2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போதையால் தள்ளாடும் தமிழ் இளைஞர் சமூகம்

Johnsan Bastiampillai   / 2022 ஒக்டோபர் 13 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

புருஜோத்தமன் தங்கமயில்

 

 

 

வடக்கில், என்றைக்கும் இல்லாத அளவுக்கு போதைப்பொருள் பாவனை, கணிசமாக அதிகரித்திருப்பதாக வைத்தியத்துறையினரும் பாடசாலை சமூகத்தினரும் தெரிவிக்கின்றனர். இதனால், சமூகக் குற்றங்களும் இளவயதினரின் தொடர் மரணங்களும் பதிவாகி வருகின்றன. 

கடந்த சில மாதங்களில் மட்டும், போதைப்பொருள் பாவனையால் பத்துக்கும் அதிகமான இளவயதினர் நோய்வாய்ப்பட்டும் தற்கொலை செய்தும் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, நூற்றுக்கணக்கானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளிலும், போதை விடுவிப்பு நிலையங்களிலும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான நாள்கள், வடக்கு - கிழக்கில் போதைப்பொருட்கள் இலகுவாக கிடைப்பதற்கான சூழலை ஏற்படுத்தி விட்டன. ஆயுதப் போராட்ட காலத்தில், குறிப்பாக புலிகளின் காலத்தில், பனை மரத்திலிருந்து பெறப்படும் கள்ளும் சாராயமுமே, மது வகைகளாக தமிழ் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தன. 

ஆனால், புலிகளின் ஆட்சிக் கட்டமைப்பில் இருந்து, அரசாங்கத்தால் மீட்கப்பட்ட நிலப்பகுதிகளில், மதுபான நிலையங்கள் விரைவாக முளைத்தன. அது, பியர் உள்ளிட்ட மதுவகைகளை, இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கின. அது, வாழ்வின் ஒரு பகுதி எனும் நிலையை நோக்கிய திணிப்பு இடம்பெற்றது. 

இதன் அடுத்த கட்டம், மனிதனை உடனடியாக சுயநினைவை இழக்க வைக்கும் போதைப்பொருட்களின் திணிப்பில் வந்து நிற்கின்றது. கஞ்சா, ஹெரோயின், கூல் ஐஸ் என்று பல வகைப் போதைப்பொருட்களும், வடக்கு - கிழக்கின் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விநியோகிக்கப்படுகின்றன. அதுவும், யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில், போதைப்பொருள் விநியோகமும் பாவனையும் சர்வசாதாரணமான விடயங்களாக மாறிவிட்டன.

போதைப்பொருள் மாபியாக்கள், உலகம் பூராவும் இளவயதினரையே குறிவைத்து, தங்களது வியாபாரத்தை திறக்கின்றன. அதிலும் குறிப்பாக, பதின்ம வயதினரை போதைக்கு இரையாக்குகின்றார்கள். அந்த வயதில் போதைக்கு அடிமையாக்கிவிட்டால், போதை மாபியாக்களுக்கு அவர் வாழ்நாள் வாடிக்கையாளர். அப்படித்தான், இலங்கையிலும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தே, போதைப்பொருள் வர்த்தகம் விஸ்தரிக்கப்படுகின்றது. 

போதைப்பொருள் பாவித்த மாணவர்கள் மத்தியிலான அடிதடி, தென் இலங்கையில் அவ்வப்போது அரங்கேறுவதுண்டு. அந்த நிலை இன்றைக்கு வடக்கு - கிழக்கிலும் அரங்கேறத் தொடங்கிவிட்டது. 

பாடசாலை நாளில் இடைவேளையில், போதைப்பொருட்களை உட்கொண்டுவிட்டு, வகுப்பறைகளில் மாணவர்கள் வந்து அமர்கிறார்கள் என்பது, வடக்கின் பல ஆசிரியர்களினதும் குற்றச்சாட்டு. அவ்வாறான நிலை, இயல்பான வகுப்பறையை முழுவதுமாக நாசமாக்கி, மாணவர்கள் - ஆசிரியர்களுக்கு இடையிலான விரிசலை அதிகப்படுத்துகின்றது.

ஒரு கட்டத்தில், ஆசிரியர் பணியை  வாங்கும் ஊதியத்துக்கு வெறுமனே போதிக்கும் நிலைமைக்கு  மாற்றுகின்றது. ஏனெனில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இடையிலான கற்றல் - கற்பித்தல் என்பது கேள்விகள், சந்தேகங்கள் வழியாக நேர் செய்யப்பட வேண்டியது. 

ஆனால், போதைப்பொருட்களை உட்கொண்ட மாணவர்கள் அமர்ந்திருக்கும் வகுப்பறைகளில், எந்த ஆசிரியரும் மாணவர்களைக் கேள்விகள் கேட்பதில்லை. அவர்களிடம் பதில்களையும் எதிர்பார்ப்பதில்லை. ஏனெனில், மாணவர்கள் ஏதாவது செய்துவிடுவார்களோ என்கிற பயம்.

கிராமப்புற பாடசாலைகளில், இந்த நிலை ஓரளவுக்கு குறைவு. ஏனெனில், அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாணவர்களையும் தனிப்பட்ட ரீதியில் தெரியும். மாணவர்களில் நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றங்கள் தெரிந்தால், பெற்றோரை அழைத்து, விடயத்தைத் தெரிவித்து, எச்சரிக்க முடியும். 

ஆனால், நகர்புறத்திலுள்ள பிரபல பாடசாலைகளில், இவ்வாறான நிலையை பேண முடியாது. அதனால், ஆசிரியர்கள் தாமுண்டு தம் வேலையுண்டு என்று இருந்து விடுகிறார்கள்.

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பில், அரசாங்கம் தொடர்ச்சியாகப் பேசுவதுண்டு. ஆனால், அவை மேலோட்டமானவை. ஏனெனில், பாராளுமன்றத்துக்குள் இருக்கும் உறுப்பினர்களில் கணிசமானவர்கள், போதைப்பொருள் பாவனையாளர்கள் என்பது, அடிக்கடி பாராளுமன்றத்துக்குள் வெளிப்படுத்தப்படுவதுண்டு. அத்தோடு, போதை மாபியாக்களின் முக்கியஸ்தர்கள் சிலர், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றார்கள் என்பது குற்றச்சாட்டு. 

அவ்வாறான நிலையில், நாட்டில் போதைப்பொருள்  ஒழிப்பை அரசாங்கம் முறையாகச் செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. தென் இலங்கையிலேயே போதை பெரும் சீரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்க, வடக்கு - கிழக்கில் போதைப்பொருள் ஒழிப்பை அரச கட்டமைப்புகள் செய்துவிடும் என்று எதிர்பார்ப்பது நகைப்புக்குரியது.

ஏனெனில், தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களையும் உரிமைகளையும் ஆக்கிரமிக்கும் எண்ணத்தோடு இருக்கும் தென் இலங்கை, அதனை செய்வதற்கான இலகுவான வழியாக, போதைப்பொருள் பாவனையை கைக்கொள்கின்றது.

வடக்கு - கிழக்கில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்,  விற்பனையாளர்கள் என்று அடையாளம் காணப்பட்ட பலரும், வெளிப்படையாக உலாவி வருகிறார்கள். எப்போதாவது ஒரு சிலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டாலும் அவர்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான வழிவகைகளை, பொலிஸார் செய்வதில்லை என்பது குற்றச்சாட்டு. 

போதைப்பொருள் கடத்தலுக்காகக் கைது செய்யப்பட்ட பலரும், நீதிமன்றங்களில் நிறுத்தப்படாமலேயே விடுவிக்கப்படுகின்ற காட்சிகள் அடிக்கடி அரங்கேறுவதுண்டு.

அரச கட்டமைப்புகள்தான், தென் இலங்கையின் பௌத்த சிங்கள மேலாதிக்க மனநிலையோடு வடக்கு - கிழக்கின் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பை அணுகுகின்றன என்று பார்த்தால், தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளில் இருக்கும் சில சட்டத்தரணிகள், கஞ்சா கடத்தல்கார்களுக்கும், மாபியாக்களுக்கும் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிட்டு, விடுவிக்கும் காட்சிகள் தொடர்ச்சியாக அரங்கேறுவதுண்டு. 

சட்டத்தரணிகளின் தொழில் தர்மத்தை, இந்தப் பத்தியாளர் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஆனால், தமிழ்த் தேசிய போராட்டம் என்பது, அறத்தில் இருந்து எழுவது. அப்படியான அறத்தைப் பேணுவதற்கு, அதில் இயங்கும் நபர்கள் அறத்தோடு இருக்க வேண்டும். அந்த அறம், சட்டத்தரணிகளின் தொழில் தர்மத்தை பல நேரங்களில் கேள்விக்குள்ளாக்கிவிடும். 

ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் இருக்கும் சட்டத்தரணிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் மாபியாக்களையும் காப்பாற்‌ற கறுப்பு அங்கியை அணிவது என்பது, தமிழ்த் தேசிய போராட்டத்துக்கான அறத்தின் மீது ஆணி அடிப்பதற்கு ஒப்பானது.

வடக்கு - கிழக்கில் போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பு என்பது, சமூக கட்டமைப்புகளின் வீழ்ச்சி மற்றும் பொறுப்பின்மையின் வழியாக வருவதாகும். ஏனெனில், தமிழ்ச் சமூகக் கட்டமைப்பு என்பது, ஒவ்வொரு தனி மனிதனுக்குமான பொறுப்புணர்வை சரியாக போதிக்கவில்லை. மாறாக, மற்றவர்களின் உழைப்பில் தங்கி வாழும் மனநிலையையும், மற்றவர்களை சுரண்டி வாழும் போக்கிலித்தனத்தையும் கேள்விக்குள்ளாக்காமல் விட்டுவிட்டது. 

அதாவது, விழுமியங்கள் சார் அணுகுமுறையை, சமூகக் கட்டமைப்புகள் மக்கள் மத்தியில் வளர்த்தெடுக்காமல் காலாவதியாகிவிட்டன. அதனால், புறச் சக்திகள், தமிழ் மக்கள் மத்தியில் நுழைவது இலகுவாகிவிட்டது. பொறுப்பின்மையையும் சுரண்டல் மனநிலையையும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து முற்றாக விலக்கி வைக்க வேண்டும். இல்லையென்றால், போதைப்பொருள் பாவனையால் மாத்திமல்ல, சமூக குற்றங்களாலும் தமிழ் சூழல் இன்னும் மோசமாக தள்ளாடத் தொடங்கிவிடும்.

போலி கௌரவங்களுக்காக தமிழ் மக்களை ஆக்கிரமித்துவிட்ட போதை, சமூக குற்றங்களை கண்டுகொள்ளாமல் மூடி மறைத்துச் செயற்படுவது, சமூக விரோதச் செயற்பாடாகும். அவ்வாறான நிலையை தமிழ்த் தேசியத்துக்குள் இயங்கும் பல தரப்புகளும் தற்போது செய்து வருகின்றன. 

வடக்கு - கிழக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு, அரச கட்டமைப்பே காரணம் என்று குற்றஞ்சாட்டிவிட்டு விலகி ஓடுவது, சமூகப் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாகும். அரச கட்டமைப்புகள் மாத்திரம் காரணமல்ல; மாறாக, அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் தரப்புகள், தமிழ் மக்கள் மத்தியில் உண்டு. 

அந்தத் தரப்புகளை அடையாளப்படுத்தி, எச்சரிக்கை செய்வதுதான் தமிழ்த் தேசியத்துக்கான அர்ப்பணிப்பும் அறமும் ஆகும். ஏனெனில், தற்போது உயிரைக் கொடுத்து போராடுவதற்கு எந்தத் தமிழ்த் தலைவரும் தயார் இல்லை. 

அப்படியான நிலையில், குறைந்த பட்சம் அறத்தினை காக்கும் அரசியலுக்காக, அவர்கள் சில நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதில், முக்கியமானது போதைக்கு எதிராக நிலை. இல்லையென்றால், கண் முன்னாலேயே தமிழ்ச் சமூகம் மோசமாகச் சீரழிந்து போகும். அப்போது, அவர்களை அழிக்க வேறு யாரும் தேவை இருக்காது. தாங்களாகவே அழிந்து போய்விடுவார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .