2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மோதிக் கவிழ்ந்ததா ட்ரம்ப் ரயில்?

Thipaan   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு, இன்னும் 30 நாட்கள் கூட இல்லாத நிலையில், அந்தத் தேர்தலின் போக்கு, ஓரளவுக்குத் தெளிவாகியிருப்பதாகக் கருதப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்த ஹிலாரி கிளின்டன், கோடீஸ்வரரான டொனால்ட் ட்ரம்ப்பைத் தோற்கடிப்பாரென்ற ஓரளவு உறுதியான நம்பிக்கை, இப்போது தான் ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவு அனுபவமும் திறமையையும் கொண்ட ஒருவர், தேர்தலுக்கு இவ்வளவு நெருக்கமாக வந்து தான், தனது வெற்றியை ஓரளவு உறுதிப்படுத்த முடியுமா என்பது ஆச்சரியமாக இருந்தாலும், இம்முறை தேர்தல், ஆச்சரியங்களையும் வியப்புகளையும் ஏற்படுத்திய தேர்தலாக இருக்கையில், அவ்விடயத்தில் மாத்திரம் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? 

இந்தத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்த போது, அவரால் குறிப்பிட்டதொரு தாக்கத்தை ஏற்படுத்த முடியாதெனக் கருதப்பட்டது. ஆனால், அதிகமான ஆதரவை அவர் பெற, “அவரால் இவ்வாறு ஆதரவைப் பெற முடியும். ஆனால், குடியரசுக் கட்சியின் வேட்புமனுவைப் பெற முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், “குடியரசுக் கட்சியின் வேட்புமனுவைப் பெறலாம், ஜனாதிபதித் தேர்தலில் பெரிதாகத் தாக்கம் செலுத்த முடியாது”, பின்னர், “அவருக்கு ஆதரவு இருக்கலாம், ஆனால் தேர்தலை வெல்லுமளவுக்கு அவரால் செல்ல முடியாது” என்று, அந்த மாற்றம் தொடர்ந்தது. பின்னர் ஒரு கட்டத்தில், தேசிய ரீதியான கருத்துக்கணிப்புகளில், ஹிலாரி கிளின்டனை தோற்கடிப்பது போலவும் வெளிப்படுத்தப்பட்டது. ஆகவே, அது தொடர்பான அச்சம் ஏற்பட்டிருந்ததென்னவோ உண்மை தான். தற்செயலாக அவர், ஜனாதிபதியாக வந்துவிட்டால் என்ன செய்வதென்பது, கணிசமானோரிடம் காணப்பட்ட முக்கியமான கேள்வியாக இருந்தது. 

இந்தத் தேர்தலில், ட்ரம்ப்பின் சிறப்பான பெறுபேறுகளுக்கு என்ன காரணமென்பது, வியப்பானதொன்றாகவே இருந்தது. உறுதியான கொள்கைகள் ஏதும் அவரிடம் கிடையாது, மென்மையாகப் பேசுபவரும் கிடையாது, அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்பவரும் கிடையாது. மாறாக, உலகெங்கும் அண்மைய சில ஆண்டுகளாக வரவேற்புப் பெற்றிருக்கும், கடும்போக்கு வலதுசாரிக் கொள்கைகளை அவர் கையிலெடுத்திருந்தார். குறிப்பாக, அகதிகள் அல்லது குடியேற்றவாசிகளுக்கெதிரான கொள்கையை முன்னிறுத்தி, கடும்போக்குத் தேசிய வாதத்தை ஊட்டி வளர்த்திருந்தார். 

வழக்கமான அரசியல்வாதிகளில் நம்பிக்கையிழந்த ஒரு பகுதியினர், வெளிப்படையாகப் பேசும், வெளியாள் ஒருவரை, ஜனாதிபதிப் பதவிக்கு அனுப்ப வேண்டுமென எண்ணினர். அதன் விளைவாகவே, டொனால்ட் ட்ரம்ப்புக்கான ஆதரவு அதிகரித்தது. 

அப்படிப்பட்ட ட்ரம்ப்பின் ஜனாதிபதிக் கனவு, மீள முடியாத அடியொன்றைச் சந்தித்திருப்பதாகக் கருதப்படுகிறது. பெண்களை இழிவுபடுத்தும் விடயங்கள்; பெண்களின் அனுமதியின்றி, அவர்களை எவ்வாறு பாலியல் ரீதியாக அணுகுகிறார்; பிரபல்யமாக இருப்பதன் காரணமாக, எதைத் செய்தாலும் அதிலிருந்து தப்பி விடலாம் போன்ற விடயங்களை, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பில்லி புஷ்ஷுடன், ட்ரம்ப் கலந்துரையாடுவது, அதில் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்தே, முன்னரெப்போதுமில்லாதவாறு, அவருக்கான எதிர்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே அவர் மீது விருப்பமற்றுக் காணப்பட்ட குடியரசுக் கட்சியின் உயர்பீடத்தைச் சேர்ந்த பலர், இந்தக் காணொளியைத் தொடர்ந்து, பகிரங்கமான விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர். “இது தான் எல்லை. இதற்கு மேல் பொறுக்க முடியாது” என்றவாறு, அவர்களது கருத்துக் காணப்படுகிறது. 

இந்த விடயம், சிறிது குழப்பத்தைக் கூடத் தருகிறது. 17 மாதங்களாக நீடிக்கும் ட்ரம்ப்பின் பிரசாரத்தில், அவதூறான விடயத்தை அவர் வெளிப்படுத்தும் முதலாவது சந்தர்ப்பம் இதுவன்று. உண்மையில், அவரது முதலாவது பிரசாரக் கூட்டத்திலேயே அவர், மெக்ஸிக்கோவிலிருந்து வருபவர்கள் வன்புணர்வாளர்கள், கொலை செய்பவர்கள், போதைமருந்து கடத்துபவர்கள், ஏனைய குற்றங்களைச் செய்பவர்கள் என்று தெரிவித்துத் தான், அவரது பிரசாரமே தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, அவரது அவதூறுகள் தொடர்ந்தன. அவற்றுள் சில: குடியரசுக் கட்சியில் தனது போட்டியாளரான கார்லி பியோரினாவின் முகம் காரணமாக, அவருக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்றமை; ஐக்கிய அமெரிக்காவுக்குள் வருவதற்கு, முஸ்லிம்களுக்குத் தடை விதிக்கப் போவதாக அறிவித்தமை; வியட்னாம் போரில் சிறைப்பிடிக்கப்பட்ட போர் நாயகனாக ஜோன் மக்கெய்ன், உண்மையில் போர் நாயகன் கிடையாது என்றமை; குடியரசுக் கட்சி விவாதத்தில், தன் மீது கடினமான வினாக்களைத் தொடுத்ததாகத் தெரிவித்து, பெண் ஊடகவியலாளரான மேகன் கெலியை, தவறான வார்த்தைகளால் விளித்தமை, அவருக்கு மாதவிடாய்க் காலம் நடப்பதாகவும், அதனாலேயே அவரது வினாத் தொடுகை, அவ்வாறு அமைந்ததாகவும் தெரிவித்தமை; வெள்ளையின ஆதிக்கத்தை வலியுறுத்தும் இனவாதக் குழுவால் வழங்கப்பட்ட ஆதரவை, நீதிபதியொருவர் மெக்ஸிக்க பாரம்பரியத்தைக் கொண்டிருந்தமையின் காரணமாக, தனக்கெதிராகச் செயற்படுவார் என்றமை; அங்கவீனமான ஊடகவியலாளரின் அங்கவீனத்தைக் கேலி செய்தமை; தன்னை எதிர்த்தார்கள் என்றமைக்காக, ஈராக் போரில் உயிரிழந்த முஸ்லிம் படைவீரரின் பெற்றோரை அவமானப்படுத்தியமை; முன்னைய வன்புணர்வு வழக்கொன்றில், தவறாகத் தீர்ப்பு வழங்கப்பட்டு, சிறைவாசம் அனுபவித்துப் பின்னர் விடுவிக்கப்பட்ட கறுப்பின இளைஞர்கள் ஐவரும், இன்னமும் குற்றவாளிகளே என்றமை. 

மேலே குறிப்பிடப்பட்டவை, அவரது பிரசாரக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அவதூறுகளில் சில மாத்திரமே. பிரசாரம் ஆரம்பிப்பதற்கு முன்னர், தொலைக்காட்சித் தொகுப்பாளராகவோ அல்லது சாதாரண பிரஜையாகவோ இருந்த போது அவர் மேற்கொண்ட அவதூறுகள், தனியே பட்டியலிடப்பட வேண்டும். அத்தோடு, பிரசாரக் காலத்தில், தனது டுவிட்டர் கணக்கினூடாக அவர் மேற்கொண்ட அவதூறுகள், எண்ணிலடங்கா. ஆகவே தான், தற்போது வெளியான காணொளியால் ஏற்பட்டுள்ள பாரிய எதிர்ப்புக்கான காரணங்கள், சற்று விசித்திரமாகக் காணப்படுகின்றன. 

முன்னர் வெளிப்படுத்தப்பட்ட அவதூறுகளுக்கு மத்தியிலும் அவருக்கு ஆதரவை வழங்கிவிட்டு, தற்போது மாத்திரம், அவர் தனது முதலாவது தவறைச் செய்துவிட்டது போன்று கருத்துகளை வெளியிடுவது, குடியரசுக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மீது கேள்வியெழுப்ப வைக்கிறது. இதற்கு, குடியரசுக் கட்சியின் அண்மைக்காலப் போக்குச் சம்பந்தமாகக் காணப்படும் விமர்சனத்தை ஆராய்வது பொருத்தமானது. தேசப்பற்று மிகுந்த கட்சி என வர்ணிக்கப்படும் குடியரசுக் கட்சி, தவறான பாதையொன்றையே அண்மைக்காலத்தில் முன்னெடுத்தது. அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக பராக் ஒபாமா தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் அதற்கு முன்னரும், அவர் மீதான இனரீதியான அவதூறுகள் தொடர்வதை, குடியரசுக் கட்சி அனுமதித்தது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. பராக் ஒபாமா, அமெரிக்காவில் பிறக்கவில்லை, கென்யாவில் தான் பிறந்தார் என, டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்ட போது, அவ்வாறான தவறான, இனத்தை அவமானப்படுத்தும் விதமான பிரசாரங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை, குடியரசுக் கட்சி எடுக்கவில்லை. அக்கட்சியைச் சேர்ந்த சிலர், மேற்படி இனவாதப் பிரசாரத்தைத் தொடர்ந்த போதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அக்கட்சி தவறியிருந்தது. மாறாக, தாங்கள் வாக்குகளை வெல்வதற்கு, மேற்படி பிரசாரம் உதவுமென, அவர்கள் எண்ணினர். இப்போதும் கூட, ட்ரம்ப்பின் ஆதரவாளர்களில் 20 சதவீதம் பேர், அடிமைத் தொழிலுக்குத் தடை விதிக்கப்பட்டமை தவறு என்கின்றனர்; அவர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், ஜனாதிபதி ஒபாமா, கென்யாவில் பிறந்தார் என்று நம்புகின்றனர். ஆகவே, குடியரசுக் கட்சி ஊட்டி வளர்ந்த இனவாதம் தான், தற்போது ட்ரம்ப் என்ற வடிவில் வந்து நிற்கிறது. 

இந்நிலையில் தான், பெண்களின் அடிப்படையான சுகாதார உரிமையாக, மேற்கத்தேய நாடுகளில் ஏற்கப்பட்டுள்ள கருக்கலைப்புக்கெதிரான கொள்கையுடைய பெரும்பான்மை அரசியல்வாதிகளைத் தன்னகத்தே கொண்டிருக்கின்ற குடியரசுக் கட்சி, பெண்கள் மீது அக்கறை கொண்டவர்கள் போன்று திடீரென வெளிப்படுத்துவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. ட்ரம்ப்பிடமிருந்து விலகுவதற்கு, அக்கட்சியின் உயர்பீடத்தினர் விரும்பியிருந்தனர். ஆனால், அவரது பிரபல்யத்தன்மை காரணமாக, அவரை எதிர்க்க விரும்பாத அவர்கள், ஆதரவு தெரிவித்தனர். தற்போது, டொனால்ட் ட்ரம்ப் தோற்று விடுவார் என்ற நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக, இது தான் சரியான தருணமெனப் பார்த்து, தங்களது ஆதரவை, உயர்பீடத்தினர் விலக்கிக் கொண்டுள்ளனர். வெறுமனே, வாக்கு வங்கி அரசியலே தவிர, பெண்கள் மீதான கரிசனையேதும் கிடையாது. ஆனால், உயர்பீடத்தின் இந்த விமர்சனங்கள், டரம்ப்பை நிச்சயமாகப் பாதிக்கும். 

ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள், தங்கள் அனைவரையும் “ட்ரம்ப் ரயில்” என்று தான் அழைப்பார்கள். “ட்ரம்ப் ரயிலில் இணைந்து கொள்ளுங்கள்” என்று, பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால், தற்போதைய நிலையை வைத்துப் பார்க்கும் போது, பாரிய பாறையொன்றுடன் மோதியுள்ள ட்ரம்ப் ரயில், தடம்புரண்டுள்ளது போன்று தான் தெரிகிறது. இதிலிருந்து, அவரால் மீள முடியுமா என்பது சந்தேகமே. ஆனால், வெல்லாமல் விடப் போவதில்லையென, ட்ரம்ப் தெரிவித்து வருகிறார். 

இதில் குறிப்பிடத்தக்கதாக, பெண்கள் பற்றிய இழிவான கருத்துகளை, ட்ரம்ப்போடு இணைந்து கதைத்துக் கொண்டிருந்த பில்லி புஷ், அவரது தொலைக்காட்சி நிறுவனத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளார். அவர், மீள இணைத்துக் கொள்ளப்பட மாட்டார் என்ற சமிக்ஞையை, அவரது தொலைக்காட்சி நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் ட்ரம்ப், இன்னமும் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகவே இருக்கிறார். ஆகவே, அமெரிக்காவில் ஜனாதிபதியாக இருப்பதற்குத் தேவையான தகுதியை விட, தொலைக்காட்சித் தொகுப்பாளராக இருப்பதற்கு அதிகமான தகுதி தேவையானது போலிருக்கிறது.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X