2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 08: நாஜிகளை தப்பவைத்த அமெரிக்க உளவுத்துறை

Johnsan Bastiampillai   / 2022 டிசெம்பர் 31 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

 

இரண்டாம் உலகப்போரின் முடிவில் கைது செய்யப்பட்ட நாஜிகளில் பலரை, அமெரிக்கா திட்டமிட்டுத் தப்பவைத்தது என்று கடந்தவாரம் பார்த்தோம். ஏன் அமெரிக்கா நாஜிகளைத் தப்பவைத்தது? அதற்கான காரணங்கள் என்ன போன்ற வினாக்கள் எழுவது இயற்கையானது. இவை குறித்துப் பார்ப்போம்.

 அமெரிக்க உளவுத்துறை, நாஜிகளைத் தப்பவைத்ததன் பின்னணியில் இருப்பது, அவர்களைத் தங்கள் தேவைகளுக்காகப் பயன்படுத்தலாம் என்ற எண்ணமாகும். இதை சில ஆண்டுகளுக்கு முன்னர், பொதுவெளியில் பார்வைக்காக அனுமதிக்கப்பட்ட இரகசிய ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.  

கெடுபிடிப்போரின் உண்மையான வெற்றியாளர்கள் நாஜி போர் குற்றவாளிகள்; அவர்களில் பலர் நீதியிலிருந்து தப்பிக்க முடிந்தது. நாஜிகளைத் தண்டிப்பதை விட, அவர்களை சோவியத் ஒன்றியத்துக்கு எதிராகப் பயன்படுத்துவது, அமெரிக்காவுக்கு முக்கியமானதாக இருந்தது என்று இந்த ஆவணங்களைப் படித்தோர் தெரிவிக்கிறார்கள். 

இந்த ஆவணங்கள், கெடுபிடிப்போர் காலத்தின் மிகவும் இரகசியமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளன. சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக, ஓர் இரகசிய பிரசாரத்தை நடத்த சி.ஐ.ஏ ஒரு விரிவான நாஜி உளவு வலையமைப்பைப் பயன்படுத்தியது. 

இரண்டாம் உலகப்போரில் நாஜிகளின் குற்றங்கள், சித்திரவதைகள், கொலைக்கூடங்கள் என்றவுடன் முதலில் நினைவுக்கு வரும் பெயர் அடல்ப் ஹிட்லருடையது. அதற்கு அடுத்தாக நினைவுக்கு வருவது ‘மரண தேவதை’ என அறியப்பட்ட ஜோசப் மெங்கலே ஆவார். ஒரு வைத்தியராக, சிறைக்கூடங்களில் கைதிகளை வைத்து மோசமான உயிரியல் பரிசோதனைகளை மேற்கொண்டார். இவற்றுக்காக ஆயிரக்கணக்கானோர் கொலைசெய்யப்பட்டனர். வாயு கூடங்களுக்கு அனுப்பும் கைதிகளைத் தெரிவுசெய்தார்; வாயு கூடங்களை மேற்பார்வை பார்த்தார்; இந்த வாயு கூடங்களில் இலட்சக்கணக்கான யூதர்கள் கொலையுண்டனர். இவரது உயிரியல் சோதனைகள் நெஞ்சை நடுங்கவைக்கும் தன்மையுடையன. 

ஜூலை 1945இல், ஜோசப் மெங்கேலே பிடிபட்டார்.  கைதிகள் முகாமில் வைத்து அடையாளம் காணப்பட்டார். கைதியின் பெயர் மட்டுமல்ல, ஆஷ்விட்ஸில் மருத்துவர், பரிசோதனை செய்பவர், மரணதண்டனை செய்பவர் என அவரது குற்றங்களின் பொதுவான தன்மையும் அறியப்பட்டது என்று அம்முகாமில் இருந்த நேரடி சாட்சிகள் தெரிவித்துள்ளன. 

ஆயினும், இக்குற்றங்களைச் செய்த நாஜி அமைப்பான ‘ஷட்ஸ்டாஃபெல்’  இன் அவரது சக உறுப்பினர்களைப் போலவே, மெங்கலேயும் எப்படியோ காணாமல் போக அனுமதிக்கப்பட்டார். அவர் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இலத்தீன் அமெரிக்காவில் மீண்டும் தோன்றினார். 30 ஆண்டுகளுக்கு முன்பு, ‘நல்ல யுத்தம்’ என்று அழைக்கப்பட்டதில் வெற்றி பெற்ற கூட்டாளிகள், மெங்கலே போன்ற ஒரு கொடூரமான கொலைகாரனை வேண்டுமென்றே விடுதலை செய்ய அனுமதித்திருக்கலாம் என்று சிலர் நம்பியிருப்பார்கள். 

எவ்வாறாயினும், தேடப்படும் குற்றவாளிகளை முகாம்களில் இருந்து ‘தப்பிவிட’ சி.ஐ.ஏ ஏற்பாடு செய்தது. அவர்களைப் பாதுகாக்க புதிய அடையாளங்களை அவர்களுக்கு வழங்கியது என்பது இப்போது மிகவும் தெளிவாகிவிட்டது. இக்கொலையாளிகள் நீதியிலிருந்து விலக்கு பெறவும் பாதுகாக்கப்படவும், அமெரிக்க உளவுத்துறை கடினமாக உழைத்ததை பொதுவெளிக்கு அனுமதிக்கப்பட்ட ஆவணங்கள் காட்டுகின்றன.  

குறிப்பாக, இலத்தீன் அமெரிக்காவுக்குத் தப்பிச்செல்ல அனுமதிக்கப்பட்ட மெங்கலேயும் அவர்தம் கூட்டாளிகளும் அங்கு அமெரிக்க உளவுத் துறைக்குப் பணியாற்றியுள்ளார்கள். லியானின் கசாப்புக் கடைக்காரர் (the Butcher of Lyon) என அறியப்பட்ட கிளாஸ் பார்பி பொலிவியாவிலும், வாயுக்கூடங்களுக்குப் பொறுப்பாக இருந்து பல இலட்சம் பேரை விசவாயு ஏற்றிக் கொண்ட வால்டர் ராஃப் சிலியிலும், தேடப்படும் இன்னொரு பெருங்கொலைகாரனான ஃபிரெட்ரிக் ஸ்வென்ட் பெருவிலும் அமெரிக்க உளவுத்துறைக்காகப் பணியாற்றினர்.  

மெங்கலேவைப் போலவே, இந்த மூன்று பேரும் தங்கள் புதிய நாடுகளின் இராணுவம் மற்றும் உள்துறை அமைச்சகங்களில் உள்ள நவபாசிச கூறுகளுடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்டனர். இடதுசாரிகளுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளில் அனைவரும் ஒத்துழைத்தனர், குறிப்பாக, சி.ஐ.ஏ உதவியுடன் சிலியில் அலெண்டே ஆட்சி கவிழ்க்கப்பட்ட நேரத்தில் இவர்களின் பங்களிப்பு முக்கியமானது. 

பார்பியும் ஸ்வென்ட்டும் மேற்கு ஜேர்மனியின் உளவு அமைப்பின் தனியுரிம நிறுவனமான Merex AG உடனான ஆயுத ஒப்பந்தங்களை வசதிப்படுத்தியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் சம்பளப்பட்டியலில் இருந்தனர். 

இவர்களுக்கும் அமெரிக்க உளவுத்துறையின் உயர்மட்டத்தினருக்கும் நெருங்கிய உறவு இருந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் இத்தாலியில் நாஜிகளும் பாசிஸ்டுகளும் தனியே சரணடைவதற்கும் பாதுகாப்பாக அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படுவதற்குமான ஏற்பாடுகளை இவர்கள் இருவரும் அமெரிக்க உதவியோடு செய்தார்கள். 

வடஇத்தாலியில் இத்தாலிய கம்யூனிசக் கட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில் இருந்தார்கள். இது இத்தாலியில் எஞ்சியிருந்த பாசிஸ்டுகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியது. இதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கும்படி, இவர்கள் அமெரிக்க உளவுத்துறையினரிடம் கேட்டுக் கொண்டனர். இத்தாலியில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைக் கைப்பற்றுவதைத் தடுக்க அமெரிக்காவும் நாஜிகளும் இணைந்து பணியாற்றிய உண்மையை, இரண்டாம் உலகயுத்தம் பற்றிய வரலாற்றாசிரியர்கள் தவிர்த்து விடுகிறார்கள். 

இரண்டாம் உலகப்போரின் முக்கியமான ஆவணம் ஹிட்லரின் ‘இறுதித் தீர்வு’. இது ‘யூதர்களின் கேள்விக்கான இறுதித் தீர்வு’ என்றறியப்பட்டது. இது ஐரோப்பியக் கண்டத்துக்குள் மட்டுமல்ல; எட்டக்கூடிய எல்லை வரை அடையக்கூடிய அனைத்து யூதர்களையும் கொலை செய்வதற்கான அதிகாரப்பூர்வ குறியீட்டுப் பெயராகும். 

ஜேர்மன் ஆக்கிரமித்துள்ள ஐரோப்பா முழுவதும் இது நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற புவிசார் அரசியல் அடிப்படையில், ஜனவரி 1942இல் பெர்லின் அருகே நடைபெற்ற ‘வான்சி’ மாநாட்டில் நாஜி தலைமையால் உருவாக்கப்பட்டது. இந்த ‘வான்சி’ நிறுவகத்துக்குப் பொறுப்பாகவிருந்து இறுதித் தீர்வுக்கு தத்துவார்த்த விளக்கத்தைக் கொடுத்த நாஜி சித்தாந்தவாதி எமில் ஒக்ஸ்பர்க். 

போரின் முடிவில் போலந்தால் போர்க்குற்றங்களுக்காக இவர் வேண்டப்பட்டார். ஆனால், இவரை ஒப்படைக்க மறுத்த அமெரிக்கா, 1952ஆம் ஆண்டு எழுதப்பட்ட குறிப்பில், இவரைப்பற்றி பின்வருமாறு சொல்லியது: “ஒக்ஸ்பர்க் நேர்மையானவர்; இலட்சியவாதி. நல்ல உணவு மற்றும் மதுவை அனுபவிக்கிறார். பாரபட்சமற்ற மனம் கொண்டவர்”. சி.ஐ.ஏ 1940களின் பிற்பகுதியில், சோவியத் விவகாரங்களில் நிபுணராக அவரைப் பணியில் அமர்த்தியது.

இதேபோலவே, பிரான்ஸில் பெருங்கொலைகளைச் செய்த பார்பியை தங்களிடம் வைத்துக்கொண்டு, பார்பி குறித்து எதுவித தகவலும் தெரியாது என்று பிரெஞ்சு அதிகாரிகளிடம் அமெரிக்க உளவுத்துறையினர் கூறினர். ஆனால், பிரெஞ்சு புலனாய்வுத்துறையினருக்கு பார்பி அமெரிக்காவின் வசம் இருக்கும் தகவல் தெரிந்திருந்தது. பிரான்ஸில் செய்யப்பட்ட கொலைகளுக்காகவே லியோனின் கசாப்புக்கடைக்காரன் என அறியப்பட்டவரை, விசாரிக்கவோ தண்டனை வழங்கவோ பிரான்ஸால் முடியவில்லை. இன்னும் சரியாகச் சொல்வதானால் அமெரிக்கா அனுமதிக்கவில்லை. 

இத்தகவல்களின் பின்னணியில் மெங்கலேயிற்கு என்ன நடந்தது என்பதை ஊகிக்க முடியும். இரண்டாம் உலகப்போரின் கொடூரங்களின் பிரதான கதாபாத்திரங்களில், மெங்கலேயின் இடம் முக்கியமானது. ஆனால், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றிய விரிவான ஆய்வுகளோ, நூல்களோ இல்லை. அதை ஒரு முடிந்த அத்தியாயமாகவே வரலாறு பதிவுசெய்கிறது. 

ஆஷ்விட்ஸ் மனித பரிசோதனைகளில் மெங்கலேயின் சக பணியாளராக இருந்த வால்டர் ஷ்ரைபர் அமெரிக்கர்களால் பாதுகாக்கப்பட்டார். அவர் அமெரிக்க விமானப்படையின் போருக்குப் பிந்தைய ஆராய்ச்சிகளுக்கு உதவினார். குறிப்பாக பாக்டீரியாவியல் போரில் (Bacteriological warfare) வழிகாட்டினார். 

அவர் 1952ஆம் ஆண்டு, அர்ஜென்டினா வழியாக பராகுவேயில் தன்னை மீண்டும் நிலைநிறுத்த, அமெரிக்க அதிகாரிகள் உதவினர். அதே 1952ஆம் ஆண்டு மெங்கலே அர்ஜென்டினாவில் தோன்றினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பராகுவே சென்றார். 1957ஆம் ஆண்டு பராகுவே மெங்கலேயிற்கு குடியுரிமை வழங்கியது. இடைப்பட்ட காலத்தில் அவர் எங்கு சென்றார், என்ன செய்தார் போன்ற வினாக்களுக்கான விடைகள் இன்னமும் மறைக்கப்பட்டுள்ளன; அமெரிக்க உளவு ஆவணங்களில் இருக்கக்கூடும். 

இரண்டாம் உலகப் போரின் தீப்பிழம்புகள் இன்னும் எரிந்து கொண்டிருக்கும் வேளையில், ரூஸ்வெல்ட், சர்ச்சில், ஸ்டாலின் ஆகியோர் நாஜி தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மில்லியன் கணக்கான அப்பாவி குடிமக்களின் சித்திரவதைக்கும் கொலைக்கும் காரணமானவர்கள், பூமியின் எப்பகுதிக்குச் சென்றாலும், மூலை முடுக்கெல்லாம் அவர்களைப் பின்தொடர்ந்து, நீதியை நிலைநாட்டுவதற்காக அவர்களை நீதியின் முன் நிறுத்தும் என்று  மூன்று நேசசக்திகளாலும் உறுதியளிக்கப்பட்டது. 

ஸ்டாலின் மட்டுமே சொன்னதைச் செய்தார். மற்ற இருவரும் அவ்வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை.  நீதியை வழங்கவில்லை. நாஜிகளுடன் கைகோர்த்தவர்களிடம் நமக்கான நீதியை வேண்டி நிற்பது முரண்நகை மட்டுமல்ல; துயரமும் கூட!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .