2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘புலி இருந்தபோது நானே செய்தேன்’

Gavitha   / 2017 ஜனவரி 11 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்  

“தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கும் போதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை, நாட்டுக்குள் நான் முன்னெடுத்தேன் என்று, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.  

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

கேள்வி நேரத்தின் போது, “புலிகளிடமிருந்து யாழ்ப்பாணத்தை நீங்கள் கைப்பற்றினீர்கள். புலிகள் இப்போது முழுமையாக அழிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு அழிக்கப்பட்டிருக்காவிட்டாலும், நல்லிணக்கச் செயற்பாடுகளை உங்களால் முன்னெடுத்திருக்க முடியுமா?” என்று வினவினார்.  

“ஆம். முடியும். ஏன், புலிகள் இருந்த காலத்திலும் நல்லிணக்கத்துக்கான வேலைத்திட்டங்களை நான் முன்னெடுத்திருந்தேன். வீடுவீடாகச் சென்று, பாய்களில் படுத்திருந்து மரவள்ளிக்கிழங்குகளை அவித்துச் சாப்பிட்டுக்கொண்டு, நல்லிணக்கத்துக்கான வேலைகளை முன்னெடுத்தேன். இந்த விவகாரம் யாருக்குமே தெரியாது. தெரிந்திருந்தால் குழப்பியிருப்பார்கள்.  

“யுத்தத்தை நிறுத்தி, சமாதானப் பேச்சுவார்த்தையின் ஊடாக பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்ற சிந்தனையை, சிங்கள மக்களிடத்தில் கொண்டுசென்றேன்.  

“வெண்தாமரை இயக்கத்தை உருவாக்கி, அதனூடாகவே இந்த வேலைத்திட்டத்தை நான் முன்னெடுத்தேன். யுத்தமொழியிலேயே பலரும் பேசினர். சமாதான மொழியிலேயே நான் பேசுகின்றேன்.  

“எங்களுடைய அமைச்சர்களுக்கு முதுகெலும்பு இல்லை. அரசியல் செய்வதற்காகவே சிலர், நல்லிணக்கத்துக்குத் தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.  

“தூண்டிவிட்டு அரசியல் செய்யும் கொள்கை என்னிடம் இல்லை. அதேபோல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் அந்தக் கொள்கை இல்லை” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .