2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ராஜபக்‌ஷர்களின் சீரற்ற நிர்வாகமும் மக்கள் மீதான சுமையும்

Johnsan Bastiampillai   / 2021 செப்டெம்பர் 05 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

புருஜோத்தமன் தங்கமயில்

 

 

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை அண்மிக்கின்றது. ஒவ்வொரு நாளும் 150க்கு மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். 

கொரோனா வைரஸ் பரவலின் முதல் அலையை, குறிப்பிட்டளவு வெற்றிகரமாகக் கையாண்ட அரசாங்கம், இரண்டாம் மூன்றாம் அலையின்போது, எதுவும் செய்யமுடியாதளவு தடுமாறுகின்றது. கொரோனா முதல் அலையில், நாட்டை முழுமையாக முடக்கி, பரவலின் தாக்கத்தை கட்டுப்படுத்திய அரசாங்கத்தால், இரண்டாம் மூன்றாம் அலைகளின் போது, நாட்டை ஏன் முழுமையாக முடக்க முடியவில்லை என்கிற கேள்வியை, வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் எழுப்பினர்.

கொரோனா இரண்டாம் அலையின் பரவலின் போதே, மூன்றாம் அலை இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடங்கி, அனைத்து சுகாதார தரப்புகளும் அரசாங்கத்தை எச்சரித்தன. ஆனால், அரசாங்கம் நாட்டை முடக்குவதிலோ கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதிலோ, குறிப்பிட்டளவு பாராமுகமாக இருந்தது. 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மாகாணங்களுக்கு உள்ளான பயணத்தடை பெயரளவிலேயே இருந்தது. வாகனங்களில் பயணிப்போர் எண்ணிக்கை, சாதாரண நாள்களைப் போன்றே இருந்தது. அவ்வாறான நிலை, கொரோனா பரவல் வேகத்தை அதிகரிக்கச் செய்தது.

கொரோனா முதல் அலையின் காலத்திலேயே, தங்களது வேலை நேரத்துக்கு அதிகமான பணிச்சுமைக்குள் வைத்தியர்கள், தாதியர்கள் தொடங்கி அனைத்து சுகாதாரத்துறையினரும் உள்ளானார்கள். ஆனால், இன்றைக்கோ நிலைமை இன்னும் மோசமானது. அவர்களுக்கான பணி நேரம், இரண்டு மடங்கால் அதிகரித்துவிட்டது. நோயாளர்களின் எண்ணிக்கை, பலமடங்கு அதிகரித்துவிட்டது. இதனால், நெருக்கடி நிலை, இன்னும் இன்னும் இறுகிக் கொண்டே செல்கின்றது. 

இவ்வாறான நிலையொன்று இருக்கும் போதுதான், கண்டிப் பெரஹராவை நடத்துவதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அக்கறையோடு இருந்தார். பெரஹரா முடியும் வரையில், நாட்டை முடக்கப்போவதில்லை என்பதிலும் அவர் குறியாக இருந்தார். 

கொரோனா வைரஸ் தொற்று, கையை மீறிச் சென்று கொண்டிருக்கின்றது. அதனால் நாட்டை முடக்குவதைத் தவிர, வேறு வழியில்லை என்று பௌத்த மகா சங்கங்கள் அறிவித்த பின்னரும் கூட, கண்டிப் பெரஹராவை நடத்துவது தொடர்பில், ஜனாதிபதி வெளியிட்ட கரிசனை அபத்தமானது. அந்தப் பெரஹராவில் கலந்து கொண்ட 45க்கும் மேற்பட்டோர், கொரோனா வைரஸ் தொற்றுகளுடன் அடையாளம் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் நிலை என்ன, அதை எவ்வாறு எதிர்கொள்வது என்கிற எந்தவித தெளிவும் இல்லாமலேயே, இன்றைய ராஜபக்‌ஷர்களின் அரசாங்கம் செயற்படுகின்றது என்பதற்கு, கண்டிப் பெரஹராவை நடத்தியமை ஒரு சான்று. 

அதுபோல, நாட்டின் வருமானம் படுவீழ்ச்சி கண்டிருக்கின்ற நிலையில், அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி விதிப்பை அதிகரித்திருப்பதன் மூலம், அதனைச் சரி செய்ய முடியும் என்கிற யோசனைக்குள் சென்றிருக்கின்றது. கடந்த ஆண்டு, 135 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோகிராம் சீனியின் விலை, இன்றைக்கு 240 ரூபாயளவில் வந்து நிற்கின்றது. 

நாட்டின் வருமானம் இழக்கப்பட்டு இருக்கின்றது என்பதற்குள், மக்களின் வருமானமும் இழக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அரசாங்கம் அந்த விடயங்களை மறந்துவிட்டு, மக்களின் மீதான சுமையை அதிகரிப்பதிலேயே குறியாக இருக்கின்றது. 

சாதாரண மக்களின் ஆண்டு வருமானம் என்று, கடந்த காலங்களில் கணிக்கப்பட்ட தொகையின் பாதியிலும் குறைவான வருமானத்தையே, தற்போது மக்கள் பெறும் சூழ்நிலை உள்ளது. அப்படியான நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலையை, 25 தொடக்கம் 45 சதவீதம் வரையில் அதிகரிப்பது அபத்தமானது. அது, எந்தக் காலத்திலும் பொருளாதார அறிவுள்ள எந்தத் தரப்பும் செய்ய முன்வராதது.

வரி வருமானங்களுடாகத்தான் நாடு தன்னுடைய வருமானத்தை ஈட்டுகின்றது;   அதில் பிழையில்லை. ஆனால், மக்களே பட்டிணியில் அல்லாடும் போது, அந்தப் பட்டிணியின் மீது, இன்னும் மிகப்பெரிய பாரத்தை இறக்குவது, நடைமுறை சார்ந்த அரசியல் அல்ல.

ஆனால், ராஜபக்‌ஷர்களும் அவர்களின் ஆலோசகர்களும் அவ்வாறான நிலையொன்றையே செய்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் பரவல் காலத்தில், வருமானம் இழப்பு என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று. அதனை, மெல்ல மெல்லக் கடப்பதுதான், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த உதவும்.

திங்கட்கிழமை (30) நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்ட விதிமுறைகள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. அத்தியாவசிய உணவு விநியோகத்தை சீர்படுத்தும் நோக்கிலேயே அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

அதன் போக்கில், அத்தியாவசிய உணவு விநியோகம் தொடர்பிலான பணிக்குழுவுக்கு முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் பணிப்பாளராக நியமிக்கப்பட்டும் இருக்கின்றார். ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல், நாட்டில் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கும் செயற்பாடு அதிகரித்திருந்தது. 

சினி, பருப்பு, அரிசி உள்ளிட்ட பொருட்களின் பொதிகளில்,  உற்பத்தித் திகதி, காலாவதித் திகதி உள்ளிட்டன குறிப்பிடப்பட்டிருந்தாலும், விலை எனும் இடம் வெறுமையாக விடப்பட்டிருக்கின்றது. 

அத்தியாவசியப் பொருட்களில் விலை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அதிகரிக்கும் சூழ்நிலையில், அத்தியாவசிப் பொருட்களின் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், இடைத்தரகர்கள் குழுவொன்று, பதுக்கல் பாணியை முன்னெடுக்கின்றது. இதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இருப்பதாகவே, மக்கள் சந்தேகிக்கின்றனர். 

ஏனெனில், அத்தியாவசியப் பொருட்களில் விலை, ராஜபக்‌ஷர்கள் ஆட்சிக்கு வந்தது முதல், அதிகரித்து வரும் சூழ்நிலைகளைப் பார்க்கும் போது, அதனைப் புரிந்து கொள்ள முடியும். ஒருசில முதலாளிகளுக்காக, ஓர் அரசாங்கம் இயங்கும் சூழலொன்று பேணப்படுகின்றது. 

இவ்வளவு தப்பான முயற்சிகளுக்கான களத்தை அமைத்து, கறுப்புச் சந்தையையும் பதுக்கல்காரர்களையும் வளர்த்துவிட்டு, இன்றைக்கு அத்தியாவசிய உணவு விநியோகம் அவசரகால விதிமுறைகளின்  கீழ் கொண்டுவரப்படுகின்றது என்றால், அதன்  உண்மைத்தன்மையை சந்தேகிக்காமல் இருக்க முடியாது.

கடைகளில் அரிசி, சீனி, பால்மா, கருவாடு, உழுந்து, பயறு உள்ளிட்ட பொருட்களைப் பெற்றுக்கொள்வது,  குதிரைக் கொம்பான விடயமாக இன்றைக்கு மாறிவிட்டது.
சிறிமாவோ காலத்தில் நிலவிய அத்தியாவசியப் பொருட்களுக்கான நெருக்கடிக்கு ஒப்பான ஒரு காலத்தை நோக்கி, ராஜபக்‌ஷர்கள் நாட்டை நகர்த்தி வருகின்றார்கள். 

எந்தவொரு காரியத்திலும் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளை உள்வாங்கப்படுவதில்லை. மாறாக, தனி முதலாளிகள், இராணுவத்தினர் உள்ளிட்ட தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமைய, அரசாங்கத்தின் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனால்தான், இவ்வளவு நெருக்கடிகள் ஏற்படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பிலான பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு, கடந்த மாதம் வரையில் 7,000 முதல் 10,000 ரூபாய் வரையில் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், அதே பரிசோதனைகளுக்காக இந்தியாவின் சில மாநிலங்கள், இலங்கை மதிப்பின்படி பார்த்தால் 1,500 முதல் 2,000 ரூபாயே அறவிடுகின்றன. பி.சி.ஆர் பரிசோதனையை ஒருவர் மேற்கொள்ளவதற்கான செலவை 2,000 ரூபாய்க்குள் கொண்டு வந்தாலும் அதில் குறிப்பிட்டளவான இலாபம் வைத்தியசாலைக்கு இருக்கின்றது.அப்படியான நிலையில், ஒரு பி.சி.ஆர் பரிசோதனைக்காகவே 5,000 முதல் 8,000 ரூபாய் வரையில் அதிகமாக அறிவிடப்பட்டதன் நோக்கம் என்ன? 

பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கான கருவிகள் இறக்குமதி உள்ளிட்ட அனுமதி ராஜபக்‌ஷர்களுக்கு இணக்கமான தனியார் முதலாளி ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது ஏன்? இவ்வாறான கேள்விகள், அரசாங்கத்தின் மீதான கள்ளத்தத் தனங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன.

கொரோனா மக்களை தின்று கொண்டிருக்கின்றது; அந்தக் கொரோனா காலத்தில் மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கமோ, அதனையெல்லாம் மறந்து, தான்தோன்றித்தனமாக நடத்து, மக்களை ஆபத்துக்குள் இன்னும் இன்னும் தள்ளுகின்றது. 

அவ்வாறான நிலையில், மக்கள்தான் தங்களைக்  காத்துக்கொள்ள வேண்டும். வேறு ஆபத்பாண்டவர்கள் யாரும் வரமாட்டார்கள். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .