Freelancer / 2026 மார்ச் 19 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக இலங்கையின் வெளிநாட்டு வருமானம், சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதித் துறை ஆகியவை பாரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயம் உள்ளன என பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரசன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் முறையான நடைமுறைத் திட்டங்கள் மற்றும் பொருளாதார நிபுணத்துவம் இன்றி செயற்படுகிறது. குறிப்பாக இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்தில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே கிடைக்கிறது.
போர்ச் சூழல் காரணமாக இந்த வெளிநாட்டு வருமானம் சுமார் 2.4 பில்லியன் டொலர்களாலும், சுற்றுலா வருமானம் 1.6 பில்லியன் டொலர்களாலும் குறையக்கூடும். அத்துடன் கப்பல் காப்புறுதி மற்றும் போக்குவரத்து கட்டண அதிகரிப்பால் ஏற்றுமதி வருமானம் 4 பில்லியன் டொலர்களாலும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதோடு, இதன் காரணமாக 2022 ஆம் ஆண்டில் காணப்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடி நிலைக்கு நாடு மீண்டும் தள்ளப்படும் அபாயம் உள்ளது.
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பால், உள்நாட்டில் ஒரு லீற்றர் பெட்ரோல் விலை 400 ரூபா வரையிலும், டீசல் விலை 390 முதல் 400 ரூபா வரையிலும் அதிகரிக்கக்கூடும். இதன் நேரடி விளைவாக மின்சாரக் கட்டணம் சுமார் 40 சதவீதத்தினால் அதிகரிக்கப்படலாம்.
போர் மேலும் தீவிரமடைந்தால் டொலர் ஒன்றின் மதிப்பு 350 ரூபாயைத் தாண்டக்கூடும் என்பதால் பணவீக்கம் அதிகரித்து மக்கள் கடும் அசெளகரியங்களுக்கு உள்ளாவார்கள். அரசாங்கம் வெளியிடும் பொருளாதாரத் தரவுகள் குறித்து மக்கள் மத்தியில் பாரிய சந்தேகம் நிலவுகிறது. 1988-93 காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இவ்வாறான சர்வதேச நெருக்கடிகளை வெற்றிகரமாக கையாண்டு பொருளாதார வளர்ச்சியைப் பேணினார். தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைக்கும் ஆலோசனைகளை அரசாங்கம் அலட்சியப்படுத்தாது கவனத்திற் கொள்ள வேண்டும் என்றார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .