2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'தங்கத்தால் தடுமாறிய செல்வம்'

Kanagaraj   / 2016 மார்ச் 09 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

தங்கம் என்றால் தங்கம் தான், அதிலென்ன, அந்ததத் தங்கம் அதுவும் வடக்கு தமிழர்களின் தங்கம், அவைக்கு நேற்று புதன்கிழமை கேள்வியாய் வந்து, அவையையே ஒருகணம் அதிரவைத்துவிட்டது எனலாம்.

நாடாளுமன்றத்தில் வாய்மூல வினாக்களுக்கான நேரத்தின் பின்னர் பிரதமரிடம்; கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார். பயிற்றப்பட்ட ஆசிரியர்கள், தேயிலை மற்றும் இறப்பரின் நிர்ணய விலைகள், உர மானியம் தொடர்பிலும் கேட்கப்பட்டிருந்தன.

தெற்கு மக்களுக்குக் காணி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு அவ்வளவு வடக்கு மக்களுக்குத் தங்கமும் முக்கியமானது என சுட்டிக்காட்டிய நளிந்த ஜயதிஸ்ஸ எம்.பி, தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் வசமிருந்த பெருமளவிலான தங்கம் மீட்கப்பட்டதாகவும் அதன் நிறை, அளவு மற்றும் விவரங்களை பட்டியலிடுமாறு கேட்டுட்டாரு.
தயாரிக்கப்பட்ட பதில் அறிக்கையுடன் வந்திருந்த பிரதமர், 'எல்.ரீ.ரீ.யின் வங்கியில்; அடகு வைக்கப்பட்ட தங்கச் சமான்களையும் சில இடங்களிலிருந்த தங்கச் சமான்களையும் இராணுவத்தினரால் கைப்பற்ற முடிந்தது.

இராணுவ அறிக்கையின் பிரகாரம் 150 கிலோ கிராமாகும். அதில், மாலைகள், கை வளையல்கள், தோடுகள், பெண்டன்கள், கைச்சங்கிலிகள் மற்றும் தாலிகளும் உள்ளடங்குகின்றன.

அதில், 32 கிலோ கிராம் தங்கம், மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பீட்டு பெறுமதி, 131,084,751 ரூபாயாகும். இன்னும் 80 கிலோ கிராம் தங்கம், மதிப்பீடு செய்யப்படாமல் இராணுவ வசமே இருக்கின்றது' என்றார்.
கேள்வி கேட்டவர் மெளித்துப்போக, கணக்கு வழக்கு, புள்ளிவிவரங்களை புட்டுபுட்டு வைத்து விழிப்பிதுங்க வைக்கும் ஜே.வி.பியின் தலைவரும், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க,
இராணுவத்திடம் இருக்கின்ற தங்கம், புதையலால் கிடைத்தது அல்ல. அது, அப்பிரதேச மக்களின் தங்கம். அவற்றை எப்போ கொடுக்கப் போகின்றீர்கள் என்று கேட்டுக்கொண்டே, கணக்கு வழக்கை பார்த்தால், முன்னுக்கு பின் முரணாகவே இருக்கின்றது என்றும் சொல்லிவிட்டார்.

மீட்கப்பட்ட 150 கிலோகிராமில், மக்களிடம் கையளித்தது அண்ணளவாக 30 கிலோ கிராம் என்று வைத்துக்கொள்வோம், இராணுவத்திடம் இருப்பது 80 கிலோகிராம், கழித்துப் பார்த்தால் மீதி 40 கிலோகிராம் தங்கம் எங்கே?
நன்றாகக் காது கொடுத்துக் கொண்டிருந்த பிரதமர், 'அறிக்கையில் முரண்பாடுகள் இருக்கின்றன. கட்டளையிட்ட சரத்பொன்சேகா அமைச்சராகவும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் இந்த அவையில்தான் இருக்கின்றனர். ஏன்? வடக்கு மக்களின் பிரதிநிதிகளும் இருக்கின்றனர்.அவர்களையும் சேர்த்துக்கொண்டு, தங்கத்துக்கு என்னதான் நடந்தது என்று பார்ப்போம்' என கூறிக்கொண்டிருக்கையில், கதவைத் திறந்துகொண்டு குழுக்களின் பிரதித் தவிசாளர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, அவைக்குள் நுழைந்து ஆசனத்துக்குக் கூட வரவில்லை.

கேள்வி, பதில்களால் அவை, சூடுபிடித்திருந்த நிலையில், 'அடைக்கலநாதன் எம்.பி அவர்களே... நீங்கள் சொல்லுங்கள். புலிகளின் வங்கியில் அடகுவைத்த தங்க நகைகளுக்கு பற்றுச்சீட்டு வழக்கப்பட்டதா?' என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டார்.

பிரதமர் என்ன கேட்டார் என்று தெரியாமல், சற்றுத் தடுமாறிபோன செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ஆசனங்களுக்கு அருகருகே சென்று இயர்போனைத் தேடுகையில், அருகே இருந்த ஸ்ரீதரன் எம்.பி மளமளவென்று பதிலளித்துவிட்டார். செல்வம் அடைக்கலநாதன் எம்.பியும் தன்னுடைய ஆசனத்துக்குச் சென்று இயர்போனை போட்டு கேட்டுக்கொண்டிருந்தார்.

தங்கம் தொடர்பிலான கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்த பிரதமர், ஒரு சந்தர்ப்பத்தில், 'மற்றவர்களின் தங்கம் நமக்கெதற்கு' என்று கூற, அவையிலிருந்த விமல் வீரவன்ச உள்ளிட்ட இன்னும் சில கூட்டு எதிரணி எம்.பிக்கள், ங்...ங்... என்று கிண்டல் செய்ய. தங்கத்தை பற்றிப் பேசினால் உங்களுக்கு ஏன்? இருப்புகொள்ளமுடியவில்லை என்றுக்கூறி அவர்களின் வாய்களை அடைத்துவிட்டார் பிரதமர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .