2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாட்டுக்கு எத்தனை ஊழல் பேர்வழிகள் வேண்டும்?

Johnsan Bastiampillai   / 2022 டிசெம்பர் 21 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

எம்.எஸ்.எம் ஐயூப்

 

 

 

உள்ளூராட்சி மன்றத் தேரதல்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நாள்களை டிசெம்பர் இறுதியில் வர்த்தமானி மூலம் அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா கூறியுள்ளார். 

அரசாங்கம் இந்தத் தேர்தல்களை ஒத்திப்போட முயல்வதாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி இருந்த பின்னணியிலேயே, அவர் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளார். 

இறுதியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018 பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்றது. நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 மன்றங்களுக்கான தேர்தல் அன்று நடைபெற்றது. 

இம்மன்றங்களின் நான்கு ஆண்டு பதவிக் காலம், இவ்வருடம்  பெப்ரவரி மாதம் முடிவடைந்தது. ஆனால், நாட்டில் நிலவிய அரசியல், பொருளாதார பிரச்சினைகள் காரணமாக, அப்போது இத்தேர்தல் ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2023 மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் இத்தேர்தல் நடைபெற வேண்டும். 

ஆயினும், அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளால் தேர்தல் மீண்டும் ஒத்திப் போடப்படுமோ என்ற சந்தேகம், எதிர்க்கட்சிகளிடையே எழுந்தது. முதலாவதாக, இத்தேர்தல்களை நடத்துவது தொடர்பாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்ட மாஅதிபரின் கருத்தைக் கோரியிருந்தார். 

இதை விமர்சித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, “ஒரு வருடத்துக்கு தேர்தலை ஒத்திவைத்தால், அந்த ஒரு வருடத்துக்குப் பின்னர் தேர்தலை நடத்துவதற்கு சட்ட மாஅதிபரின் ஆலோசனையை ஏன் கேட்க வேண்டும்” என்று அண்மையில் பாராளுமன்றத்தில கேள்வி எழுப்பினார். 

அடுத்ததாக, கடந்த ஒக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதி, ஜனாதிபதி செயலகத்தில் துறைசார் நிபுணர்களுடன் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோரின் எண்ணிக்கையை 8,000 இல் இருந்து 4,000 ஆகக் குறைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

உள்ளூராடசி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதானது, மிகவும் பொருத்தமானதாகும். குறிப்பாக, தற்போதைய பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், இது மிகவும் அவசியமானதாகும். 2012ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கலப்புத் தேர்தல் முறையில் நடத்துவதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் முன்ன​ர், இம்மன்றங்களில் சுமார் 4,000 உறுப்பினர்களே இருந்தனர். 

கலப்புத் தேர்தல் முறையின் கீழ், தொகுதி வாரியாகவும் விகிதாசார முறையிலும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆகவே, தொகுதி வாரியாக 4,000 உறுப்பினர்களையும் விகிதாசார முறையில் மேலும் 4,000 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க அப்போது முடிவு செய்யப்பட்டது. 

ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம், உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதாக இருந்தால், முதலில் தொகுதிவாரி உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அதற்காக ஒவ்வோர் உள்ளூராட்சி மன்றத்தின் அதிகார எல்லைக்குள்ளும் புதிதாக தொகுதிகளுக்கான எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும்.

அதற்காக, கடந்த நவம்பர் முதல் வாரத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன ஒரு குழுவை நியமித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளரும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தற்போதைய தவிசாளருமான மஹிந்த தேசப்பிரிய, அக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். பெப்ரவரி 28ஆம் திகதிக்கு முன்னர், அக்குழு தமது அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பிக்க வேண்டும். 

எனினும், அண்மைக்கால வரலாற்றில் எல்லை நிர்ணய விடயத்தில் இலங்கைக்கு மிகவும் மோசமான அனுபவங்களே கிடைத்துள்ளன. உதாரணமாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கலப்புத் தேர்தல் முறையில் நடத்துவதற்கான சட்டம் 2012ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டாலும், அச்சட்டத்தை அமல் செய்வதற்கான எல்லை நிர்ணயப் பணிகள், 2017 வரை ஐந்தாண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டன. 

இதேபோல், 2017 செப்டெம்பர் மாதம் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்காக அரசியலமைப்புத் திருத்தத்தை சமர்ப்பித்தது. அதில் இருந்த சில வாசகங்களால் மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படும் வாய்ப்பு இருப்பதால் அவற்றை நீக்க வேண்டும் என்று உயர்நீதிமனறம் கூறியது. அப்போது அந்தச் சட்டமூலத்தையே தூக்கியெறிந்த அரசாங்கம், மாகாண சபைத் தேர்தலை கலப்பு முறைப்படி நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்தது. 

ஆயினும், அதற்காக தனியான சட்டமூலத்தைச் சமர்ப்பிக்காது, மாகாண சபைகள் தொர்டர்பான மற்றொரு சட்டமூலத்தின் திருத்தமாகவே, அரசாங்கம் அதைச் சமர்ப்பித்தது. இதைத் தனியான சட்டமூலமாக சமர்ப்பித்தால், அதுவும் உயர்நீதிமன்றத்துக்குச் செல்லும். அப்போது, அதனாலும் மாகாண சபைத் தேர்தல் ஒத்திப்போடப்படும் என்று நீதிமன்றம் கூறும் என்பதாலேயே அரசாங்கம் அவ்வாறு செய்தது. அந்தத் திருத்தத்தோடு அச்சட்ட மூலம் நிறைவேறியது.

ஆனால், அதன்படி மாகாண சபைத் தேர்தல்களுக்கான எல்லை நிர்ணய குழுவொன்று நியமிக்கப்பட்டு, அதன் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அதை ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம் நிராகரித்தது. 

அந்த அறிக்கை, பிரதமர் ரணில் தலைமையிலான மீளாய்வுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இரண்டு மாதங்களில், அக்குழு தமது அறிக்கையை சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், அது கிடப்பில் போடப்பட்டது. எனவே, இன்று வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாமல் இருக்கிறது. 

இந்த அனுபவங்களாலேயே அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை  ஒத்திப்போட முயல்வதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையிலேயே, டிசெம்பர் மாதம் இறுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான நாள்கள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

எனினும், உறுப்பினர் எண்ணிக்கையை குறைப்பது உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விடயத்தில் திருத்தங்களைக் கொண்டுவர, நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க, அரசாங்கம் அதன் பின்னர் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்த விடயம் தொடர்பாக, பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் கலந்தாலோசித்ததாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களில் தெரிவுக்குழு தமது அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆகவே, அரசாங்கம் தேர்தலை ஒத்திப் போடும் என்ற நிலைப்பாட்டில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் இருக்கின்றன. 

அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த, தேர்தல்கள் ஆணைக்குழுவை பணிக்குமாறு கோரி, திங்கட்கிழமை (12) உயர்நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸூம் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன், ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த லக்ஷ்மன் கிரிஎல்ல, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி, நாடாளுமன்றத்தில் சுதந்திர எம்.பியாக இருக்கும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் மற்றைய மனுவை தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான நாள்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கு முன்னர், அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மை பலத்தை பாவித்து, பழைய தொகுதி எல்லைகளை இரத்துச் செய்யும் வகையில், தேர்தல் சட்டத்தை திருத்தினால் புதிய எல்லைகள் நிர்ணயிக்கப்படும் வரை, தேர்தல்கள் ஆணைக்குழுவால் வேட்பு மனு கோர முடியாமல் போய்விடும். எனவே, மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெறுவது சந்தேகமே! 

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, மக்கள் பெரிதும் கஷ்டப்படும் நிலையில், எந்தவொரு தேர்தலையும் நடத்த அரசாங்கம் தயங்குவதை புரிந்து கொள்ளலாம். அதற்காக உறுப்பினர் எண்ணிக்கையை குறைப்பது என்ற நல்ல நோக்கத்தை பாவித்து, அரசாங்கம் தேர்தலை ஒத்திப் போட முயல்வதாகவும் இருக்கலாம். 

அதேவேளை, உறுப்பினர்களுக்கான அநாவசிய செலவை பொருட்படுத்தாது இந்தப் பொருளாதார நெருக்கடியின் மத்தியிலேயே, தேர்தலை நடத்தச் செய்வதே எதிர்க்கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது. 

மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெற்றாலும் இல்லாவிட்டாலும், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை குறைப்பதானது வரவேற்கத்தக்கதாகும். 2018ஆம் ஆண்டு முதல் மாதந்தோறும் அவ்வுறுப்பினர்களின் சம்பளத்துக்காக 135 மில்லியன் ரூபாய் செலவழிக்கப்பட்டது. ஏனைய கொடுப்பனவுகளுக்காக மாதாந்தம் 600 மில்லியன் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டது. மொத்தமாக அவர்களது பதவிக் காலமான கடந்த நான்கு வருடங்களில், இந்த இரண்டு கொடுப்பனவுகளுக்காக மட்டும் அரசாங்கம் 3,528 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. 

மொத்தமாகப் பார்க்கும் போது, இது பெரும் தொகையாக இருந்தாலும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் மாதச் சம்பளம் 15,000 ரூபாயாகும். மாநகர மேயரின் சம்பளம் 30,000 ரூபாயாகும். இந்தச் சிறிய சம்பளத்துக்காகவா இவர்கள் தேர்தல் காலங்களில் பல இலட்சம் ரூபாய் செலவிடுகிறார்கள்? மாற்றுக் கட்சிக்காரர்களை கொலை செய்யவும் முற்படுகிறார்கள்? 

இல்லை! இந்தப் பதவிகள் ஒருவித புதையல்களாகும். அபிவிருத்தித் திட்ட ஒப்பந்தங்கள், பாரிய அளவிலான இலஞ்சங்களுக்கான உத்தியோகப்பற்றற்ற அனுமதிப் பத்திரங்களாகவே இந்தப் பதவிகளை கருத வேண்டும். எனவே, இத்தகைய ஊழல்களுக்காக 4,000 பேருக்கு இடமளிப்பதா அல்லது, 8,000 பேருக்கு இடமளிப்பதா என்ற கேள்விக்கு பதில் தேடுவதற்கு சிரமப்படத்தேவையில்லை. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .