Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Thipaan / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் ஆயுதம் ஏந்திய சகல தரப்பினரும் தமக்கு எதிரானவர்களை அல்லது தமக்கு வேண்டியவர்களைக் கடத்திக் கொலை செய்திருக்கிறார்கள்; காணாமற்போகச் செய்திருக்கிறார்கள். அவர்களில் அரச படைகளும் விடுதலைப் புலிகளும் முதன்மையானவர்கள். அதேவேளை இச்சகல குழுக்களும் தாம் அல்லது தம்மைச் சார்ந்தவர்கள் அல்லாதவர்கள் செய்த கடத்தல்களை எதிர்த்துள்ளனர்.
இந்த நிலையில்த்தான் அரசாங்கம் காணாமற்போனவர்கள் தொடர்பான அலுவலகம் ஒன்றை ஆரம்பிப்பதற்காக கடந்த வாரம் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. தடியெடுத்தவர்கள் எல்லாம் வேட்டைக்காரர்களாக இருக்கும் நிலையில், மஹிந்த அணியினர் ஏதோ தாம் மட்டும் பரிசுத்தவான்களைப் போல் அதனை எதிர்த்து குழப்பம் விளைவித்தனர்.
இது போர் வீரர்களைக் காட்டிக் கொடுக்கும் சட்டம் என்பதே மஹிந்த அணியினரின் வாதமாக இருக்கிறது. சட்டம் படை வீரர்களைப் பற்றி எதனையும் கூறாத நிலையில் இவ்வாறு கூறுவதன் மூலம் படை வீரர்கள், ஆட்களைக் காணாமற்போகச் செய்திருக்கிறார்கள் என அவர்களே உலகுக்குப் பறைசாற்றுகின்றனர்.
நாடாளுமன்றத்தின் முறையான விவாதமின்றியும் சில மரபுகளுக்கு முரணாகவுமே இந்தச் சட்டம் நிறைவேறியது. உறுப்பினர்கள் ஆசனங்களில் இல்லாது சபை நடுவே கூச்சலிடும் போதுதான் அது நிறைவேறியது. ஆனால் அதற்குக் காரணம் மஹிந்த அணியினர் சபையில் குழப்பம் விளைவித்தமையே‚ போதிய கால அவகாசம் இருந்தும் அவர்கள் சட்ட மூலத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவில்லை. அதனைச் செய்யாது சபையில் கூச்சலிட்டு சட்டத்தை இரண்டு வாரம் கழித்து நிறைவேற்ற வேண்டும் எனக் கோருவது அது நிறைவேற்றப்படுவதைத் தடுக்கவே என்பது தெளிவானதாகும்.
அடுத்த முறை சபையில் இச்சட்ட மூலம் எடுத்துக் கொள்ளப்பட்ட போதும், அவர்கள் தொடர்ந்தும் குழப்பம் விளைவித்தால் மீண்டும் அதனை ஒத்திப் போட வேண்டியிருக்கும். எனவே சில நாடாளுமன்ற மரபுகளுக்கு முரணாகவேனும் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தமை தவறில்லை என்றே தோன்றுகிறது.
ரணில் விக்கரமசிங்ஹ பிரதமராக நியமிக்கப்பட்டமையும் இதற்குச் சமமாகும். நாடாளுமன்றத்தில் பெரும்பாலானவர்களின் நம்பிக்கையை வென்றவரே சட்டப் படி பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மஹிந்த அணியினர் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை நாடாளுமன்றத்தில் வைத்திருந்த நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்ஹ பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால் தேர்தலின் போது அது மக்களிடம் கூறப்பட்டதனால் அதற்கு மக்கள் ஆணை இருந்தது என்றும் வாதிடலாம். எவ்வாறாயினும் சில சந்தர்ப்பங்களில் நல்ல நோக்கத்திற்காக சில சட்டங்களையும் மரபுகளையும் மீற வேண்டியேற்படுகிறது என்பதையே இச்சம்பவங்கள் காட்டுகின்றன.
முப்படையினரும் பொலிஸாரும் ஆட்களைக் கடத்திக் கொலை செய்தமை பொதுவாக சகலரும் அறிந்த உண்மை. 1971 ஆம் ஆண்டு மற்றும் 1988-89 ஆம் ஆண்டுகளில் தென் பகுதியில் இடம்பெற்ற கிளர்ச்சிகளின் போதும், 1980களின் ஆரம்பத்திலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற தமிழ் ஆயுதக் குழுக்களின் கிளர்ச்;சியின் போதும் இக்கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றன. கிளர்ச்சியை அடக்கும் நோக்கத்துக்காக மட்டுமன்றி கப்பம் கறப்பதற்காகவும் இவ்வாறு ஆட்கள் கடத்தப்பட்டனர்.
தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு எதிரான அடக்குமுறையின் போது, குறிப்பாக புலிகளுக்கு எதிரான போரின் போதே கூடுதலாக படையினர் ஆட்களைக் கடத்திக் கொன்றனர் என்றதோர் அபிப்பிராயம் உலகில் நிலவுகிறது. ஆனால் அக்கருத்து சரியானது அல்ல‚ 1988-89 ஆண்டுகளில் தென் பகுதிகளிலேயே அரச படைகளாலும் அப்படையினருக்கு ஆதரவாக செயற்பட்ட பிறா (PRAA ), சிரா (SRAA) மற்றும் கிரீன் டைகர்ஸ் (Green Tigers) போன்ற குழுக்களாலும் ஆகக் கூடுதலாக ஆட்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். சட்டத்தரணிகளான விஜேதாச லியனாரச்சி மற்றும் காஞ்சன ஆபேபால, எழுத்தாளர் எச்.ஈ. தயானந்த அக்காலத்தில் கடத்தப்பட்ட முக்கிய நபர்களில் சிலராவர்.
அக்காலத்தில் தென் பகுதிகளில் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,000க்கும் மேற்பட்டதாகும் என்பதே பொதுவான அபிப்பிராயமாகும். கடந்த முப்பதாண்டு காலத்தில் அந்தளவு ஆட்கள் வடக்கு கிழக்கு பகுதியிலிருந்து கடத்தப்பட்டார்களா என்பது சந்தேகமே. அதனால் வன்செயல்களால் தமிழ் மக்கள் குறைவாக பாதிக்கப்பட்டார்கள் என்ற முடிவுக்கு வரமுடியாது. முப்பதாண்டு காலம் அம்மக்கள் போரினால் பட்ட துன்பங்கள் ஏனைய சமூகங்கள் பட்ட துன்பங்களை விட அதிகம் என்பதற்கு புதிதாக ஆதாரங்கள் தேவையில்லை.
மக்கள் விடுதலை முன்னணியினரே வரலாற்றில் கடத்தல்களால் ஆகக் கூடுதலாக பாதிக்கப்பட்டவர்களாக இருந்த போதிலும், அவர்கள் கம்யூனிஸத்தை ஏற்றவர்கள் என்பதால் மேற்கத்திய நாடுகளும் மேற்கத்தைய ஊடகங்களும் இந்நாட்டின் ஊடகங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அக்காலக் கடத்தல்களுக்கு எதிராக அவ்வளவாகக் குரல் கொடுக்கவில்லை.
கடத்தல் விடயத்தில் இரண்டாம் இடத்தை அல்லது அரச படைகளுக்கு சமமான இடத்தை வகிப்பவர்கள் புலிகளே. ஏனைய தமிழ்க் குழுக்களைச் சேர்ந்தவர்கள், தமக்கு அடங்காத தமிழர்கள் மற்றும் தமிழ்ச் செல்வந்தர்கள் உட்படப் புலிகளால் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்காகும். புலிகளும் கப்பம் கறப்பதற்காக ஆட்களை கடத்தினார்கள். அதில் தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் அடங்கினர். புலிகள் 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 11 ஆம் திகதி தம்மிடம் சரணடைந்த 600க்கு மேற்பட்ட பொலிஸாரை கடத்திச் சென்று கொலை செய்தமை சகலரும் அறிந்த சம்பவமாகும்.
1990 ஆம் ஆண்டு புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை விரட்டியடித்த போது அங்கிருந்த முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் செல்வந்தர்கள் தடுத்து வைக்கப்பட்டு கோடிக் கணக்கில் கப்பம் கோரப்பட்டதாகவும் அவர்களில் பலர் திரும்பி வரவேயில்லை என்றும் தற்போது செயலிழந்துள்ள பாமீஸ் இயக்கம் சில வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்தது.
ஈ.பி.டி.பி., கருணா குழு, ராஸிக் குழு ஆகிய பல ஆயுதக் குழுக்களும் கடத்தல்களில் ஈடுபட்டதாக தேசிய மற்றும் சர்வதேச அறிக்கைகள் பலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக் குழுக்களும் பொதுவாக அரச சார்பான ஆயுதக் குழுக்களாகவே கருதப்பட்டன. அவர்களும் கப்பம் கறப்பதற்காகவும் ஆட்களைக் கடத்தினர்.
இன்று பாராட்டத்தக்க வகையில் அரசியலில் ஈடுபட்டு வந்த போதிலும் மக்கள் விடுதலை முன்னணியும் தமது இரண்டு கிளர்ச்சிகளின் போதும் ஆட்களைக் கடத்திக் கொன்றது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த தயா பத்திரன, அந்த இயக்கத்திலிருந்து விலகிச் சென்று அமைச்சர் ஒருவருடன் இணைந்து கொண்டவரும் அக்கட்சியின் தலைவர் விஜேவீரவின் முன்னாள் மெய்ப் பாதுகாவலருமான மஹிந்த பத்திரன போன்ற நூற்றுக் கணக்கானவர்கள் அந்தப் பட்டியலில் உள்ளனர்.
இப்போது இந்தக் கடத்தல் மற்றும் கொலைகளைத்தான் காணாமற் போதலாக வர்ணிக்கப்படுகிறது. அவற்றைப் பற்றி ஆராயத்தான் அரசாங்கம் புதிதாக ஒரு நிரந்தர அலுவலகத்தை உருவாக்கப் போகிறது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டு தற்போதைய அரசாங்கத்தினாலும் தொடரப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான பரணகம ஆணைக்குழு, இதுவரை செய்த விசாரணைகள் அத்துடன் ரத்துச் செய்யப்பட்டதா என்ற கேள்வி இங்கே எழுகின்றது.
இது படை வீரர்களைக் காட்டிக் கொடுக்கும் செயலாகும் என மஹிந்த அணியினர் கூறிய போதிலும், காணாமற்போனோர்களைப் பற்றி ஆராய விசாரணைக் குழுக்கள் இதற்கு முன்னரும் நியமிக்கப்பட்டுள்ளன. சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் காணாமற் போனோர்களைப் பற்றி விசாரணை செய்ய பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு இருந்தன. மஹிந்தவும் அந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். அவர் கடத்தல்களுக்கு எதிராக ஜெனீவா சென்றவர் என்பது பிரசித்தி பெற்ற கதையாகும்.
அமெரிக்காவின் தேவைக்கே தற்போதைய காணாமற்போனோர்களைப் பற்றிய அலுவலகம் நியமிக்கப்படப் போவதாக மஹிந்த அணியினர் கூறுகின்றனர். அது உண்மை தான்‚ மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம், சிறுபான்மை மக்களைப் பகைத்துக் கொண்ட நிலைமையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டே, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்கப்பட்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார். ரணில் விக்கிரமசிங்ஹ பிரதமரானார். எனவே அவர்கள் சிறுபான்மை மக்களுடன் நட்புறவைப் பேண விரும்புகிறார்கள்.
ஆனால், போரின் போது படையினர் செய்த தவறுகளையும் குற்றங்களையும் கிளறியெடுத்துப் பெரும்பான்மை சிங்கள மக்களைப் பகைத்துக் கொள்ள மைத்திரியோ அல்லது ரணிலோ விரும்பமாட்டார்கள். ஆயினும் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளின் நட்புறவு இல்லாமல் பொருளாதார ரீதியில் தமது அரசாங்கத்துக்கு தலைதூக்க முடியாது என்பதையும் அவர்கள் ஆரம்பத்திலிருந்தே உணர்ந்து இருக்கிறார்கள். சர்வதேச ரீதியாக நட்புறவை வளர்ப்பதாக இருந்தால் உள்நாட்டில் மனித உரிமை நிலைமையில் அபிவிருத்தி ஏற்பட வேண்டும் என்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர்.
இதன் காரணமாகவே அவர்கள் உள்நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்த சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அவர்களுக்குப் பதவிக்கு வர உதவி செய்த ஜனநாயக சக்திகளும் அதற்காக அவர்களை வற்புறுத்துகின்றன. எனவே காணாமற்போனோர்கள் தொடர்பான அலுவலகத்தை ஆரம்பிக்க அமெரிக்காவே காரணமாக இருந்தது என மஹிந்த அணி கூறுவதில் தவறில்லை.
ஆனால், மஹிந்த பதவியில் இருக்கும் போதும் அவரும், அமெரிக்காவின் தாளத்திற்கே ஓரளவுக்கு ஆடினார். 2010 ஆண்டு மஹிந்த எதற்காக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார்? அதுவும் சர்வதேசம், குறிப்பாக அமெரிக்காவின் நெருக்குதல் காரணமாகவேயாகும். அவர் நல்ல நோக்கத்தில் அதனை நியமித்து இருந்தால் அவ்வாணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றியல்லவா இருக்க வேண்டும்‚
போரின் போது எவரும் காணாமற்போகவில்லை என 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ டெய்லி மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றின் போது கூறியிருந்தார். இராணுவத் தளபதியினால் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றம் ஒன்றும் போரின் போது எவரும் காணாமற்போகவில்லை என அதே ஆண்டு கூறியிருந்தது.
அவ்வாறிருக்கத்தான், அதே ஆண்டு மஹிந்த காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழுவை நியமித்தார். அது ஏன்? தமது தம்பிக்கும் இராணுவத் தளபதிக்கும் சவால் விடுப்பதற்காகவா? இல்லை. அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் ஏற்படுத்திய நெருக்குவாரத்தின் விளைவாகவே அவர் காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழுவை நியமித்தார்.
2012 ஆம் ஆண்டு அமெரிக்கா முதன் முறையாக இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்த போது, இலங்கை அரசாங்கம் அதனை எதிர்த்தது. ஆனால் அந்தப் பிரேரணையின் நெருக்குவாரத்தின் காரணமாக மஹிந்தவின் அரசாங்கம் திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை மீண்டும் தூசு தட்டியெடுத்தது. அதன் விளைவாக மஹிந்தவின் காலத்திலேயே 12 பொலிஸ் அதிரடிப் படை வீரர்கள் கைது செய்யப்பட்டார்கள். இன்று புலிகளைத் தோற்கடித்த படை வீரர்களை கைது செய்வதாக மைத்திரியின் அரசாங்கத்தை குறைகூறும் மஹிந்த, அன்று அவ்வாறுதான் அமெரிக்கத் தாளத்துக்கு ஆடினார். இப்போது அவர் தாம் ஏதோ பெரிய ஏகாதிபத்திய விரோதியைப் போல் மைத்திரியின் அரசாங்கம் அமெரிக்காவுக்கு அடிபணிந்துவிட்டது என்கிறார்.
எவ்வாறாயினும் உத்தேச காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் எந்தளவு வெற்றிகரமாக காணாமற்போனோரைக் கண்டு பிடிக்கும் என்பதற்கு காலம்தான் பதில் கூற வேண்டும். குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணி இந்தச் சட்டத்துக்கு கொண்டு வந்த திருத்தத்தின் பிரகாரம் 1971 மற்றும் 1988-89 கிளர்ச்சிகளின்; போது காணாமற்போனோர்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டால் அவற்றில் பெரும்பாலானவற்றின் முடிவுகள் பூஜ்ஜியமாவே இருக்கும் என ஊகிக்கலாம். ஏனெனில் அவற்றுக்கான பல சாட்சிகள் உயிரோடு இல்லை. ஆதாரங்களும் அழிந்து காணாமற் போயிருக்கலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
14 May 2025
14 May 2025
14 May 2025