Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் இடையிலான போர் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் காலத்திலும் போர்க் களத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகப் பல தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் குற்றஞ்சாட்டின. ஆனால், அவ்வாறு எதுவும் இடம்பெறுவதில்லை என்பதே ஒன்றன் பின் ஒன்றாகப் பதவிக்கு வந்த அரசாங்கங்களின் வாதமாக இருந்தது.
தென் பகுதியில், மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் அரச படையினருக்கும் இடையிலான மோதல்கள் இடம்பெற்ற போது ஆயிரக் கணக்கில் சாதாரண மக்கள் கொல்லப்பட்டு, அவர்களின் சடலங்கள் வீதியோரங்களில் போடப்பட்டன. வடக்கில் அதை விட பயங்கரப் போர் நடைபெற்றும், தென் பகுதியில் அந்தச் சடலங்களைக் கண்ட மக்களில் பலர், வடக்கில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என்ற அரசாங்கத்தின் பிரசாரத்தை நம்பவே விரும்புகின்றனர்.
தென் பகுதியில், ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்படும் போது அந்தச் சடலங்களின் படங்களை எடுத்துக் கொண்டு ஜெனீவா சென்ற மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள், தாம் பதவிக்கு வந்தபோது வடக்கில் பூஜ்ஜிய சேதக் கொள்கையை (Zero casuality policy) கடைப்பிடிப்பதாக உலகுக்குக் கூறினர்.
ஆனால், சர்வதேச நெருக்குவாரம் அதிகரிக்கவே, மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவென ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல ஆணைக்குழுக்களை நியமித்தார்.
அவற்றில் இரண்டு ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் கடந்த வாரம் புதிய அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இது அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செய்த் ராத் அல் ஹுஸைன், இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையினதும், அதன் பின்னர் அமெரிக்கா தலைமையில் பல நாடுகளால் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையினதும் விளைவாகும்.
மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் அறிக்கையிலும் மேற்படி பிரேரணையிலும் இந்த இரண்டு அறிக்கைகளும் வெளியிடப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இரண்டு அறிக்கைகளும்; வெளியிடப்படாத போதிலும் தாம் உதலாகம ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியொன்றை பெற்றுக் கொண்டதாக மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் தமது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை, மூதூரில் ஏசிஎப் (ACF) என்னும் பிரெஞ்சு தொண்டர் நிறுவனத்தைச் சேர்ந்த 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டமை, முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டமை, போன்ற 16 சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி உதலாகமவின் தலமையிலான ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தல் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் அறிக்கையாகும். காணாமற் போனோர் தொடர்பாகவும் போரின் இறுதிக் கட்டத்தில் சாதாரண மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாகவும் விசாரணை செய்த நீதிபதி பரணகமவின் தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கை மற்றையதாகும்.
பரணகம ஆணைக்குழு, காணாமற் போனோர் தொடர்பாகவும் கொல்லப்பட்ட சாதாரண மக்கள் தொடர்பாகவும் இரண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், தமது இரண்டாவது பணியான சாதாரண மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பான அறிக்கையை மட்டுமே அந்த ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளது.
கடந்த மாதம் மனித உரிமை உயர் ஸ்தானிகர் தமது அறிக்கையைச் சமர்ப்பித்ததை அடுத்தும், மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னரும், தேர்தல்களில் படுதோல்வியுற்றிருந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களுக்குப் புதியதோர் துருப்புச் சீட்டுக் கிடைத்திருக்கிறது. அவர்கள், அவ் அறிக்கையையும் பிரேரணையையும் பாவித்து, சிங்கள மக்களின் உணர்வுகளைத்
தூண்டி, மக்கள் ஆதரவைத் தேட முயற்சிக்கிறார்கள். அந்த நிலையில் தான் அரசாங்கம் இந்த இரு அறிக்கைகளையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
மக்கள் ஆதரவைத் திரட்டும் தமது முயற்சியில் ஓரங்கமாகவே, ஐரோப்பிய நாடுகளில் வாழும் சிங்கள மக்கள் மத்தியில் பல கூட்டங்களை நடத்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச திட்டமிட்டிருந்தார். அதற்காகச் செல்லும் வழியிலேயே செல்லுபடியற்ற கடவுச்சீட்டை எடுத்துச் சென்று மாட்டிக் கொண்டார்.
இந்தக் கடவுச்சீட்டு காணாமற்போனதாகவும் அதற்குப் பதிலாக தாம் மற்றொரு கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டதாகவும் பின்னர் பழைய கடவுச்சீட்டுக் கிடைத்ததாகவும் தவறுதலாகத் தாம் அதனை விமான நிலையத்துக்கு எடுத்துச் சென்றதாகவும் வீரவன்ச கூறியிருக்கிறார். தமது கடவுச்சீட்டு காணாமற்போனதாகக் கூறியே அவர் புதிய கடவுச் சீட்டை பெற்றிருக்கிறார்;. ஒரு கடவுச்சீட்டு காணாமற் போனதாக அறிவித்த உடனேயே, குடிவரவு மற்றம் குடியகல்வுத் திணைக்களம் அதனை இரத்துச் செய்யும் என்பதை வீரவன்ச அறியாமல் இருக்க முடியாது. அவ்வாறிருக்க, பின்னர் அது கிடைத்தாலும் அவர் ஏன் அதனை விமான நிலையத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்?
அது தவறுதலாக இடம்பெற்றதாக அவர் கூறுகிறார். அவருக்குப் புதிய கடவுச்சீட்டு வழங்கப்பட்டு பல நாட்கள் சென்றிருந்தால் இவ்;வாறானதோர் குழப்பம் இடம்பெறுவதற்கு ஓரளவு இடமுண்டு. ஆனால், அவர் வெளிநாடு செல்ல விமான நிலையத்துக்குச் சென்ற அன்றே புதிய கடவுச்சீட்டு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மறுபுறத்தில் பழைய கடவுச்சீட்டினால் வெளிநாடு செல்ல முடியாது என்பது அவருக்குத் தெரியும். அவ்வாறு இருக்க அவர் ஏன் அதனை எடுத்துச் செல்ல வேண்டும்?
தாம் தவறுதலாக இரத்துச் செய்யப்பட்ட கடவுச்சீட்டை எடுத்துச் சென்றதாகக் கூறும் வீரவன்ச, தமது பயணத்தைத் தடுத்ததாக அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டுகிறார். இரத்துச் செய்யப்பட்ட கடவுச் சீட்டின் மூலம் தமக்கு வெளிநாடு செல்ல இடமளிக்க வேண்டும் என அவர் கூறுகிறாரா? அல்லது பிரச்சினையொன்றை உருவாக்குவதற்காக வேண்டுமென்றே இரத்துச் செய்யப்பட்ட கடவுச் சீட்டை அவர் எடுத்துச் சென்றாரா?
மஹிந்த ராஜபக்ஷவின் குழுவினர் இந்த விடயத்தையும் மனித உரிமை தொடர்பிலான தமது பிரசாரத்துக்காக உபயோகிக்கிறார்கள் என்பதே இதனால் தெரிகிறது. இந்த பிரசாரத்தின் போது அவர்கள் சில பாரதூரமான தவறான கருத்துக்களையும் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்கிறார்கள். அதேவேளை வீரவன்சவின் விடயத்திலும் மனித உரிமை விடயத்திலும் அவர்களது கொள்கை ஒன்று போல் தான் இருக்கிறது. குற்றம் நடந்தாலும் தண்டிக்கக் கூடாது என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது.
ஆணைக்குழுக்கள் போன்ற உயர் மட்டக் குழுக்களை நியமித்துவிட்டு அவற்றின் அறிக்கைகளை வெளியிடாமல் இருப்பது மஹிந்தவின் பழக்கமாக இருக்கிறது போலும். அவரது முதலாவது பதவிக் காலத்தில், அவர் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக
சர்வகட்சி மாநாடொன்றைக் கூட்டினார். அந்த மாநாட்டின் மூலம் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவின் தலைமையில் சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவை நியமித்தார். அக் குழு ஒரு வருடத்துக்கு மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தி, ஓர் அறிக்கையை ஜனாதிபதி மஹிந்தவிடம் கையளித்தது. அவ்வளவு தான். அந்த அறிக்கை கபளீகரமாகிவிட்டது.
அதேபோல் தான் நீதியரசர் உதலாகம நீண்ட காலமாக விசாரணை நடத்திவிட்டு, அறிக்கையொன்றை தயாரித்து மஹிந்தவிடம் கையளித்தார். அதுவும் மாயமாய் மறைந்துவிட்டது. பின்னர் கடந்த வாரம் தான் புதிய அரசாங்கத்தினால் அது வெளியிடப்பட்டது.
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை ஏதோ ஒரு பயங்கரமான அறிக்கையாக எடுத்துக் காட்ட மஹிந்தவின் ஆதரவாளர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால், அந்த அறிக்கை மஹிந்தவினால் நியமிக்கப்பட்ட பரணகம, உதலாகம ஆணைக்குழுக்களினதும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினதும் அறிக்கைகளை விட வித்தியாசமானதல்ல. இவ் அனைத்து அறிக்கைகளும் போர் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரணை செய்யவேண்டும் என்றே கூறுகின்றன.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்ற அரசாங்கத்தின் சில தலைவர்களும், அண்மைக் காலம் வரை மஹிந்தவை ஆதரித்து வந்த அமைச்சர் டிலான் பெரேராவும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் அறிக்கையை விட உதலாகம, பரணகம அறிக்கைகள் பாரதூரமானவை எனக் கூறியிருக்கின்றனர். ஒரு வகையில் அது உண்மை தான்.
உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் மனித உரிமை மீறல்கள் பொதுவாக குறிப்பிடப்பட்டு அவை சம்பவ ரீதியாக விசாரணை செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பரணகம அறிக்கையில் பல பாரதூரமான சம்பவங்கள் சம்பவ ரீதியாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக போரின் இறுதி நாட்களில் வெள்ளைக் கொடி தாங்கி வந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, சனல் 4 தொலைக்காட்சி மூலம் காட்டப்பட்ட காட்சிகள் மற்றும் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, ஆகியவற்றைப் பற்றி நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பரணகம அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்களைப் பற்றி நீதிமன்றங்கள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என நல்லிணக்க ஆணைக்குழுவும் பரிந்துரை செய்திருந்தது.
பரணகம அறிக்கையை மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்குமாறு மஹிந்தவின் ஆதரவாளர்கள் கடந்த மாதம் அப் பேரவை கூடியிருந்த போது அரசாங்கத்தை வற்புறுத்தியிருந்தனர். அந்த ஆணைக்குழுவை மஹிந்தவே நியமித்தார் என்றும் அது இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமானதாக இருப்தாகவும் அவர்கள் வாதாடினர். ஆனால், இப்போது அந்த அறிக்கை உயர்ஸ்தானிகரின் அறிக்கையை விட அரசாங்கத்தைப் பாதிப்பதாக உள்ளது.
ஜெனீவாப் பிரேரணையைப் பற்றி கடந்த வாரம் நாடாளுமன்றத்திலும் ஒத்திவைப்புப் பிரேரணையொன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற ஊறுப்பினராக இருக்கும் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை. ஆனால், பின்னர் அவர் அது தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டு இருந்தார். தாம் உதலாகம மற்றும் பரணகம ஆணைக்குழுக்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டவர்களை நியமித்த போதும் அந்த வெளிநாட்டவர்கள் ஆலோசகர்களாக இருந்தார்களேயல்லாமல், தீர்ப்பு வழங்கும் நிலையில் இருக்கவில்லை என்றும் ஆனால், தற்போதைய அரசாங்கம் உள்நாட்டு நீதிமன்றம் என்ற பெயரில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்கப் போவதாகவும் அவர் அதில் கூறியிருந்தார்.
போர்க் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் நாட்டில் இல்லாததால் புதிதாக அச்சட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என ஜெனீவா பிரேணை கூறுகிறது. இதைப் பற்றிக் குறிப்பிடுகையில், கடந்த காலத்துக்காக சட்டமியற்றுவது ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையல்ல என்று மஹிந்த கூறியிருக்கிறார்.
அதேவேளை, குற்றமிழைத்ததாகச் சந்தேகிக்கப்படும் அரச மற்றும் படை அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஜெனீவாப் பிரேரணையில் குறிப்பிடப்படுவதாகவும் நீதிமன்றமொன்றின் மூலம் குற்றவாளியாகக் காணப்படும் வரை எவரும் அவ்வாறு தண்டிக்கப்படக் கூடாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த இரண்டு விடயங்களும் நியாயமான வாதங்கள் தான். போர் நடைபெறும் காலத்தில் போர்க் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் நாட்டில் இருக்கவில்லை. இப்போது சம்பவங்கள் இடம்பெற்றதன் பின்னர் அவற்றுக்குத் தண்டனை வழங்குவதற்காக சட்டமியற்றுவது ஏற்றுக் கொள்ளப்பட்ட நாகரிகத்துக்கு முரணானதாகும். ஆனால், சாதாரண சட்டத்தின் கீழும் அவை குற்றங்கள் தான். எனவே, குற்றமிழைத்தவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. பிரச்சினை என்னவென்றால் தற்போதைய சட்டங்களின் படி குற்றம் செய்தோர்தான் தண்டிக்கப்பட முடியும், கட்டளையிட்டவர்களைத் தண்டிக்க முடியாது. அது தற்போதைய சட்டத்தில் உள்ள குறையாகும்.
குற்றமிழைத்ததாகச் சந்தேகிக்கப்படும் அரச மற்றும் படை அதிகாரிகளை நீதிமன்றமொன்றினால் குற்றவாளிகளாகக் காணும் வரை பதவி நீக்கம் செய்வது மஹிந்த கூறுவது போலவே நாகரிகமாகாது.
இவை அனைத்தும் புலிகளைத் தோற்கடித்து நாட்டை பாதுகாத்த படை வீரர்களை தண்டிப்பதற்கான முயற்சிகளே என அவர் வாதாடுகிறார். அது, உண்மையை அறிந்திருந்தும் சிங்கள மக்களை தூண்டும் முயற்சியாகும். போர் நடவடிக்கைளுக்காக எவரும் விசாரிக்கப்படவோ அல்லது தணடிக்கப்படவோ போவதில்லை.
போரின் போது சாதாரண மக்களை கடத்தல், கொலை செய்தல், பாலியல் குற்றங்களைப் புரிதல் போன்ற குற்றங்களுக்காகத் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை பேரவை கூறுகிறது. அது எவ்வாறு போர் வீரர்களுக்கு எதிரான நடவடிக்கையாகும், இவை சிங்கள மக்களின் இன உணர்வைத் தூண்டும் கபட பேச்சுக்களே.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
16 minute ago
2 hours ago