2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘மஹிந்த ஒப்பமிட்டால் கவனத்தில் கொள்வேன்’

Princiya Dixci   / 2017 ஜனவரி 10 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

“ஹம்பாந்தோட்டையில் கைத்தொழில் பேட்டை தேவையில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருதினால், அவருடைய கையொப்பத்தில் யோசனையொன்று முன்வைக்கப்படுமாயின் அதுதொடர்பில் கவனத்தில் கொள்வேன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 2017ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கன்னியமர்வு, சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நேற்றுக் காலை 9:30க்கு ஆரம்பமானது. 

சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் எழுந்த ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான தினேஷ் குணவர்தன, ஹம்பாந்தோட்டை விவகாரம் தொடர்பில், நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வியை எழுப்பினர்.  

இக்கேள்விக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தையடுத்து, சபை சற்று சூடுபிடித்தது.  

ஒரு கணத்தில் கருத்துரைத்த பிரதமர், “ஹம்பாந்தோட்டை மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலின் போதும் கூட எனக்கு வாக்களிக்கவில்லை. எனக்கு வாக்களித்த தங்களுக்கு, நான் ஒன்றுமே செய்வதில்லை என்று கொழும்பு மக்கள் கோபித்துக் கொள்கின்றனர்.  

“ஹம்பாந்தோட்டைக்கு கைத்தொழில்பேட்டை தேவையில்லை என்றால், அதனை பொலன்னறுவைக்கு தருமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளார். அநுராதபுரத்துக்குத் தருமாறு இன்னும் சிலர் கேட்கின்றனர். கண்டிக்குத் தருமாறு கிரியெல்ல கேட்கிறார். காலிக்குத் தருமாறு கயந்த கேட்கிறார்.     

“அவ்வாறான ஹம்பாந்தோட்டை கைத்தொழில்பேட்டை தேவையில்லை என்றால், அதுதொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்டு, யோசனையொன்றை நாடாளுமன்றத்துக்கு முன்வைத்தால், அதுதொடர்பில் கவனத்தில் கொள்வேன்.  

“எனினும், கடந்த முறை சீனாவுக்கு சென்றிருந்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர், சீன நிறுவனங்களிடம் என்ன கூறியிருந்தனர் என்பது எங்களுக்குத் தெரியும். அவர், அண்மையில் சீனாவுக்குச் சென்ற நோக்கத்தை தெரியப்படுத்த வேண்டும்.  

“ஹம்பாந்தோட்டையில் செய்யப்பட்டுள்ள, சீனாவின் அண்மைய முதலீடுகளை விமர்சிக்கும் அதேவேளை, சீனாவுக்குச் சென்றிருந்தபோது, மஹிந்த ராஜபக்ஷ, சீனாவின் முதலீடுகளை வரவேற்றிருந்தார்” என்று பிரதமர் குறிப்பிட்டார். 

மேலும், ஹம்பாந்தோட்டையில் முதலீடு செய்ய உடன்பட்டமைக்காக, சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங்க்கு, தான் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.  

“ஹம்பாந்தோட்டையில், துறைமுகத்தையும் விமான நிலையத்தையும் அமைக்க நிதிவழங்கிய சீனா, ஹம்பாந்தோட்டையில் ஒரு முதலீட்டு வலயத்தையும் அண்மையில் தொடங்கியுள்ளது.   ஹம்பாந்தோட்டையிலுள்ள புதிய முதலீட்டு வலயத்தில் முதலீடு செய்யுமாறு, வேறு நாடுகளுடனும் பேசி வருகின்றேன்.  

இங்கு, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்குமாறு, அமெரிக்க மற்றும் அரபுக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.  

கைத்தொழில் வலயம் தொடர்பில், சீனாவுடனான ஒப்பந்தம், அங்கிகாரத்துக்காக, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்  

ஹம்பாந்தோட்டையில் கைத்தொழில் முதலீட்டு வலயம் அமைவது, பிரச்சினைக்குரியதாயின், அரசாங்கம், அதை வேறு இடங்களில் அமைக்கவும் தயார் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .