Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Johnsan Bastiampillai / 2022 நவம்பர் 21 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஐயூப்
தமிழ் நாடு, ஸ்ரீ பெரும்புதூரில் 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி, தேர்தல் பிரசார கூட்டத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டு, மரண தண்டனையும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு இருந்த ஏழு பேரில் ஆறு பேர், வெள்ளிக்கிழமை (11) இந்திய உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த பேரறிவாளன், கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அவரைப் போலவே தம்மையும் விடுதலை செய்யுமாறு, ஏனைய அறுவரும் விடுத்த வேண்டுகோளை அடுத்தே, அவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், இவர்கள் எழு பேரும், 31 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டே விடுதலை பெற்றுள்ளனர்.
ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக, ஆரம்பத்தில் 41 பேர் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர். அவர்களுள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவ்வமைப்பின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மான், மகளிர் உளவுப் பிரிவுத் தலைவி அகிலா ஆகிய மூவரும் அடங்கியிருந்தனர். ஆனால், இவர்கள் கைது செய்யப்படவில்லை. 1995ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘ரிவிரெச’ (சூரிய கதிர்) இராணுவ நடவடிக்கையின் போது அகிலா கொல்லப்பட்டார். பிரபாகரனும் பொட்டம்மானும் இறுதிப் போரின் இறுதி நாளன்று, கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட 41 பேரில், 11 பேர் கைது செய்யப்படும் நிலையில் தப்பிக்க முடியாததால், தற்கொலை செய்துகொண்டனர். சண்முகம் என்பவர் கைது செய்யப்பட்டதன் பின்னர், தூக்கிட்டுத் தற்கொலை செய்தார். இவ்வாறு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆகும்.
ஏனைய 26 பேருக்கும் சிறப்பு நீதிமன்றம், 1998ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. பிரதிவாதிகள் இந்தத் தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர். அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், 1999ஆம் ஆண்டு, அவர்களில் 19 பேரை விடுதலை செய்தது. இவர்கள், ராஜீவ் காந்தி படுகொலையில் நேரடியாகத் தொடர்பு கொள்ளவில்லை என்ற அடிப்படையிலும் அவர்களின் குற்றம் தொடர்பில் அவர்கள் அனுபவித்த எட்டு ஆண்டு கால சிறைத் தண்டனை போதுமானது என்ற அடிப்படையிலும் விடுதலை செய்யப்பட்டனர்.
அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவர், சண்முக வடிவேல் எனப்படும் இலங்கையராவார். அவர், படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்களின் பணத்தை, தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு இருந்தார்.
மிகுதி எழுவரில் ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இவர்கள் மூவரும் இலங்கையர்கள்.
முருகன், நளினி, சின்ன சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இவர்களில் முருகன், சாந்தன் ஆகிய இருவரும் இலங்கையர்கள்; நளினியும் பேரறிவாளனும் இந்தியர்கள்.
ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான விசாரணை, குற்றப் புலனாய்வுத் துறையில் தொழில்சார் முறையில் மிகவும் நிபுணத்துவம் மிக்க விசாரணையாகவே கருதப்படுகிறது. விசாரணையாளர்கள் சில வாரங்களிலேயே மேற்படி 26 பேர் உட்பட, தடுப்புக் காவலில் தற்கொலை செய்து கொண்டவரையும் கைது செய்தனர். இந்த விசாரணையின் வெற்றியின் பெருமையின் பெரும்பகுதி, தமிழக அரசின் இரசாயன பகுப்பாய்வாளராக இருந்த பேராசிரியர் சந்திரசேகரனுக்கும் ஒரு கமெராவுக்குமே உரியது என்று கூறினால் அது மிகையாகாது.
தேர்தல் கூட்டத்தில், ராஜீவ் காந்திக்கு பலர் மலர்மாலை சூட்டினர். இதன் போதே குண்டு வெடித்து, அவர் உள்ளிட்ட 16 பேர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். ஆனால் அது கண்ணிவெடியா, எறியப்பட்ட குண்டா, தற்கொலை குண்டா என்பது எவருக்கும் தெரியாதிருந்தது.
பேராசிரியர் சந்திரசேகரன் அந்த இடத்தைப் பரிசோதித்த போது, கீழே விரிக்கப்பட்டு இருந்த செங்கம்பளம் சேதமடைந்திருக்கவில்லை. அந்த இடத்தில் இருந்த ராஜீவ் காந்தியின் முகம், நெஞ்சு என்பன பலத்த சேதத்துக்கு உள்ளாகி இருந்தன. எனவே, குண்டுக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையில் எந்தவொரு தடையும் இருக்கவில்லை என்றும் ஆனால் குண்டுக்கும் செங்கம்பளத்துக்கும் இடையே தடை இருந்திருக்கிறது என்றும் சந்திரசேகரன் முடிவு செய்தார்.
சிதறிக் கிடந்த சடலங்களில், பெண் ஒருவரின் சடலம் இடுப்புப் பகுதியுடன் துண்டிக்கப்பட்டு இருந்தது. அது, சடலங்களில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட சடலமாக இருந்தது. சடலங்களிடையே ஓர் இடுப்புப் பட்டியின் முன்பாகம் இருந்தது. அதில் எரிந்த ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து துகள்கள் இருந்தன. பட்டியில் சிக்கியிருந்த துணியும் துண்டிக்கப்பட்டு இருந்த உடலில் இருந்த துணியும் ஒன்றாக இருந்தமையால், அந்தப் பட்டி இந்தப் பெண்ணினுடையது என்று சந்திரசேகரன் முடிவு செய்தார். பட்டியின் பின்பாகம் அங்கே இருக்கவில்லை.
அதாவது, இந்தப் பெண்ணின் முதுகுக்கும் ராஜீவ் காந்தியின் நெஞ்சுக்கும் இடையே வெடிப்பு இடம்பெற்றிருக்கிறது. கம்பளம் சேதமடையாததற்குக் காரணம் அதுவே! குறித்த பெண் அணிந்திருந்த இடுப்புப் பட்டியில், வெடி மருந்து இருந்தமையால் அவளே குண்டுதாரி என சந்திரசேகரன் முடிவு செய்தார். ஆனால் யார் இந்தப் பெண்?
இந்தச் சம்பவத்தில் ஹரிபாபு என்னும் புகைப்படப்பிடிப்பாளரும் கொல்லப்பட்டார். கமெராவின் பட்டியை அவர் கழுத்தில் போட்டுக் கொண்டு இருந்தமையால், கமெரா அவரது சடலத்திலேயே சிக்கியிருந்தது. இந்திய இரகசிய பொலிஸ் அதிகாரியான டி.ஆர் காரத்திகேயனே விசாரணைக்குப் பொறுப்பாக இருந்தார். அவர் அந்தக் கமெராவில் இருந்த படங்களை பரிசோதிக்கும் போது, இறுதியாக எடுக்கப்பட்ட படத்தில், பெண் ஒருவர் மலர் மாலையை ஏந்தியவாறு, ராஜீவ் அருகே இருப்பது காணக்கூடியதாக இருந்தது.
உடைகளை ஒப்பிட்டுப் பார்த்த கார்த்திகேயன், அது மேற்படி குண்டுதாரி என்பதை அறிந்து கொண்டார். பின்னர் கைது செய்யப்பட்டவர்களை விசாரிக்கும் போது, அப்பெண் இலங்கையைச் சேர்ந்த ‘தானு’ என்று அழைக்கப்பட்ட தேன்மொழி ராஜரத்னம் அல்லது கலைவாணி ராஜரத்னம் என்று தெரிய வந்தது. கமெராவில் இருந்த படங்களில் ஒன்றில், மேடை அருகே ஆசனங்களில் அமர்ந்து இருந்தவர்களில் இரு பெண்களைத் தவிர ஏனையோரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் அடையாளம் கண்டனர்.
அக்காலத்தில், தெற்காசிய பிராந்தியத்தில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் மட்டுமே, தற்கொலை குண்டுதாரிகள் இருந்தனர். எனவே, தமிழ் நாட்டில் இருந்த இலங்கையர்கள் பலத்த சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
அப்போது சங்கர் என்ற புலி உறுப்பினர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த தொலைபேசி இலக்கங்களில் நளினி என்பவரின் இலக்கம் இருந்தது. அந்த இலக்கம் ஹரிபாபுவிடமும் இருந்தது. எனவே, இரகசிய பொலிஸ் அதிகாரியான டி.ஆர் காரத்திகேயன், ஹரிபாபுவின் படங்களை சங்கரிடம் காட்டினார். காங்கிரஸ் கமிட்டியால் அடையாளம் காண முடியாதிருந்த இரு பெண்களில ஒருவர் நளினி என்ற பெண் என்றும் மற்றவர் சுபா என்ற இலங்கையைச் சேர்ந்த பெண் என்றும் தெரிய வந்தது.
தம்மைப் பற்றி பொலிஸாருக்குத் தெரியவந்ததை அறிந்த நளினி, இலங்கையைச் சேர்ந்த புலிப் போராளியான முருகனோடு தலைமறைவானார். சுபாவும் சிவராசன் என்ற இலங்கையைச் சேர்ந்த புலிப் போராளியோடு தலைமறைவானார். சிவராசனே ஸ்தலத்தில் தாக்குதலை வழிநடத்தியுள்ளார். முருகனும் குண்டுச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்துள்ளார். இந்த விவரங்கள் நளினியின் தாயையும் சகோதரனையும் கைது செய்து விசாரிக்கும் போது தெரிய வந்தது. சிவராசன் ஹரிபாபுவின் படமொன்றிலும் இருந்தார்.
நளினி, சிவராசன், சுபா, முருகன் ஆகியோரின் படங்கள் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டு, மக்களின் உதவி கோரப்பட்டது. முருகனின் படம் வாக்குமூலங்களின் படி வரையப்பட்ட ஒன்றாகும். பொதுமக்களிடம் கிடைத்த தகவல்களின்படி, முருகனும் நளினியும் கைது செய்யப்பட்டனர். சிவராசனும் சுபாவும் எண்ணெய் தாங்கியொன்றில் பதுங்கி கர்நாடகாவுக்குச் சென்றனர். அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த போது அந்த வீட்டுக்கு பால் கொண்டு வரும் ஒரு நபருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, பொலிஸ் அதிரடிப் படையினர் அவ்வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது இருவரும் கைத்துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்து கொண்டனர்.
வானொலி தகவல் பறிமாற்றங்களை பரிசோதிக்கும் போது, சிவராசனுக்கும் புலிகளின் தமிழ் நாட்டு தொடர்பாளர் ‘குண்டு’ சாந்தனுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றங்களை பொலிஸாரால் ஒற்றுக் கேட்க முடிந்தது. அதன்படி, சிவராசனுக்கு அடைக்கலம் வழங்கிய ஜெயக்குமாரும் ரொபர்ட் பயஸ் ஆகிய இருவரும் அவர்களது உறவினர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலங்களின் படியே, சாந்தனும் பேரறிவாளனும் கைது செய்யப்பட்டனர். சாந்தன், தாக்குதலை திட்டமிட்டவர்களில் ஒருவர் எனக் கூறப்பட்டது.
ஹரிபாபுவின் கமெரா, பொலிஸாரிடம் சிக்காவிட்டால் சிலவேளை விசாரணைகள் வேறு திசையில் திரும்பி இருக்கலாம். அல்லது, சந்தேக நபர்களை கைது செய்ய நீண்ட காலம் எடுத்திருக்கலாம். அதற்குள் சிவராசன், முருகன், சாந்தன், சுபா உள்ளிட்ட புலி உறுப்பினர்கள், இலங்கைகக்கு தப்பி வந்திருக்கலாம். எவ்வாறாயினும் ராஜீவ் காந்தி கொலையானது, புலிகளின் தலைவிதியை நிர்ணயித்த பிரதான காரணிகளில் ஒன்றாகும்.
12 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago