2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘வடக்கிலுள்ள 150,000 இராணுவத்தினர் வன்முறைக்கு அடித்தளம்'

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணத்தில் 150,000 வரையிலான இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளமை, வன்முறைக்கான அடித்தளத்தை இடுகின்றது என்று குற்றஞ்சாட்டியுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பொதுமக்களின் நிலங்கள், வாழ்வாதாரங்கள், வர்த்தகம், வளங்கள் ஆகியவற்றைப் பறித்தெடுத்திருப்பதுடன், அங்கு வாழும் விதவைகள் மற்றும் ஏனையவர்களின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தலாகவும், இராணுவத்தினர் இருந்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

இலண்டன், கிங்ஸ்டன் மாநகர சபைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் 'இரட்டை நகர' உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொண்டு, முதன்மை உரை ஆற்றியபோதே, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.  

இந்த நிகழ்வில், பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமாரி விஜயவர்தன, கிங்ஸ்ரன் நகர சபை கவுன்சிலர்கள் உட்பட நகரசபையின் அழைப்பிதழ் அடிப்படையில் பெரும் எண்ணிக்கையில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களும் கலந்துகொண்டிருந்தனர். 

இதன்போது, பிறிதொரு வடிவத்தில் தொடரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விமர்சனம் செய்த முதலமைச்சர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், அனைவருக்கும் நீதி பெறுவதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்வதாகவும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு என்ற சிந்தனைக்குள் இருந்துகொண்டு, ஒன்றிணைந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது என்றும், நிர்வாகமானது மனிதநேய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு சிந்தனை ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறினார்.  

எல்லா மட்டங்களிலும், வட மாகாண சபையானது மத்திய அரசாங்கத்தினால் ஓரங்கட்டப்படுகிறது என்றும் திட்டங்கள், மத்தியினால் முடிவு செய்யப்பட்டு மாகாண சபை மீது திணிக்கப்படுகின்றது என்றும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.   

வட மாகாண சபை தற்போது மூன்று வகையான முதலீட்டு மாதிரிகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்ட முதலமைச்சர், அவற்றுள் முதலாவதாக மத்திய கிழக்கை அடிப்படையாக கொண்ட ஒரு முதலீட்டாளர் ஒருவர் மூலம் வெளிநாட்டு ஏற்றுமதி சந்தைக்காக, வன்னியில் பாரிய ஒரு மரக்கறி மற்றும் பழப்பயிர்ச் செய்கை திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும், இரண்டாவதாக புலம்பெயர் தமிழர் ஒருவரின் முதலீட்டில் ஆடைத் தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருவதாகவும் மூன்றாவதாக வட மாகாணத்தில் போருக்கு பிந்திய புனரமைப்பு, புனர்நிர்மாணம் ஆகியவற்றுக்கு தகவல் தொழில்நுட்பம் ஊடாகப் பங்களிக்கும் வகையில் அமெரிக்க புலம்பெயர் தமிழர் ஒருவரின் நிறுவனத்தின் உதவியுடன் வட மாகாணத்தில் கல்வித் திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.  

அத்துடன், இந்த இரட்டை நகர உடன்படிக்கை மூலம், பல்வேறு திட்டங்களை புலம்பெயர் தமிழ் மக்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .