2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘வேலா’க்கள் எங்கே போய்விட்டன?

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

லஷத்தினி ராஜேந்திரம், இராமஜெயம் கோபிராஜ்

நீங்கள், எப்போதாவது 1.5 மீட்டர் நீளமான வால் போன்ற அமைப்பொன்று, 6 மீ‌ற்றர் நீளமான உடலுடன் இணைக்கப்பட்டதை போன்ற உயிரினத்தைப் பார்த்ததுண்டா?

அவ்வாறானதோர் உயிரினம் காணப்படுகின்றது என்ற செய்தி, திருகோணமலை மாவட்டம், குச்சவெளி என்ற கிராமத்தின் தூசி படர்ந்த பாதை வழியாக விரைவாகப் பரவியது.

அந்த விநோத உயிரினத்தைப் பார்வையிட, மிக வேகமாக அவ்விடம் மக்கள் கூட்டத்தால் நிரம்பியது. அது, அவர்களுக்குக் கடற்கன்னி அல்லது, ‘டிராகன்’ போல தோன்றியது. ஆனால், 2017 பங்குனியில் இதைப் பிடித்த மீனவரால் இயற்றப்பட்ட புனைகதை அல்ல!

இந்த அற்புதமான மீன், சரியாகக் கூறினால் இது ஒரு வகை திருக்கை மீன். (இதைத் தமிழில் ‘வேலா’, ‘இலுப்பா’ என்றும் சிங்களத்தில் ‘தெதி மோரா’ என்றும் அழைப்பர்). இவை கசியிழைய மீன் இனத்தைச் சேர்ந்தவை. இவ் வகுப்பு அனைத்து வகையான சுறா, திருக்கை இனங்களை உள்ளடக்குகின்றது. வேலா மீனின் வால், அதனது மண்டையோட்டில் இருந்தான நீட்சி, அதற்குத் தனித்துவமான அழகைக் கொடுக்கின்றது.    

சில தசாப்தங்களுக்கு முன்னர், இவை இலங்கையில் பொதுவாகக் காணக்கூடிய மீன் இனமாகும். அவைகளின் ரோஸ்ட்ராகள் (rostra) கருவாடுகளை உலர்த்தும் போது, தொல்லை தரும் நாய்களை விலக்கி வைக்க அமைக்கும் வேலிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, வேலா மீன்களை இப்போது புகைப்படங்களில் மட்டுமே காண முடிகிறது, மேலும், அவை உடனடியாகப் பாதுகாக்கப் படாவிட்டால் நாட்டுப்புற கதைகளின் ஒரு பகுதியாக மாத்திரம் மாறக்கூடும்.

உலகளவில் ஐந்து வகையான வேலா இனங்கள் உள்ளன. அதோடு அவை அனைத்தும் ஐ.யூ.சி.என் இன் சிவப்பு பட்டியலில் (IUCN Red List) அச்சுறுத்தலுக்கு உள்ளானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஏனைய, சுறா, திருக்கை மீன்கள் போலவே, இவையும் நீண்ட ஆயுள், மெதுவான வளர்ச்சி, தாமதமான முதிர்ச்சி, குறைந்த இனப்பெருக்க திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. அவைகளின் ரோஸ்ட்ரா அனைத்து வகையான மீன்பிடி வலைகளிலும் சிக்கிக் கொள்கிறது. ‘ட்வாப் சோவ்பிஷ்’, ‘நெரோ சோவ்பிஷ்’ ஆகியவை ஆபத்துக்கு உள்ளானவை என்றும் ‘லார்ஜ்டூத் சோவ்பிஷ்’, ‘கிரீன் சோவ்பிஷ்’, ‘ஸ்மோல்டூத் சோவ்பிஷ்’ என்பன மிகவும் ஆபத்துக்கு உள்ளானவை எனவும் பட்டியலிடப்பட்டுள்ளன. CITES பட்டியல் காரணமாக, சர்வதேச வர்த்தகம் தடைசெய்யப்பட்டுள்ளது.

‘நெரோ சோவ்பிஷ்’, ‘லார்ஜ்டூத் சோவ்பிஷ’, ‘கிரீன் சோவ்பிஷ்’ ஆகிய மூன்று இனங்களும் 1889 முதல் தேசிய உயிரினங்கள் சரிபார்ப்பு பட்டியல்களில் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், அவற்றை உறுதிப்படுத்த புகைப்பட ஆதாரங்கள் எதுவும் இல்லை.

வேலா மீன்கள் பற்றிய அறிவை விரிவுபடுத்துவதற்காக 2019 ஆம் ஆண்டில், Blue Resources Trust டொக்டர் ரிமா ஜபாடோ (Elasmo Project) உடன் இணைந்து, Tokyo Cement Group, the Pew Charitable Trusts, Marine Conservation Action Fund, and Ocean Park Conservation Foundation ஆகியவற்றின் அனுசரணையில், எங்கள் குழு தீவு முழுவதும் 300 மீனவர்களிடம் நேர்காணல்களை மேற்கொண்டது.

எங்கள் தரவுகளின்படி, 50 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலான மீனவர்கள் வேலா மீன்களைப் பிடித்திருந்தாலும், 30 வயதுக்கு உட்பட்ட அனைத்து மீனவர்களாலும் காட்டிய புகைப்படங்களிலிருந்து ஒன்றைக் கூட அடையாளம் காண முடியவில்லை. வேலா மீன்களைப் பார்த்த மீனவர்களில், அரைவாசி மீனவர்கள், 1992 முதல் ஒன்றைக் கூட காணவில்லை. 32 பேர் மட்டுமே, இதுவரை ஒரு வேலா மீனையாவது பிடித்திருக்கிறார்கள். பெரும்பாலான மீனவர்கள், மீன்வளர்ப்பு தொழில் துறையின் வளர்ச்சிக்கு முக்கியமான வாழ்விடங்களை அழித்தமையைக் காரணமாக கூறினர்.

வேலா மீன்களுக்கு கலாசார அல்லது பாரம்பரிய மதிப்பு இல்லாததையும் எங்கள் ஆய்வு வெளிப்படுத்தியது. இருப்பினும், தலவில தேவாலயம்,  சின்னகுண்டுவா தேவாலயம் ஆகியவற்றில் வேலா மீன்களின் ரோஸ்ட்ராக்களை நாங்கள் பார்வையிட்டோம். அங்குள்ள மீனவர்கள், தங்கள் முன்னோர்கள் ரோஸ்ட்ராக்களை நன்கொடையாக அளித்ததாகக் குறிப்பிட்டனர். அது அவர்களின் கடற்பயணங்களுக்கு பாதுகாப்பையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் என்று நம்பினார்கள்.

மிகையான மீன்பிடி அழுத்தம் காரணமாக, குடித்தொகை பெரிதும் குறைந்துவிட்டதை காட்டுவதால், இலங்கையில் வேலா மீன்கள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை நாங்கள் வலுவாக பரிந்துரை செய்கிறோம். இது மீதமுள்ள வேலா மீன்கள் இனப்பெருக்கம் செய்ய மற்றும் அவற்றின் சரிவை மீட்க வழிவகுக்கும்.

(கட்டுரையாளர்கள், ப்ளூ ரிசோர்ஸஸ் டிரஸ்ட் (Blue Resources Trust) யை சேர்ந்தவர்கள்; இது இலங்கையின் கடல் வள ஆராய்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அமைப்பு ஆகும்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .