Editorial / 2026 மே 03 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி நடந்து முடிந்தது. 234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள்? மக்கள் தீர்ப்பு என்ன? என்பது தொடர்பாகப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.
அ.தி.மு.க. - தி.மு.க. - நா.த.க. - த.வெ.க.: நான்கு முனைப் போட்டி
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவியது. இந்தச் சூழலில், புதிதாகக் களம் கண்ட விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' அதிக அளவில் வாக்குகளைப் பிரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தேர்தல் முடிவுகளைத் துல்லியமாகக் கணிப்பதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்து வரலாறு படைக்குமா? அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறுமா? விஜய் ஆட்சியைப் பிடிப்பாரா அல்லது எதிர்க்கட்சித் தலைவராகச் சட்டமன்றத்திற்குள் நுழைவாரா? என்ற கேள்விகளுக்கு நாளை தெளிவான பதில்கள் கிடைத்துவிடும்.
பலத்த பொலிஸ் பாதுகாப்பு
நாளைய தினம் வாக்கு எண்ணும் மையங்கள் மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் காலை முதலே பரபரப்பாகக் காணப்படும். இதையொட்டித் தமிழகக் காவல்துறையின் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 18 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 40-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய துணை இராணுவப் படையினர் கண்காணிப்புப் பணியில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான உத்தரவைத் தமிழக டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் பிறப்பித்துள்ளார். அனைத்து ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், பொலிஸ் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர்கள் தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையைப் பொறுத்தவரை ராணி மேரி கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் லயோலா கல்லூரி என மூன்று வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சுமார் 3 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகரப் பகுதி முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளனர்.
மூன்றடுக்கு பாதுகாப்பு: தேர்தல் அதிகாரி விளக்கம்
வாக்கு எண்ணிக்கை தொடர்பாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 234 வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகளை எண்ணுவதற்காகக் கூடுதலாக 240 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணிக்காக மொத்தம் 3,324 மேஜைகள் பயன்படுத்தப்படும். இப்பணிகளுக்காக 10,545 பணியாளர்களும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய 4,624 நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதன்முறையாக, அனுமதியற்ற நபர்கள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் 'QR Code' அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தபால் வாக்குகளுடன் தொடங்கும். அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்குப் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.”
வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்ததைப் போலவே, வாக்கு எண்ணிக்கையையும் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி நடத்தி முடிக்கத் தேர்தல் அதிகாரிகளும் பொலிஸாரும் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர்.
5 minute ago
16 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
19 minute ago