2024 மே 09, வியாழக்கிழமை

முஸ்லிம் அரசியல் விதிவிலக்கா?

Johnsan Bastiampillai   / 2022 ஒக்டோபர் 12 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததில் இருந்து, நிலைமாறுகால நீதி பற்றியும் பொறுப்புக்கூறல் பற்றியுமே தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகின்றது.

ஓர் ஆயுதப் போர் ஏற்பட்டமைக்கான அடிவேர்களைக் கண்டறிவதற்கும், யுத்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கும் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவத்தை விட, இப்பேர்ப்பட்ட மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் என்ற விடயத்துக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதைக் காண முடிகின்றது.

இலங்கையின் விவகாரத்தில், பொறுப்புக்கூறல் செய்ய வேண்டியது அரசாங்கம் மட்டுமல்ல; விடுதலைப் புலிகள் மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்கள், சர்வதேச சமூகம் மற்றும் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரும் ஏதோ ஒரு வகையில் பொறுப்புக்கூற வேண்டியவர்களே என்பதை குறிப்பிட்டாக வேண்டும். தமிழ் அரசியல்வாதிகளும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது.

அதேபோல், பொறுப்புக்கூறல் என்பது, யுத்தத்தோடு மட்டுமே தொடர்புபட்ட ஒரு விடயமும் அல்ல; ஆட்சியாளர்கள் முதற்கொண்டு, அரசியல்வாதிகள் தொட்டு, சாதாரண மக்கள் வரைக்கும் எல்லா விடயங்களிலும் எல்லாத் தரப்பினருக்கும், சிறியதும் பெரியதுமாக இந்தக் கடப்பாடு இருக்கவே செய்கின்றது.

அந்த வகையில், முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதற்கு விதிவிலக்கல்லர்; ஆனால், முஸ்லிம் அரசியல் எந்தளவுக்கு பொறுப்புக்கூறலின் அடிப்படையில் செயற்படுகின்றது என்ற கேள்வி எழுகின்றது.

முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலும் சரி, இணக்க அரசியலும் சரி மக்களை மறந்த அரசியல் முன்னெடுப்பாகவே உருமாற்றப்பட்டு இருக்கின்றன. இதனால் முஸ்லிம் அரசியலைப் போலவே, இச்சமூகத்தின் பிரச்சினைகளும் இன்னும் சிக்கல் நிறைந்ததாக மாறியிருக்கின்றன.

முஸ்லிம் சமூகத்தின் நீண்டகாலப் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. அதற்காக தொடர்ச்சியாக குரல் கொடுப்பதற்கும் போராடுவதற்குமான தமது பொறுப்பை கடந்தகால, தற்கால முஸ்லிம் தலைவர்கள், எம்.பிக்கள் மேற்கொள்ளவில்லை என்பது கண்கூடு.

ஆனாலும், அவர்கள் யாரும், இதுவரை பொறுப்புக் கூறலைச் செய்ததாக இல்லை. முஸ்லிம் சமூகம் அதனை வலியுறுத்தவும் இல்லை.

ஏதோ பொறுப்புக்கூறல் என்பது, அரசாங்கத்துக்கு மட்டுமே உரித்தானது என்பது போலவும் முஸ்லிம் அரசியல்வாதிகள் அதற்கு விதிவிலக்கு என்பது போலவுமே நடத்தைக் கோலங்கள் அமைந்துள்ளன.

முதலில், பொறுப்புக்கூறல் (Accountability) என்ற சொல்லின் ஆழ அகலங்களை விளங்கிக் கொள்வது அவசியமானது. தம்மீதுள்ள சட்டப்படியானதும் தார்மீக அடிப்படையிலானதுமான பொறுப்புகளை உணர்ந்து செயற்படுகின்ற ஒருவராலேயே, பொறுப்புக்கூறலை இலகுவாக மேற்கொள்ள முடியும்.

ஒரு நிறுவனத்தின் ஊழியருக்கு கொடுக்கப்பட்டுள்ள பணியைச் செய்வது, அவருடைய பொறுப்பு என்றால், அதில் ஏற்படும் நல்லவை - கெட்டவை,  முக்கியமாக தவறுகளுக்கான விளக்கத்தை, அவர் அளிக்க வேண்டும் என்பதே, பொறுப்புக்கூறல் எனச் சுருக்கமாக விளக்கலாம். 

இந்தச் செயன்முறை, பின்னாலிருந்து முன்னோக்கிச் செயற்படுகின்றது எனலாம். அதாவது, பொறுப்புக்கூறல் பற்றிய பயம்தான், பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வை, ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஏற்படுத்துகின்றது. 

இந்த விடயத்தில், முஸ்லிம் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். தங்களது அரசியல் நகர்வுகளால் சமூகத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள், தமது போக்கின் நிமித்தம் முஸ்லிம்களால் வென்றெடுக்க முடியாமல் போன உரிமைகள், அபிலாஷைகள் பற்றி எல்லாம் இவர்கள் இதுகாலவரை பொறுப்புக்கூறலைச் செய்யவில்லை.

மக்கள் மன்றத்தில், பொறுப்புக்கூறலைச் செய்ய வேண்டும் என்ற பயம் இல்லாமல் போனதன் காரணமாகவே, அவர்கள் தம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புகளை சரிவர நிறைவேற்றாமல், தொடர்ச்சியாக கவனயீனமாக செயற்பட்டு வருகின்றார்கள். 

நாடு தழுவிய ரீதியில் வாழ்கின்ற முஸ்லிம்களின் பொதுவான பிரச்சினைகள், அபிலாஷைகள் இருக்கின்றன. இன்னும் ஆழமாக நோக்கினால், வடக்கு - கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரச்சினைகளும் தெற்கில் வாழ்கின்ற முஸ்லிம்களின் விவகாரங்களும் அதேபோல், மலையக முஸ்லிம்களின் விவகாரங்களும் தனித்தனிப் பண்புகளைக் கொண்டவை. 

யுத்தத்தோடும், இனப்பிரச்சினைத் தீர்வு என்ற விடயத்தோடும் தொடர்புபட்ட நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் என்ற வகையில் வடக்கு - கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷைகள் சற்றுத் தனித்துவமானவை. அதற்காகவே, தனித்துவ அடையாள அரசியலும் ஆரம்பிக்கப்பட்டது. 

அதாவது, பிரச்சினைகள் எல்லோருக்கும் பொதுவானவை என்றால், பிரத்தியேக முஸ்லிம் கட்சியொன்றை உருவாக்கும் தேவைப்பாடு, மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் போன்றோருக்கு ஏற்பட்டிருக்காது.

ஆனால், தனித்துவ அடையாள அரசியலின் வழிவந்த அரசியல்வாதிகள், அதனால் பதவிகளை சுவைத்து, செல்வத்தையும் குவித்ததைத் தாண்டி, முஸ்லிம் சமூகத்தின் எத்தனை பிரச்சினைகளைத் தீர்த்து வைத்திருக்கின்றார்கள்?

தனித்துவ அடையாள அரசியலின் பண்புகளை சற்று மாற்றிக் கொண்டு, இணக்க அரசியலுக்குள் சங்கமித்த முஸ்லிம் தலைவர்கள், தளபதிகள் கடந்த இருபது வருடங்களில் சமூகத்தின் எந்த அபிலாஷையை வென்று கொடுத்திருக்கின்றார்கள்?

கட்சித் தலைவர்கள், தேசிய தலைவர்கள் ஆனார்கள். எம்.பிக்கள் பிராந்திய தலைவர்கள் ஆனார்கள். அமைச்சராக, பிரதி அமைச்சராக பதவிகளைச் சுகித்தார்கள். நேர்வழியிலும் குறுக்குவழியிலும் உழைத்தார்கள். ‘டீல்’களைப் பேசினார்கள்; தாங்கள் வளர்ந்தார்கள்; தங்களது சொந்தப் பிரச்சினைகளைத் தீர்த்தார்கள்.

மாறாக, முஸ்லிம் சமூகத்தின் எந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளார்கள்? முஸ்லிம் மக்களுக்கு இவர்களால் கிடைத்த பலன்தான் என்ன? குறைந்தபட்சம் இதற்கான பொறுப்புக்கூறலையாவது செய்தார்களா?

முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள், இனவாத நெருக்கடிகள், ஆயுதப் போராட்டத்தால் ஏற்பட்ட இழப்புகள், மனித உரிமைகள் மீறல்கள், வடக்கு - கிழக்கை மையமாகக் கொண்ட தீர்வுப் பொதி எனத் தொடரும் ஆயிரத்தெட்டு விவகாரங்களில் ஒன்றிரண்டைத்தானும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சரிவரக் கையாளவில்லை. 

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், மீறல்கள் இடம்பெற்றன என்பது பொதுவாகப் பேசப்படுகின்ற விடயமாகும். அரச படையினர் மட்டுமன்றி விடுதலைப் புலிகளும் மீறல்களில் ஈடுபட்டனர். இதற்கெல்லாம், ஒருநாள் பதில் கூற வேண்டும் அல்லது பொறுப்புக்கூற வேண்டும் என்ற எண்ணம் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இல்லாதிருப்பதும் இந்த அவலங்களுக்கு முக்கிய காரணம் எனலாம்.

இதேகோணத்தில் நோக்கினால், முஸ்லிம் தலைவர்களும் முன்னாள், இந்நாள் எம்.பிகளும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் எதையும் தீர்க்காமல், நிலைமைகளை இன்னும் சிக்கலாக்கி வைத்திருக்கின்றார்கள். அதற்கு அடிப்படைக் காரணம், பொறுப்புக்கூறல் பற்றிய அச்சமின்மையே ஆகும்.

‘இந்தப் பிரச்சினையை தீர்க்காவிட்டால், வாக்களித்த மக்கள் கேட்பார்கள்; பல்கலைக்கழக சமூகம் கேள்வி எழுப்பும்; புத்திஜீவிகள் குரல் கொடுப்பார்கள்; புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அழுத்தம் பிரயோகிப்பார்கள்; ஜம்மியத்துல் உலமா சபையும் பள்ளிவாசல்களும் சிவில் சமூகமும் கேள்வி எழுப்பும்’ என்ற முன்னுணர்வு இருந்திருந்தால், முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்தளவுக்கு தான்தோன்றித்தனமாக, பொறுப்பற்றுச் செயற்பட்டிருக்க மாட்டார்கள்.
முஸ்லிம்கள் ஒரு சமூகமாக, நடுச் சந்தியில் வைத்து கேள்வி எழுப்புவார்கள். அதற்கு ஒரு நாள் நாம் பதிலளிக்க வேண்டி வரும்; பொறுப்புக்கூறாமல் தப்பிக்க முடியாத இக்கட்டான நிலை ஏற்படும் என்று அரசியல்வாதிகள் கருதியிருந்தால், சற்றுக் கவனமாக அவர்கள் செயற்பட்டிருப்பார்கள்.

தம்மைக் கேள்வி கேட்பதற்கும் தட்டிக் கேட்பதற்கும், யாரும் இல்லை என்ற தைரியம் முஸ்லிம் அரசியல்வாதிகளை, சமூகத்தை மறந்த பாதையில் பயணிக்கச் செய்துள்ளது. பொறுப்பின்றியும் பொறுப்புக்கூறல் இன்றியும் செயற்பட்டு விட்டு, பிறகு வந்து ஏதாவது பொய்யைக் கூறி ஏமாற்றலாம் என்ற துணிவு அவர்களிடத்தில் உரம்பெற்றுள்ளது. 

ஆக மொத்தத்தில், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மட்டுமன்றி எல்லாக் கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற முஸ்லிம் எம்.பிக்களும் சமூகம் பற்றிச் சிந்திக்காமல் சுயநலமிகளாக இருப்பதற்கு இதுவே அடிப்படைக் காரணமாகும். இதற்கு ஒரு வகையில் சமூகமும் காரணமாகியுள்ளது.

முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும், தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும். அந்தப் பொறுப்பை எவ்வாறு நிறைவேற்றினீர்கள் அல்லது நிறைவேற்றாமல் விட்டீர்கள் என்பதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.

கடந்த காலங்களில் விட்ட அரசியல் தவறுகள் பற்றிய ஒட்டுமொத்தமான பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை, முஸ்லிம் சமூகம் பிரயோகிக்க வேண்டும். அதற்கான ஒரு கட்டமைப்பை, முஸ்லிம் சமூகத்துக்குள் உருவாக்கப்படுவது அவசியமாகும்.

கடந்த காலத்தில் விட்ட அரசியல் தவறுகளை, தொடர்ந்தும் செய்யாமல் இருப்பதற்கும், அதைத் திருத்திக் கொள்வதற்கும் இது வழிவகுக்கும். அதுமட்டுமன்றி, என்றாவது ஒருநாள் பொதுத் தளத்தில் பொறுப்புக்கூறல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்ற முன்னுணர்வு, அவர்கள் கொஞ்சமேனும் பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற வழிகோல வாய்ப்புள்ளது.

இந்தப் பொறுப்பை, முஸ்லிம் சிவில் சமூகமும் அரசியல்வாதிகளும் சரிவர நிறைவேற்றவில்லை என்றால், இன்னும் இருநூறு வருடங்கள் போனாலும் முஸ்லிம் எம்.பிக்களின் அரசியலானது, முஸ்லிம் சமூகத்துக்கான அரசியலாக உருமாறுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X