2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அநுராதபுரம் சிறைச்சாலை வரை இன்று நடைபவனி

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த், செந்தூரன் பிரதீபன்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்தும், யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நடை​பவனியொன்று நடத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நடைபவனி, யாழ். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து, இன்று (09) காலை 6 மணிக்கு ஆரம்பமாகும். நடைபவனி, கிளிநொச்சி, வவுனியா ஊடாக அநுராதபுரம் சிறைச்சாலை வரை செல்லவுள்ளது.

இந்த நடைபவனியின் சமூகத்தின் சகல மட்டங்களிலிருந்தும் மாணவர்களால் ஆதரவு கோரப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று (08) முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின் பின்பே, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன், நடைபவனி பற்றி அறிவித்ததோடு, ஆதரவு கோரி பகிரங்க அறைகூவலையும் விடுத்தார்.

இதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் யாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில், கவனயீர்ப்பு போராட்டங்கள் இரண்டு, நேற்றுக்காலை முன்னெடுக்கப்பட்டன.

யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் அச்சுவேலி பிரதான பஸ் நிலையத்துக்கு முன்பாகவே, இந்தக் கவனயீா்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

குறுகிய கால புனர்வாழ்வு வழங்கியாவது தங்களை விரைவில் விடுதலை செய்யவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து, அநுராதபுரம் சிறையில், அரசியல் கைதிகள் எட்டுப் பேரினால், ஆரம்பிக்கப்பட்ட உணவுத் தவிர்ப்புப் போராட்டமானது 24 நாட்களைத் தாண்டியும் தொடர்கின்றது.

இந்நிலையில், அநுராதபுரம் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கண்டி-மஹர, புதிய மெகசின் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆகையால், அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படவேண்டும் என்றும் இவ்விரு கவனயீர்ப்பு போராட்டங்களிலும் வலியுறுத்தப்பட்டன.

முறையான விசாரணைக​ளோ அல்லது விடுதலையோ இல்லாமல் வருடக் கணக்கில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குறித்த அரசியல் கைதிகளின் உயிர்களைக் காப்பாற்றவேண்டும், அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்ற வகையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் ஆகிய கோரிக்கைகளும், இந்தக் கவனயீர்ப்புப் போராட்டங்களிலும் முன்வைக்கப்பட்டன.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, சமூக நீதிக்கான வெகுஜென அமைப்பு, கடந்த காலங்களில் நடத்திய பல்வேறான, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருக்கவில்லை.
எனினும், அச்சுவேலியில் ந​டைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில், வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கலந்துகொண்டு, போராட்டத்துக்கு ஆதரவு நல்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .