2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மக்களைத் தெளிவுபடுத்தாமல் நிறைவேற்றப்பட்ட ‘சீனக்கனவு’

Johnsan Bastiampillai   / 2021 மே 27 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

சீனாவில் உருவான அல்லது உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய உருமாறிகள், இலங்கையில் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையில், சீனாவின் கனவுத் திட்டமான, கொழும்புத் துறைமுக நகர் சட்டமூலம், மிகவும் சூட்சுமமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரும் வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளாகியிருந்த இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக, 149 எம்.பிக்கள் வாக்களித்துள்ளனர். 58 பேர் வாக்குகளை எதிராகப் பதிவு செய்துள்ளனர். மற்றைய எம்.பிக்களில் அநேகர், வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இருவருக்கு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது.  

இலங்கை அரசியல் சூழலில், ஒரு வழக்கம் இருக்கின்றது. அதாவது, ஒரு சட்டமூலம் அல்லது செயற்றிட்ட முன்மொழிவு முன்வைக்கப்படுகின்ற போது, ஆளும் தரப்பில் இருப்பவர்களும், ஆளும் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பவர்களும் அதற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். அதுபோல, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு, ஆளும் தரப்புடன் முரண்பட்டு நிற்கின்ற எம்.பிக்கள், அதற்கு எதிராக வாக்களிப்பார்கள். 

அதைவிடுத்து, ஆட்சியாளர்களோ ஆதரவு அல்லது எதிர்ப்புத் தெரிவிக்கின்ற எம்.பிக்களோ, சட்டமூலத்தின் ஆழ அகலங்களைப் படித்து, அது நாட்டின் இறைமைக்கும் மக்களுக்கும் எவ்விதமான சாதக பாதகங்களைக் கொண்டு வரும் என்பதை ஆய்ந்தறிந்து, தீர்க்கதரிசனத்துடன் முடிவெடுக்கும் பண்பாடோ திறனோ, இலங்கையின் அரசியல் செல்நெறியில் இல்லை எனலாம்; அல்லது, மிகக் குறைவு. 

ஒருவேளை, சஜித் பிரேமதாஸ, ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் ஆட்சியில் இருந்தாலும் கூட, இதுதான் நடந்திருக்கும். சீன முதலீட்டிலான கொழும்புத் துறைமுக நகர், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என்று, அவர்கள் கூறியிருப்பார்கள். 

இந்தச் சட்டமூலம் நிறைவேறினால், சீனாவுக்கு தனிநாடு கொடுக்கப்பட்டது போலாகிவிடும்; இலங்கையை கட்டம் கட்டமாக, சீனா கைப்பற்றி விடும் என்று, ராஜபக்‌ஷர்கள் பெரும் பிரளயத்தை உண்டுபண்ணி இருப்பார்கள். நாட்டுப்பற்றாளர்களை இணைத்துக் கொண்டு, ஆட்சியையே புரட்டிப் போட்டிருப்பார்கள். அது, இன்று மறுதலையாக நடந்துள்ளது. அவ்வளவுதான்!

ஆனால், எதிரணி பலமற்று இருப்பதாலும் தேசப்பற்றாளர்கள்,  இனவாதிகளைப் பயன்படுத்தும் கலை இவர்களுக்குத் தெரியாமல் இருப்பதாலும், கொரோனா வைரஸின் பக்கம், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டு, இச்சட்டமூலத்தை மிகச் சூட்சுமமாக நிறைவேற்றி இருக்கின்றார்கள். 

போருக்குப் பின்னரான அபிவிருத்தியில், ராஜபக்‌ஷ ஆட்சிக்கு பெரும் பங்கிருக்கின்றது. அந்தவகையில், சீனத் துறைமுக நகரும் பெரும் பொருளாதார அனுகூலங்களைக் கொண்டு வரலாம். இலங்கையருக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பு, முதலீடுகள், அந்நியச் செலாவணி வருமானம் எனப் பலதரப்பட்ட அனுகூலங்களை, நமது பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் என, அரசாங்கம் கூறுவதை மறுப்பதற்கில்லை.

ஆனால், தலைநகருக்கு அருகிலான கடற்பரப்பில், ஒரு நகரை உருவாக்கி, அதன் முழு அதிகாரங்களையும் கையளிப்பதானது, கிட்டத்தட்ட தனிஆளுகைக்கான ஓர் ஆட்புலத்தை, சீனாவுக்கு 99 வருடங்களுக்கு எழுதிக் கொடுப்பதைப் போன்றது என்றே, மறுதரப்பில் கூறப்படுகின்றது. 

இது, இலங்கையின் ஆட்புல எல்லை, இறையாண்மை ஆகியவற்றுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைவதுடன், இலங்கை இன்னும் சில தசாப்தங்களில், சீனாவின் நவீன,  நிழல் கொலனித்துவத்துக்குள் படிப்படியாக வந்துவிடலாம் என்றே, இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். 

எனவே, இந்த விடயம் குறித்து, நாட்டு மக்களுக்கு நேர்மையான முறையில் தெளிவுபடுத்துகின்ற தார்மிகக் கடமை, அரசாங்கத்துக்கு இருக்கின்றது. அதேபோல், இவற்றை எல்லாம் பரிசீலித்துப் பார்த்தே, பாராளுமன்ற உறுப்பினர்கள், தமது முடிவை எடுக்க வேண்டும். 

ஆட்சியாளர்கள், தமது அரசியல் நலனுக்காக, நாட்டுக்குப் பாதகமான நகர்வுகளைச் செய்யலாம். இருந்தபோதிலும்,  சிங்கள மக்களுக்குப் பாதகமான நிலைப்பாடுகளை, பொதுவாகவே எடுக்கமாட்டார்கள் எனக் கருதலாம். ஆயினும், சிறுபான்மை மக்கள் விடயத்தில், அப்படி நம்பிக் கொண்டிருக்க முடியாது.

எனவே, தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் இவற்றை முதலில் விளங்கிக் கொண்டு, மக்களைத் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளனர். ஆனால், இதை ஒரு பெரிய விடயமாக, அவர்கள் கருதியதே இல்லை. குறிப்பாக, முஸ்லிம் எம்.கிக்களும் ஒருசில தமிழ் எம்.பிக்களும், இவ்விதமே தமது ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர். 

முஸ்லிம் எம்.பிக்கள், பொதுவாகவே சட்டமூலங்களின் ஆழ அகலங்களை அறிந்து கொண்டு, ஆதரவளித்த சந்தர்ப்பங்களோ எதிராக வாக்களித்த வரலாறுகளோ, மிக அரிதாகும். அரசாங்கத்தை எதிர்ப்பதாக இல்லை என்பது உள்ளிட்ட ‘வேறு’  காரணங்களே, அவர்களது தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்துகின்றன. சில தமிழ் எம்.பிக்களும் இவ்வகைக்குள் அடங்குகின்றனர்.

பாராளுமன்றத்துக்குக் கொண்டு வரப்படும் ஒரு சட்டமூலம், பிரேரணை குறித்து, ஒரு சில முஸ்லிம் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மட்டுமே வாசித்து, விளங்கிக் கொள்கின்றனர். ஆனால், தமக்கு வாக்களித்த மக்களுக்குத் தெளிவுபடுத்தும் முஸ்லிம் எம்.பிக்கள் என்று பார்த்தால், ஒருவரைக்கூட கண்டுபிடிக்க முடியாது. 

தேர்தல் வரும்போது, எப்படி மக்களைச் சமாளிக்கலாம் என்பதை மட்டும், நன்கு கற்றுக் கொண்டுள்ளனர். மறுபுறத்தில், மக்களும் தமது பிரதிநிதிகள் மிகவும் புத்திசாலிகள்; எனவே, எந்தத் தீர்மானத்தை அவர்கள் எடுத்தாலும், சரியாகத்தான் இருக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். 

கொழும்புக்கு மேற்காக உள்ள கடற்பரப்பை நிரப்பி, துறைமுக நகரொன்றை அமைப்பதற்கான செயற்றிட்டத்துக்கு, 2014ஆம் ஆண்டு, சீனாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம், இதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. 2015இல் ஆட்சிக்கு வந்த மைத்திரி - ரணில் நல்லாட்சி அரசாங்கம் கூட, இச் செயற்றிட்டத்தைத் தடுத்து நிறுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

இந்த நிலையிலேயே, மீண்டும் கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கம், இப்போது அதற்கான சட்டமூலத்தை நிறைவேற்றி உள்ளது. துறைமுக நகர் தொடர்பான விசேட சட்ட ஏற்பாடுகள், விதிமுறைகளை உள்ளடக்கிய இச் சட்டமூலம், பாராளுமன்றத்துக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்னதாகவே, பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியிருந்தது.  

துறைமுக நகருக்கான தனியானதொரு சட்டமூலத்தை இயற்றி, அதிகாரத்தை வழங்குவது என்பது, விடுதலைப் புலிகள் கோரிய தனிநாட்டை வழங்குவதைப் போன்றது என்ற கருத்துகள், இன்று வரையும் முன்வைக்கப்படுகின்றன. பிரபாகரன் கோராத அதிகாரங்கள், சீனாவுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. 

ஆளும்தரப்பில் உள்ளவரும், தேசியவாதிகளுக்கு மிக நெருக்கமானவருமான விஜேயதாச ராஜபக்‌ஷ, இதை ‘தனிநாடு’ என்று சொன்னார். இது பெரும் சலசலப்பையும்  ஆட்சியாளர்களுக்கு ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையிலேயே, ராஜபக்‌ஷர்களின் ஆட்சி அமைவதில், முக்கிய பங்காற்றிய முறுத்தொட்டுவே ஆனந்த தேரர், துறைமுக நகருக்கு எதிராகக் குரல் கொடுத்தார். “எமது பேச்சைக் கேட்காவிட்டால், ஆட்சியைக் கவிழ்ப்போம்” என்று தேசியவாத சக்திகள் உரத்த தொனியில் அரசாங்கத்தை எச்சரித்தன. 

சட்டமூலம் பாராளுமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து, அதற்கெதிராக உயர்நீதிமன்றில் 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான விசாரணைகளின் பின்னர், உயர்நீதிமன்றத் தீர்ப்பு, சபாநாயகருக்கு அனுப்பப்பட்டது. 

இதன்படி, துறைமுக நகர் சட்டமூலத்தில் உள்ள சில சரத்துகளை, அப்படியே நிறைவேற்றுவது என்றால், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. எனவே, அத்திருத்தங்களை மேற்கொள்வதாக அரசாங்கம் உறுதியளித்தது. அதற்கமைய திருத்த முன்மொழிவுகளுடன் இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போல, ஆளும் அரசாங்கத்துடனான உறவைப் பொறுத்தே, இச் சட்டமூலத்துக்கான ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலைப்பாட்டை, முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும், ஒருசில தமிழ் எம்.பிக்களும் எடுத்துள்ளனர். 

இவர்களில் அநேகமான எம்.பிக்கள், சட்டமூலம் பற்றிய உயர்நீதிமன்ற வியாக்கியானம் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, தமது நிலைப்பாடு குறித்த முடிவுக்கு வந்துவிட்டனர். 

வழக்கத்துக்கு மாறாகச் சிலர் வாக்களித்துள்ளனர். குறிப்பாக, ராஜபக்‌ஷ எதிர்ப்பு கோஷங்களை முன்னிறுத்தி எம்.பியாகிய, மக்கள் காங்கிரஸின் அலிசப்ரி ரஹீம், இஷாக் ரஹ்மான் இருவரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். 

தடுப்புக்காவலில் இருந்தாலும், ரிஷாட் பதியுதீன் எதிர்த்து வாக்களித்துள்ளார். எதிரணியிலுள்ள முஸ்லிம் கட்சிகளின் ஏனைய எம்.பிக்களும் ஆதரவளிக்கவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் எதிர்த்துள்ளது. 

இதையெல்லாம் தாண்டி, 58 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசியவாதிகளையும் தேசப்பற்றாளர்களையும் உள்ளடக்கியதே இந்த அரசாங்கம் என்று கூறிக்கொள்கின்ற இவ்வரசாங்கம், இச் சட்டமூலத்தைக் கொண்டு வந்தமை ஆச்சரியமானது. கடைசிக் கட்டத்தில், தேசப்பற்று சக்திகள் அடங்கிப் போனமை அதைவிட ஆச்சரியமானது. 

அரசாங்கமும் சீனாவும் இதை ஒரு வெற்றியாகக் கொண்டாடுகின்றன. இதை வாபஸ் பெறுமாறு எதிரணி கோருகின்றது. சாதாரண மக்களுக்கு, இதில் என்ன உள்ளது, என்ன நடக்கப் போகின்றது என்று, ஒன்றும் புரியவில்லை. 

துறைமுக நகர் திட்டத்தில் சாதகமும் உண்டு; பாதகமும் உண்டு. இவற்றுள் எதை, எது மேவும் என்பதை, மக்கள் முழுமையாக பட்டறிந்துகொள்ள இன்னும் 20 வருடங்கள் செல்லலாம். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .