2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நீதிமன்றுக்கு வந்துள்ள கல்முனை, சாய்ந்தமருது விவகாரம்

Johnsan Bastiampillai   / 2023 ஜனவரி 25 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறுமா அல்லது இடையில் ஏதாவது தடைகள் ஏற்பட்டு வாக்கெடுப்பு தள்ளிப் போகுமா என்ற ஊகங்களை எல்லாம் மீறி, தேர்தல் திகதி மார்ச் 09 என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து விட்டது.  

சோம்பேறிகளுக்கு உற்சாகம் பிறந்தது போல, வேட்பாளர்கள் இயங்கத் தொடங்கியுள்ளனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இனி பொய்களுக்கும் புழுகு மூட்டைகளுக்கும் பஞ்சமிருக்காது. அரசியல் முன் அனுபவமோ, மக்கள் சேவை நோக்கமோ இல்லாத வேட்பாளர்கள் கூட, பெரிய சமூக செயற்பாட்டாளர்கள் போல உணர்ச்சிப் பேச்சுகளை அள்ளி வீசுவார்கள். 

நாட்டின் அரசியல் கலாசாரத்தில் எந்தளவுக்கு  மக்கள் வெறுப்படைந்திருக்கின்றார்கள் என்பதையும், பொருளாதார நெருக்கடியும் வாழ்க்கைச் சுமையும் எங்கெங்கெல்லாம் தாக்கம் செலுத்தியிருக்கின்றது என்பதையும் வேட்பாளர் தெரிவு நடைமுறைகளில் நன்றாகவே அவதானிக்க முடிந்தது.  

குறிப்பாக, முஸ்லிம் பிரதேசங்களில், சில உள்ளூராட்சி மன்றங்களின் ஒரு சில வட்டாரங்களுக்கு போட்டியிட பல வேட்பாளர்கள் முன்வந்த போதிலும், அநேக வட்டாரங்களில் ஒரு பொருத்தமான வேட்பாளரைத் தேடிப் பிடிப்பதே கட்சிகளுக்கு பெரும்பாடாக அமைந்திருந்தது. 

இதனால், ஒரு வேட்பாளராக நிற்பதற்கான இலட்சணங்கள் இல்லாத பலர், வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் இம்முறை களமிறக்கப்பட்டுள்ளனர். வட்டாரத்தில் உள்ள மக்களால் அறியப்படாதவர்கள், எம்.பியின் அல்லது கட்சித் தலைவரின் எடுபிடிகள் வேட்பாளர்களாகப் பெயரிடப்பட்டுள்ளார்கள்.  

அதுமட்டுமன்றி, ஒரு கட்சியில் போட்டியிட ஆசனம் கிடைக்காதவர்கள் ‘கூடுவிட்டுக் கூடுதாவி’ வெட்கமற்று, மற்றைய கட்சிகளில் போட்டியிடுகின்றனர். 

தமது சொந்த வட்டாரத்தில் அல்லாமல் வேறு வட்டாரத்தில் போட்டியிடுபவர்கள், பொழுதுபோக்காக முன்வந்தவர்கள், வெளிநாடு போவதற்கு வாய்ப்பாக தேர்தலை பயன்படுத்த முனைவோர் எனப் பல இரகமானவர்களை காணமுடிகின்றது.  

முஸ்லிம் பிரதேசங்களில் ஒரு வட்டாரத்துக்குள் ஐந்தாறு கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன. ஜனநாயகம் என்ற போர்வையில் களமிறங்கியுள்ள கணிசமான வேட்பாளர்களைப் பார்க்கின்ற போது, சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை. இவர்கள் எல்லாம் வட்டாரத்தை, பிரதேசத்தை ஆளும் அளவுக்கு நாம் வந்துள்ளோமா என எண்ணத் தோன்றுகின்றது. 

இவ்வாறு நாட்டின் எல்லாப் பிரதேசங்களிலும் உள்ள 339 உள்ளூராட்சி சபைகளில், தேர்தல் வேலைகள் களைகட்டிக் கொண்டிருக்க, இரண்டு உள்ளூராட்சி சபைகள் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி ஓய்ந்து கிடக்கின்றன. 

ஒன்று, இன்னும் பதவிக்காலம் முடிவடையாத எல்பிட்டிய பிரதேச சபை; இரண்டாவது, நீதிமன்றத்துக்குச் சென்றுள்ள கல்முனை மாநகர சபை எனபவையாகும். 

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் உள்ளடங்குகின்ற சாய்ந்தமருது பிரதேசத்துக்குத் தனியான ஓர் உள்ளூராட்சி சபையை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி ஏற்கெனவே வெளியாகியிருந்த நிலையில், அதனை இன்னுமொரு வர்த்தமானி ஊடாக இரத்துச் செய்யாமல், சாய்ந்தமருது பிரதேசத்தை கல்முனை மாநகர சபைக்குள் வரும் வட்டாரங்களாக அறிவித்துள்ளமையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமைய நீதிமன்றம், வேட்புமனுக்களை ஏற்க தடை விதித்துள்ளது. 

ஏ.எல்.எம் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தரும் கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவருமான ஓய்வுநிலை அரச நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம்ச லீம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். முதலில், 19ஆம் திகதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய தடை விதித்திருந்த நீதிமன்றம், பின்னர், தீர்ப்பு வரும் வரை அத்தடையை நீட்டித்திருக்கின்றது. 

கல்முனை மாநகர சபை என்பது, கிழக்கு மாகாணத்தில் உள்ள மிக முக்கியமான உள்ளூராட்சி சபைகளில் ஒன்றெனலாம். இதற்குள் மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்குகின்றன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் அதற்கடுத்தபடியாக தமிழர்களும் இங்கு வசிக்கின்றனர். 

கல்முனை நகரம் ‘கிழக்கின் முகவெற்றிலை' என்ற அடைமொழியில் அழைக்கப்படுவதை அறிவோம். ஆயினும், ஏ.ஆர் மன்சூர், எம்.எச்.எம். அஷ்ரபுக்குப் பின்னர் வந்த தலைவர்கள், குறிப்பாக, எச்.எம்.எம்ஹரீஸ் போன்றவர்கள், கல்முனையின் இருப்பையும் வளர்ச்சியையும் திட்டமிட்டு, மூலோபாய அடிப்படையில் மேற்கொள்ளவில்லை என்பது இன்னுமோர்  அவதானிப்பாகும். 

கல்முனையில் இருந்து தனியான ஒரு பிரதேச செயலகத்தை பிரித்துத் தருமாறு தமிழ் மக்கள் கோரி வருவது ஒருபுறமிருக்க, சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை வேண்டும் என்று பல வருடங்களாக சாய்ந்தமருது மக்கள் போராடி வருகின்றனர். 

குறிப்பாக, உள்ளூராட்சி சபை பிரச்சினையை காதும் காதும் வைத்தாற்போல், நுணுக்கமான முறையில் அணுகி தீர்த்து வைக்க, இங்குள்ள முஸ்லிம் தலைவர்கள், தவறியதன் விளைவாகவே, இன்று நீதிமன்றம் வரை இது சென்றுள்ளது.  

சாந்தமருதுக்கு உள்ளூராட்சி சபையைப் பெறுவதற்காக 2005-2010 காலப்பகுதியில் சில நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லாம் கைகூடி வரும் நிலையில், இப்பகுதி மக்களின் கட்சிசார் அரசியல் நிலைப்பாடுகளால், அது கைநழுவிப் போனதாக கூறப்படுவதுண்டு. 

2011 உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பின்னர், சாய்ந்தமருதைச் சேர்ந்த சிராஸ் மீராசாகிபு, கல்முனை மாநகர சபையின் மேயராக கடும் பிரயத்தனங்களுக்குப் பிறகு நியமிக்கப்பட்டார். பின்னர் அவர், அப்பதவியில் இருந்து தூக்கப்பட்டு, கல்முனையைச் சேர்ந்த நிசாம் காரியப்பர் மேயராக அறிவிக்கப்பட்டார். 

இதன் பின்னர்தான் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை பெற்றெடுப்பதற்கான இரண்டாம் கட்ட மக்கள் போராட்டம் ஆரம்பமானது. சாய்ந்தமருது மக்களின் ஜனநாயக உரிமை, பிரதேச வளர்ச்சி, கல்முனை மாநகர சபை மீதான திருப்தி, சிராஸ் மீராசாகிப் போன்றோரின் அரசியல், பிரதேசவாதம், அரசியல்வாதிகளின் போக்கு எனப் பல காரணங்கள் இதில் செல்வாக்குச் செலுத்தின. 

சாய்ந்தமருது பள்ளிவாசலை மையமாகக் கொண்டு, நீண்ட நாள்களாக வெகுஜன முன்னெடுப்புகள் இடம்பெற்றன. உள்ளூராட்சி சபை கோரிக்கையை முன்னிலைப்படுத்தி, ராஜபக்‌ஷர்களை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுக்கக் கூட சாந்தமருது பின்வாங்கவில்லை. 

முன்னதாக, உள்ளூராட்சி சபை தருவதாக பல அரசியல்வாதிகள், பிரதமர் கூறிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில். ஒரு கட்டத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, சாய்ந்தமருது மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். 

இவ்வாறிருக்கையில், 2019ஆம் ஆண்டு சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான ஒரு உள்ளூராட்சி சபையை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியது. இது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டதையடுத்து, சாய்ந்தமருது மக்கள் சற்று அவசரப்பட்டு, கொண்டாடத் தொடங்கி விட்டனர் என்றுதான் கூற வேண்டியுள்ளது. 

இந்நிலையில், அந்த வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது. முன்னைய அறிவித்தலை ஒரு வர்த்தமானி ஊடாக வாபஸ் பெறாமல், அரசாங்கம் வெறும் வாயால் இதனை மறுத்து விட்டு, கடந்து சென்று விட்டது. இதற்குப் பின்னால், கல்முனை அரசியல்வாதிகள் இருந்திருப்பார்கள் என்பது அப்போதே பேச்சடிபட்டது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்ட காலமாக அது இருந்ததாலும், ராஜபக்‌ஷர்கள் தலைகால் புரியாமல் அதிகார வேட்கையில் ஆடிக் கொண்டிருந்தமையாலும், இவ்விவகாரம் அப்படியே அடங்கிப் போனது. 

ஆனால், இந்த ஓட்டையைப் பயன்படுத்தியே ஏ.எல்.எம் சலீம், சந்தர்ப்பம் பார்த்து ஓர் ஆப்பை சொருகியுள்ளார். தேசிய காங்கிரஸ் தலைவருக்கு தெரியாமல், இது நடந்திருக்குமா என்பது சந்தேகமே. 

கல்முனை மாநகர சபைக்கான வேட்புமனுக்களை ஏற்பதற்கு, தீர்ப்பு வழங்கப்படும் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் ஏற்கெனவே முடிவடைந்து விட்டதால், பிறிதொரு கட்டமாகவே கல்முனைக்குள் வரும் வட்டாரங்களுக்கான வேட்புமனுத்தாக்கலும் வாக்களிப்பும் இடம்பெறவுள்ளது.  

நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பைப் பொறுத்து, இங்கு தேர்தல் இடம்பெறும். அதாவது, ஏற்கெனவே வெளியான வர்த்தமானிக்கு அமைவாகச் செயற்பட வேண்டும் என்ற அடிப்படையில் தீர்ப்பு அறிவிக்கப்படுமாயின், கல்முனை மாநகர சபைக்கும், சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக்கும் தனித்தனியாக, ஒரே தினத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. 

அல்லது, தனியான உள்ளூராட்சி சபைக்கான அறிவித்தல் சட்டவலுவற்றது என்று நீதிமன்றம் தீர்ப்பெழுதுமாக இருந்தால், வழக்கம்போல கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசமாகவே சாய்ந்தருதிலும் தேர்தல் நடைபெறும். 

தமது ஊரின் உரிமைக்காக ஒருவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஆனால், இந்த விவகாரம் பூதாகரமாகி, நீதிமன்றம் வரை செல்வதற்கு காரணகார்த்தாக்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள். இதனையெல்லாம் தாண்டி, இவ்விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துகளும் இல்லை. 

இந்த நீதிமன்ற நடவடிக்கையால் சாய்ந்தமருது மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். தமது முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்பது போல, சமூக வலைத்தளங்களில் கொண்டாடுவதையும் காண முடிகின்றது. ஆனால், இதற்கு ஒரு மறுபக்கமும் உள்ளது. 

அதாவது, கல்முனை நகர சபையின் கீழ் மூன்று ஊர்கள், இரண்டு சமூகங்கள் உள்ளடங்குகின்றன. இந்தத் தடையால், கல்முனையில் உள்ள அப்பாவி வாக்காளர்கள் மற்றும் மருதமுனை மக்களும் மார்ச் 9 தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரு முடிவு கிட்டிய பிறகுதான், சாய்ந்தமருது வட்டாரங்களிலும் மக்கள் தேர்தலை சந்திக்க முடியும்.  

கல்முனையும் சாய்ந்தருதும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் போன்ற ஊர்களாகும். மிக அந்நியோன்னியமாக, சமரசமாகப் பேசி இவ்விடயத்தை தீர்த்து வைத்திருக்க முடியும். ஒரு சர்வதேச விவகாரம் போல இதனை வைத்து, ‘அரசியல் படம்’ காட்டுவதை விடுத்து, காதும் காதும் வைத்தாற்போல் காரியமாற்றியிருக்க வேண்டும். 

ஆனால், அவ்வாறு செய்து முடிக்க வேண்டிய ஒரு காரியத்தை, இரு பக்கத்தில் உள்ளவர்களும் அரசியல் இலாபம், ஆட்புல எல்லை உள்ளிட்ட காரணங்களுக்காக ஊதிப் பெருப்பித்ததால், இன்று இந்த விவகாரம் நீதிமன்றத்தில் வந்து நிற்கின்றது. இனியென்ன, நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதை தவிர வேறென்ன செய்யலாம்? 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .