2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அமைச்சரவையில்…

Princiya Dixci   / 2017 ஜனவரி 05 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டமூலம் நிச்சயமாக தேவை

தேர்தல் பிற்போடப்படாது

வலய‍ங்கள் இன்றி பயனில்லை

அதிர்ஷ்டமல்ல வியாபாரமாகும்

-ஜே.ஏ.ஜோர்ஜ்

“அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் நிச்சயமாகத் தேவை. அது இல்லாவிட்டால் அபிவிருத்திகளை துரிதமான முன்னெடுக்க முடியாது” என சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைக்கூறினார்.  

அபிவிருத்தித் திட்டத்தை முன்மொழிய, அதனை ஏற்றுக்கொள்ள, அது தொடர்பில் பரிசோதனை செய்தல் போன்ற செயற்பாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக மேற்கொள்ள இரண்டு, மூன்று வருடங்கள் செல்கின்ற நிலையில், முதலீட்டார்கள் நாட்டை விட்டுச் சென்றுவிடுவர். 

எனவே அனைவரும் ஒரே இடத்தில் இடத்தில் இருந்து துரிதமாக தீர்மானிக்க இந்தச் சட்டம் அவசியம்’ என்றார். 

இதேவேளை, அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற ‘பலம்மிக்கதோர் இலங்கை’ எனும் தூரநோக்குடைய பொருளாதார திட்டத்தை, ஆரம்பித்து வைத்ததன் பின்னர், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மாகாண சபைகளிடம் என்ன? அதிகாரங்கள் இருக்கின்றன அவற்றை நாங்கள் அபகரிப்பதற்கு என்று வினவியதுடன், ஒவ்வொருநிறுவனங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பங்காற்றவேண்டும். அதற்காகவே ‘அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.  

நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலமானது மாகாண சபைகளில் தோற்கடிக்கப்பட்டுள்ளன. அதைப்பற்றி பிரச்சினையில்லை. அவர்களுக்குத் தேவையில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது என்றும் வினவினார்.  

இதேவேளை, இன்றும் சில கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை. இது தொடர்பில் சகல கட்சித் தலைவர்களுடனும் 9ஆம் திகதி பிரதமர் கலந்துரையாடவுள்ளார். 

எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கையில் உறுப்பினர்களில் இருவர் கையெழுத்திடவில்லை. எனவே, இதில் சிறு தாமதம் ஏற்பட்டுள்ளது’ என்றார். 

பிரதமர் கலந்துரையாட்டிய பின்னர் இது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.  

 ‘ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் தற்போது அமைக்கப்படவுள்ள பொருளாதார வலயம் இன்றி மத்தல விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தால் எந்தவித பயனும் இல்லை. இந்த திட்டத்தில் இழப்பு ஏற்பட்டால் அதனால் சீனாவுக்குதான் நட்டம், இலங்கைக்கு நட்டமில்லை.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சீனர்கள்தான் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்’ என்றும் அவர் கூறினார். 

நல்லாட்சி அரசு தொடர்ந்தும் நீடிக்குமானால் தனது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என அனைவரும் சிறைக்குச் சென்றுவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே எமது அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ, வதந்திகளைப் பரப்பிக்கொண்டு வருகிறார். 

அவர் கூறுவதைப் போன்று எந்தவொரு அரச நிறுவனங்களோ அல்லது காணிகளோ வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்கப்போவதில்லை. 

அபிவிருத்தித் திட்டங்களை முன்வைக்கும் போது எதிர்ப்புத் தெரிவிப்பது வழமைதான். எனினும் அந்தத் திட்டங்களின் பலனை அனுபவிக்கும்போது, அதனது நன்மை விளங்கும். 

அபிவிருத்தித் திட்டங்களை முன்வைக்கும் போது, நாட்டுக்கு இலாபத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் அது அமைய வேண்டும். 

ஹம்பாந்தோட்டையில் துறைமுகம், விமான நிலையம் அமைக்கும் போது, பொருளாதார அபிவிருத்தி வலயமொன்றை உருவாக்காவிட்டால் அதனால் பயனில்லை என்றும், துறைமுகத்தில் எண்ணெய் நிரப்பும் நிலையத்தை அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் நான் பல முறை எடுத்துக் கூறினேன்.ஆனால், அவர் அதனைக் கேட்கவில்லை. 

ஹம்பாந்தோட்டையை அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் தினமும் 700 கப்பல்கள் வரையில் பயணிக்கின்றன. அந்த கப்பல்களுக்கு தேவையான எரிபொருள் நிரப்புவதற்கு சிங்கப்பூருக்கு அல்லது வேறு நாடுகளுக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். 

எனவே, ஹம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைக்கும் போது, எரிபொருள் நிரப்பும் நிலையத்தை அமைத்தால் 700 கப்பல்களில் 7ஆவது தினமும் எரிபொருள் நிரப்ப இங்கு வரும். அதனூடாக பில்லியன் கணக்கான டொலர்களை வருமானமாகப் பெறலாம்.  

இந்தத் திட்டத்தை கொஞ்சம் பிரபலப்படுத்தினால் சுமார் 500 கப்பல்கள் வரை இலங்கையில் தினமும் எரிபொருள் நிரப்பச் செய்யலாம் என்று கூறினேன், ராஜபக்ஷ, அதனைக் கேட்கவில்லை. 

இந்த பிரதேசத்தில் பொருளாதார மத்திய நிலையமொன்றை அமைக்கும் போதுதான் துறைமுகம், விமான நிலையத்தால் பயன்கிடைக்கும். அத்துடன். ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சீனாவுக்கு நாங்கள் இடத்தை விற்கவில்லை.  

15,000 ஆயிரம் ஏக்கரில் அபிவிருத்தியை முன்னெடுக்க பாரியளவில் நிதி தேவை. அந்த நிதியை முதலிட்டு அபிவிருத்தி செய்ய சீன நிறுவனம் முன்வந்துள்ளது. 

நாட்டின் தேவை கருதி இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு 99 வருடங்கள் குத்தகைக்கு கொடுக்க சட்டத்தில் இடமுள்ளது. இடம் தொடர்பான சட்டத்தை 2003ஆம் ஆண்டு நானே உருவாக்கி சமர்ப்பித்தேன். அதன்படி நாட்டின் இடங்களை யாருக்கும் விற்கமுடியாது. 

99 வருடங்கள் நிறைவடைந்தவுடன் இது முழுமையாக நாட்டுக்கு சொந்தமாகிவிடும். இதேவேளை, நாட்டின் சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டால் இடத்தை மீளப்பெற்றுக்கொள்வோம் என இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எமக்கு பிரச்சினை வராது. 

இலங்கைக்கு நன்மை பயக்கும் இந்த திட்டம் தொடர்பில் இங்குள்ளவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது தேவையற்றது. இதற்கான முதலீட்டை சீனா மேற்கொள்கிறது. இதில் ஏதாவது நட்டம் ஏற்பட்டால் இழப்பு அவர்களுக்குத்தானே. இதனால் இந்தத் திட்டத்துக்கு சீனர்கள் தான் எதிர்ப்பு வெளியிட வேண்டும். 

ஹம்பாந்தோட்டையில் பொதுமக்களின் வரிப்பணம் வீணாக செலவழிக்கப்பட்டுள்ளது. வருமானம் இன்றி பராமரிப்பு செலவுகள் மக்களின் பணத்திலேயே மேற்கொள்ளப்படுகிறன. இதனை அப்படியே விட முடியாது. வருமானம் உழைக்கும் வழிகளை செய்ய வேண்டும். 

கட்டுநாயக்க விமான நிலையம் அபிவிருத்தி பணிகளுக்காக தினமும் 8 மணித்திலாயங்கள் முடக்கப்படுவதால் எமக்கும் பாரிய நட்டம் ஏற்படுகின்றது. இதனால் விமானங்களை மத்தல விமான நிலையத்துக்கு வருமாறு அழைத்த போது, சர்வதேச விமான நிறுவனங்க் மறுத்துவிட்டன’ என்றார். 

இதேவேளை, இந்த திட்டத்தில் பணிபுரிய 10 இலட்சம் சீனர்களுக்கு விசா விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதேன என ஊடகவியலாளர்கள் கேட்டதுக்கு, அவ்வாறு எதுவும் இல்லை என ராஜிதவும், ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரட்ண பரணவிதாரனவும் மறுத்தனர். 

 ‘அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விவகாரம் வெறும் வியாபார நோக்கத்துடனே பெரிதாக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் பிரச்சினை இருந்தால், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்க வேண்டும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலையை மஹிந்த அரசாங்கம் அதிகரித்த போது, யாரும் வாய்திறக்கவில்லை. ஆர்ப்பாட்டம் செய்வதற்கு இன்று முழு சுதந்திரம் உள்ளதாலும். மஹிந்த ஆட்சியில் நடந்ததை போன்று ஆர்ப்பாட்டக்கார்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதில்லை என்ற தைரியத்தில் அனைவரும் வீதிக்கு இறங்குகின்றனர். 

உண்மையில், இந்தப் பிரச்சினை பொதுமக்களின் அத்தியாவசிய தேவை பற்றியது இல்லை. இது வியாபாரத்தை நோக்காக கொண்டு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இது தொடர்பில் பிரச்சினை இருந்தால் அது தொடர்பில் எம்முடன் பேசி தீர்த்திருக்க முடியும். அதனை செய்யாது வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்’ என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .