2024 மார்ச் 28, வியாழக்கிழமை

முஸ்லிம் அரசியல்வாதிகள் எந்த முகத்தோடு மக்களிடம் வருவார்கள்?

Johnsan Bastiampillai   / 2022 நவம்பர் 16 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள், அரசியல் அணிகள் அடுத்த தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன. உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல், மார்ச் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்பிறகு நடைபெறவுள்ள தேர்தல்களுக்கான அடித்தளமாக இது அமையும் என்பதால், இதில் உறுதியான வெற்றியைப் பெற வேண்டிய தேவைப்பாடு எல்லா அரசியல் தரப்புகளுக்கும் உள்ளது. 

இந்தப் பின்னணியில், முஸ்லிம் கட்சிகள் மட்டுமன்றி, ஒவ்வொரு தனிப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதியும் அடுத்த தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்று சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். எதைச் சொல்லி இன்னுமொருமுறை முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைச் சுருட்டலாம் என்பதுதான், அவர்களது இன்றைய கவலையாக இருக்கின்றது. 

அந்தவகையில், ‘பருப்பு இனியும் வேகுமா’ என்ற சந்தேகம் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு உள்ளதால், புதுக் கதைகளையும் பொய்க் கற்பிதங்களையும் பொய்மூட்டைகளில் நிரப்பிக் கொண்டிருக்கின்றனர். சமூக அக்கறையும் உரிமைசார் உணர்வும் தூசு தட்டப்படுவதை உன்னிப்பாக நோக்கும்போது காண முடிகின்றது. 

பிரதான முஸ்லிம் அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கின்ற மற்றும் பெருந்தேசிய கட்சிகளுடன் சங்கமமாகியுள்ள சில முஸ்லிம் எம்.பிக்கள், முன்னாள் எம்.பிக்கள் மற்றும் புதிய முகங்கள், கிழக்கில் ஒரு புதுக் கூட்டணியாகப் போட்டியிடுவதற்கான சாத்தியவள ஆய்வை நடத்திக் கொண்டிருக்கின்றனர். 

சமகாலத்தில், புது முஸ்லிம் அணிகளும் குறிப்பாக புத்திஜீவிகள் சிலரை உள்ளடக்கிய அணியும் அடுத்த தேர்தலை மையமாகக் கொண்டு களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.  மக்கள் சேவைக்காக மட்டுமன்றி, எதிர்காலத்தில் இலகுவாக விசாவைப் பெற்றுக் கொள்வதற்கான உள்நோக்கத்திலும் சிலர் குதிக்கலாம். 

இந்நிலையில், ஏற்கெனவேயுள்ள முஸ்லிம் கட்சிகளில் போட்டியிடுவதால் வெற்றி வாய்ப்பை பெறச் செய்யுமா, தனித்தோ அல்லது வேறு புது அணிகளிலோ போட்டியிட்டால் அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்ள முடியுமா என்று ஒவ்வோர் அரசியல்வாதியும் மூளையைப் போட்டு பிசைந்து கொண்டிருக்கின்றனர். 

இதுவெல்லாம் சரிதான்! தேர்தல் ஒன்று வருகின்றது என்றால், அதற்காக முன்னாயத்தங்களைச் செய்வதில் ஒன்றும் தப்பில்லை; அது உலக வழக்கம்தான். 

ஆனால், இதுவரை காலமும் முஸ்லிம் தலைவர்களாக, அமைச்சர்களாக, அரை-அமைச்சர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக பிரதிநிதித்துவ அரசியலிலும் செயற்பாட்டு அரசியலிலும் பதவி வகித்தவர்கள், இந்தச் சமூகத்துக்காக எதைச் சாதித்துள்ளார்கள் என்ற கேள்விக்கு, இவ்விடத்தில் விடைகாண வேண்டியுள்ளது. 

முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்தமையால், உரிமைகளையும் சமூகத்துக்கு உரித்தான பங்குகளையும் பெற்றுக் கொடுத்தமையால், முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை முன்கொண்டு சென்றமையால்... இன்னுமொரு முறை வாக்குக் கேட்டு வரப் போகின்றார்களா?

முஸ்லிம் சமூகத்துக்கு நீண்டகாலப் பிரச்சினைகள், குறுங்கால நெருக்கடிகள் உள்ளன. தனியொரு தேசிய இனம் என்ற வகையிலும் இனக் குழுமம் என்ற வகையிலும் பிரத்தியேகமான விடயங்கள் பல உள்ளன. 

கடந்த கால் நூற்றாண்டு அரசியலில் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற முஸ்லிம் கட்சிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அதன் தலைவர்கள் இவற்றையெல்லாம் தீர்த்து வைக்க தொடர்ச்சியாக பாடுபட்டிருந்தால், இம்முறையும் வாக்குக் கேட்டு வருவதில் நியாயமுள்ளது.

இவர்களோடு சேர்ந்து, பெரும்பான்மைக் கட்சிகளில் அங்கம் வகித்த, அங்கம்வகிக்கும் முஸ்லிம் எம்.பிக்களும் சட்டமூலங்கள், யாப்புத் திருத்தங்கள், அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்ட காலங்களில் சமூகத்தின் அபிலாஷைகளை நிலைநிறுத்துவதற்காக முன்னின்று இருப்பார்கள் என்றால், இம்முறை தேர்தலில் போட்டியிடுவதை கொஞ்சமேனும் நியாயப்படுத்த முடியும். 

ஆனால், அப்படியெதுவும் நடக்கவில்லையே? முஸ்லிம் சமூகத்தின் நீண்டகாலப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அதற்காக முஸ்லிம் கட்சிகளும் ஏனைய எம்.பிக்களும் முன்னிற்கவில்லை. பல வழிகளிலும் நெருக்கடிகளைச் சந்தித்த போது, தமது பாதுகாப்பு முகாம்களுக்குள் சென்று ஒளிந்து கொண்ட எம்.பிக்கள்தான் அதிகம். 

தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு இருப்பதைப் போல, சமூக விடுதலை உணர்வும் பிரச்சினைகள் பற்றிய சரியான பார்வையும், முஸ்லிம் தலைவர்களுக்கும் தளபதிகளுக்கும் கிடையாது. இதற்காக, சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சாதித்துக் கொள்ளும் சாதுரியமும் கிடையாது. முஸ்லிம் அரசியல்வாதிகள், வாய்ப்புக் கிடைக்கின்ற போதெல்லாம் தமக்கான அமைச்சுப் பதவிகள், வருமான வழிமூலங்கள், அரசியல் இருப்புக்கான சூழமைவுகளை உறுதி செய்த சந்தர்ப்பங்களை விட, முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் என்ற கடமையை செவ்வனே நிறைவேற்றிய சந்தர்ப்பங்கள் அரிதிலும் அரிது. 

ஆனால், இதுவரை காலமும் மேற்சொன்ன எதையும் செய்யாத, இப்போது கூட அதற்கான எந்த முன்முயற்சிகளையும் எடுக்காத முஸ்லிம் தலைவர்கள், எம்.பிக்கள், இனிமேலும் மக்கள் மன்றத்தில் வாக்குக் கேட்டு வருவதற்கு என்ன அடிப்படைத் தகுதியைக் கொண்டுள்ளார்கள்? 

அதே குட்டையில் ஊறி, ஊர்களுக்குள் சிறிய அரசியல் பதவிகளில் இருந்தவர்கள், ‘அவர்களை விடுங்கள்; நாங்கள் செய்து காட்டுவோம்’என்ற தாரக மந்திரத்தோடு இந்த உள்ளூராட்சி தேர்தலில் அல்லது அடுத்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முற்படுவதை, எப்படி நம்ப முடியும்? முஸ்லிம் சமூகம் சரியான முறையில் அரசியல் மயப்படுத்தப்படவில்லை. அல்லது அதனை யாரோ குழப்பியடித்துள்ளார்கள். நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கும் மனநிலை மாற்றம் மக்களுக்கு ஏற்படவில்லை. மக்கள் பிரதிநிதிகள் திருந்த வேண்டுமென்றால், அரசியல்வாதிகளை திருத்தக் கூடிய அளவுக்கு மக்கள் திருந்த வேண்டும்; அது நிகழவில்லை. 

நிலைமை இவ்வாறிருக்க, கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி சமூகத்தின் எந்தப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்காத பழைய அரசியல்வாதிகளும், அதே வழித்தடத்தில் வந்த புதுமுகங்களும் இம்முறையும் வாக்குக் கேட்டு வருவதற்கான என்ன முன்தகுதியைக் கொண்டிருக்கின்றார்கள் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.  

தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் தமது சமூகத்தின் அபிலாஷைகளை எவ்வாறு முன்னகர்த்திச் செல்கின்றார்கள் என்பதை, இதற்கு முன்னர் வெளியான பல பத்திகளில் நாம் அலசியிருக்கின்றோம். 

தமிழ்த் தேசிய கூட்டமைப்போ அல்லது தமிழ் அரசியல் கட்சிகளோ தமிழ் மக்களுக்கான உண்மையான விடுதலை தாகத்தை முழுமையாக தீர்த்து வைத்தனவா என்றால் ‘இல்லை’ என்றுதான் கூற வேண்டும். யார் வாக்குறுதி அளித்தாலும், நிஜத்தில் எந்தவோர் அரசாங்கமும் தமிழர்கள் நூறு வீதம் திருப்திப்படக் கூடிய தீர்வொன்றை முன்வைப்பதும் நடைமுறைச் சாத்தியமற்றது. 

அதுபோல, இனப்பிரச்சினையை விட முன்னுரிமை அடிப்படையில் தீர்க்க வேண்டியப பல அன்றாட, வாழ்வியல் பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கும் இருக்கின்றன. எவ்வாறிருப்பினும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் தோரணையில், தமிழ்த் தேசிய கட்சிகள் மேற்கொள்கின்ற நகர்வுகள் பாராட்டுக்குரியன.  

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை அல்லது அப்படி வகைப்படுத்தப்பட்ட விடயங்களை குறிப்பாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக பேசி வருகின்றது. தமிழருக்கு இருக்கின்ற பிரச்சினைகளின் பட்டியலை, சர்வதேச அரங்கில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. சில மிகைப்படுத்தப்பட்ட விடயங்கள் இருந்தாலும் கூட, பொதுவில் இலங்கை தமிழர்களின் பிரச்சினை பற்றிய செய்தி உலகின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால், யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களின் விவகாரம்  தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்து விடுகின்றது. 

இதேவேளை, கணிசமான தமிழ் அரசியல்வாதிகள் தமக்கு கிடைக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்தி, சமூகம் சார்ந்த விடயங்களை வென்றெடுப்பதற்கு பாடுபடுகின்றனர். மலையக தமிழ் மக்கள் விடயத்தில் இந்நிலைமை மிக மோசம் என்றாலும் வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்ட த.தே.கூ போன்ற அரசியல் அணிகளும், தென்னிலங்கையில் ஓரிரு தமிழ் அரசியல்வாதிகளும் மக்கள் சார்பு விவகாரங்களுக்காக முன்னிற்பதை காண முடிகின்றது. குறிப்பாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேரடியாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவில்லை. ஆனால், கனகச்சிதமாக காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றது. ஒருபுறத்தில் வெளிநாட்டு அழுத்தங்களும் மறுபுறத்தில் உள்நாட்டில் இடம்பெறுகின்ற ‘100 நாள் செயல்முனைவு’ போன்ற மக்களின் முன்னெடுப்புகளும் இன்னுமொரு புறத்தில் கூட்டமைப்பின் நகர்வுகளும் தற்செயலாகவே நடக்கின்றன என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் நினைத்துக் கொள்ளக் கூடாது. 

நாடு இத்தனை பொருளாதார, அரசியல் நெருக்கடிகளை சந்தித்துள்ள ஓர் இக்கட்டான காலகட்டத்தில் கூட, ‘தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு’ சர்வதேசம் அழுத்தம் கொடுப்பதற்கும், ஜனாதிபதி நாட்டின் உயரிய சபையில் அதற்கான முன்னறிவிப்பைச் செய்வதற்கும் மேற்குறிப்பிட்ட நகர்வுகளே காரணமாகியுள்ளன. 

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை, இப்போதுள்ள முஸ்லிம் எம்.பிக்களில் சிலர் நேரடியாகவே அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர். கிட்டத்தட்ட மீதமுள்ள எல்லோரும் பின்கதவால் அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுக்கின்றனர்.  

இருப்பினும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் எந்த நீண்டகால பிரச்சினைகள், குறுங்கால நெருக்கடிகளை இதுவரை அவர்கள் தீர்த்து வைத்துள்ளார்கள்? அல்லது, அப்படி ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் எந்த முஸ்லிம் அமைச்சராவது, எம்.பியாவது, தலைவராவது செயற்பட்டுள்ளார்களா? இல்லை!அப்படியென்றால், கொஞ்சம்கூட வெட்கம் இல்லாமல், எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர்கள் மீண்டும் மக்களிடம் வாக்குக் கேட்டு வருவார்கள் என்பதை அவர்களும் சிந்திக்க வேண்டும்; மக்களும் நினைவில் கொள்ள  வேண்டும். 

இதுவரை தமக்கு மக்கள் அளித்த வாக்குகள், அதன்மூலம் கிடைத்த ஆசனம், அரசியல் அதிகாரத்தை வைத்துக் கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்காதவர்கள், அபிலாஷைகளை முன்கொண்டு செல்லாதவர்கள், இன்னுமொரு தேர்தலில் வாக்குக் கேட்டு வருவதற்கான எந்த அடிப்படை தகுதியும் அருகதையும் அற்றவர்களாவர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X