2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு எவருக்கும் முடியாது’

Princiya Dixci   / 2017 ஜனவரி 04 , மு.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி சட்டத்தரணிகளில் சிலர், கிணற்றுத் தவளைகளைப் போல, நாட்டின் சட்டதிட்டங்களைத் தெரிந்துகொள்ளாமல், சட்டமூலங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரத்துறை அமைச்சருமான ராஜித சேனாரத்ன, இந்த நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எவருக்கும் முடியாது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

முடிந்தால் ஆட்சியை கவிழ்க்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒருவாரகால அவகாசம் கொடுத்துள்ள நிலையிலேயே அமைச்சர் ராஜித, மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

“ராஜபக்ஷக்களுடன் எந்தவிதமான தொடர்பையும் முன்னெடுக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்களிடம் தெரிவித்துள்ளார்” என்றும் அவர் கூறினார்.

“மக்களின் தீர்ப்பை தவறான வழியில் பயன்படுத்தமாட்டோம். ராஜபக்ஷக்களுடன் தொடர்பினை பேணிவருகின்ற, ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் தொடர்பில் தேடியறிந்து பார்க்குமாறு, அக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்களை சந்தித்தபோது ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

“அவ்வாறான நிலையில், இந்த நல்லாட்சி அரசாங்கத்தை யாராலும் கவிழ்க்க முடியாது. சிங்கள இனவாதிகள், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கே கூடுதலாக பேசுகின்றனர். அவ்வாறான ஒரு குழுவினர் தமிழ்மக்கள் மத்தியிலும் உள்ளனர்” என்றும் அமைச்சர் கூறினார் 

இந்த இனவாத, துர்குணமுள்ள அரசியல் முறைமையை ஒழித்துகட்டவேண்டும். துர்குணமுள்ள செயற்பாடுகளையே இன்றும் சிலர் முன்னெடுக்கின்றனர்.  

அறிவாளிகள் என்று தங்களை கூறிக்கொள்ளும், நாட்டைப்பற்றி தெரியாத ஒரு குழுவினர் இலங்கைக்குள் இருக்கின்றனர். ஜனாதிபதி சட்டத்தரணிகள் சிலர், கிணற்றுத் தவளைகளை போல செயற்படுகின்றனர். நாட்டின் சட்டத்திட்டங்கள் தெரியாமல் சட்டமூலங்களை தயாரிக்கின்றனர். அதிகார பகிர்வு உலகிலேயே இடம்பெறுகின்றது. எங்களுக்கென்று தேசியக் கொள்கையொன்று இருக்கவேண்டும். சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பலதையும் கூறிவருகின்றனர்.  

எனினும், எதிர்க்கட்சித் தலைவரான இரா.சம்பந்தன், தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, சிங்கள மக்களின் விருப்பத்துடனான தீர்வாகவே இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். அது நல்லதொரு உயிரூட்டமுள்ள அம்சமாகும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .