2026 மார்ச் 10, செவ்வாய்க்கிழமை

நிலைப்பாடுகள் ஏன் மாறுகின்றன?

Janu   / 2026 மார்ச் 09 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

உலகில் எப்போதும் இரண்டு விதமான நிலைப்பாடுகள் இருப்பது வழமையானது. தற்போதைய மத்திய கிழக்கு நெருக்கடியில், ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்துவதைச் சரியென்று வாதிடுபவர்கள் இருக்கின்ற அதேவேளையில், அது தவறு என்று எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

தமிழர்கள் ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதற்குக் காரணம், தமிழர்களுடைய ஆயுதப் போராட்டத்தினை அழிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முழுமூச்சாக ஈடுபட்டபோது, ஈரான் அவர்களுக்கு ஆதரவு வழங்கியது என்பதுதான். இப்போது இந்தியா ஒதுங்கியிருக்கும் நிலையில், ஈரானியப் போர்க்கப்பலைப் பாதுகாக்கும் முடிவைத் தற்போதைய ஜனாதிபதி எடுத்திருப்பதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம்.

அதைப் போலவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவராகக் கருதப்படும் முன்னாள் உளவுத்துறைப் பிரதானி மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலேயின் கைது விவகாரத்தில்கூட, இவ்வகையான இரட்டை நிலைப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. வடக்கு - கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் தீவிரமாக இருந்த வேளையில் பொறுப்பிலிருந்த சலே; விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டமை, கே.பி. என்கிற குமரன் பத்மநாதன் கைது உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளைச் சிறப்பாகச் செய்து முடித்தவர்.

அவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நெருக்கமாகச் செயற்பட்டவர். பெரும்பான்மை மக்களின் சிந்தனைகளுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டதில் தமிழர்கள் மகிழ்ச்சியடைவதற்கு அதுவே காரணம். ஆனால், சிங்களவர்கள் சலேயின் கைதைக் கண்டித்திருக்கின்றனர்; தொடர்ந்தும் அவரை விடுவிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தும் வருகின்றனர்.

இந்த இரண்டு விடயங்களிலுமே தமிழர்களின் மனோநிலை வெவ்வேறு விதமானதாக இருக்கின்றன. அதற்கு அவர்கள் தமிழ்த் தேசியக் கொள்கைக்கு எதிராகச் செயற்பட்டிருந்தமை காரணமாக இருக்கிறது. ஆனால், ஈரான் கொண்டிருந்த உறவினால் அமெரிக்காவின் சர்வாதிகார முதலாளித்துவம் சரியென்றாகாது; அதேபோல் தமிழர்களின் போராட்டம் அழிவதற்குக் காரணமாக இருந்த சலே, நாட்டிற்குள் பல்வேறு குழப்பங்களுக்குக் காரணமாக இருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புபட்டிருப்பதைச் சரியென்று வாதிடவும் முடியாது.

இவ்வாறான நிலையில்தான் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமை பற்றியும், கொள்கை நிலைப்பாடு பற்றியும் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கடந்த மாத இறுதியில் மட்டக்களப்பில் தமிழர் பண்பாட்டு உணர்வாளர்களினால் 'தமிழ்த் தேசிய அரசியலின் சமகால நிலை' தொடர்பாகவும், தமிழர்களின் நிகழ்காலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டிருந்தது.

அதேநேரத்தில், கடந்த வாரத்தில் வடக்கு - கிழக்கிலுள்ள தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளை ஒரு பொதுவான சட்டக் கட்டமைப்பிற்குள் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் ஒன்றும் 'தமிழ் சட்டத்தரணிகள் பேரவை'யினால் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு விடயங்களும் தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு சிறு அசைவை ஏற்படுத்தலாம் என்று எண்ணிக் கொள்ளலாம். அதேநேரத்தில், எதிர்காலத்தில் நேர்மையுடனும் கொள்கை உறுதியுடனும் தமிழர் தேசத்தின் அரசியல் செயல்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடாக இருத்தல் வேண்டும்.

இருந்தாலும், நாட்டின் ஆட்சிக்கவிழ்ப்புக்கு இரண்டு தடவைகள் முயன்று தோற்றுப் போய், இப்போது தீவிர அரசியல் மூலமாக நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கின்ற மக்கள் விடுதலை முன்னணி (JVP), தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிற்கு எதிரானவர்கள் என்பதும்; விடுதலைப் புலிகளுடனான போரின்போது இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பில் தீவிரமாக இருந்தவர்கள் என்பதும்; சுனாமிக் கட்டமைப்பினைப் புலிகளிடம் கையளிக்கும் உடன்பாட்டுக்கு (PTOMS) எதிர்ப்புத் தெரிவித்து அரசாங்கத்திலிருந்தே வெளியேறியவர்கள் என்பதும் மறக்கப்படுவதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.

சுதந்திர இலங்கைத் தீவில் கடந்த 78 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர் தேசம் தனது அரசியல் அபிலாசைகளைத் திருப்திப்படுத்தும் விதத்திலும், தன்னுடைய தனித்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு சுயாட்சி முறையைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடையது என்ற நிலைப்பாட்டுடன் போராடி வருகிறது. ஆனால், இனப்பிரச்சினைக்கு நிலையானதும் நீதியானதுமான அரசியல் தீர்வு என்பது, புதிய அரசியல் சாசனத்தைத் திட்டவட்டமானதும் தெளிவானதுமான முறையில் உருவாக்குவதற்கான வேலைப்பாடுகளாக நடைபெறுவதாகத் தெரியவில்லை.

இலங்கை அரசியல் யாப்பிற்கான 13-ஆவது திருத்தம் என்பது தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான முழுமையான, இறுதியான தீர்வு அல்ல என்பதைத் தமிழ் அரசியல் தரப்புகள் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வந்திருக்கின்றன. இறுதியாக 2015-ஆம் ஆண்டு பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கக் காலத்தில், அரசியல் நிர்ணய சபையினால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசன வரைபானது ஒற்றையாட்சியையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. அது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பிரதிபலிக்கத் தவறியிருந்தது.

இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் உள்ளகப் பொறிமுறைகளைத் தமிழ் மக்கள் முழுமையாக நிராகரித்து, சர்வதேசக் குற்றவியல் விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி வந்தாலும், அதற்கான ஏதுக்கள் ஏதும் இல்லாத நிலையே தொடர்ந்து வருகிறது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வலியுறுத்துவதிலும், அரசியல் சாசன ரீதியாக அவற்றை நிலைநாட்டிக்கொள்வதிலும் தமிழ் மக்கள் நேர்மையாகவும் உறுதியாகவும் தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளனர். இருந்தாலும், தமிழ் மக்களின் முழுமையான அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் செயற்பாட்டை முன்னெடுக்கும் தமிழ் அரசியல்வாதிகளிடம் ஒற்றுமையின்மையே காணப்படுகிறது. இது அனைவராலும் உணரப்பட்டாலும், அதனைச் சரியான வழியில் முன்நகர்த்துவதற்கான வேலைப்பாடுகள் இல்லாத நிலை காணப்படுகிறது. அதனைச் சரிசெய்வதற்கான ஒரு முயற்சியாகத் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் செயற்பாடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.

இராணுவத்தைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்ற உறுதிமொழியுடன் அதிகாரத்துக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அதனைச் சரியாகவே நடைமுறைப்படுத்துகிறார். அவர் அதிகாரத்துக்கு வந்த பின்னர், ஐக்கிய நாடுகள் சபையில் உள்நாட்டுப் பொறிமுறையைத் தவிர வேறொன்றுமில்லை என்பதனை உறுதியாகக் கூறிவிட்டார்கள்.

பல தசாப்தங்களாக அகிம்சை ரீதியிலும் ஆயுத ரீதியிலும் போராடி வந்த தமிழ் மக்களுக்கு உரிமைப் பிரச்சினை இருக்கிறது என்பதனை எங்கும் ஏற்றுக்கொள்ளுவதற்கு அவர் தயாரில்லை என்பதற்கு அவருடைய கருத்துகளும் பேச்சுகளுமே உதாரணமாக அமைகின்றன. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்குக் காலமெடுக்கும் என்று கூறியிருக்கிறார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிவிட்டு, அதனை விடவும் மோசமான, அரசைப் பாதுகாக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கொண்டு வருவதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்.

ஜனநாயக ரீதியான செயற்பாடுகளாலும் மக்கள் எழுச்சியினாலுமே தங்களது இலக்கினை அடைந்துகொள்ள முடியும் என்று தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள் முயன்று கொண்டிருக்கையில், வேறு ஒரு திசையில் அரசாங்கமும் பெரும்பான்மைச் சமூகமும் செயற்பட்டுக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. இந்த இடத்தில் இவ்வாறான நகர்வு எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை நோக்கத்தை எங்கே கொண்டு செல்லும் என்ற உணர்வு தமிழ்த் தேசிய அரசியல் தரப்பினரிடம் ஏற்பட்டுள்ளதா என்று சந்தேகம் கொள்ளச் செய்கிறது. போர் முடிந்து 16 ஆண்டுகளின் பின்னரும் நாம் எதையும் சாதிக்க முடியவில்லை என்று கவலை கொள்ளவே முடிகிறது.

சர்வதேசத்திடம் முறையிடுவோம், இந்தியாவிடம் முறையிடுவோம், மூன்றாம் தரப்பிடம் பேசுவோம், மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும் என்று கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசிய அரசியல் தரப்பினர், தம்மைச் சரியான முறையில் சீர்தூக்கிப் பார்த்து முன்னகராவிடின், மேலும் பல தசாப்தங்களைத் தமிழ் மக்கள் இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

எது எவ்வாறானாலும், தேசிய மக்கள் சக்தி இடதுசாரிப் போராட்ட இயக்கக் கொள்கைகளைக் கொண்டவர்கள் என்பதால், அவர்கள் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு நியாயமான தீர்வை வழங்குவார்கள் என்று சிந்திப்பது பொருத்தமற்றதாகவே இருக்கும் - இருக்கிறது என்பதனைத் தமிழ் மக்கள் புரிந்துகொண்டால் சரி.

2026.03.09


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .