2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

'விமலின் கைதில் அரசியல் பின்புலம்'

Kogilavani   / 2017 ஜனவரி 27 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் கைதின் பின்னணியில், அரசியல் காரணமொன்று இருப்பதாக, அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸாமில் தெரிவித்தார்.

மேலும், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை கைவிட்டு, சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றுவதிலேயே இந்த அரசாங்கம் ஆர்வம் காட்டி வருவதாகவும், அவர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

“வாக்குறுதிகளுடன் ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசாங்கத்தால், தற்போது எந்தவொரு செயற்பாட்டையும் செய்துகொள்ள முடியாமல் போயுள்ளது. மாறாக, தமக்கு ஆட்சியமைக்க உதவிய சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றுவதிலேயே, இந்த அரசாங்கம் ஆர்வம் காட்டிவருகின்றது.

அரசாங்கத்தின் இத்தகையச் செயற்பாடுகளை எதிர்ப்பவர்களை அடியோடு அழிப்பதற்காக, அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையை அரசாங்கம் திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறது. இவ்வாறே, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு வேறு ஒரு தனியான நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றது என்று கடுமையாக சாடியிருந்தார். இந்நிலையிலேயே, இவர்கள் விமல் வீரவன்சவைக் கைது செய்துள்ளனர். இந்த செயற்பாட்டின் பின்னணியில், நிச்சயமாக அரசியல் காரணியொன்று இருக்கின்றது.

இந்த அரசாங்கம், தாம் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்லை என தொடர்ந்தும் கூறிக்கொண்டு வருகின்றது. ஆனால், தற்போது மோசடி இல்லாத நாடுகள் பட்டியலில், 2015ஆம் ஆண்டு 83ஆவது இடத்தில் இருந்த இலங்கை, 2016இல் 95ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அப்படியானால், இந்த அரசாங்கத்தில் மோசடிகளே இடம்பெறவில்லை என்று எவ்வாறு கூறமுடியும்.

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு வெளியிடும் அனைவரும், நாளை (இன்று) நுகேகொடையில் நடைபெறவுள்ள மக்கள் பேரணியில்  கலந்துகொள்ள வேண்டும்” என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .