2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

‘இலங்கை - வியட்நாம் உறவில் ரணிலின் வருகை புதிய அத்தியாயம்’

Gavitha   / 2017 ஏப்ரல் 17 , பி.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வியட்நாம் விஜயம் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பில் புதிய அத்தியாயம் ஏற்பட்டுள்ளதாக, வியட்நாம் பிரதமர் நுயேன் சூவாங் பூங் தெரிவித்துள்ளார். 

ஹனோய் நகரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (17) முற்பகல் இடம்பெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். 

அதன்போது, வியட்நாம் மற்றும் அந்நாட்டு மக்களுக்காக இலங்கை காட்டும் நட்புறவை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்து சமுத்திரத்தில் சக்திமிக்க நாடாக இலங்கை இடம்பிடித்துள்ளதாகத் தெரிவித்த வியட்நாம் பிரதமர், மசகு எண்ணெய், எரிவாயு, உட்கட்டமைப்பு, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், ஆடைகள், விவசாயம், மீன்பிடி பதப்படுத்தல் மற்றும் விநியோகம், புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் விமான ​சேவை, கல்வி, சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டுக்கும் இடையிலான தொடர்பினை விருத்தி செய்ய இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகக் கூறினார். 

இதேவேளை, இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையில், பண்டைய வரலாறு தொடக்கம் தொடர்புகள் பேணப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

 தேரவாத புத்தமதம் இலங்கையில் தோன்றுவதற்கு அடிப்படை காரணியாக வியட்நாம் காணப்பட்டதாக கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பராக்கிரமபாகு காலத்தில் இருந்து இலங்கை - வியட்நாம் வியாபார தொடர்புகள் காணப்படுவதாக குறிப்பிட்டார். 

கடந்தகாலத்தை அனுபவங்களைக் கொண்டு, எதிர்கால சந்ததியினருக்கு சிறப்பான எதிர்காலத்தை வழங்குவதற்காக, ஆசிய நாடுகள் ஓரணியில் ஒன்றுசேர்ந்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

தீவிரமான யுத்தத்தை வியட்நாம் எதிர்கொண்டதைப்போல, இலங்கையிலும் ஏற்பட்டதாக எடுத்துக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த இரு நாடுகளும், சுற்றுலாத்துறையில் பிரவேசித்து வருமானம் பெறும் நாடுகள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X