Janu / 2026 மே 03 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் தள வைத்தியசாலை நிர்வாகத்தின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, அச்சுறுத்தல் விடுத்தார் என்ற முறைப்பாட்டுக்கு அமைய, சனிக்கிழமை (02) கைது செய்யப்பட்ட புத்தளம் மாநகர சபை உறுப்பினர் இஷாம் மரிக்கார் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் தள வைத்தியசாலையில் நீண்டகாலப் பிரச்சினையாக காணப்படும் கட்டாக்காலி நாய்களின் தொல்லைகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில், மாநகர சபை உறுப்பினர் இஷாம் மரிக்கார் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த நிலையில், கடந்த வாரம் தனது ஒன்பது மாதக் குழந்தையுடன் புத்தளம் தள வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காகச் சென்ற தாய் ஒருவரை, அங்கு சுற்றித்திரிந்த கட்டாக்காலி நாயொன்று கடித்துள்ளது. இதில் அந்தத் தாயும் குழந்தையும் காயமடைந்த நிலையில், அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் புத்தளம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து, கடந்த ஏப்ரல் 28-ஆம் திகதி வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்ற இஷாம் மரிக்கார், நிலைமைகளை அவதானித்தார். "கட்டாக்காலி நாய்களை இங்கிருந்து வெளியேற்றாவிடின் இன்னும் பலர் பாதிக்கப்படுவர்; மக்கள் வைத்தியசாலைக்கு வர அச்சப்படுகின்றனர்," என்று அவர் வைத்தியசாலை நிர்வாகத்துடன் முரண்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, குறித்த உறுப்பினர் அரச பணிக்கு இடையூறு ஏற்படுத்தி, அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாக வைத்தியசாலை நிர்வாகத்தினர் புத்தளம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்தனர். அந்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சனிக்கிழமை (02) காலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற இஷாம் மரிக்காரைக் கைது செய்தனர்.
அன்றைய தினமே அவர் புத்தளம் மாவட்ட பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது, அவரைப் பிணையில் விடுதலை செய்யுமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
புத்தளம் தள வைத்தியசாலையில் நோயாளிகள் தங்கியிருக்கும் கட்டிடங்களுக்குள் கட்டாக்காலி நாய்களின் தொல்லை பல வருடங்களாக நீடிப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறிப்பாகக் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறுவர்கள் தங்கியிருக்கும் பிரிவுகள், விபத்துப் பிரிவு மற்றும் கிளினிக் நிலையங்களில் நாய்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் நோயாளர்களும் அவர்களைப் பார்வையிட வரும் உறவினர்களும் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.
ரஸீன் ரஸ்மின்

17 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
1 hours ago