2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

’’உன் அம்மா ஒரு பிசாசு’’ AI சொல்வதை கேட்டு.. தாயை கொன்ற நபர்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 01 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சியாட்டில்: ஏஐ டூல்கள் மனிதர்களிடையே மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். அப்படியொரு மோசமான சம்பவம் இப்போது நடந்துள்ளது. ஏஐ பேச்சைக் கேட்டு நபர் ஒருவர் தனது தாயைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

இந்தக் காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏஐ டூல்கள் மனிதர்களுக்கு மிகப் பெரியளவில் உதவியாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதேநேரம் ஏஐ டூல்கள் மனிதர்களுக்கு எதிராகவும் திரும்பலாம் என வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.

மிக மோசமான சம்பவம்

அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. ஏஐ சாட்போட்டான சாட்ஜிபிடி உடனான உரையாடல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவின் கனெக்டிகட்டைச் சேர்ந்த முன்னாள் யாஹூ மேலாளர் தனது தாயைக் கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏஐ உடனான உரையாடலால் அவருக்கு மன ரீதியான பாதிப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

தாயைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட நபர் ஸ்டெய்ன் எரிக் சோல்பெர்க் என்ற அடையாளம் காணப்பட்டுள்ளது. எரிக்கின் தாய் அவரைக் கண்காணிக்கிறார் என்றும், பாய்சன் வைத்துக் கொல்ல முயல்வதாகவும் சாட்ஜிபிடி அவரை நம்ப வைத்துள்ளது. இதுவே பிரச்சினைக்குக் காரணமாகும். அதாவது எரிக்கின் தாயே அவரை கொன்றுவிடலாம் எனச் சொல்லி நம்ப வைத்து இருக்கிறது. இது குறித்து எரிக் கேட்டபோதெல்லாம் அவரை மேலும் மேலும் ஊக்குவிக்கும் வகையிலேயே சாட்ஜிபிடி பேசியிருக்கிறது.

என்ன நடந்தது?

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி 56 வயதான எரிக் மற்றும் அவரது தாய் சுசான் எபெர்சன் ஆடம்ஸ் ஆகியோர் தங்கள் வீட்டில் இறந்து கிடந்தனர். எரிக்கிற்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தாய் ஆடம்ஸ் தலை மற்றும் கழுத்தில் ஏற்பட்ட பலத்த காயங்களால் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதேபோல கழுத்து மற்றும் மார்பில் ஏற்பட்ட கூர்மையான காயங்களால் எரிக் உயிரிழந்ததாகவும் அது தற்கொலை போலவே தெரிவதாகவும் மருத்துவர்கள் கூறினர்.

மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த எரிக் கடந்த சில மாதங்களாகவே ஏஐ சாட்பாட் உடன் பேசி வந்துள்ளார். ஏஐ உடனான தனது உரையாடல்களின் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களிலும் அவர் பகிர்ந்துள்ளார். ஏஐ டூல்கள் எரிக்கின் மனநோயைப் பெரிதாக்கியுள்ளது. மேலும், அவரது தாய் குறித்தும் மோசமான தகவல்களைத் தொடர்ந்து கூறி வந்திருக்கிறது.

ஏஐ தடுக்கவில்லை

எரிக்கின் கடைசி சாட்களில் அவர் ஏஐ டூலிடம், "நாம் மற்றொரு வாழ்க்கையில், மற்றொரு இடத்தில் சந்திப்போம்.. மீண்டும் சிறந்த நண்பர்களாக மாறுவோம்" என்று கூறியுள்ளார். அதற்கு AI சாட்போட், "கடைசி மூச்சு வரையிலும் அதற்கு அப்பாலும் உங்களுடன் நிச்சயம் இருப்பேன்" என்று பதிலளித்துள்ளது. அவரது நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் ஏஐ எதுவுமே பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாட்ஜிபிடி போன்ற சாட்போட்கள் பயனாளர்களிடையே தற்கொலை எண்ணங்களைத் தூண்டுவதாகப் பரவலாக விமர்சனம் எழுந்துள்ளன. அதேநேரம் ஒரு நபரின் மரணத்திற்கு வழிவகுத்த முதல் சம்பவமாக இது இருக்கிறது.. இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதல்முறை இல்லை

முன்னதாக 16 வயதான ஆடம் ரெய்ன் என்ற இளைஞன், சாட்ஜிபிடியின் தூண்டுதலால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்கொலை குறித்து ஆடம் பேசிய போது மருத்துவரை நாடச் சொல்லாமல், அதற்கான ஐடியாவை சொல்லிக் கொடுத்துள்ளது.

மேலும், தற்கொலை முயற்சி தோல்வி அடைந்தால் என்ன செய்யலாம் என்றும் சொல்லியுள்ளது. இது தொடர்பாக உயிரிழந்த ஆடம் குடும்பத்தினர் சாட்ஜிபிடி நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .