2025 ஜூலை 16, புதன்கிழமை

’அவசர கொரோனா தேர்தல் மரணத்துக்கு வித்திடும்’

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு மாதத்துக்கும் மேலாக, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் இந்த நாட்டுக்குள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தேர்தலொன்றை நடத்துவதென்பது, இத்தனை நாள்களாக முன்னெடுத்த போராட்டத்தை வீண் விரயமாக்கிவிடும் என்று, முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், இலங்கையிலிருந்து நூற்றுக்கு நூறு விகிதம் கொரோனா ஒழிக்கப்படும் வரையில், தேர்தலை ஒத்திவைப்பதே சிறந்ததென்றும் அதுவே மக்களுக்குப் பாதுகாப்பானது என்றும் தெரிவித்துள்ளார்.

தேர்தலெனச் சொல்லப்படுவது, தேர்தல் தினத்தில் வாக்குச் சாவடிக்குச் சென்று புள்ளடி போடுவது அல்லவென்றும் ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு கட்சியும், சில வாரங்களாகவே உழைத்து, மக்களை ஒன்றுதிரட்ட வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“வீடு வீடாகச் சென்று, வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்புப் பத்திரங்களை வழங்க வேண்டும். தங்களுடைய கட்சியின் கொள்கைகளை வெளிப்படுத்த வேண்டும். பொதுத் தேர்தல் எனும் போது, ஆயிரக்கணக்கான வேட்பாளர்களும், தங்களுக்கான வேட்பாளர் இலக்கம் பற்றி, பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

“அத்துடன், வாக்கெடுப்பு தினத்தில், பல பாடசாலைகளை, வாக்கெடுப்பு நிலையங்களாகப் பயன்படுத்த நேரிடும். வாக்கெடுப்புக்குப் பின்னரான 48, 72 மணித்தியாலங்கள் வரை, அரச ஊழியர்கள், சில அரச கட்டடங்களில் திரண்டு, வாக்குகளை எண்ண வேண்டும். இவ்வாறான பணிகளை முன்னெடுக்கவேண்டிய நிலையில், கொரோனா பின்னணியில் தேர்தலை நடத்துவது, பல உயிர்களைக் காவுகொடுப்பதாகிவிடும்” என்றும், மங்கள தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேர்தலை நடத்தும் வரையில், கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக, நாடாளுமன்றம் ஊடாக நிதி ஒதுக்கீடுகளைச் செய்துகொள்ள வேண்டுமாயின், ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தைக் கூட்டி அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் எதிர்க்கட்சியினர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு அதற்காக ஒத்துழைப்பு வழங்க, தாங்கள் தயாரென்றும், அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .