், கூற்றுகள் அனைத்தும் வெறும் செவிடன் காதில் ஊதிய சங்காகத் தான் பலருக்கும் இருக்கும்.

எனவே, இந்த நிலையைப் பற்றி தெளிவாக இலகுவில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பாகும். அந்தத் தொடர்பாடலை அவர் மேற்கொள்வாரா?

மூடுவதா அல்லது திறப்பதா, உறுதியான தீர்மானத்தை எடுத்து, நாட்டு மக்களுக்கு நீங்கள் கூறுங்கள். மாறாக, ஒரே வீட்டிலிருந்து ஒவ்வொருவராக வெளியே வந்து, காலையில் மூடப்படும் எனவும், மாலையில் மூடப்படாது எனவும் கூறி, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாதீர்கள்.

இந்த சூழலில், இவ்வாறு கருத்துத் தெரிவிப்போருடன் உள்ளகத் தொடர்புகளைப் பேணும் சில ஊடகங்களைச் சேர்ந்தவர்கள், தாமே முந்திக் கொண்டு தகவல்களை வழங்குவதாக எண்ணி, மக்கள் மத்தியில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில், இதோ நாடு முடங்குகிறது, இன்று முடங்கும், நாளை முடங்கும், எப்போதும் முடங்கும் என அறிக்கை வெளியிடுகின்றன.

கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உள்ளன. நாடு முடங்காது, உங்களுக்காகவும், எங்களுக்காகவும், நாம் அநாவசியமான பயணங்களை முடக்குவோம். நல்லதே நடக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X