Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Johnsan Bastiampillai / 2021 ஜனவரி 05 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹமட் பாதுஷா
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் உடல்களைத் தொடர்ந்தும் எரிப்பதா, நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதா என்பது தொடர்பாக, ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுக்களின் அறிக்கைகள் கிடைக்கப் பெற்றவுடனே, இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விடும் என்பதான தோற்றப்பாடே இருந்தது.
ஆயினும், இவ்விரண்டு அறிக்கைகளும் ஒன்றுக்கொன்று முரணாக அமைந்துள்ள நிலையில், இப்பத்தி எழுதி முடிக்கப்படும் வரை, அரசாங்கம் தீர்க்கமான முடிவை அறிவிக்கவில்லை.
துறைசார் நிபுணர்களின் சிபாரிசுகளை விஞ்சிய அரசியல், இன மேலாதிக்க சிந்தனை, ஆட்சியதிகாரத்துக்கு இனவாதிகளால் ‘அதிர்வுகள்’ ஏற்படக் கூடாது என்ற அச்சம், சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான வன்மம் எனப் பல காரணிகள், இதற்குப் பின்னால் இருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது.
ஆரம்பத்திலேயே, மிக எளிதான முறையில் தீர்வு கண்டிருக்கக் கூடிய ஜனாஸா நல்லடக்க விவகாரம், எட்டு மாதங்களாக ஊதிப் பெருப்பிக்கப்பட்டு, பூதாகரமாக்கப்பட்டு உள்ளது.
இழுபறியாக இருக்கின்ற மாகாண சபைத் தேர்தல் வரை அல்லது, ஒரு குறிப்பிட்ட கட்டம் வரைக்கும் அரசியல் செய்வதற்கு ஏதாவது ஒரு ‘விவகாரம்’, ‘பேசுபொருள்’ தேவையாக இருக்கின்றதா என்ற வலுவான சந்தேகத்தை, ஜனாஸா விவகாரம் ஏற்படுத்தாமல் இல்லை.
கொவிட்-19 நோய் தொற்றால் உயிரிழக்கும் அல்லது, இறந்த பின்னர் தொற்றுறுதி செய்யப்படும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு, முஸ்லிம் சமூகம் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ஒரு நிபுணர் குழுவை நியமித்திருந்தார். ஆனால், அந்தக் குழுவில் உள்ள நிபுணர்கள், அவர்களது செயற்பாடுகள் தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனால், பேராசிரியை ஜெனிபர் பெரேரா தலைமையில், பிரபலமான துறைசார் நிபுணர்களைக் கொண்ட இன்னுமொரு குழுவை, கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்ணான்டோ புள்ளே அண்மையில் நியமித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த டிசெம்பர் 28ஆம் திகதி, இரண்டாவது நிபுணர் குழு, தமது அறிக்கையை அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்துள்ளது. இக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழப்போரின் உடல்களை, தகனம் செய்யவோ, அடக்கவோ முடியும் என்று சிபாரிசு செய்துள்ளதாக, சமூக வலைத்தளங்களில் தகவல்கள் கசிந்தன.
இதையடுத்தே, முதலாவது குழு அறிக்கை சமர்ப்பித்த விடயமும் அக்குழு ‘தகனம் மட்டுமே செய்ய வேண்டும்’ என்பதில் பிடிவாதமாக இருக்கின்றது என்பதும், அதேவாரத்தில் வெளிவந்தது. ஆனால், இரண்டாவது குழுவின் அறிக்கை பற்றிய தகவல்கள் வெளிவரும் வரைக்கும், அரசாங்கம் இவ்வறிக்கைகள் பற்றி வாய்திறக்கவே இல்லை. பேராசியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான நிபுணர் குழு, முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஆறுதலளிக்கும் சிபாரிசுகளை முன்வைத்துள்ளதாக, சமூக ஊடகங்களில் கருத்தாடல்கள் ஆரம்பித்த பிறகு, அரசாங்கம் அவசர அவசரமாக ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அச்செய்திக் குறிப்பில், இரண்டு நிபுணர் குழுக்களும் தத்தமது சிபாரிசுகள் உள்ளடங்கிய அறிக்கைகளைக் கையளித்துள்ளதாகவும், அதில் உள்ள விடயங்கள் இன்னும் நோக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள், பொய் என்றும் பிரதமர் அலுவலகம் மறுத்திருந்தது.
இறுக்கமான சுகாதார விதிமுறைகளின் கீழ், தகனம் செய்யவோ நிலத்தில் புதைக்கவோ இடமளிக்க முடியும் என்று, இரண்டாவது நிபுணர் குழு முன்வைத்த சிபாரிசே, சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்நிலையில், இதில் வெளியாகும் தகவல்கள் தவறு என்று, அரசாங்கம் சொல்கின்றது என்றால், அதன் உள்ளர்த்தம் என்ன என்ற கேள்வி எழுகின்றது.
இலங்கையின் சிரேஷ்ட நுண்ணங்கியியல் பேராசிரியர்களில் ஒருவராக, ஜெனிபர் பெரேரா கணிக்கப்படுகின்றார். அவரது குழுவில் அங்கம் வகித்த ஏனைய 10 பேரும், தமது துறைகளில் மிகச் சிறந்த நிபுணர்கள் மட்டுமன்றி, இலங்கையின் வைத்தியத்துறையினரால் பெரிதும் மதிக்கப்படுகின்ற ஆளுமைகளும் ஆவர்.
இந்த நிபுணர் குழுவின் சிபாரிசுகள் அடங்கிய அறிக்கை, அரசாங்கத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அதன் உள்ளடக்கங்கள் சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி, சில பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தன. வைத்தியர்களும் தமது ‘வட்ஸ்அப்’ குழுமங்களில், இதுபற்றிக் கலந்துரையாடியதாக அறிய முடிகின்றது.
அதாவது, ‘கொரோனா’ ரக வைரஸாகக் கருதப்படும் ‘சார்ஸ்’ வைரஸை, முன்னிறுத்திய கருத்தை இக் குழு முன்வைத்திருந்தது. அத்துடன், இறுக்கமான சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து, தகனம் செய்யலாம் அல்லது நல்லடக்கம் செய்ய முடியும் என்று சிபாரிசு செய்துள்ளது. இதனால், நிலத்தடியில் வைரஸ் பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, எவ்வாறு அந்த இறந்த உடலைக் கையாள்வது, இறுதிக்கிரியை மேற்கொள்வது என்றும் மேற்படி நிபுணர் குழு சிபாரிசு செய்துள்ளது. எங்கே புதைப்பது, எவ்வளவு ஆழம், மக்கள் குடியிருப்பு, நிலத்தடி நீர் மையங்களில் இருந்து, எவ்வளவு தூரத்தில் புதைகுழி இருக்க வேண்டும், எத்தனை உறவினர்கள், எவ்வளவு நேரம் உடலைப் பார்க்கலாம் போன்ற பரிந்துரைகள் உள்ளடங்கலாக, அனைத்து விதமான சுகாதார நடைமுறைகளும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையே, ‘உண்மையற்றது’ என்று அரசாங்கம் ஒற்றை வார்த்தையில் மறுத்திருந்தாலும், இதுவரை அக்குழுவின் தலைவரோ, உறுப்பினர்களோ இந்தத் தகவல்கள் உண்மை அற்றவை என்பதைச் சொல்லவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது. இதேவேளை, அமைச்சர் பவித்ராவால் நியமிக்கப்பட்டு பல விமர்சனங்களை எதிர்கொண்ட முதலாவது நிபுணர் குழுவானது, ‘கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான உடல்களைத் தகனம் மட்டுமே செய்ய வேண்டும்’ என்ற கருத்து நிலையில் பிடிவாதமாக நிற்பதாகவும், இரண்டு நிபுணர் குழுக்களும் சந்தித்துக் கலந்துரையாடி, ஒரு முடிவுக்கு வர நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.
முதலாவது நிபுணர் குழுவின் செயற்பாடுகள், துறைசார் நிபுணத்துவம் பற்றி எழுந்த விமர்சனங்களை அடுத்தே, ஜெனிபர் பெரேரா தலைமையிலான இரண்டாவது குழு நியமிக்கப்பட்டது. இதையும் அரசாங்கமே நியமித்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்நிலையில், அக்குழுவானது கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை எரிக்கலாம் அல்லது புதைக்கலாம் என்று கூறுமாக இருந்தால், இந்தச் சிபாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதேவேளை, இதற்கு முன்னர் பல சிங்கள நிபுணர்கள், வைத்தியர்கள், விஞ்ஞானிகள் உடல்களை நிலத்தில் புதைப்பதால் நிலத்தடி நீரில் வைரஸ் பரவாது என்று தெளிவாகக் கூறியுள்ளனர். இதற்கு மேலதிகமாக இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி, இலங்கை மருத்துவ சங்கம் ஆகியனவும் இதுவிடயத்தில் தமது கருத்துகளை முன்வைத்துள்ளன.
‘கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்போரின் உடல்களை, நிலத்தில் புதைப்பதால் வைரஸ் பரவும் என்பதற்கு எவ்வித உறுதியான ஆதாரமும் கிடையாது. கொவிட்-19 தொடர்பாக, இதுவரை 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞான ஆய்வறிக்கைகள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு தடவையேனும் இறந்த உடலில் இருந்து வைரஸ் பரவியதாக, இதுவரை அறிக்கையிடப்படவில்லை’ என்று இலங்கை மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, நாட்டில் உள்ள பிரபலமான, ஏற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ நிபுணர்கள், துறைசார்ந்தோர் ஒரு கருத்தை முன்வைக்கின்றார்கள் என்றால், அதில் அரசியல்வாதிகள் விளக்கம் சொல்வதற்கோ விமர்சிப்பதற்கோ ஒன்றுமில்லை.
எனவே இந்தப் பின்னணியில், அரசாங்கமானது சிங்கள மக்களை தெளிவுபடுத்துவதற்கும் கொதித்தெழும் சக்திகளை ஆசுவாசப்படுத்துவதற்கும் இப்போது கிடைக்கப் பெற்றுள்ள அறிக்கைகள், சிபாரிசுகள் போதுமானவையாகும். இந்தச் சந்தர்ப்பத்தில், முஸ்லிம்கள், கிறிஸ்தவ மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது முன்னரை விடச் சுலபமானதாகும். ஆனால், அரசாங்கம் இப்பத்தி அச்சேறும் வரைக்கும், ஜனாஸா விவகாரத்தில் நல்லதொரு தீர்மானத்தை அறிவிக்கவும் இல்லை. இரு நிபுணர் குழுக்களையும் இணக்கப்பாட்டுக்குக் கொண்டுவரும், சாத்தியப்படாத முயற்சி ஒன்றை மேற்கொள்வதாகவும் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்களில் இருந்து அறியமுடிகின்றது. சிலவேளை, இரு தினங்களில் ஏதாவது அறிவிப்பு வரலாம்.
நிபுணர் குழுவின் அறிக்கைகள் கிடைத்தவுடன், தீர்மானம் அறிவிக்கப்படும் என்று அரசாங்கம் கூறிவந்த நிலையில், இப்போதும் மூடுமந்திரமாகவும் இழுபறியாகவும் இவ்விவகாரம் கையாளப்படுவதானது, விஞ்ஞானத்தை விட அரசியல் நலன் போன்ற வேறு விடயங்களும் இதில் செல்வாக்குச் செலுத்துகின்றதா என்ற சந்தேகமும் குழப்பமும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இப்போது ‘பந்து’ அரசாங்கத்தின் கைகளுக்கே சென்றுள்ளதால், இவ்வாறான தேவையற்ற குழப்பங்களுக்கோ, இவ்விவகாரம் இன்னும் இழுத்தடிக்கப்படுவதற்கோ இடமளிக்காமல், நல்ல முடிவை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது.
34 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago