2026 மார்ச் 16, திங்கட்கிழமை

உறுப்பினர்களுக்கு இங்கிலாந்து பாடம் கற்பித்தது

Editorial   / 2025 ஏப்ரல் 01 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் சபைக்குத் தலைமை தாங்கும் தவிசாளர் குழு உறுப்பினர்களுக்காக வெஸ்மினிஸ்டர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அனுபவப் பகிர்வு தொடர்பான செயலமர்வு நீர்கொழும்பில்   மார்ச் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் நடைபெற்றது.  இலங்கைப் பாராளுமன்றம் மற்றும் பிரித்தானியப் பாராளுமன்றத்தின் முக்கிய பங்குதாரர்கள் பாராளுமன்றத்தின் நடைமுறைகளைப் பலப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு பெறுமதிமிக்க தளமாக இந்த இரண்டு நாள் செயலமர்வு அமைந்தது.

 

இலங்கைப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை பாராளுமன்றத்தின்  சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன,   பிரதிச் சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர,   பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுண ஆரச்சி, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன ஆகியோர் இச்செயலமர்வில் கலந்துகொண்டனர்.

ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையின் பிரதிச் சபாநாயகர் யூடித் கொமின்ஸ், மக்களவையின் முன்னாள் பிரதிச் சபாநாயகர் டோன் பிரைமரோலோ, ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கென்னெத் டொனால்ட் மக்கென்டொஷ் ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இதில் கலந்துகொண்டனர்.

பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்தக் கலந்துரையாடல்களில் பங்கேற்றனர்.

இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கு அமைய தலைமைதாங்கும் அதிகாரிகளின் வகிபாகம் தொடர்பில் பல்வேறு தலைப்புக்களின் கீழ் இந்தச் செயலமர்வில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. தலைமைதாங்கும் அதிகாரிகளின் பதவிநிலை உருவான வரலாறு, அவர்களின் வகிபாகம், அதில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சிகள் பற்றியும், நேரமுகாமைத்துவம், பாரம்பரியங்கள், நெறிமுறைகள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களுடனான உறவுகள் உள்ளிட்ட முக்கியமான விடயங்கள் பற்றியும் இதில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், ஐக்கிய இராச்சிய பாராளுமன்றதின் நடைமுறை உதாரணங்களை அடிப்படையாகக் கொண்டு சட்டவாக்கச் செயற்பாடுகளை முகாமைத்துவம் செய்வதில் காணப்படும் சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள் என்பன குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. இலங்கைப் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள், நடைமுறைகள், பாரம்பரியங்கள் என்பன குறித்து இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர விரிவான விளக்கத்தை வழங்கினார்.

சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தின் தூதுக் குழுவினருடன் நேரடியான கலந்துரையாடல்களை நடத்தியமை இந்தச் செயலமர்வின் முக்கியமான அம்சமாக அமைந்தது. இலங்கையின் சட்டவாக்கச் செயற்பாடுகளில் தவிசாளர் குழாமின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு மாற்றியமைக்கக்கூடிய பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த ஆழமான புரிதலை இந்தக் கலந்துரையாடல்கள் எளிதாக்கின.

 

இரண்டாவது நாள் அமர்வில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர்   அன்ரூ பற்ரிக் இந்தக் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டமை இந்த நிகழ்வுக்கு மேலும் வலுச்சேர்த்தது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X