2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

2017 பெப்ரவரி, மார்ச்சில் ஜீ.எஸ்.பி+ கிடைக்கும்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த வருடம் பெப்ரவரி அல்லது மார்ச் மாதமளவில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்கும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, நேற்றுப் புதன்கிழமை சபையில் தெரிவித்தார்.  

நாடாளுமன்றத்தில் நேற்று, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கிகரித்துக் கொள்வதற்கான பிரேரணைகளை விவாதத்துக்கென சபைக்கு சமர்ப்பித்து உரையாற்றும் போதே, இராஜாங்க அமைச்சர் சேனசிங்க இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

அத்துடன், கடந்த 20 வருடங்களில் இலங்கையின் ஏற்றுமதி 100 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இதனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை ஊக்குவிப்பாக அமையும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.  

‘ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெறுவதற்கு அரசாங்கம் விண்ணப்பித்துள்ளது. அடுத்த வருடம் பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இச்சலுகை கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளோம். எவ்வாறிருப்பினும், ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை மேலும் 6 அல்லது 7 வருடங்களுக்கே கிடைக்கக் கூடிய வாய்ப்புள்ளது. நாட்டின் தலா வருமானம் அதிகரித்தால் இந்தச் சலுகை நிறுத்தப்பட்டுவிடும். 

இவ்வாறான பின்னணியில் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் பல்வேறு சந்தைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறது. எதிர்வரும் வருடங்களில் ஏற்றுமதியை குறைந்தப்பட்சம் 35 அல்லது 40 பில்லியன்களாக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம். இதனூடாக ஏற்றுமதியை 70 சதவீதம் அதிகரிக்க முடியும் என நம்புகிறோம். திறந்த சந்தைகளை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது’ என்று தெரிவித்தார்.  

இதேநேரம், நல்லாட்சிக்கான அத்திபாரத்தை இடுவதற்கு முதல் 3 வருடங்கள் தேவைப்படுவதாகவும் அந்த அத்திபாரம் இடப்பட்டதன் பின்னர் நாடு விரைவில் வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க சுட்டிக்காட்டினார்.  

‘கடந்த அரசாங்கம் சீனாவிடம் அதிக சதவீத வட்டியில் கடனைப் பெற்று மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றை அமைத்தது. எனினும், எமது அரசாங்கம் சீனாவுடன் கலந்துரையாடி அவற்றை வினைத்தினறான முறையில் செயற்படுத்துவதற்கு இணக்கம் கண்டுள்ளது. இரு நாடுகளிலிருந்தும் தனியான நிறுவனங்கள் அமைக்கப்பட்டு இவற்றின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவிருப்பதுடன், ஹம்பாந்தோட்டையில் தொழிற்பேட்டையொன்றும் அமைக்கப்படவுள்ளது.  

நாம் சீனாவுக்கோ அல்லது எந்தவொரு நாட்டுக்கோ கப்பம் கொடுத்தோ அல்லது தரகு பணம் பெற்றோ திட்டங்களை முன்னெடுப்பதில்லை’ என்றும் அவர் இதன்போது மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .