2026 மார்ச் 04, புதன்கிழமை

இரண்டு மீனவர்கள் மாயம் : உறவினர்கள் குற்றச்சாட்டு

Janu   / 2026 மார்ச் 04 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கம் அவர்களை கண்டுபிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் மீனவ சங்கத்தினர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (27) ஊரணி அன்னை வேளாங்கண்ணி கடற்றொழில் சங்கத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் வழமை போல மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். மறுநாள் அவர்கள் கரை திரும்பாததால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள், கடலுக்குள் சென்று தேடுதல் நடத்தியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.  

இது தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலும், கடற்படையினரிடமும் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான நிலையில், கடந்த திங்கட்கிழமை (02) அன்று கச்சதீவுக்கு அருகாமையில், இந்திய எல்லைக்கு உட்பட்ட கடற்பரப்பில் குறித்த இரு மீனவர்களையும் கண்டதாக இந்திய மீனவர்கள் தகவல் வழங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீரை வழங்கியதாகவும் இந்திய மீனவர்கள் ஊரணி மீனவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

"எமது மீனவர்கள் ஆபத்தான நிலையில் கடலில் தத்தளிப்பது குறித்த தகவல்கள் தெரிந்தும், இந்த அரசாங்கம் அவர்களை தேடி மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சருக்கும் தகவல் வழங்கினோம். ஆனால், ஆறு நாட்களாகியும் இதுவரை எந்த ஒரு தேடுதல் நடவடிக்கையோ அல்லது பதில்களோ எமக்கு கிடைக்கவில்லை" என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

 அரசாங்கமும் கடற்றொழில் அமைச்சும் உடனடியாக இந்திய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு ஆபத்தில் இருக்கும் மீனவர்களின் உயிர்களை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

 நிதர்ஷன் வினோத்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .