2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

'சந்தேகநபர்களின் பெயர்களை வெளியிடாது இரகசியம் காக்கவும்'

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 8 சந்தேகநபர்களையும், எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், நேற்றுத் திங்கட்கிழமை(05) உத்தரவிட்டது.

'சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் வரை அவர்களின் பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டாம்' எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு, பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான சுலைமான், பம்பலப்பிட்டி - கொத்தலாவல ஒழுங்கையிலுள்ள அவரது வீட்டுக்கு முன்னால் வைத்து, கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதியன்று கடத்தப்பட்டிருந்தார். அவரது சடலம், மாவனெல்லை, ஹெம்மாத்தகம, ருக்குலுகம பிரதேசத்திலிருந்து கடந்த 24ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.

இவரது படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவிலுள்ள மீன் விற்பனை நிலையமொன்றைச் சேர்ந்த நபரொருவரையும், சேதவத்தையைச் சேர்ந்த நாட்டாமை ஒருவரையும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர், வியாழக்கிழமை (01) கைது செய்தனர்.

வர்த்தகரின் கொலை தொடர்பில் வெள்ளிக்கிழமை மதியம் கைதான நபருடன் சேர்த்து மொத்தமாக 8 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பகீர் ஹல்லம் மொஹமட் பசீர் (வயது 24) என்பவர், குற்றப்புலனாய்வு பிரிவினரால் இனம் காணப்பட்டார்.

வர்த்தகர் கடத்தப்பட்ட இடத்திலுள்ள சீ.சீ.டிவி கெமராக்களில் பதிவாகியுள்ள வீடியோ ஆதாரங்களைக் கொண்டே, முதலில் 22 மற்றும் 23 வயதுடைய சந்தேகநபர்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 'இதேவேளை, வர்த்தகரின் விற்பனை நிலையத்தில் 8 வருடங்களாக நம்பிக்கைக்கு உரிய முறையில் ஊழியராக இருந்தவரே இந்த கொலையின் பிரதான சூத்திரதாரி'  என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

வெளிநாடுகளிலிருந்து  ஆடைகள் மற்றும் துணிவகைகளை இறக்குமதி செய்து புறக்கோட்டை 3 ஆம் குறுக்கு தெருவில் உள்ள மொத்த விற்பனை நிலையமொன்றை கொலைசெய்யப்பட்ட வர்த்தகர் நடத்தி வந்துள்ளார்.

அவரது விற்பனை நிலையத்தில் சுமார் 8 வருடங்களாக கடமையாற்றிய பிரதான சந்தேகநபர், சுலைமானின் நம்பிக்கையைப் பெற்று முக்கிய பொறுப்புக்களை கையாண்டு வந்துள்ளதுடன் வங்கியுடனான கொடுக்கல் - வாங்கல்களை இவரே கவனித்துள்ளார்.

இந்நிலையில், வர்தகரிடமிருந்து இரண்டு கோடி ரூபாயை கப்பமாக பெற்றுக்கொள்வதற்காக மிகவும் சூட்சுமமான முறையில் அவரை கடத்த திட்டமிட்டுள்ளார்.

அதற்காக, புறக்கோட்டை நாட்டாமை தொழில் ஈடுபடும் 3 பேர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் ஆகியோரை கூட்டு சேர்த்துள்ளார்.

தனது மனைவியின் தங்க நகைகளையும் அடகு வைத்து, மட்டக்குளி பிரதேசத்திலிருந்து 43,000 ரூபாய்க்கு வான் ஒன்றை வாடகைக்கு பெற்றதுடன், சம்பவ தினமான ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி, வர்த்தகரின் தந்தை வெளிநாடு சென்றிருந்தமையால், அன்றைய தினம் இரவு வர்த்தகரை கடத்தி, தந்தை இலங்கைக்கு திரும்பும் போது கப்பப் பணத்தை பெற்றுக்கொள்வதென திட்டம் தீட்டியுள்ளார்.

எனினும் வர்த்தகர் தப்பிச் செல்ல முயற்சித்ததையடுத்து, வெட்டுக் கத்தியின் பின்பகுதியால் தலையின் பின் பக்கமாகத் தாக்கி வானில் தூக்கிப் போட்டுள்ளதாக அஜீத் ரோஹண கூறியிருந்தார்.

அதன்பின்னர், சடலத்தை வைத்துக்கொண்டு கப்பப் பணத்தை அவரது தந்தையிடமிருந்து பெற்றுக்கொள்ள எத்தனித்த போதும் அந்த முயற்சி கைகூடாமையினால் சடலத்தை மாவனெல்ல பிரதேசத்தில் வீசி விட்டுச் சென்றுள்ளனர்.

'இதேவேளை, கேகாலையின் வெவ்வேறு பகுதிகளில் வர்த்தகரின் தொலைபேசி, உள்ளாடைகள், கொலைக்கு பயன்படுத்திய கத்தி போன்றவற்றை  எறிந்தும் புதைத்தும் உள்ளனர்' என்றும் அஜீத் ரோஹண அன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X