2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

’இனவாதத்தைத் தூண்டி வாக்குபெற வேண்டாம்’

Editorial   / 2019 மார்ச் 15 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

நாட்டுக்குள் இனவாதத்தைத் தூண்டி, வாக்குகளைப் பெற முயற்சிக்க வேண்டாமென வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறி, அரசியல் கதிரைகளுக்காக, பொதுமக்களை ஏமாற்ற வேண்டாமென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் வேண்டுகோள் விடுப்பதாகக் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (14) இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், அரசியல் தீர்வு, அபிவிருத்தி சம்பந்தமான விடயங்களில், ஒரே நோக்கில், முன் பின் இல்லாத நிலையில் பயணிக்க வேண்டுமெனவும் கூறியதோடு, அரசியல் தீர்வு விடயத்தில், கூட்டமைப்பு மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்றும், அரசாங்கம் தம்மை இந்த விடயத்தில் ஏமாற்றுவதாகவும் விமர்சிப்பதாகக் கூறினார்.

கூட்டமைப்பானது, வெளியில் இருந்துகொண்டு, அரசாங்கத்துக்கு, முழுமையான ஆதரவை வழங்கிவரும் நிலையில், அரசியல் தீர்வுக்கு அரசாங்கம் அக்கறை காட்டுவது போன்று, அதை நடைமுறைப்படுத்தும் விடயத்திலும் இறங்க வேண்டுமெனக் கோரிய அவர், இந்த அரசியல் தீர்வை, எதிர்க்கட்சியினர் அதிகளவில் எதிர்க்கும் நிலையில், இந்த எதிர்புகளை மீறி, இனப்பிரச்சினை விடயத்தில் தீர்வை வழங்க முன்வர வேண்டுமென்றார்.

“இனவாதத்தைத் தூண்டி வாக்குகளைப் பெறுவது உங்களது நோக்கமாக இருக்கக்கூடாது. ஆயுதப் போராட்டத்தில் எம்மக்கள் இழந்தவை பல. நாடும் பலவற்றை இழந்துள்ளது. அந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருக்கும் நிலையில், எங்களுடைய மக்கள் எதிர்பார்த்த விடயமாக மீண்டும் போராட்டங்களை மேற்கொள்கின்ற சந்தர்ப்பமாக இன்று மாறியுள்ளது.

“கூட்டமைப்பும் சரி, மக்களும் சரி, இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் கோரி போராட்டங்களைச் செய்யத் தயங்கமாட்டோம். எனவே, பிரதமர், இந்த விடயத்தில் முக்கிய கவனத்தை செலுத்த வேண்டும்.
“வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து, வரவு - செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டாலும், அதனை உடனடியாக நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டைச் செய்யவேண்டும். கம்பெரலிய திட்டம் போன்ற திட்டங்களால், எமது மக்கள் நல்ல பலனை அடைவர்” என, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .