Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 12 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிரோஷினி
சிறப்புரிமை மீறலின் கீழ் வினாத் தொடுத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு ஆதரவாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் வாதாடியதுடன், ஒன்றிணைந்த எதிரணியினர் உரையாற்றுவதற்காக வழங்கப்பட்ட நேரத்தையும், ஆனந்தன் எம்.பிக்கு அவ்வெதிரணி வழங்க முன்வந்தது.
அத்துடன், சிவசக்தி ஆனந்தனால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, சுமந்திரன் எம்.பி பதிலளித்ததால், சிவசக்தி ஆனந்தனுக்கும் சுமந்திரன் எம்பிக்கும் இடையில் கடும் வாக்குவாதமும் இடம்பெற்றது. இதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் நேற்று (10) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் பின்னர், சிறப்புரிமை மீறல் குறித்து வினா எழுப்பும் சந்தர்ப்பம், சிவசக்தி ஆனந்தன் எம்.பிக்கு வழங்கப்பட்டது.
இதன்போது உரையாற்றிய சிவசக்தி ஆனந்தன் எம்.பி, கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக, இச்சபையில் தனது கருத்தை முன்வைப்பதற்கான நேரம் ஒதுக்கீடு செய்து தராமல், கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், பாரபட்சம் காட்டி வருகின்றாரெனக் குற்றஞ்சாட்டினார்.
“70 வருட தமிழ் அரசியல் வரலாற்றில், இது மாதிரியான செயல் நடைபெற்றது இதுவே முதற்றடவை. இது குறித்து, பலமுறை சபையின் கவனத்துக்குக் கொண்டுவரபட்ட போதும். எவ்விதத் தீர்வும் கிடைக்கவில்லை.
“நான் யாரிடமும் பிச்சைக் கேட்கவில்லை. எனக்கான சிறப்புரிமையையே நான் கேட்கிறேன். எனக்கு இந்தச் சபையில் கருத்துத் தெரிவிக்க சுதந்திரம், சந்தரப்பம் இல்லை என்றால், சாதாரண பொதுமகனுக்குக் கருத்து சுதந்திரம் எங்கிருந்து கிடைக்கும்?” என வினவினார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிக் கருத்துரைத்த சுமந்திரன் எம்.பி, “சிவசக்தி ஆனந்தன், சபையில் அரசியல் உரையொன்றை மேற்கொள்கின்றார். ஆகவே, அவர் உரையாற்றுவதைத் தடுக்க வேண்டும். இது, சிறப்புரிமையுடன் தொடர்புபட்ட விடயம்” என்றார்.
எனினும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், தன்னை உரையாற்ற அனுமதிக்க வேண்டுமென, ஆனந்தன் எம்.பி வேண்டுகோள் விடுத்தார்.
எனினும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சுமந்திரன் எம்.பி, இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் உரையாற்றுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை வழங்கப் போவதில்லையெனக் கூறினார். இதன்போது, சபையில் எதிரணி பக்கத்தில் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதனால், சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதன்போது குறுக்கிட்ட ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, சிவசக்தி ஆனந்தனுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்ததுடன், ஒன்றிணைந்த எதிரணியினர் உரையாற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தை, ஆனந்தன் எம்.பிக்கு வழங்க முன்வந்தார்.
இதையடுத்து, ஒழுக்குப் பிரச்சினையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, சிவசக்தி ஆனந்தான் எம்.பிக்கு, அவரது கருத்தைத் தெரிவிக்க சுதந்திரம் உள்ளதென்றும் சுமந்திரன் எம்.பியின் கருத்து பிழையானதென்றும் சுட்டிக்காட்டியதோடு, கடந்த காலங்களிலும், நேர ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினைகள், பல உறுப்பினருக்கு இருந்த போதிலும், கட்சித் தலைவர்கள் அவற்றைத் தீர்த்து வைத்ததாகவும் ஆனால் சுமந்திரன் எம்.பியோ, அக்கட்சி உறுப்பினர்களைத் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க விரும்புகின்றாரென்றுக் குற்றஞ்சாட்டினார்.
இதன்போது பதிலளித்த பிரதிச் சபாநாயகர், “இது குறித்து சபாநாயகரிடம் தெரியப்படுத்துகிறேன். இதற்கான தீர்வு கிட்டும்” என்றார்.
சபையில் கடும் கூச்சல் நிலவிய நிலையில், சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிச் சென்ற 16 பேர் கொண்ட அணியினரும், தமக்கான நேர ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் குற்றஞ்சாட்டினர்.
“இதற்கும் சபாநாயகர் தீர்வு காண்பார்” எனத் தெரிவித்த பிரதிச் சபாநாயகர், தினப் பணிகளுக்கான சபை நடவடிக்கையை நகர்த்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025