2025 மே 14, புதன்கிழமை

பச்சோந்திக்குக் கிராக்கி

Thipaan   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்
kanaga.raj132@gmail.com

தொடையைத் தட்டுவார்களா, இல்லையா என, கண்கள் அங்கேயே நோட்டம் விட்டுக்கொண்டிருந்தன. வீர ஆவேசம் கொண்ட சத்தம், காதுகளைக் கிழித்தன. “உருஷூ... ஹே... உருஷூ... ஹே...” என்று அடிக்கொருதடவை கூறிக்கொண்டே நாக்கைத் தொங்கப்போட்டுப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கண்களை விரித்துப் பயமுறுத்தினர். 

ஏதோ, எதிரிகள் நாட்டுக்குள் புகுந்துவிட்டனர். அவ்வாறான எதிரிகளைப் பார்ப்பதைப் போலவே அவர்களது பார்வைகளும், வலிந்து சண்டைக்கு இழுப்பதைப் போலவே முகபாவனைகளும் இருந்தன. “ஹோ... பாவச்சி...க்கா... பாவாவே...” என்று உரக்கக் கூறிக்கொண்டே தொடைகளில் டபாட்... டபாட்... என்று சத்தம் கேட்கும் வகையில், அடித்துக்கொண்டனர். (அந்த வசனத்துக்கு அர்த்தம் தெரியாவிடினும்) எதிரிகளைக் கண்டு சினங்கொள்வது போன்றதொரு பாவனையே, அவர்களின் முகங்களிலும் உடல் மொழிகளிலும் வெளிப்படுத்தப்பட்டன. 

அந்தக் குழுவில் இருந்தவர்கள், கறுப்பு நிறத்திலான கிழிசல் ஆடைகளையே அணிந்திருந்தனர். பார்ப்பதற்கு வேடுவர்களைப் போலவே காட்சியளித்தனர். அரைவாசிக்கு மட்டுமே ஆண்கள் ஆடை அணிந்திருந்தனர். பெண்களும் ஆடினர், ஆனால், அவர்கள் உடலை மறைத்தே ஆடையணிந்திருந்தனர். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வரவேற்பதற்கான சகல ஏற்பாடுகளும் ஒக்லன்டிலுள்ள அரச இல்ல வளாகத்தில், சனிக்கிழமை (01) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இயற்கையுடன் பின்னிப்பிணைந்து பச்சைப் பசேலென இருந்த அவ்விடத்துக்குச் சென்றவுடன் சற்றுக் குளிர்ந்தது.  

நியூசிலாந்துப் பிரதமர் ஜோன் கீ, தன்னுடைய பாரியாருடன் அங்கு பிரசன்னமாய் இருந்தார். நியூசிலாந்துப் பொலிஸாரும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மரியாதை செலுத்துவதற்குத் தயாராக இருந்தனர். 

குறிக்கப்பட்ட நேரத்துக்கு அந்த இல்ல வளாகத்துக்குள் வாகனங்கள் வந்துநின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது பாரியாருடன் காரிலிருந்து இறங்கினார். அமைச்சர், பிரதியமைச்சர், இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினரும் பிரிதொரு வாகனத்திலிருந்து இறங்கினர். 

ஏற்கெனவே தயாராக இருந்த மயூரி இனத்தைச் சேர்ந்தவர்கள், தக்கா நடனத்தை ஆடஆரம்பித்தனர். அவர்கள் சத்தம்போட்டு ஆடிய ஆட்டம், இலங்கை தூதுக்குழுவுக்குப் புதிதாக இருந்தாலும், நியூசிலாந்து ஊடகவியலாளர்களுக்கு ஒன்றும் புதிதாக இருக்காது. 

கதையோடு கதையாக, இந்த நடனத்தைப் பற்றி விசாரித்தேன். அந்த நடனமானது, மயூரி இனத்தினரால் ஆடப்படும் ஒரு நடனமாகும். அதாவது, நியூசிலாந்து, யாரிடமும் கையேந்தாத நாடாகும். அந்நாடுக்கென ஒரு வரையறையும் வரன்முறையும் இருக்கிறது. 

200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியதாக நம்பப்படும் நியூசிலாந்து, மனிதர்கள் வாழ்வதற்கான சூழலைக் கொண்டிருக்கவில்லை. பாரிய காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டே, இவ்வாறான பாரிய மாற்றம் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

அவ்வாறானதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மயூரி இனத்தவர்களே காரண கர்த்தாக்களாக இருந்தனர் என்று சொல்லப்படுகிறது. அவர்களின் வழிதோன்றலே இந்த தக்கா நடனமாகும். நியூசிலாந்து, றக்பி விளையாட்டில் புகழ்பெற்ற நாடாகும். றக்பி விளையாட்டுப் போட்டிகளின் போது நியூசிலாந்து அணி களமிறங்கினால், தக்கா நடனம் ஆடுவதை போலவே ஒன்றை செய்துகாண்பிப்பர். நம்மில் பலர் அதனை அவதானிக்காமையால் அதுதொடர்பில் கரிசனை காட்டுவதேயில்லை. 

வளர்ச்சியடைந்துள்ள நியூசிலாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்கின்ற ஏனைய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், தங்களுடன் சமாதானமாக இருக்க விரும்புகின்றனரா அல்லது யுத்தம் செய்து, நாட்டைக் கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றனரா என்பதை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே இந்த நடனம் ஆடப்பட்டு, இரண்டில் ஒன்றுக்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்படும் என்றனர். 

அதாவது, தக்கா நடனம் ஆடப்படும். நடனக்குழுவில் முன்வரிசையில், ஈட்டியுடன் நிற்கின்ற மூவரில், நடுவில் நிற்பவரிடம், சிறிய ஈட்டியொன்று அல்லது ஏதாவது பொருளொன்று இருக்கும். 

வீர ஆவேசம் கொண்ட ஆட்டத்தின் பின்னர், அந்தச் சிறிய ஈட்டியோ அல்லது ஏதாவது பொருளோ, விஜயம் செய்திருக்கின்றவர்களின் குழு முன்னிலையில் தரையிலேயே வைக்கப்படும். அதனை, நியூசிலாந்துக்கு   உத்தியோகபூர்வ விஜயம் செய்கின்ற ஏனைய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் அல்லது தலைவருக்கு அடுத்தபடியாக இருப்பவர் எடுக்கவேண்டும். 

அப்படி எடுத்துவிட்டால், நியூசிலாந்துடன் சமாதானமாகவே உறவை வளர்ப்பதற்கு வெளிநாட்டைச் சேர்ந்தோர் விரும்புவதாக அர்த்தப்படும் என்பதாகும். எடுக்காவிட்டால், அதற்கு பின்னர் என்ன நடக்கும் என்ற கேள்விகளுக்கு எல்லாம் அந்த ஊடகவியலாளரிடம் மட்டுமல்ல, நியூசிலாந்தைச் சேர்ந்த பலரிடமும் பதிலே இல்லை. 

ஏனென்றால், இராஜதந்திர ரீதியிலான விஜயத்தை மேற்கொள்ளும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். முன்கூடிய பேசிக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலும் நிகழ்ச்சி நிரலின் பிரகாரமுமே செயற்படுவர்.  

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவ்வாறான தொரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலான விஜயத்தையே மேற்கொண்டிருந்தார்.  

அந்தத் தூதுக் குழுவில், அமைச்சர்களான சாகல ரத்னாயக்க, ஹரின் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே மற்றும் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் இருந்தனர். எனினும், அந்த நடனக்குழுவினரால் வைக்கப்பட்ட சிறிய ஈட்டியை, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எடுத்தார். 

சற்றுக் குளிராக இருந்த அந்த நேரத்தில், நடனம் ஆடுபவர்கள் மட்டுமன்றி, நாங்களும் சிலிர்த்துக்கொண்டுதான் இருந்தோம். நடுங்கிக்கொண்டே... நடுநடுங்கிக்கொண்டே, ஈட்டியை எடுத்துக்கொண்டு அவர் மிகவேகமாகவே தன்னுடைய இடத்துக்குச் சென்றுவிட்டார். 

அப்படி எடுக்காவிடின் என்ன நடத்திருக்கும் என்று இதுவரையிலும் கண்டதேயில்லை என்றார் அந்த ஊடகவியலாளர். ஏனென்றால், இராஜதந்திர ரீதியில் விஜயங்களை மேற்கொள்வோர் எல்லோரும், அந்த ஈட்டியை அல்லது வைக்கப்படும் பொருளை எடுக்காமல் இருந்தது இல்லையாம். 

ஆகையால், அப்பொருளை எடுக்காவிடின் என்ன நடக்கும் என்று பலருக்கும் தெரியாமல் இருந்தாலும் கூட, எடுக்காவிட்டால், நாட்டைவிட்டு வெளியேறவே முடிந்திருக்காது என்பது அவர்களின் கடுஞ் சத்தத்துடன் கூடிய வீர ஆவேசம் கொண்ட நடனத்திலிருந்து கொஞ்சம் புரிந்துகொள்ள முடிந்தது.  

அந்தப் பொருளை எடுத்ததன் பின்னரே, மயூரி இனத்தவரின் அனுமதி கிடைத்தது. முன்வரிசையில் இருந்த மூவரும் தங்களுடைய பின்தொடைகளை தட்டித் தட்டி, வெற்றி கிடைத்தது போன்ற பாவனை செய்து, இதர உறுப்பினர்களிடம் சைகை காண்பித்தனர். அதன் பின்னரே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அந்த நடனக்குழுவின் தலைவர் கைலாகு கொடுத்து வரவேற்று அழைத்துச் சென்றார். 

பிரதமர் ரணிலுக்கு கைலாகு கொடுக்கப்பட்டது போல, ஏனைய நாடுகளில் எவ்வாறு வரவேற்பளிக்கப்படுமோ அதனையே அந்த நடனக்குழுவின் தலைவரும் செய்வார். சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் 2014 ஆம் ஆண்டு அங்கு விஜயம் சென்றிருந்த போது கைலாகு கொடுத்து மூக்கோடு மூக்கை முட்டவைத்து வரவேற்றனர்.  

அனுமதி கிடைத்ததன் பின்னர் தான், நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கைலாகு கொடுத்து, செங்கம்பளம் போட்டப்பட்ட மேடைக்கு அழைத்துச் சென்றார். அந்த மேடையில் பிரதமர் நின்றிருக்க, நியூசிலாந்து பொலிஸ் பேண்ட் வாத்தியக் குழுவினரால், இருநாட்டுத் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.  

தேசிய கீதங்களுக்குப் பின்னர் வழங்கப்பட்ட மரியாதை அணிவகுப்பை, பிரதமர் ரணில் விக்கிமசிங்க ஏற்றுக்கொண்டார். பின்னர் இருதரப்புப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகின. 

பேச்சுவார்த்தை நிறைவடைந்ததன் பின்னர், இருநாட்டு பிரதமர்களும் இணைந்து கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர். அச்சந்திப்புக்குப் பின்னர், அவர்களுக்கு பகல்போசன விருந்துபசாரம் அளிக்கப்பட்டது.  

நாங்கள், ஏற்கெனவே தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ்ஸில் அவரச அவசரமாக ஏறிக்கொண்டோம். பஸ் பயணிப்பதற்கென்று வீதியில் ஒரு ஒழுங்கை இருந்தது. 

அதில், மிகவேகமாக பயணித்த பஸ், ஒக்லன்டில் உள்ள மிருகக்காட்சிசாலையைச் சென்றடைந்தது. ஏற்கெனவே கட்டுரையில் குறிப்பிட்டது போல், இலங்கை அரசினால் நியூசிலாந்துக்கு 2015ஆம் ஆண்டு அன்பளிப்பு செய்யப்பட்ட அஞ்சலி என்றழைக்கப்படும் யானைக் குட்டியை, பிரதமர் பார்வையிட்டதுடன் பழங்களையும் ஊட்டினார். 

நமது நாட்டிலோ அல்லது ஏனைய நாடுகளில் இருப்பதைப் போலவோ, மிகப்பயங்கரமான மிருகங்களை அந்த மிருகக்காட்சிசாலையில் காணக்கிடைக்கவில்லை. குளிரைத் தாங்கிக்கொள்ளக்கூடிய மிருகங்கள் மட்டுமே இருந்தன. கூடுதலாக, பூச்சி இனங்களைக் காணக்கூடியதாக இருந்தது. 

இரண்டொரு புலிகளைக் காணக்கிடைத்தது. பின்னவல திறந்தவெளி மிருக்கக்காட்சிசாலையில், கண்ணாடிக்குள் இருந்துகொண்டு புலிகளைப் பார்த்த அதே அனுபவமே, ஒக்லன்ட் மிருகக்காட்சிசாலையிலும் புலியைப் பார்த்த போது இருந்தது. 

அங்கும் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை தினங்கள் என்பதனால், விடுமுறையைக் கழிப்பதற்காக பெரும் எண்ணிக்கையிலானோர், மிருகக்காட்சிசாலைக்கு வந்திருந்தனர். அவர்களும் அஞ்சலியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். இலங்கைப் பிரஜைகளும் இருந்ததை அவதானிக்க முடிந்தது.  

எனினும், மிருகக்காட்சிசாலையின் ஊழியர்கள், ஏதோவொன்றைக் கூற, அவர்கள் அனைவரும் மிக அமைதியாக, எதனையும் மறுத்துக் கேட்காது சென்றுவிட்டனர்.  

மிருகக்காட்சிசாலைக்கு நுழைவுக் கட்டணமாக, சிறியதொரு தொகைப் பணம் அறவிடப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 

இங்கு என்றால், “அப்பப்பா... நாங்கள் காசுகொடுத்துத்தானே வந்திருக்கிறோம். ஏன், நாங்கள் போகவேண்டும். நாங்கள் போகமாட்டோம்” என்று மிருகக்காட்சிசாலை ஊழியர்களுடன் சண்டைபோட்டிருப்பர். அதிமுக்கிய பிரமுகர்கள், மிருக்கக்காட்சி சாலையின் இவ்விடத்துக்கு (யானை இருக்கும் இடம்) வரவிருப்பதனால், சற்று விலகிச்செல்லுங்கள் என்றே அங்கு வந்திருந்தவர்களிடம், மிருகக்காட்சிசாலையில் அவ்விடத்தில் கடமையிலிருந்தவர் கூறியதாக பின்னர் அறிந்துகொண்டேன்.  

என்னதான் மிருகக்காட்சிசாலையில் உலாவினாலும், தக்கா நடனத்தின் போது, உரத்த சத்தத்துடன் சொல்லப்பட்டவை என்ன என்பதைத்தெரிந்து கொள்ளவேண்டும் என்று என் மனது துடிதுடித்தது.  

சற்று நேரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வந்துவிட்டார். நியூசிலாந்து ஊடகவியலாளர்கள் சிலரும் வந்திருந்தனர். அரச இல்ல வளாகத்தில் நான் சந்தித்த நியூசிலாந்து ஊடகவியலாளரை அங்கும் சந்தித்தேன். எனக்கு ஒரே மகிழ்ச்சி, மெதுவாகக் கதையைக் கொடுத்து, தக்கா நடனத்தில் பாடப்பட்டவரைக் கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டேன். 

ஒரு சந்தோஷம், இலங்கைக்கு வருகைதருமாறு ஒரு சின்ன அழைப்புடன், அங்கிருந்து நாமிருவரும் பிரிந்துவிட்டோம். எம்மைப் போலவே, அவர்களும் மிக அவசரமாகச் செய்திகளை கொடுக்கவேண்டும் என்று புரிந்துகொண்டேன். 

அந்த ஊடகவியலாளர் எழுதுவதை நான் புரிந்துகொண்டேன். நான் எழுதும் இந்தக் கட்டுரையோ அல்லது செய்தியோ அவருக்குப் புரியாது என்பது மட்டுமே உண்மையாகும்.  

எனினும், தக்கா நடனத்துக்கான பாடலில்.. 

உன்னால் எவ்வளவு கடுமையாக முடியுமோ

எம்மால் எவ்வளவு கடுமையாக முடியுமோ அவ்வளவுக்கு 

இந்தப் பூமியை அதிரச்செய்! 

இல்லை, நான் உயிரோடு இருக்கிறேன். இந்த வாழ்க்கை என்னுடையது! 

நான் தோற்கடிக்கப்படுவேன்! நான் மரணிப்பேன்!

இல்லை, நான் எனது வாழ்கையை மீண்டும் பெறுகிறேன்! வாழ்க்கை என்னுடையது!

புகழ்பெற்ற மக்களுக்குப் பிறந்தவன் நான்

அவர்களுடைய மரபு, சூரியனைப் போன்று என்னை ஜொலிக்க வைக்கிறது! 

இணையாக வையுங்கள்! இணையாக வையுங்கள்!

உங்கள் ஒழுங்கில்! பிரகாசிக்கும் சூரியனுக்குள் இறுகப் பற்றுங்கள்!  

என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த விஜயத்தின் போது, பொன்டெரா பால்மா உற்பத்தி நிறுவனம், சீலோங் (Zealong) தேயிலைத் தோட்டம் மற்றும் அந்நாட்டு நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கும் நாங்கள் சென்றிருந்தோம்.  

Hobbiton Movie Set, Zealandia
(wildlife sanctuary) க்கும் சென்றிருந்தோம். பிரதமரின் இந்த விஜயத்தினால், அங்கிருந்த பச்சோந்திக்கு கிராக்கி அதிகரித்து விட்டது. 

அதன் உடலின் மேலே, முட்கள் போல் இருந்ததைத் தொட்டுப்பார்ப்பதற்கு எங்களுக்கு அனுமதி கிடைத்தது. நாங்கள், தொட்டுப்பார்த்தோம். அது முள் அல்ல, பஞ்சு போலவே இருந்தது. எனினும், அதைக் கையிலேந்தும் பாக்கியம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மட்டுமே கிடைத்தது. ஆகையால் அந்தப் பச்சோந்திக்கு மவுசு அதிகரித்துவிட்டது. 

 (முற்றும்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .